என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    தரங்கம்பாடி அருகே மீனவர் வீட்டில் நகை மற்றும் பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    தரங்கம்பாடி:

    தரங்கம்பாடி அருகே உள்ள திருமால்பேட்டை மீனவர் காலனியை சேர்ந்தவர் ராஜ். மீனவர். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 3½ பவுன் நகை ரூ, 10 ஆயிரம் ரொக்கம் மற்றும் டி.வி ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.

    இது பற்றி ராஜ் பொறையாறு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொறையாறு அருகே பா.ஜனதா பிரமுகர் வீட்டில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது.

    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் பொறையாறு அருகே உள்ள ஒழுகைமங்கலம் மெயின் ரோட்டில் வசிப்பவர் பாலாஜி குருக்கள் (வயது 45). இவர் செம்பனார்கோவில் ஒன்றிய பா.ஜனதா செயலாளராக உள்ளார். இவர் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் குருக்களாகவும் பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவு பாலாஜிகுருக்கள் வீட்டில் படுத்து தூங்கினார். அப்போது நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் பாலாஜி குருக்கள் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் குறி தவறிய பெட்ரோல் குண்டுகள் அருகில் உள்ள ஒரு குடிசை வீட்டில் விழுந்து தீப்பிடித்தது. இதனை கண்ட பொதுமக்கள் தீயை அணைத்தனர். இதில் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.

    இது பற்றிய தகவல் கிடைத்ததும் பொறையாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெட்ரோல் குண்டுகளை வீசி சென்ற மர்ம நபர்கள் யார்? முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொள்ளிடம் அருகே மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்து நாகையில் உள்ள மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    சீர்காழி:

    கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவி ஒருவர். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்று நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இது குறித்து மாணவியின் தந்தை கொள்ளிடம் போலீசில் புகார் செய்தார். அதில் சம்பவத் தன்று தனது மகளை ஆச்சாள்புரம் கிராமம் வள்ளுவர் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ராஜபாண்டியன் (வயது20) என்பவர் கடத்தி சென்றதாக கூறி இருந்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜபாண்டியை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று ஆச்சாள்புரம் பகுதியில் இருந்த ராஜபாண்டியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் மாணவியை கடத்தி சென்று திருமண ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார், மாணவியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜபாண்டியனை கைது செய்தனர். பின்னர் அவர், நாகையில் உள்ள மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    செம்பனார்கோவில் அருகே கோவிலில் அம்மன் நகையை மர்ம நபர் திருடிச்சென்றது குறித்து ஊர்மக்கள் போலீசில் புகார் செய்தனர்.

    தரங்கம்பாடி:

    செம்பனார்கோவில் அடுத்த மேமாத்தூர் கிராமம் மெயின்ரோடு அருகே வெள்ளாயர் தெருவில் ஒரு சிவன் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் நேற்றிரவு வழக்கம்போல் பூஜையை முடித்து விட்டு குருக்கள் கோவிலை பூட்டிவிட்டு சென்றார். நள்ளிரவில் கோவிலுக்கு வந்த மர்மநபர் ஒருவர் சுற்றி அடைக்கப்பட்டிருந்த வேலியை பிரித்துக் கொண்டு கோவிலுக்குள் புகுந்துள்ளான்.

    பின்னர் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர் கோவிலுக்குள் நகை, பொருட்களை தேடிப்பார்த்தும் எதுவும் கிடைக்காததால் ஏமாற்றமடைந்துள்ளான்.

    இதையடுத்து அங்கிருந்த அம்மன் சிலையின் கழுத்தில் தங்கத்தால் ஆன தாலி இருப்பதை பார்த்த அவன் அதனை திருடிக்கொண்டு வெளியில் வந்துள்ளான். அப்போது ஏற்பட்ட சத்தத்தை கேட்டு கோவில் குருக்கள் அங்கு வந்து பார்த்துள்ளார்.

    மர்மநபர் ஒருவன் கோவிலில் இருந்து வெளியில் வருவதைப்பார்த்து அவர் சத்தம் போட்டார். இதைக்கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்தபோது மர்மநபர் அங்கிருந்து இருட்டிற்குள் தப்பியோடி மறைந்தான். பின்னர் கோவிலுக்குள் சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் இருந்த ½ பவுன் தாலியை மர்மநபர் திருடிச் சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து ஊர்மக்கள் செம்பனார்கோவில் போலீசில் இதுபற்றி புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்மன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பூம்புகார் அருகே வீட்டில் தீ விபத்தில் கணவன்-மனைவி உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் புதுகுப்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள புதுகுப்பத்தை சேர்நதவர் கலிய மூர்த்தி (வயது 36). இவரது மனைவி இளமதி (32). இவர்களுக்கு4 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று கலியமூர்த்தி குடும்பத்தினருடன் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பினார். இளமதி வீட்டில் இருந்த மண்எண்ணை விளக்கை ஏற்றினார். அவர் எரியும் விளக்கில் கேனில் இருந்த மண்எண்ணையை ஊற்றினார். அப்போது எதிர்பாராத விதமாக விளக்கின் தீப்பொறி கையில் பட்டதால் மண்எண்ணை கேன் தவறி விழுந்தது. இதில் இளமதியின் சேலையில் தீப்பிடித்தது.

    இதனை கண்ட கலியமூர்த்தி தீயை அணைக்க முயன்றார். அப்போது அவர் மீதும் தீ பிடித்தது. மேலும் வீட்டிலும் தீ பரவியது. இந்த தீ விபத்தில் குழந்தைகள் முகிலன்(8), விக்னேஷ்(5) ஆகியோரும் காயம் அடைந்தனர்.

    அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் தீயை அணைத்து தீக்காயம் அடைந்த கணவன்-மனைவி உள்பட 4 பேரையும் மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இளமதி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது தொடர்பாக பூம்புகார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் புதுகுப்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மயிலாடுதுறையில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 1¼ லட்சம் பணம் திருட்டு போனது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை காந்தி நகரில் வசித்து வருபவர் நாராயணன். ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. இவரது மகன் பத்மநாபன். இவர் வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டு திருமணத்திற்கு குடும்பத்துடன் சென்றார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவை திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் பணத்தை திருடி சென்றனர்.

    நேற்று வீடு திரும்பிய பத்பநாபன் திருட்டு நடைபெற்று இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார்.

    நாகையில் இருந்து போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. கைரேகை நிபுனர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மயிலாடுதுறை அருகே உயர் அழுத்த மின் கம்பியில் கைபட்டதில் பெயிண்டர் தூக்கி வீசப்பட்டு இறந்தார்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே அக்கலூர் மேலத்தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது39). பெயின்டர். இவர் நேற்று மயிலாடு துறை ரயிலடி சாரத்தட்டை தெருவில் உள்ள அப்துல்ஹமீது என்பவரது வீட்டில் பெயிண்ட் அடித்து கொண்டிருந்தார். வீட்டின் வெளிபுற சுவரில் சாரம் அமைத்து பெயிண்ட் அடித்தபோது அருகே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் தவறுதலாக கைபட்டதில் சரவணனை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் இறந்தார்.

    இதுகுறித்து அவரது மனைவி மல்லிகா மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டுள்ளனர்.

    நாகை மாவட்டம் பொறையாறு அருகே புகாரை வாங்க மறுத்த சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்ற போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் பொறையாறு அருகே உள்ள திருக்களாஞ்சேரியை சேர்ந்தவர் ஜான்சன். இவர் தனது மகளை காணவில்லை என பொறையாறு போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தேவேந்திரனிடம் புகார் அளித்துள்ளார்.

    ஆனால் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அதனை வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஜான்சன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரையிடம் புகார் அளித்தார்.

    இதனை தொடர்ந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தேவேந்திரனை ஆயுதப்படைக்கு மாற்றி போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இந்த நிலையில் மாயமான ஜான்சன் மகள் தனது மாமா வீட்டிலிருந்து மீட்கப்பட்டார்.

    வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி காவலாளி படுகாயம் அடைந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த பன்னாள் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாத்துரை (45). ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் தற்சமயம் வேதாரண்யம் சிட்டி யூனியின் வங்கியில் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று அவர் மாலை வங்கி பணியை முடித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தனது ஊருக்கு வேதாரண்யம் வாய்மேடு சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ராமநாதபுரம் மாவட்டம், ரோகிமாநகர், கன்னிராசபுரத்தைச் சேர்ந்த தாமஸ் மகன் அந்தோணி (22) என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்ற போது எதிர்பாராதவிதமாக அய்யாத்துரை மோட்டார் சைக்கிளில் மீது மோதினார். இதில் அய்யாதுரை பலத்த காயமடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அன்புராஜன் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    மயிலாடுதுறையில் மத்திய அரசை கண்டித்து பணத்தட்டுப்பட்டை நீக்கக்கோரி சப்-கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கச்சேரி சாலையில் மனித சங்கிலி இயக்கம் சார்பில் போராட்டம் நடந்தது.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறையில் மத்திய அரசை கண்டித்து பணத்தட்டுப்பட்டை நீக்கக்கோரி சப்-கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கச்சேரி சாலையில் மனித சங்கிலி இயக்கம் சார்பில் போராட்டம் நடந்தது.

    முன்னாள் எம்.எல்.ஏ. நாகை மாலி தலைமை தாங்கினார். இதில் இந்திய தொழிலாளர் சங்கம் சி.ஐ.டி.யூ. மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனம், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், அகில இந்திய காப்பீட்டு ஊழியர்கள் சங்கம், ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு ஓய்வு பெற்றோர் சங்கம், தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கங்கள் மனித சங்கிலியில் கலந்துகொண்டனர்.

    நாகை மாலி பேசும்போது மத்திய அரசு பணத்தட்டுபாடு 50 நாட்களில் சரியாகிவிடும் என்றது. இதுநாள் வரை சரிசெய்யப்படவில்லை. வங்கிகளில் கால்கடுக்க மக்கள் தவமிருக்கிறார்கள். மக்கள் தங்கள் சொந்த பணத்தை எடுக்க கட்டுபாடுகள் விதிக்ககூடாது, காசற்ற பொருளாதாரத்தில் மக்களைக் கட்டாயப்படுத்தி உள்ள கூடாது விவசாய வேலைகள் பாதிக்கப்பட்டு முடங்கியதால் விவசாயிகள் கடனை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.

    கிராமப்புற வேலை வாய்ப்புதிட்ட 100 நாள் வேலையை இருமடங்காக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது என்றார். இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    நாகை அருகே 500 மது பாட்டில்கள் கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் செம்பனார் கோவில் அருகே மோமாத்தூர் சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் போலீசாரை கண்டவுடன் நிற்காமல் சென்றுள்ளது. இதையடுத்து அந்த காரை விரட்டி பிடித்து சோதனை செய்தனர்.

    அதில் 500 மதுபாட்டில்கள் கடத்திவரப்பட்டிருப்பது சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து காரை ஓட்டிவந்த தேனி மாவட்டம் கம்பம் மேட்டுத்தெருவை சேர்ந்த ஆயத்துல்லா என்பரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்த மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.

    ஜெயலலிதாவின் வாரிசான தீபா அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு நல்லது செய்வார் என்று சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கூறினர்.

    சீர்காழி:

    மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். தீபாவும் விரைவில் அரசியலுக்கு வருவேன் என கூறி உள்ளார்.

    இதனால் தீபா வீட்டில் தினமும் தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். தீபாவிற்கு முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். கோவை மலரவன், பொள்ளாச்சி சந்திர சேகரன், திருச்சி சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    தற்போது சீர்காழி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சந்திரமோகன், மூர்த்தி ஆகியோரும் தீபாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    அவர்கள் நேற்று சென்னையில் தீபாவை சந்திக்க சென்றனர். ஆனால் அப்போது தீபா வீட்டில் இல்லாததால் தீபாவின் கணவரை சந்தித்து பேசினார்கள்.

    அவர்களுடன் தீபா பேரவை ஒருங்கிணைப்பாளர் வக்கீல் நெடுஞ்செழியன், ஒன்றிய மாணவரணி செயலாளர் திட்டை ரமேஷ், அன்புராஜ் உள்பட 25-க்கும் மேற்பட்டோர் சென்றனர்.

    சந்திர மோகன் கடந்த 2001 முதல் 2006-ம் ஆண்டு வரை சீர்காழி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். மூர்த்தி 1991-ம் ஆண்டு முதல் 96-ம் ஆண்டு வரை எம்.எல்.ஏ.வாக இருந்தார். தீபாவுக்கு ஆதரவு தெரிவித்தது குறித்து அவர்கள் கூறியதாவது:-

    எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதா மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தார். ஜெயலலிதாவின் வாரிசான தீபா அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு நல்லது செய்வார். நல்லா கட்சி பணியாற்றுவார்.

    அ.தி.மு.க.வை அழிவில்லாமல் காக்க தீபாவால் மட்டுமே முடியும். கிராமப்புற இளைஞர்கள் மற்றும் தொண்டர்கள் ஆதரவு தீபாவிற்கு உள்ளது. எனவே நாங்களும் தீபாவை ஆதரிக்கிறோம்.

    வருகிற சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தீபாவை சந்திக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    ×