என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    குடி போதையில் ஏற்பட்ட தகராறில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுமாப்பிள்ளை இறந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வாலிபரை கைது செய்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா ஆயக்காரன்புலம் 3ம்சேத்தி கிராமத்தை சேர்ந்தவர் செல்லையன். இவரது மகன் காளிமுத்து (வயது33). இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் நடக்க இருந்தது.

    இந்நிலையில் காளிமுத்து தன் சித்தப்பா ஜெகநாதன் மகன் அசோகன் (30) என்பவருடன் கடந்த 17-ந்தேதி கிராமத்தில் உள்ள ஆற்றங்கரைக்கு சென்று மதகில் உட்கார்ந்து மது குடித்தபோது காளிமுத்துவை பாம்பு கடித்துள்ளது. இதைப்பார்த்த அசோகன் பாம்பை அடித்து கொன்று விட்டு காளிமுத்துவை வீட்டில் விட்டுவிட்டு நடந்த விபரத்தை தெரிவித்தார்.

    இதனால் காளிமுத்து வீட்டில் உள்ளவர்கள் அசோகனை தரக்குறைவாக திட்டியதால் அவரும் பதிலுக்கு திட்டியதாக கூறப்படுகிறது.  இதை தட்டிக்கேட்ட காளிமுத்துவை அசோகன் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். இதைத்தொடர்ந்து நாகை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட காளிமுத்து சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்து வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிமுத்து பாம்பு கடித்து இறந்ததாக கருதி விசாரித்தனர். இந்நிலையில் காளிமுத்து உடலை பரிசோதனை செய்ததில் தலையில் ஏற்பட்ட காயத்தால் அவர் இறந்திருக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) பாலகுமார் கொடுத்த புகாரின் பேரில் வாய்மேடு போலீசார் கொலை வழக்காக மாற்றி அசோகனை கைது செய்து வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
    நாகை நகராட்சியில் பன்றிகளை பிடிக்க வந்த தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

    நாகப்பட்டினம்:

    நாகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பன்றிகளை பிடிப்பதற்காக நகராட்சி நிர்வாகம் சார்பில் மயிலாடுதுறை வரதாச்சாரியார் தெருவை சேர்ந்த ராஜா (35) உள்பட 11 பேர் வரவழைக்கப்பட்டனர்.

    இவர்கள் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக நாகையில் தங்கி அக்கரைப் பேட்டை, கீச்சாங்குப்பம், தோணித்துறை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பன்றிகளை பிடித்து வந்தனர்.நேற்று நாகை கொத்தள தெருவில் பன்றிகளை பிடிப்பதற்காக ராஜா உள்ளிட்டோர் ஒரு மினி வேனுடன் சென்றனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த சிலரின் எதிர்ப்பையும் மீறி பன்றிகளை பிடித்தனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் ராஜா தரப்பினரை தாக்க தொடங்கினார்கள். இதனால் அனைவரும் மினி வேனில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    ஆனாலும் ஆத்திரம் தீராத சுமார் 10 பேர் 6 இரு சக்கர வாகனங்களில் பயங்கர ஆயுதங்களுடன் வேனை துரத்தி சென்றனர். கிழக்கு கடற்கரை சாலையில் தனியார் மோட்டார் கம்பெனி அருகில் மினி வேன் வந்த போது அதனை மறித்தனர்.வேனை அடித்து நொறுக்கினர்.

    இதனால் பயந்து போன பன்றி பிடிக்கும் தொழிலாளர்கள் கீழே இறங்கி ஓடினர். அப்போது ராஜாவை வழிமறித்து பிடித்து அவரது கழுத்தில் வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே இறந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் நாகை டவுன் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். ராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    10 பேர் கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமகப் பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இந்த கோவில் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்திய முனிவருக்கு சிவபெருமான் காட்சி கொடுத்த தலம். வேதங்கள் பூஜை செய்து மூடிக்கிடந்த கதவை அப்பரும், சம்மந்தரும் தேவார திருப்பதிகங்கள் பாடி திறந்து மூடியதாக வரலாறு.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமகப் பெருவிழா 28 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு மாசிமகப் பெருவிழாவிற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி 3-ந்தேதி நடைபெற்றது. இதையடுத்து இன்று காலை பஞ்சமூர்த்திகள் எழுந்தருள கோவில் கொடிமரத்தில் மாசிமகப் பெருவிழா கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியது. நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி மணவழகன், யாழ்பாணம் பரணீஆதீனம் செவ்வந்திநாத பண்டார சந்நிதி, ஸ்தலத்தார்க் கயிலைமணி வேதரத்தினம், கேடிலியப்பன், உப்பு உற்பத்தியாளர் எஸ்.கே.எம்.எஸ். குரூப் மாரியப்பன், உபயதாரர்கள் எழிலரசு, அம்பிகாதாஸ், சங்கரவடிவேலு உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    வேதாரண்யத்தில் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னால் அமைச்சர் ஜீவானந்தம், எடப்பாடி பழனிச்சாமியின் பதவி நாட்கள் எண்ணப்படுகிறது என கூறினார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தெற்கு வீதியில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஆலோசனைக்கூட்டம் முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது.

    முன்னாள் தொகுதி செயலாளர் சண்முகராசு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வேதாரண்யம் நகராட்சி பகுதியை சேர்ந்த ஜானகிராமன், வீரமுத்து, குமார், வீரமணி, அசோக், பிரபாகரன், ராதா, வீரராசு, தகட்டூர் முன்னாள் ஊராட்சி தலைவர் அமிர்தகடேஸ்வரன், நத்தப்பள்ளம் நடராஜன், தீபா பேரவை வைரப்பிரகாஷ், தேத்தாகுடி அய்யப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம் பேசும்போது, அ.தி.மு.க.விலிருந்து யாரையும் நீக்க யாருக்கும் தற்போது அதிகாரமில்லை. சட்டசபையில் சபாநாயகர் நடந்து கொண்ட விதம் ஒருதலைபட்சமானது. நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டு நம்முடைய பலத்தை நிரூபிக்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமியின் பதவி நாட்கள் எண்ணப்படுகிறது. என்று கூறினார்.

    முடிவில் தமிழ்மணி நன்றி கூறினார்.

    நாகை மாவட்டம் குத்தாலம் அருகே மங்கைநல்லூரில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஜெ.தீபா ஆதரவு அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.நடராஜன் தலைமை வகித்தார். வழக்கறிஞர் கோமல் எஸ்.ஆர்.வினோத், தீபா பேரவை ஒன்றிய அமைப்பாளர் அய்யா.ராமகிருஷ்ணன், மாவட்ட துணை அமைப்பாளர் ஆசைசங்கர், குத்தாலம் நகர அமைப்பாளர் வீரமணி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ரேவதி, நகர துணை அமைப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.சி.என்.விஜயபாலன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.

    கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பது, ஜெயலலிதாவின் பிறந்த நாளை கட்சி கொடியேற்றி, நலத்திட்டங்களை வழங்கி கொண்டாடுவது, அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிப்பது, ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை கோருவது, சட்டபேரவையில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்த சபாநாயகருக்கு கண்டனம் தெரிவிப்பது, சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதிக்கு வரும்போது கருப்பு கொடி காட்டி கண்டனம் தெரிவிப்பது உள்பட 11 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் எம்.கே.ரவி, பிரபாகரன், தர்மன், ஐடிஐ சம்பத், மணிகண்டன், அபுதாகிர், கண்ணையன், ராஜாராமன், பண்ணை நடராஜன் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய மற்றும் பேரூர் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
    வேதாரண்யத்தில் மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் கோடியக்கரை மற்றும் வேதாரண்யம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கோடியக்காடு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 52) என்பவரும், வேதாரண்யம் ராஜாஜி பூங்கா அருகே ரமேஷ் (38) என்பவரும் அனுமதியில்லாமல் மதுபானம் விற்று கொண்டிருந்தனர்.

    அவர்களை கைது செய்து வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேளாங்கண்ணி கடலில் மூழ்கி 2 வாலிபர்கள் பலியானார்கள். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆரியா தெருவை சேர்ந்தவர் சவுக்கத் அலி. இவரது மகன் ஹனீப் (24). இவர் தனது குடும்பத்தினர், நண்பர்களுடன் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தார்.

    அவர்கள் கடலில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது அலைகளின் சீற்றம் அதிகமாக காணப்பட்டதால் ஹனீப் தண்ணீரில் மூழ்கினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு குளித்து கொண்டிருந்தவர்களும், கரையில் இருந்தவர்களும் ஹனீப்பை காப்பாற்ற முயன்றனர்.

    ஆனால் முடியவில்லை. சுமார் ஒரு மணி நேரம் கழித்து ஹனீப் உடல் அதே பகுதியில் கரை ஒதுங்கியது.

    கரூர் மாவட்டம் ஆத்தூர் நொச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் மணிகண்டன் (24). அப்பகுதியில் உள்ள கல்லூரியில் எம்.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.இவர் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தார்.

    கடலில் குளித்த போது அலையில் சிக்கி தண்ணீரில் மூழ்கி இறந்தார். அவரது உடல் கரை ஒதுங்கியது. இருவரது உடல்களையும் கீழையூர் கடற்கரை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    லாரி மோதிய விபத்தில் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகிறார்கள்.

    சீர்காழி:

    சீர்காழி பிடாரி தெற்குவீதி திருஞானசம்பந்தர் காலனியை சேர்ந்தவர் செந்தில்நாதன் மனைவி கோமதி (வயது65). இன்று காலை கோமதி கடைக்கு செல்வதற்காக பிடாரி தெற்குவீதி பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு லாரியை அதன் டிரைவர் பின்புறமாக இயக்கினார்.

    கோமதி மீது லாரி மோதியதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சீர்காழி இன்ஸ்பெக்டர் அழகுதுரை மற்றும் போலீசார் அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.

    பின்னர் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    நாகை மீனவர்கள் வலையை இலங்கை மீனவர்கள் பறித்து சென்றனர். இது குறித்து அவர்கள் கடலோர காவல் படையிடம் புகார் கொடுத்துள்ளனர்.
    கீழ்வேளூர்:

    நாகை மாவட்டம் நாகூர், பட்டினச்சேரி பகுதியை சேர்ந்த கோவிந்தன், சக்திவேல் ஆகியோருக்கு சொந்தமான படகில் 11 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    அவர்கள் வேளாங்கண்ணியில் இருந்து 35 நாட்டின் கல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்களின் வலைகள், ரூ. 2 லட்சம் மதிப்புள்ள மீன்களை பறித்து விரட்டியடித்தனர்.

    ரூ. 11 லட்சம் மதிப்புள்ள வலைகளை பறி கொடுத்த நாகை மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரை திரும்பினர். இது குறித்து அவர்கள் கடலோர காவல் படையிடம் புகார் கொடுத்துள்ளனர்.

    தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி அவர்களது படகுகளை சிறை பிடித்து செல்லும் சம்பவம் நடைபெற்று வரும் நிலையில் இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்கள் வலையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேதாரண்யம் அருகே விபத்தில் காயமடைந்தவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு காவல் சரகம் பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி கிராமம், கணபதி தேவன்காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 34). இவர் சம்பவத்தன்று இரவு மருதூர் கடைத்தெருவிற்கு வந்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பினார்.

    அப்போது வழியில் சாலையில் உள்ள தடுப்பில் மோதி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் அவர் இறந்தார்.

    இதுகுறித்து அவரது மனைவி அபிராமி கொடுத்த புகாரின் பேரில் வாய்மேடு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அருணாச்சலம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    மோட்டார் சைக்கிள் மோதி ஜவுளிக்கடை உரிமையாளர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    காரைக்கால் நிரவி பகுதி வாழை கொல்லைவீதியை சேர்ந்தவர் முகமது சாபி(வயது 58). இவர் திட்டச்சேரியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் நாகூர் பனங்குடி ஆற்று பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த தஞ்சை கலைஞர் நகரை சேர்ந்த ரமேஷ் மகன் அரவிந்த்குமார்(23) என்பவர் முகமது சாபி மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து நாகூர் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    வேதாரண்யம் அருகே நகை பாலீஷ் போடுவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட வட மாநிலத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கத்தரிப்புலம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி பரிமளா. இவர் வீட்டில் தனியாக இருந்தார்.

    அப்போது வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர் நகைக்கு பாலீஷ் போடுவதாக கூறி வந்தார். அவரிடம் பரிமளா தனது ஒரு பவுன் நகையை கொடுத்து பாலீஷ் போட்டு தருமாறு கூறினார்.

    அவர் பாலீஷ் போட்டு சென்ற பின் பரிமளா தனது நகையை சரிபார்த்தார். அப்போது ஒரு பவுன் நகையில் 4½ கிராம் மட்டுமே இருந்தது. 3½ கிராம் நகை குறைந்து இருந்தது.

    இது குறித்து அவர் தனது கணவரிடம் தெரிவித்தார். அவர் நகை பாலீஷ் போட்டு தருவதாக கூறியவரை பிடித்து கரியாப்பட்டினம் போலீசில் ஓப்படைத்தார். சப்-இன்ஸ்பெக்டர் பசுபதி அவரை கைது செய்தார். விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த குபோந்த் குமார் யாதவ் என்பது தெரிய வந்தது.

    அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் அபிராமி அம்மன் உடனாகிய அமிர்த கடேஸ்வரரர் கோவிலில் ஆயில்ய ஹோமம் நடைபெற்றது.
    நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் அபிராமி அம்மன் உடனாகிய அமிர்த கடேஸ்வரரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் அபிராமி பட்டருக்கு அம்மன் அருள்புரிந்து அமாவாசை நாளில் முழுநிலவை தோன்ற செய்த திருவிளையாடல், எமனிடம் இருந்து உயிரை காப்பாற்றி கொள்ள மார்க்கண்டேயர் சிவனை சரண் அடைந்து என்றும் 16 வயது வரம் பெற்ற திருவிளையாடல் உள்பட பல அற்புத நிகழ்ச்சிகள் நடந்துள்ளது. இக்கோவிலில் 60-ம் கல்யாணம், 80 வயது பூர்த்தி சிறப்பு வழிபாடு செய்தால் ஆயுள் பலம் கிடைக்கும் என்பதால் உலகம் முழுவதும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வழிபாடு நடத்தி செல்வார்கள்.

    இக்கோவிலுக்கு புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி இன்று காலை வந்தார். அவர் வருகையையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட ஆயில்ய ஹோமம் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். முன்னதாக அவர் அனைத்து சாமி சன்னதிகளுக்கும் சென்று வழிபட்டார். அவருடன் பாதுகாப்பு அதிகாரிகளும் வந்துள்ளனர்.

    இதுபற்றிய தகவல் பரவியதும் பக்தர்கள் நாராயணசாமி ஆயில்ய ஹோமம் செய்த இடத்துக்கு சென்று அவரை பார்த்து சென்றனர். அவருக்கு கோவில் நிர்வாகிகள் வரவேற்பு அளித்து பிரசாதங்கள் வழங்கினர். அவரது வருகையையொட்டி காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் திருக்கடையூர் கோவிலுக்கு வந்திருந்தனர்.
    ×