என் மலர்
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா கோவில்பத்து பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது33) விவசாயக்கூலி தொழிலாளி. இவர் அப்பகுதியில் பாண்டிச்சேரி மதுபானம் விற்றுக் கொண்டிருப்பதாக வேட்டைக்காரனிருப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் தனபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரை 10 லிட்டர் பாண்டிச்சேரி மதுவுடன் கைது செய்து வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
இதற்கிடையில் சிவக்குமாரின் மனைவி திலகவதி போலீசார் மாமுல் வாங்கிக்கொண்டு எனது கணவரை மதுபானம் விற்பனை செய்ய அனுமதி கொடுத்துவிட்டு அடிக்கடி வழக்கு போடுகின்றனர் என்று உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
மாற்றுத் திறனாளிகளுக்கான கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து 10 மனுக்களும், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 223 என மொத்தம் 233 மனுக்கள் பெறப்பட்டது. கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 12 பயனாளிகளுக்கு தலா ரூ.3465 வீதம் மொத்தம் ரூ.41,580 மதிப்பிலான விலையில்லா தையல் எந்திரங்களை கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) தேன்மொழி மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க. கூட்டணியில் மனித நேய ஜனநாயக கட்சி இருந்து வருகிறது. இக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி நாகை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். அ.தி.மு.க.வில் தற்போது உள்கட்சி பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து மக்களிடம் கருத்து கேட்க தமிமுன் அன்சாரி முடிவு செய்தார்.
அதன் படி அவர் நாகையில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இன்று பொதுமக்களிடம் கருத்து கேட்டார். இதற்காக நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வாக்கு பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. இந்த பெட்டியில் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என கூறி இருந்தார். அதன் படி இன்று காலை 9 மணிக்கு கருத்து கேட்கும் பணி தொடங்கியது.
அதில் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து சீட்டுகளை எழுதி பெட்டியில் போட்டு வருகின்றனர். இங்கு மாலை 6 மணி வரை பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா கரியாப்பட்டினம் காவல் சரகம் மருதுர் வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் இவரது மகள் ரேணுகா(19). பி.ஏ பட்டப்படிப்பு பாதியில் முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
கடந்த 8-ந்தேதி இரவு 11 மணியளவில் வீட்டை விட்டு வெளியில் சென்றவர் வீட்டிற்கு திரும்பவில்லை. இது குறித்து பன்னீர்செல்வம் தன் மகளை ஆயக்காரன்புலம் பாப்புரெட்டி குத்தகை துரைராஜ் மகன் செல்வம் கடத்தி சென்று விட்டதாக கரியாப்பட்டினம் போலீசில் புகார் செய்துள்ளார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டுள்ளார்.
சீர்காழி:
சீர்காழியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்திருந்த விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் மிகுந்த வேதனையளிப்பதாக உள்ளது.கடந்த 5-ந் தேதி அ.தி.மு.க.வில் சட்டமன்றகுழு தலைவரை தேர்ந்தெடுத்தனர். இததை தொடர்ந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியது. அப்போது தமிழகத்தில் இருந்திருக்க வேண்டிய கவர்னர் மராட்டிய மாநிலத்திற்கு சென்றுவிட்டார். கிட்டதட்ட 5 நாட்கள் கழித்துதான் தமிழகம் வந்தார். இது பொறுப்புள்ள பதவியில் இருப்பவர்கள் செய்யும் காரியம் அல்ல. அ.தி.மு.க.வில் தற்போது அதிகாரம் தொடர்பான ஒரு மோதல் வலுத்திருக்கிறது. யார் முதல்வர் ஆகவேண்டும் என மோதல் ஏற்பட்டுள்ளது.
இதற்கு கவர்னரும், மத்திய அரசும் தான் பொறுப்பேற்க வேண்டும். அரசியல் நெருக்கடியின் போது கவர்னருக்கு முக்கிய பொறுப்பு உள்ளது. கவர்னர் வித்யாசாகர்ராவ் இருதரப்பிடமும் பேசி 2 நாள் ஆகிவிட்டது. எந்த முடிவும் அறிவிக்கவில்லை.
இது திட்டமிட்டு காலம் தாழ்த்துகிறார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கவர்னரின் காலதாமதத்தால்தான் சசிகலா தரப்பு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களை ஒரு இடத்தில் வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தனி கவர்னர் மத்திய அரசு நியமிக்க வேண்டும்.தமிழகத்தில் நிலவும் குழப்பமான சூழலை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
தமிழகத்தில் ஜனநாயகம் பாதுகாக்கப்படவேண்டும். அரசியலமைப்புக்கு எதிரான போக்கு ஏற்பட்டு விடக்கூடாது. அதிகார போட்டியால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படக்கூடாது. பெரும்பான்மை யாருக்கும் இல்லை. எவராலும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை உள்ளது. இதில் காலம் தாழ்த்துவது கொந்தளிப்பான சூழலை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்கள் பால்ராஜ்ரத்தினம், ஈழவளவன், தாமுஇனியவன், ஆசைதம்பி, தினேஷ்மேத்தா, காமராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
கீழ்வேளூர்:
நாகை மாவட்டம் கீழ்வேளூர் கவுண்டர் தெருவை சேர்ந்தவர் காளிமுத்து மகன் குமரவேல்(வயது 40) பூ வியாபாரி. இவருக்கு திருமணம் ஆகி கஸ்தூரி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதை தொடர்ந்து கணவரிடம் விவாகரத்து கேட்டு கஸ்தூரி வழக்கு தொடர்ந்தார். இருந்த போதிலும் அவர்கள் ஒன்றாக வசித்து வந்தனர். இதற்கு இடையே கீழ்வேளூர் ஓடம்போக்கி ஆற்றின் படித்துறையில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் குமரவேல் பிணமாக கிடந்தார்.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமரவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குமரவேல் கொலைக்கு அவரது மனைவி கஸ்தூரி காரணமா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். குமரவேலை வேறு நபர்கள் கொலை செய்தார்களா?என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் கீழ்வேளூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை:
மணல்மேடு அருகே மேலப்பனையூர் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராஜேஷ் (வயது22). கூலி தொழிலாளி. இவருக்கு வலிப்பு நோய் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவர் வீட்டின் அருகே உள்ள ஆற்றிற்கு சென்ற போது வலிப்பு நோய் வந்து ஆற்றில் விழுந்து மூழ்கியதாக கூறப்படுகிறது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து மணல்மேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம், பூம்புகார் தொகுதி, செம்பனார்கோவில் மேலமுக்கூட்டில் அ.தி.மு.க. மாணவர் அணி பொறுப்பாளர் வீரமணி தலைமையில் முதல்-அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவுகளை தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் திரளாக இளைஞர்கள் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வந்து இளைஞர்கள் ஜல்லிக்கட்டு விளையாட அனுமதி பெற்று தந்தவர் பன்னீர்செல்வம். அவர் மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலி தாவின் உண்மையான விசுவாசி நான்கு ஆண்டு நிரந்தர முதலமைச்சராக இருக்க வலியுறுத்தியும், அவருக்கு கட்சியால் மிரட்டல், தொந்தரவு செய்ய கூடாது என்பதை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேளாங்கண்ணி:
நாகையை அடுத்த வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த மாதா பேராலயத்திற்கு தினமும் உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம், வெளி நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த பேராலயத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
அதற்காக பேராலயத்தை சுற்றிலும் சாரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று பேராலயத்தின் கோபுரத்தில் உள்ள சிலுவை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வேளாங்கண்ணி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இந்தநிலையில் தற்போது அந்த கோபுரத்தில் புதிய சிலுவை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது அமைக்கப்படும் சிலுவையில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாகப்பட்டினம்:
வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை (வியாழக்கிழமை) நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும்.
அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக் கூடாது. மீறினால் மதுபான விதிமுறைகளின் படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பழனிச்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீர்காழி:
சீர்காழி அருகே வைத்தீஸ் வரன்கோவில் துணை மின்நிலையத்தில் நாளை (9-ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.
இதையொட்டி அந்த துணை மின் நிலையத்தில் மின் வினியோகம் பெறும் சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், சட்டநாதபுரம், புங்கனூர், மேலசாலை, கதிராமங்கலம், ஆத்துக்குடி, திருப்புன்கூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.
இந்த தகவலை வைத்தீஸ்வரன்கோவில் மின்வாரிய உதவிசெயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் முழுவதும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று வேதாரண்யம் தாலுகாவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது.
வேதாரண்யம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் நிஷாந்தினி (வயது 15), சவுந்தர்யா (15), வேதாரண்யம் சி.க.சுப்பையா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவர் ராகேஷ் (14), கரியாப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர் சபாபதி (15) ஆகிய 4 பேருக்கும் பள்ளியில் தட்டம்மை, ரூபெல்லா என்ற தடுப்பூசி போடப்பட்டது.
சிறிது நேரத்தில் இவர்கள் 4 பேருக்கும் மயக்கம் மற்றும் அரிப்பு ஏற்பட்டது. உடனே ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளை வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் வேதாரண்யம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.






