என் மலர்
செய்திகள்

குத்தாலம் அருகே அதிகாலை தீ விபத்து: ரூ. 4 லட்சம் பட்டாசுகள் எரிந்து சேதம்
குத்தாலம்:
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள வில்லியநல்லூர் மெயின் ரோட்டில் சண்முகம் என்பவர் பட்டாசுகடை நடத்தி வருகிறார். இந்த கடை ஆண்டு முழுவதும் செயல்படும். இங்கு விஷேச நிகழ்ச்சிகளுக்கு பொதுமக்கள் பட்டாசுகளை வாங்கி செல்வது வழக்கம். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி இந்த பட்டாசு கடைக்கு புதிய பட்டாசுகள் அதிகமாக வாங்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.
இந்த பட்டாசு கடையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. கடைக்கு சற்று தள்ளி இருக்கும் வீடுகளில் குடியிருப்பவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் குத்தாலம், மயிலாடுதுறை தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீ மேலும பரவாமல் அணைத்தனர். இருந்தபோதிலும் கடை முழுவதும் எரிந்து அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் எரிந்து சேதமாகி விட்டது. இது தொடர்பாக கடை உரிமையாளர் சண்முகம் குத்தாலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பட்டாசு வாங்க வந்த கண்டியூரை சேர்ந்த 3 பேர் தகராறு செய்ததாகவும், அவர்கள் தான் கடை பூட்டை உடைத்து தீ வைத்து இருப்பதாக சந்தேகப்படுவதாக கூறியிருந்தார். அதன் பேரில் கண்டியூரை சேர்ந்த 3 பேரை பிடித்து பட்டாசு கடை தீ விபத்துக்கு அவர்கள் காரணமா? என்பது தொடர்பாக குத்தாலம் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் குத்தாலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






