என் மலர்
செய்திகள்

செம்பனார்கோவில் அருகே வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம்
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே சேமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 36), விவசாயி. இவர், சேமங்கலம் அருகே 5 ஏக்கர் வயலை குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்து இருந்தார். சம்பவத்தன்று வயலுக்கு சென்ற ராஜ்குமார், சாகுபடி செய்த நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி காய்ந்து கிடப்பதை பார்த்து மனம் உடைந்தார். அப்போது திடீரென அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு வயலில் மயங்கி விழுந்த ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த நிலையில் இறந்துபோன விவசாயி ராஜ்குமார் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பீட்டுத்தொகை வழங்காததாலும், அதிகாரிகள் முறையாக கணக்கெடுப்பு நடத்தாதையும் கண்டித்து சேமங்கலம் கிராமம் தெற்கு தெருவில் 90-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி சமூக நலத்துறை தனி தாசில்தார் சண்முகம் மற்றும் அதிகாரிகள் சேமங்கலம் கிராமத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கட்டி இருந்த கருப்புக் கொடியை அகற்றினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






