என் மலர்
நாகப்பட்டினம்
நாகூர் தர்காவின் 460-வது ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நாகை மாவட்டத்தில் உள்ள நாகூர் தர்காவின் பிரபல திருவிழாவான கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நாகூரில் உள்ள பாதுஷா சாகிபு தர்காவில் கந்தூரி விழாவிற்கான கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது. உலக புகழ்ப் பெற்ற நாகூர் தர்காவின் கந்தூரி விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுது வழக்கமே.

இதில் விழாவின் தொடக்கத்தில் நடைபெறும் கொடியேற்றம் மற்றும் சந்தனக்கூடு ஊர்வலம், சந்தனம் பூசும் நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். கொடி ஊர்வலத்திலும், கொடியேற்றத்திலும் திரளான மக்கள் பங்கேற்பதால் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளுள் ஒன்றான சந்தனக்கூடு ஊர்வலம் வரும் மார்ச் 9-ஆம் தேதி நடைபெறுகிறது. சந்தனம் பூசும் விழா மார்ச் 10-ஆம் தேதியும், புனித கொடியை இறக்கும் நிகழ்ச்சி மார்ச் 13-ஆம் தேதி நடைபெறுகிறது.
சீர்காழி:
பூம்புகார் அருகே உள்ள புதுகுப்பத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி. கூலி தொழிலாளி. இவரது மனைவி இளமதி (வயது 32). இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி வீட்டில் எரிந்து கொண்டிருந்த மண்ணெய் விளக்கில் கேனில் இருந்த மண்ணெணையை இளமதி ஊற்றினார். அப்போது எதிர்பாராதவிதமாக கேன் தவறி விழுந்து அவர் மீது தீ பற்றியது. இதனை கண்ட கலியமூர்த்தி மனைவியை காப்பாற்ற முயன்றார். இதில் அவரும், அவரது மகன்கள் விக்னேஷ், முகிலன் ஆகியோரும் காயமடைந்தனர்.
அவர்களை பொதுமக்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இளமதி நேற்று இறந்தார். கலியமூர்த்தி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பூம்புகார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குத்தாலம்:
நாகை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த மருதூர் சத்திரத்தை சேர்ந்த காளீஸ்வரன் மனைவி கலாமதி (வயது 27) இவர்களுக்கு திருமணமாகி 2½ ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 1½ வயதில் மதுப்பிரியா, கவிப்பிரியா என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். மெக்கானிக்காக வேலை பார்த்து வந்த காளீஸ்வரன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் இறந்துவிட்டார்.
கணவர் இறந்த துக்கத்திலும், 2 குழந்தைகளை எப்படி காப்பாற்றுவது என்ற மனநிலையிலும் கலாமதி இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று தனது 2 குழந்தைகளின் கழுத்தை அறுத்தார். பின்னர் அவர்தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கழுத்து அறுபட்ட குழந்தை மதுபிரியா சம்பவ இடத்திலேயே இறந்தது. மற்றொரு குழந்தை கவிப்பிரியா முனங்கி கொண்டு இருந்தாள். கலாமதியின் மாமியார் பரிபூரணம் தினமும் கலாமதி வீட்டுக்கு வந்து குழந்தைகளை குளிப்பாட்டி செல்வது வழக்கம் . அதுபோல நேற்று மாலையும் வீட்டுக்கு வந்தார் . அப்போது கதவு உள்பக்கம் தாழிடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வெண்டிலேட்டர் வழியாக பார்த்த போது கலாமதி தூக்கில் பிணமாக தொங்கியதும் குழந்தை மதுப்பிரியா கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடப்பதையும் கண்டு திடுக்கிட்டார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார். பின்னர் இது குறித்து குத்தாலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடி கொண்டு இருந்த கவிப்பிரியாவை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கபட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கவிப்பிரியாவை அனுப்பி வைத்தனர். அங்க சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கணவர் இறந்ததால் கலாமதி வறுமையில் வாடினார். இதனால் 100 நாள் வேலைக்கு சென்று வந்துள்ளார். பட்டதாரியான அவர் அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்தார்.
குத்தாலம் ஒன்றிய அலுவலகத்தில் அங்கன்வாடி சத்துணவு அமைப்பாளர் பணிக்கு ஆதரவற்ற விதவைகள் விண்ணப்பிக்கலாம் என்பதை அறிந்த அவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் ஒரு வாடகை வீடு பிடித்து அங்கு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். அங்கன்வாடி சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பித்த கலாமதியிடம் வேலை கிடைப்பது கடினம் என்று சிலர் கூறியதால் அந்த வேலையும் தனக்கு கிடைக்காது என்று கலக்கம் அடைந்துள்ளார்.
பிறருக்கு பாரமாக வாழ்வதை விட சாவதே மேல் என்று கருதி தனது மனதை கல்லாக்கி கொண்டு இரண்டு குழந்தைகளின் கழுத்தையும் அறுத்து விட்டு அவரும் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
வருமானம் இல்லாத விரக்தியில் குழந்தைகளை கொலை செய்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மருதூர்சத்திரம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
நாகப்பட்டினம்:
தமிழகத்தில் விவசாயத்தை பாதிக்கும் வகையில் மீத்தேன் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இந்த திட்டத்தால் விவசாயம் பாதிக்கப் படுவதுடன், மக்களுக்கும் அதிக அளவு பாதிப்பு ஏற்படுவதால் பல்வேறு அமைப்புகள், கட்சிகள் மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை மேற்கொண்டது.
அதைதொடர்ந்து தமிழகத்தில் மீத்தேன் எடுக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்தநிலையில் தற்போது ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் நெடுவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு தங்களது வாழ் வாதாரமான விவசாயம் அழிந்துவிடும் என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், இந்த திட்டத்திற்கு பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் நாகை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அவுரித்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்த நாகை வெளிப்பாளையம் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி இளைஞர்கள் 28 பேரை கைது செய்தனர்.
பின்னர் அவர்களை அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர். அதனைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்திற்காக போடப்பட்டிருந்த பந்தலையும் போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் நாகை மீனவர்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் உள்ள மீனவர்களும் தங்கியிருந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாகை ஆரியநாட்டு தெருவை சேர்ந்த அன்பு என்பவருக்கு சொந்தமான படகில் அவரது மகன் குணபால் மற்றும் ஆறுமுகம், பாலா, லட்சுமணன், கேசவன் ஆகியோர் கடந்த 24-ந் தேதி மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தபோது 3 படகுகளில் வந்த இலங்கை மீனவர்கள், குணபால் உள்பட மற்ற மீனவர்களையும் தாக்கினர்.
பின்னர் அவர்களிடம் இருந்த மீன்கள், ஜி.பி.எஸ். கருவி உள்ளிட்ட பொருட் களை இலங்கை மீனவர்கள் பறித்து சென்றனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் என கூறப்படுகிறது. அதன்பின்னர் நாகை மீனவர்கள் நேற்று காலை கரைக்கு திரும்பினர்.
இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தியது குறித்து நாகை மீனவர்கள் தெரிவித்த தகவலின் பேரில் மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர் ந்து தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்துவது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மீத்தேன் எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்தது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், மக்களுக்கும் பாதிப்புகள் ஏற்படும் என கூறி பல்வேறு தரப்பில் இருந்து இதற்கு எதிர்ப்பு கிளம்பின. இதையடுத்து மீத்தேன் எடுக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே நெடுவாசலில் ‘ஹைட்ரோ கார்பன்’ என்னும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் நெடுவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு விவசாயம் அழிந்துவிடும் என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த திட்டத்துக்கு பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் இயற்கை எரிவாயு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் நாகையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நெடுவாசல் பகுதியில் இயற்கை எரிவாயு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 28 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் ஆர்ப்பாட்டத்துக்காக போடப்பட்டிருந்த பந்தலையும் போலீசார் அகற்றினர்.
நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்களுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர். இந்த போராட்டத்திற்கு திருச்சி தண்ணீர் அமைப்பினர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
அந்த அமைப்பினர் 8 பேர் நேற்று திருச்சியில் இருந்து நெடுவாசல் நோக்கி விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். திருச்சி விமான நிலையம் அருகே 8 பேரையும் போலீசார் தடுத்து நிறுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர். பின்னர் அவர்களை விடுவித்தனர்.
சீர்காழி:
சீர்காழி ரெயிலடி பகுதியை சேர்ந்தவர் தனலெட்சுமி (வயது70). இவர் வீட்டருகே பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மகன் ரமேஷ் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நாகை மாவட்ட செயலாளராக உள்ளார். நேற்று இரவு வழக்கம் போல் தனலெட்சுமி கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு நடந்து சென்றார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 4 மர்ம நபர்கள் திடீரென அவர் அணிந்திருந்த 4 பவுன் செயினை பறிக்க முயன்றுள்ளனர். இதில் சுதாரித்துக் கொண்ட அவர் கைகளால் செயினை இறுகப் பிடித்துக் கொண்டு சத்தம் போட்டுள்ளார்.
இதனால் மர்மநபர்கள் வேகமாக செயினை பறித்தனர். இதில் 3½ பவுன் செயினுடன் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். ½ பவுன் டாலர் மட்டும் தனலெட்சுமியிடம் சிக்கி விட்டது.
சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து மர்ம நபர்கள் 4 பேரையும் விரட்டி சென்று பிடித்து சீர்காழி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழியில் இருந்து இன்று காலை 5.30 மணியளவில் பழையாறைக்கு ஒரு அரசு பஸ் சென்றது. இந்த பஸ் சீர்காழி அருகே உள்ள மடவாமேடு காளியம்மன் கோவில் வளைவு பகுதியில் சென்றபோது கடும் பனிபொழிவு காரணமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர வாய்க்கால் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் பஸ்சில் காயமடைந்த பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் கூழையார் வடக்கு தெருவை சேர்ந்த பாப்பாத்தி (வயது 60), அதேபகுதியை சேர்ந்த காந்திமதி (56), தொடுவாயைசேர்ந்த பட்டு (40), அஞ்சம்மாள் (35) உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
மேலும் இந்த விபத்தில் நிம்மேலியை சேர்ந்த பஸ்டிரைவர் ஞானகுமார் (41), மாதிர வேளுர் கீழவரவுக்குடியை சேர்ந்த கண்டக்டர் பெரியார் (35) உள்பட 41 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே உள்ள கரியாப்பட்டினம், செட்டிப்புலம் கடைவீதியில் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை அவரிக்காட்டை சேர்ந்த காளிமுத்து (வயது 38) என்பவர் விற்பனை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற கரியாப்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் பசுபதி வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துகொண்டிருந்த காளிமுத்துவை கைது செய்து அவர் வைத்திருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை சபரி நகரை சேர்ந்தவர் குமரன் (வயது 36). செம்பனார்கோவில் குமரன்கோவில் தெருவை சேர்ந்த கண்ணன் மகள் விஜயலட்சுமி (31). இருவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்தநிலையில் குமரன், நகை-பணம் கேட்டு விஜயலட்சுமியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். நேற்று விஜயலட்சுமிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால், அவருக்கு சிகிச்சை அளிக்க குமரன் மற்றும் அவரது உறவினர்கள் கும்பகோணத்திற்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த விஜயலட்சுமியின் தந்தை கண்ணன், செல்போனில் தொடர்பு கொண்டு உடல்நிலை குறித்து கேட்டபோது விஜயலட்சுமி இறந்து விட்டதாகவும், மயிலாடுதுறைக்கு வந்து கொண்டு இருப்பதாகவும் குமரனின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கண்ணன் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், தனது மகள் விஜயலட்சுமியின் சாவில் மர்மம் இருப்பதாகவும், சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார், விஜயலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வேதாரண்யம் அருகே ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரேசன் (வயது 60). விவசாயி. இவர், அதே ஊரை சேர்ந்த சரவணன் என்பவரிடம் நிலத்தை குத்தகைக்கு எடுத்து கடன் வாங்கி நெல் சாகுபடி செய்து இருந்தார்.
இந்தநிலையில் மழை பொய்த்து விட்டதாலும், ஆற்றில் தண்ணீர் வராததாலும் நெற்பயிர்கள் கருகின. இதனால் வாங்கிய கடனை எப்படி அடைப்பது என கவலையுடன் இருந்து வந்தார். நேற்று அவர் விஷம் குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார். அவரை மீட்டுசிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்து கொண்ட சுந்தரேசனுக்கு பார்வதி என்ற மனைவியும், அன்பழகன், வீரமணி ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு ராமேசுவரம் பாம்பன் பகுதியை சேர்ந்த 7 மீனவர்கள் கோடியக்கரைக்கு அருகே படகில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அங்கு வந்த இலங்கை மீனவர்கள், மீனவர்களை தாக்கி அவர்களிடம் இருந்த மீன்கள், மீன்பிடி வலைகள், திசை காட்டும் கருவி ஆகியவற்றை பறித்துக்கொண்டு தங்களது படகில் தப்பி சென்று விட்டனர்.
அதேபோல் கோடியக்கரைக்கு அருகே மற்றொரு படகில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த பாம்பனை சேர்ந்த 7 மீனவர்களையும் தாக்கிய இலங்கை மீனவர்கள் மீன்கள், வலைகள் உள்ளிட்ட பொருட்களை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.
அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தி உள்ளது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக கடலில் மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






