என் மலர்
செய்திகள்

சீர்காழியில் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ. 2¾ லட்சம் பறிப்பு: மர்ம ஆசாமிகள் கைவரிசை
சீர்காழி:
சீர்காழி அடுத்த எருக்கூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக உள்ளார். மேலும் பல்வேறு நிறுவனங்களில் இருந்து பணத்தை மொத்தமாக பெற்று வங்கியில் செலுத்துவது மற்றும் ஏ.டி.எம்.களில் பணத்தை நிரப்பும் பணிசெய்து வருகிறார்.
இவர் தினமும் ஓவ்வொரு நிறுவனத்திற்கும் சென்று பணத்தை பெற்று பையில் வைத்துக்கொண்டு வங்கியில் செலுத்தி வருகிறார்.
இந்தநிலையில் இன்று காலை சீர்காழி பழைய பஸ்நிலையம் பகுதியில் உள்ள 2 தனியார் நிறுவனத்தில் இருந்து ரூ. 2¾ லட்சத்தை பெற்று அதனை வங்கியில் செலுத்துவதற்காக தனது பையில் வைத்துக்கொண்டு புதிய பஸ் நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். பணம் வைத்திருந்த பையை தோளில் தொங்கவிட்டபடி சென்றார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் விஜயகுமாரிடம் இருந்து பையை பறித்துக்கொண்டு தப்பி ஓடினர். அதிர்ச்சி அடைந்த அவர் திருடன் திருடன் என சத்தம்போட்டார்.அதனை பார்த்த சிலர் கொள்ளையர்களை துரத்தி சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து சீர்காழி போலீசில் விஜயகுமார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி சீர்காழி பழைய பஸ் நிலைய பகுதியில் உள்ள கடைவீதியில் பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் அதிகமாக வந்து செல்கின்றனர்.
இப்படி பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாகவும், பரப்பாகவும் உள்ள இந்த பகுதியில் பட்டப்பகலில் தனியார் நிறுவன ஊழியரிடம் மர்ம ஆசாமிகள் பணத்தை பறித்து சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






