என் மலர்
நாகப்பட்டினம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நாகை மாவட்டம் சீர்காழியில் நடைபெற்ற கட்சியின் ஒன்றிய குழு கூட்டத்தில் பங்கேற்றார்.
அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
கடந்த 21-ந் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்ற வேண்டும் என சென்னை மெரீனாவில் தொடர் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டு வந்தனர்.
அவர்களை 23-ந் தேதி காவல் துறையினர் வலுகட்டாயமாக வெளியேற்றியதுடன் தடியடியும் நடத்தினர்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட 547 பேர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் 36 மாணவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
இதனை வரவேற்கிறோம்.கலவரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு 3 மாதங்களுக்குள் அரசுக்கு அறிக்கை தர வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
இது வரவேற்கதக்கது. ஆனால் பணியில் உள்ள நீதிபதியை கொண்டே விசாரணை நடத்த வேண்டும்.
நீட் தேர்வை மத்திய அரசு நீக்க வேண்டும்.கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பயிர் காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும்.
பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். மீனவர்களுக்கு வழங்குவது போல் விவசாய தொழிலாளர்களுக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும்.
இவ்வாறு முத்தரசன் கூறினார்.
அப்போது மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாவட்ட விவசாய சங்க செயலாளர் சீனிவாசன், மாவட்ட தலைவர் வரதராஜன்,ஒன்றிய செயலாளர்கள் செல்லப்பன், சிவராமன் ஆகியோர் உடனிருந்தனர்.
சீர்காழி திருக்கோலக்கா தெருவை சேர்ந்தவர் முத்துக்குமாரசுவாமி (51). கட்டிட மேஸ்திரி. நேற்று இவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட நபர், உங்கள் ஏ.டி.எம். கார்டை புதுப்பிக்க வேண்டும். பின் நம்பர் கொடுங்கள் என கேட்டு உள்ளார். அதன்படி முத்துக் குமாரசுவாமியும் பின் நம்பரை கொடுத்துள்ளார். சற்று நேரத்தில் அவரது செல்போனுக்கு ரூ. 47 ஆயிரம் எடுத்ததாக தகவல் வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வங்கிக்கு சென்று விசாரித்த போது அவரது ஏ.டி.எம். பின் நம்பரை பயன்படுத்தி மர்ம ஆசாமி பணம் எடுத்தது தெரிய வந்தது.
இது குறித்து முத்துக்குமார சுவாமி சீர்காழி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள பன்னாள் நடுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (40). விவசாயி. இவர் 1½ ஏக்கர் மானாவாரி நிலத்தில் நேரடி நெல் சாகுபடி செய்திருந்தார்.
போதிய மழை இல்லாததால் பயிர்கள் கருகி புதர் மண்டியது. இதனால் ரமேஷ் வேதனையில் இருந்து வந்தார்.
வயலுக்கு சென்ற அவர் பயிர் கருகியதை பார்த்து மனம் உடைந்தார். அங்கு விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அப்பகுதி வழியாக சென்றவர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். பயிர் கருகியதால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி ரமேசுக்கு பெரிய நாயகி என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
நாகையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டம் நடைபெற்றது.
விழாவிற்கு நாகை தெற்கு மாவட்ட தலைவர் அம்பாள்குணசேகரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாநில துணைத்தலைவர் தென்னரசு முன்னிலை வகித்தார். நாகை தெற்கு மாவட்ட செயலாளர் குகன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவரும், அகில இந்திய வணிகர் சம்மேளத்தின் தேசிய துணைத்தலைவருமான விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசினார். இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றனர்.
பின்னர் மாநில தலைவர் விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அயல்நாட்டு குளிர்பானங்களை பயன்படுத்துவது இல்லை என்று மாணவர்கள் கூறினர். அதனை வலியுறுத்தும் வகையில் வருகிற மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பை சேர்ந்தவர்கள் அயல்நாட்டு குளிர்பானங்களை விற்பனை செய்வது இல்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்திலும் மார்ச் 1-ந்தேதி முதல் வணிகர்கள் அயல்நாட்டு குளிர்பானங்களை விற்பனை செய்யக்கூடாது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வர்த்தக நிறுவனங்களில் புகுந்து உரிமம் வாங்க வேண்டும் என்று கூறி பணம் பறிப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
இதுபோன்று அதிகாரிகள் தொடர்ந்து செயல்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசிடம் புகார் அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பூம்புகாரை சேர்ந்தவர் பழனி (35) மீனவர். இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
பல்லவனம் என்ற இடத்தில் ஆர்ச் சுவற்றில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பழனியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
இது குறித்து பூம்புகார் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் கீழை நாடுகளின் லூர்து மற்றும் பசிலிக்கா என்ற சிறப்பு அந்தஸ்து பெற்றுள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
இந்த ஆலயத்தின் பழமையை மாற்றாமல் மறு சீரமைக்கும் பணி கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவில் ஆலயத்தின் கூரையில் பொருத்தப்பட்டுள்ள பெரிய சிலுவை திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதையடுத்து அங்கு வந்த ஆலய நிர்வாகத்தினர் இது குறித்து ஊழியர்களிடம் விசாரித்தனர். சிலுவையில் பொருத்தப்பட்டிருந்த எல்.இ.டி.விளக்கில் தேங்கி இருந்த மழை நீரில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து இருக்கலாம் என தெரிய வந்தது.
இந்த சம்பவம் பக்தர்கள், பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வ.உ.சி.நகரை சேர்ந்தவர் ராசி (வயது 86). இவர் சோமநாதர் கோயிலடியில் உள்ள கடையில் காய்கறி வாங்கி கொண்டு தனது வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ராசி வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றி வேதாரண்யம் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கநாதன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த அண்டர்காடு கிராமத்தைச் சேர்ந்த பக்கிரிசாமி மகன் ஞானமணி (வயது 30). இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். தஞ்சாவூரில் உள்ள மருத்துவரிடம் சிகிச்சை பெற்று மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார்.
இந்நிலையில் அவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து விஷம் குடித்துவிட்டார். அவரை உறவினர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அவரது மனைவி மதுபாலா கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் சப்-இன்ஸ் பெக்டர் ரெங்கநாதன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே சேமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 36), விவசாயி. இவர், சேமங்கலம் அருகே 5 ஏக்கர் வயலை குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்து இருந்தார். சம்பவத்தன்று வயலுக்கு சென்ற ராஜ்குமார், சாகுபடி செய்த நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி காய்ந்து கிடப்பதை பார்த்து மனம் உடைந்தார். அப்போது திடீரென அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு வயலில் மயங்கி விழுந்த ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த நிலையில் இறந்துபோன விவசாயி ராஜ்குமார் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பீட்டுத்தொகை வழங்காததாலும், அதிகாரிகள் முறையாக கணக்கெடுப்பு நடத்தாதையும் கண்டித்து சேமங்கலம் கிராமம் தெற்கு தெருவில் 90-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி சமூக நலத்துறை தனி தாசில்தார் சண்முகம் மற்றும் அதிகாரிகள் சேமங்கலம் கிராமத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கட்டி இருந்த கருப்புக் கொடியை அகற்றினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய சிறப்பு பெற்றது. இன்று தை அமாவாசை என்பதால் வேதாரண்யம் கடலில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். கோடியக்கரை அக்னிதீர்த்தம் ஆதி சேது சித்தர் கட்டம் கடற்கரை, சன்னதி கடல் ஆகிய பகுதிகளில் நீராடினார்கள். பின்னர் கோவிலில் உள்ள மணிகர்ணிகை தீர்த்த குளத்தில் நீராடி சுவாமியை தரிசனம் செய்தனர். வேதாரண்யம் பகுதியில் விட்டு, விட்டு மழை பெய்து வருவதால் பக்தர்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.
தஞ்சை மாவட்டம் திருவையாறிலும் இன்று தை அமாவாசையையொட்டி பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இங்கு ஆற்றில் தண்ணீர் இல்லாததால் போர்வெல் அமைத்து ஆயில் மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து பொதுமக்கள் புனித நீராடினர். இங்கும் கூட்டம் குறைவாக இருந்தது. இதேபோல் கும்பகோணம் மகாமக குளம், காவிரி படித்துறை ஆகியவற்றிலும் பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர்.
மயிலாடுதுறை துலா கட்டம், சீர்காழி சட்டைநாதர் கோவில் பிரம்ம தீர்த்த குளம், பூம்புகார் கடல் ஆகியவற்றிலும் பக்தர்கள் நீராடி தர்ப்பணம் செய்தனர்.
தை அமாவாசையையொட்டி திருவாரூர், தியாகராஜர் கோவில் அருகே உள்ள கமலாலய குளத்தில் இன்று ஏராளமான பொதுமக்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின்னர் தியாகராஜர் கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே தென்னடார் கிழக்கு கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் இவருடைய மகள் லாவண்யா (வயது 20). வேதாரண்யத்தில் உள்ள அரசு கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
அவரது கிராமத்தில் இருந்து கல்லூரிக்கு சென்றுவர முடியாததால் வேதாரண்யம் அருகே வடகட்டளை பகுதியில் உள்ள அவரது பாட்டி சரோஜா வீட்டில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.
வழக்கம் போல் நேற்று மாலை லாவண்யா கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சுப்பையன் மகன் விஜயன் என்பவர் வீட்டிற்குள் புகுந்து சரோஜாவை தாக்கி விட்டு பேத்தி லாவண்யாவை கடத்தி சென்று விட்டார்.
இதில் பலத்த காயமடைந்த சரோஜாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது குறித்து சரோஜா வேதாரண்யம் போலீசில் புகார் செய்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்கு பதிவு செய்து லாவண்யாவை கடத்தி சென்ற விஜயனை தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் தற்போது மீன்பிடி சீசன் என்பதால் வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான மீனவர்கள் வந்து தங்கி மீன்பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடல் பகுதியில் கடந்த 2 நாட்களாக கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனால் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் போதிய மீன்கள் கிடைக்காததாலும், கடல் சீற்றம் காரணமாகவும் கரைக்கு திரும்பி வருகின்றனர்.
இன்று காலை முதல் கோடியக்கரையில் கடற்பகுதியில் கடல் சீற்றத்துடன் இருந்தது. இதனால் வழக்கம்போல் காலை 11 மணிக்கு கடலுக்கு செல்ல தயாரான மீனவர்கள் அச்சத்துடன் படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்திவிட்டு வீட்டுக்கு திரும்பினர்.
இதனால் சுமார் 350 விசைப்படகுகள் உள்பட பெரிய படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் 2000 மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.






