என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வறட்சி நிவாரணம் வழங்காததை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து மறியலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 200 பேரை வேதாரண்யம் போலீசார் கைது செய்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு சார்பில் மாவட்டச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜ் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் நாராயணன், ஒன்றியச் செயலாளர் சிவகுருபாண்டியன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் மாரியப்பன், விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் வீரப்பன் உட்பட 200 பேர் கலந்து கொண்டனர்.

    டெல்டா மாவட்டத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டம் என்று அறிவித்தும் இன்று வரை வறட்சி நிவாரணம் வழங்காததை கண்டித்தும், வறட்சி நிவாரணம் வழங்குவதில் பெரு, குறு விவசாயி என பாரபட்சம் காட்டாமல் அனைத்து விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணம் வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    மறியலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 200 பேரை வேதாரண்யம் போலீஸ் துணை கண்காணிப்பாளர் பாலு, இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகரன், அருணாசலம் மற்றும் போலீசார் கைது செய்தனர்.

    நாகை மாவட்டம், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி, தமிழ்நாடு விவசாய சங்கம், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் தங்கசாமி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழகத்தில் விவசாய தொழிலாளர்கள் வேலை இல்லாமல் வறுமையில் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்கவேண்டும்.
    பெட்ரோல், டீசலுக்கு கூடுதல் வரிவிதிப்பை தமிழக அரசு கைவிட வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன் கூறியுள்ளார்.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு வந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    வணிகர் தினத்தை முன்னிட்டு சென்னையில் 34-ம் வணிகர் உரிமை பிரகடன மாநில மாநாடு வருகிற மே மாதம் 5-ந் தேதி நடைபெற உள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தால் ஒவ்வொரு தொழிலாக முடங்கி வருகிறது. விவசாயத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் நீர் ஆதாரம் அனைத்து வகையிலும் அழிக்கப்படுகிறது. இதற்கெல்லாம் காரணமான உலக வர்த்தக ஒப்பந்தத்தை புறக்கணிக்க வேண்டும். நஞ்சுத்தன்மை வாய்ந்த கோக், பெப்சி போன்ற வெளிநாட்டு குளிர்பானங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். இதற்கான விழிப்புணர்வு பிரசாரம் பல மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு கோர்ட்டு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

    சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறையும் நேரத்தில் தமிழக அரசு மதிப்பு கூட்டு வரியை அதிகரித்ததால் தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இதனால் அதனை சார்ந்துள்ள மற்ற பொருட்களின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு கூடுதல் வரிவிதிப்பை கைவிட வேண்டும்.

    அதனை மத்திய அரசும் பரிசீலனை செய்ய வேண்டும்.500, 1,000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் ஆன்-லைன் வர்த்தகம் வளர்ச்சி பெற்று அமோகமாக நடைபெற்று வருகிறது. இதனால் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அதிக அளவில் லாபம் கிடைத்து வருகிறது.

    ஆனால், இந்தியாவில் பொருளாதாரம் மிகப் பெரிய வீழ்ச்சி அடைந்துள்ளது. அன்னிய ஆதிக்கம் தான் விவசாயிகள், நெசவாளர்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் அழிவை தேடி கொடுக்கிறது. எனவே இந்தியாவை அன்னிய சக்திகளின் ஆதிக்க பிடியில் சிக்காமல் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது பேரவையின் நாகை வடக்கு மாவட்ட தலைவர் எம்.என்.ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் பாலையா, மாவட்ட பொருளாளர் ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
    திருக்கடையூரில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகவேல் நேற்று இரவு திருக்கடையூர் மெயின் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர். இதில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இருந்து 515 மதுபாட்டில்களை கடத்தி வருவது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில் சீர்காழி தாலுக்கா புதுப்பட்டினத்தை சேர்ந்த சோமு மகன் அய்யப்பன் (வயது 30) என்பது தெரியவந்தது. இன்ஸ்பெக்டர் முருகவேல் மதுபாட்டில்களையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து அய்யப்பனை கைது செய்தனர்.

    சீர்காழி அருகே காரைமேடு ஒளிலாயத்தில் தைவான் நாட்டை சேர்ந்த தம்பதிக்கு தமிழ் கலாச்சாரப்படி திருமணம் நடைபெற்றது.
    சீர்காழி:

    தைவான் நாட்டை சேர்ந்த மெளலுங்ச்சுவான்ச்சென் தம்பதியினர் தமிழ் கலாச்சாரபடி திருமணம் செய்ய முடிவு செய்து ஒளிலாயத்திற்கு வந்தனர். ஒளிலாய நிர்வாகி நாடி ராஜேந்திரா சுவாமி தலைமையில் சிவாச்சாரியார்கள் அருண், முத்துகுமார், சங்கர் ஆகியோர் ஆகம விதிமுறையில் தமிழ் கலாச்சாரபடி அம்மி மிதித்து அருந்ததி பார்த்து திருமணம் நடத்தி வைத்தனர். அப்போது அங்கு இருந்தவர்கள் அட்சதை தூவி வாழ்த்தினர். பின்பு மணமகன்-மணமகள் ஆகியோருக்கு பொது மக்கள் மொய் எழுதினர். பின்பு அங்குள்ள 18 சித்தர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர் இதனை தொடர்ந்து அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது விழாவிற்கான ஏற்பாடுகளை மாமல்லன், நாடி முத்து, திருஞானம், சிலம்பு, காளிதாஸ் செய்திருந்தனர்.

    வேதாரண்யத்தில் நேற்று மதியம் முதல் இன்று காலை வரை விட்டு விட்டு மழை பெய்தது.இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

    வேதாரண்யம்:

    தமிழகத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. தஞ்சை திருவையாறு, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நேற்று மதியம் முதல் இன்று காலை வரை விட்டு விட்டு மழை பெய்தது.

    இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. வேதாரண்யத்தில் இன்று காலை 8 மணி வரை 50.8 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.நாகையிலும் நேற்று மதியம் முதல் இன்று காலை வரை மழை பெய்தது.

    இலங்கை கடற்படையினர் நாகை மீனவர்கள் 8 பேரை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக சிறை பிடித்தனர். அவர்களது படகையும் பறிமுதல் செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த பாபு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சந்தோஷ், சதிஷ், சரத், ஆறுமுகம் உள்ளிட்ட 8 பேர் மீன் பிடிக்க சென்றனர். நேற்று இரவு அவர்கள் கோடியக்கரைக்கு தென் கிழக்கே இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் நாகை மீனவர்கள் 8 பேரையும் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக சிறை பிடித்தனர். அவர்களது படகையும் பறிமுதல் செய்தனர்.

    அவர்கள் இலங்கை திரிகோணமலை அழைத்து செல்லப்பட்டனர். அங்கு விசாரணை நடைபெற்று வருகிறது. 8 மீனவர்களும் இலங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

    தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நாகை மீனவர்கள்சிறை பிடிக்கப்பட்டனர். தற்போது மேலும் 8 பேர் சிறை பிடிக்கப்பட்டது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதனை கண்டிக்கும் வகையில் நாகை தாலுகா மீனவர்கள் இன்று அல்லது நாளை கூட்டம் நடத்தி அடுத்த கட்ட போராட்டம் அறிவிக்க உள்ளதாக அக்கரைப்பேட்டை பஞ்சாயத்தார் தெரிவித்தனர்.

    மேலும் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    இலங்கை மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடித்து வருவதால் கோடியக்கரையில் தங்கி மீன் பிடித்த வெளிமாவட்ட மீனவர்கள் அங்கிருந்து வெறியேறி தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்று விட்டனர்.
    வேதாரண்யம் பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதி 5 பேரும் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த தென்னம்புலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 65). இவர் குரவப்புலத்திற்கு கூலி வேலைக்கு சென்று சவுக்கு மரம் வெட்டிவிட்டு சைக்கிளில் வீடு திரும்பினார்.

    குரவப்புலம் கடைவீதியில் சென்றபோது வேதாரண்யத்திலிருந்து ராஜப்பா மகன் ஹரிகரன் (22) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் சுப்பிரமணியன் படுகாயமடைந்தார். அவர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    வேதாரண்யத்தை அடுத்த ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (60). இவர் வேதாரண்யம்- கோடியக்கரை சாலையில் அகஸ்தியன்பள்ளி அய்யனார் கோவில் வளைவில் இருந்து அன்னதான கூடத்திற்கு சாப்பிட நடந்து சென்றபோது அகஸ்தியன்பள்ளி சக்திவேல் (26) ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் படுகாயமடைந்த அண்ணாதுரையை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    வேதாரண்யத்தை சேர்ந்த சபரிநாதனும் (42), அவரது நண்பர் கோவிந்தனும் தோப்புத்துறை சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பினர். குருகுலம் எதிரே வந்தபோது தோப்புத்துறையை சேர்ந்த தனுஷ்கோடி (32) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது மோதியதில் மூவரும் படுகாயமடைந்தனர்.

    இவர்களை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    சீர்காழியில் சிறுவனிடம் நகை பறித்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி திருத்தாள முடையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 60). இவரது பேரன் கிசாந்த் நேற்று வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தான். அப்போது அவன் அணிந்திருந்த 1 பவுன் தங்கசெயினை மர்ம நபர் பறித்து சென்று விட்டான். இதுபற்றி சேகர் சீர்காழி போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அழகுதுரை, குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் வில்சன், வசந்த் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அந்த வழியாக சென்ற சீர்காழி இரணியன் நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முபாரக் அலி (23) என்பவர் குழந்தையிடமிருந்து செயினை பறித்து சென்றது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து நகையை மீட்டனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.

    மயிலாடுதுறையில் இன்று அதிகாலை பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு எடத் தெருவை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி லெட்சுமி (65). கணவர் இறந்து விட்டதால் தனியாக வசித்து வந்தார்.

    இவர் கடந்த 4 மாதத்திற்கு முன்பு மூட்டு அறுவை சிகிச்சை செய்து இருந்தார். ஆனால் அவருக்கு யாரும் உதவி செய்யவில்லை. அதனால் மனம் உடைந்து காணப்பட்டார். இன்று அதிகாலை லெட்சுமி தனது வீட்டின் பின்புறத்தில் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் கருகி சம்பவ இடத்திலே இறந்தார்.

    இது குறித்து மயிலாடுதுறை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மகாதேவன் சம்பவ இடத்திற்கு சென்று லெட்சுமி பிணத்தை பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை அகற்றப்படுவதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் பஸ் நிலையத்தின் அருகே உள்ள அம்பேத்கர் சிலையை வேதாரண்யேஸ்வர சுவாமி கோவில் தேரோட்டத்திற்கு இடையூறாக உள்ளது என்று கூறி அகற்றுவதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்னியூஸ்டு கட்சியினர், தலித் கூட்டமைப்பினர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு நாகை முன்னாள் எம்.எல்.ஏ மாலி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் கோவை சுப்பிரமணியன் ஒன்றியச் செயலாளர் செங்குட்டுவன் மற்றும் தலித் கூட்டமைப்பினர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக தமிழக காங்கிரஸ் கட்சி சிறுபான்மை பிரிவு மாநிலத்தலைவர் செல்வபெருந்தகை பஸ் நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலையை அகற்றக்கூடாது என தெரிவித்தார்.

    மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், மாற்றுக் கொள்கையை முன் வைத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ரெட்டவயலில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்திற்கு, மாவட்டக்குழு உறுப்பினர் கருப்பையா தலைமை வகித்தார். நீலமேகன் வரவேற்றார்.

    மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு, சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் கருப்பையா, ஜெகநாதன், மாசிலாமணி, சேகர், ஆதிநாராயணன், இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மந்திரிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், குருவிக்கரம்பை ஆகிய இடங்களிலும் தெருமுனைப்பிரசாரம் நடைபெற்றது.

    மயிலாடுதுறையில் உள்ள ஏ.வி.சி. கல்லூரியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரிக்கு வெளியே ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    மயிலாடுதுறை:

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் செயல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்த போராட்டத்திற்கு ஆதரவாக மாணவர்களும் களம் இறங்கி உள்ளனர். நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்துள்ள மேலையூரில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் பூம்புகார் அரசு கல்லூரி உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்கள்-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதே போல் மயிலாடுதுறையில் உள்ள ஏ.வி.சி. கல்லூரியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரிக்கு வெளியே ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    கும்பகோணத்திலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடலாம் என போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. எனவே இங்குள்ள கல்லூரிகள் முன்பும் முக்கிய இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மயிலாடுதுறை அருகே கல்லூரி பேராசிரியர் மனைவியை தாக்கி 45 பவுன் நகையை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள லெட்சுபுரத்தில் வசித்து வருபவர் நடராஜன். ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர்.

    இவரது மனைவி லலிதா. நேற்று இரவு இவர்கள் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.நள்ளிரவு 1 மணியளவில் கொள்ளை கும்பல் 3 பேர் அங்கு வந்தனர்.

    அவர்கள் முகமூடி அணிந்திருந்தனர். நடராஜன் வீட்டின் கிரில் கேட் மற்றும் கதவின் பூட்டை உடைத்து கொண்டு அக்கும்பல் உள்ளே நுழைந்தது.

    அப்போது நடராஜன் பாத்ரூமில் இருந்தார். அதன் கதவை வெளிப்பக்கம் பூட்டிய கொள்ளை கும்பல் லலிதா படுத்திருந்த அறைக்கு சென்று அவரை அறைந்து எழுப்பினர்.

    கொள்ளையர்களை பார்த்த அவர் சத்தம் போட்டார். உடனே அவரை உருட்டுக் கட்டையால் தாக்கினர்.இந்த சமயத்தில் நடராஜன் பாத்ரூம் கதவை உடைத்து கொண்டு வெளியே வந்தார்.அவரை மிரட்டி உட்கார வைத்தனர்.

    பின்னர் அறையின் பூட்டை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 45 பவுன் தங்க நகை, 20 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

    கொள்ளையர்களிடம் நகையை பறிகொடுத்த நடராஜன் இது குறித்து மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார்.

    டி.எஸ்.பி.(பொறுப்பு) சேகர், இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர்.

    பேராசிரியர் வீட்டில் நடைபெற்ற முகமூடி கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×