என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயிலாடுதுறை அருகே பேராசிரியர் வீட்டில் 45 பவுன் கொள்ளை
    X

    மயிலாடுதுறை அருகே பேராசிரியர் வீட்டில் 45 பவுன் கொள்ளை

    மயிலாடுதுறை அருகே கல்லூரி பேராசிரியர் மனைவியை தாக்கி 45 பவுன் நகையை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள லெட்சுபுரத்தில் வசித்து வருபவர் நடராஜன். ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர்.

    இவரது மனைவி லலிதா. நேற்று இரவு இவர்கள் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.நள்ளிரவு 1 மணியளவில் கொள்ளை கும்பல் 3 பேர் அங்கு வந்தனர்.

    அவர்கள் முகமூடி அணிந்திருந்தனர். நடராஜன் வீட்டின் கிரில் கேட் மற்றும் கதவின் பூட்டை உடைத்து கொண்டு அக்கும்பல் உள்ளே நுழைந்தது.

    அப்போது நடராஜன் பாத்ரூமில் இருந்தார். அதன் கதவை வெளிப்பக்கம் பூட்டிய கொள்ளை கும்பல் லலிதா படுத்திருந்த அறைக்கு சென்று அவரை அறைந்து எழுப்பினர்.

    கொள்ளையர்களை பார்த்த அவர் சத்தம் போட்டார். உடனே அவரை உருட்டுக் கட்டையால் தாக்கினர்.இந்த சமயத்தில் நடராஜன் பாத்ரூம் கதவை உடைத்து கொண்டு வெளியே வந்தார்.அவரை மிரட்டி உட்கார வைத்தனர்.

    பின்னர் அறையின் பூட்டை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 45 பவுன் தங்க நகை, 20 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

    கொள்ளையர்களிடம் நகையை பறிகொடுத்த நடராஜன் இது குறித்து மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார்.

    டி.எஸ்.பி.(பொறுப்பு) சேகர், இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர்.

    பேராசிரியர் வீட்டில் நடைபெற்ற முகமூடி கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×