என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீர்காழி அருகே விபத்து டிரைவர்-விவசாயி பலி
    X

    சீர்காழி அருகே விபத்து டிரைவர்-விவசாயி பலி

    சீர்காழி அருகே வெவ்வேறு விபத்தில் டிரைவர் மற்றும் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சீர்காழி:

    பாண்டிச்சேரியிலிருந்து தூத்துக்குடிக்கு நேற்று இரவு 11.30 மணி அளவில் டேங்கர் லாரி ஒன்று வந்தது. அந்த லாரி சீர்காழி அருகே கொள்ளிடம் புத்தூர் பகுதி பாலிடெக்னிக் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது.

    இதில் டிரைவர் அருகில் அமர்ந்து வந்த கடலூர் மாவட்டம் பூண்டியாங்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மற்றொரு டிரைவரான வீரப்பன் (38) என்பவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதையடுத்து லாரியை ஓட்டிவந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் மற்றும் போலீசார் வீரப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    மற்றொரு விபத்தில் விவசாயி பலியானார்.

    சீர்காழியை அடுத்த மங்கைமடம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 19). இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் திருவெண்காட்டிலிருந்து மங்கைமடம் நோக்கி சென்றுக்கொண்டிருந்தார்.

    அப்போது நெப்பத்தூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்தார். அவருக்கு பின்னால் நெப்பத்தூர் தீவு தெருவை சேர்ந்த விவசாயி முருகன் (வயது 45) அமர்ந்து வந்தார்.

    நெப்பத்தூர் சேம்பர் பகுதியில் 2 மோட்டார் சைக்கள்களும் ஒன்றொடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பேரும் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவெண்காடு இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் 3 பேரையும் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் சிகிச்சை பலனின்றி முருகன் இறந்தார். ராஜா மற்றும் கண்ணன் ஆகிய இருவரும் மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    விபத்துக்குறித்து திருவெண்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×