என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரி டீன் சஸ்பெண்டானார்.
    • புகாரின்பேரில் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

     கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளி என்ற இடத்தில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கடந்த ஜனவரி மாதம் செயல்பட தொடங்கியது. இந்த கல்லூரியின் முதல்வராக டாக்டர்அசோகன் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

    சஸ்பெண்டு

    நேற்று முன்தினம் அவர் பணி ஓய்வு பெறுவதாக இருந்தது. இந்நிலையில் அவர் தற்காலிக பணிநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. ஓய்வு பெறும் நாளில் கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் அரசு மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுவதாவது:-

    கோவை அரசு மருத்துவ கல்லூரியில் அசோகன் கடந்த 2020-ம் ஆண்டு முதல்வராக இருந்தார். அப்போது மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன.

    விசாரணை

    இதனால் இந்த புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது.

    இந்த விசாரணை உத்தரவின் காரணமாகவே அசோகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு மருத்துவத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

    ஓய்வு பெறும் நாளில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள சம்பவம் மருத்துவ கல்லூரி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கிருஷ்ணகிரியில் பேச்சு, கட்டுரை போட்டிகள் நடக்கிறது.
    • மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் வருகிற 5-ம் தேதி பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெறுகிறது.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

    வ தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்ட 18.7.1967-ம் நாளினை பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 18-ம் நாள் தமிழ்நாடு நாள் என்ற பெயரில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் விழா கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு வருகிற 5-ம் தேதி காலை 10 மணிக்கு கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது.

    முதன்மை கல்வி அலுவலர் வாயிலாக பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி, கீழ்நிலையில் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தி, மாணவர்களை தேர்வு செய்து 25 மாணவர்களுக்கு மிகாமல் இருக்கும் வகையில், முதன்மை கல்வி அலுவலரால் தேர்வு செய்யப்படட மாணவர்களை கொண்டு போட்டி நடைபெறும். இப்போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் பள்ளி தலைமையாசிரியரிடம் உரிய விண்ணப்பத்தில் பரிந்துரைப்பெற்று 5-ம் தேதி காலை 9 மணிக்குள் தங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் கலந்து கொள்ளலாம். இப்போட்டிகளை தமிழ்வளர்ச்சி உதவி இயக்கு நர் பவானி ஒருங்கிணைத்து நடத்துவார்.

    போட்டிக்கான தலைப்பு கள் முன்கூட்டியே மாணவர்களுக்கு தெரி விக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு உருவான வரலாறு. மொழிவாரி மாகாணமும், தமிழ்நாட்டில் நடைப்பெற்ற போராட்டங்களும். தமிழ்நாட்டிற்காக உயிர் கொடுத்த தியாகிகள். பேரறிஞர் அண்ணா சூட்டிய தமிழ்நாடு. சங்கரலிங்கனாரின் உயிர்த்தியாகம். மொழிவாரி மாநிலம் உருவாக்கததில் தந்தை பெரியார். மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் மா.பொ.சி. சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்நாடு. எல்லைப்போர்த் தியாகிகள். முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெறும். முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரம் சான்றிதழுடன் வழங்கப்படும். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • போலீசார் கைப்பற்றிய எரிசாராயம் ஏலம் விடப்படுகிறது.
    • தொழிற்சாலைகள் இதனை ஏலம் எடுப்பார்கள்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினரால் கைப்பற்றப்பட்ட எரிசாராயத்தை தொழிற் சாலை பயன்பாட்டிற்கு வருகிற 12-ந் தேதி பொது ஏலம் விடப்படுகிறது.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் ஊத்தங்கரை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட எரிசாராயத்தை கைப்பற்றி கிருஷ்ணகிரி ஆயுதபடை மைதானத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. மேற்படி எரிசாராயத்தினை சென்னை தடய அறிவியல் துறையினரால் பகுப்பாய்வு செய்யப்பட்டு, தொழிற்சாலை பயன்பாட்டிற்கு உகந்தது என ஆய்வக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே, ஆயுதபடை வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ள 42 ஆயிரத்து 273 லிட்டர் எரிசாராயத்தினை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு, விலை நிர்ணயம் செய்யப்பட்ட தொகைக்கு குறையாமல் பொது ஏலம் விட முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்படி எரிசாராயத்தினை வருகிற 12-ந் தேதி காலை 11 மணிக்கு கிருஷ்ணகிரி ஆயுதப்படை வளாகத்தில் பொது ஏலம் விடப்படுகிறது.

    மேலும், இந்த நேர்வில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மேற்படி பொது ஏலத்தில் கலந்துகொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • கிருஷ்ணகிரி அருகே ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா நடந்தது.
    • அவர் 36 வருடங்கள் கல்விப்பணி புரிந்துள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் எலத்தகிரியில் அரசு நிதியுதவி பெறும் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் கடந்த 1986-ம் ஆண்டு விலங்கியல் முதுகலை ஆசிரியராக பணியில் சேர்ந்த சேவியர்ஞானதாஸ், கடந்த 30-ந் தேதி வரை 36 ஆண்டுகள் பணிபுரிந்து பணி நிறைவு பெற்றார். இவரின் பணியை பாராட்டி பள்ளி வளாகத்தில், பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.

    இதில், கிருஷ்ணகிரி மறை மாவட்ட முதன்மை குரு அருட்தந்தை ஜார்ஜ், மறை மாவட்ட ஆயர் சார்பாக வாழ்த்துரை வழங்கி, பாராட்டினார். பள்ளியின் தாளாளர் தந்தை மரியப்பன், பள்ளியின் சார்பாக நினைவு பரிசு வழங்கி வாழ்த்தி பேசினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்தந்தை மைக்கேல்ராஜ், ஆசிரியை வாழ்த்தி, அவரது பணியினை புகழ்ந்து பாராட்டினார்.

    மேலும், பள்ளியின் 55 ஆசிரியர்களின் சார்பாக வாழ்த்துபாடல், சிறப்புரை நிகழ்த்தப்பட்டு, நினைவு பரிசு வழங்கி பாராட்டினர். ஆசிரியரை முன்னாள் மாணவர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் வாழ்த்தி பாராட்டினர்.

    இறுதியில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர் சேவியர்ஞானதாஸ் ஏற்புரையாற்றினார்.

    இதில் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஓசூர் அருகே அலசப்பள்ளியில் சிமெண்டு சாலை அமைக்கப்பட உள்ளது.
    • இந்த பணியை பிரகாஷ் எம்.எல்.ஏ . தொடங்கி வைத்தார்.

    ஓசூர்,

    ஓசூர் சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட அலசப்பள்ளி - பட்வாரப்பள்ளி ஊராட்சி அலசப்பள்ளி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி மூலம் சுமார் 3 லட்சம் மதிப்பில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கப்படவுள்ளது.

    இதையொட்டி நடந்த நிகழ்ச்சிக்கு ஒசூர் எம்.எல்.ஏ.ஒய்.பிரகாஷ் தலைமை தாங்கி பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    இதில் ஓசூர் ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பி.எஸ்.சீனிவாசன், அவைத்தலைவர் நாகராஜ், துணை செயலாளர்கள் சுனிதாமுரளி, ரமேஷ், ஊராட்சி தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி, மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ஊத்தங்கரை அருகே தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் திருட்டு நடந்துள்ளது.
    • வெளிநாட்டு பணம், நகையை திருடி சென்றுள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சேலம் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(60). இவர் மின்சார பைக் தயாரிப்பு நிறுவனத்தில் மானேஜராக உள்ளார்.

    கடந்த மாதம் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார்.

    அப்போது மர்ம நபர்கள் இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பீரோவையும் உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.1லட்சத்து 16 ஆயிரம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள், ரூ.3000 ரொக்கம். 1 பவுன் தங்க நகை முதலியவற்றை திருடி சென்றுள்ளனர். இது குறித்து ரமேஷ் தந்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குட்டியப்பன் வழக்கு பதிவு செய்து மர்ம திருடர்களை தேடி வருகிறார்.

    • முதல்-அமைச்சர் ஸ்டாலினை செல்லக்குமார் எம்.பி.சந்தித்து மனு கொடுத்தார்.
    • ஓசூர் வரை மெட்ரோ ரெயில் இயக்கம் திட்டம் குறித்து பேசினார்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் செல்லகுமார் (காங்கிரஸ்) தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    பெங்களூரு மெட்ரோ ரெயில் சேவை பெங்களூருவில் இருந்து பொம்மசந்திரா வரை செயல்பட்டு வருகிறது. பொம்மசந்திராவில் இருந்து அத்திப்பள்ளி வழியாக ஓசூர் வரை நீட்டிக்கப்பட்டால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள் வேலை நிமித்தமாக, மருத்துவமனை, வியாபார நிமித்தமாக, கல்லூரி படிப்பிற்காக பெங்களூரு மற்றும் சுற்றுப்பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். அவர்களுக்கு மெட்ரோ ரெயில் சேவை மிகவும் பயனுள்ளதாகவும், லாபகரமானதாகவும் அமையும்.

    மெட்ரோ ரெயில் சேவை வருவதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு சுற்றுச் சூழல் பாதிப்பு மிகவும் குறைந்துவிடும்.

    இது குறித்து நாடாளுமன்றத்தில் பலமுறை குரல் எழுப்பியும், மத்திய நகர்புற வளர்ச்சித்துறை மந்திரியையும், துறை செயலாளரையும் நேரில் சந்தித்து இதன் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்தேன். மத்திய மந்திரியும் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து இரு மாநில அரசிற்கும் கடிதம் எழுதியுள்ளார்.

    இது மாநில அரசு சம்பந்தமானது என்பதால் இரு மாநில அரசுகள்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும், மத்திய அரசு தன் பங்களிப்பை பரிசீலிக்கும் என்றும் எனக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

    அண்மையில் கர்நாடகா முதல்-மந்திரியை அம்மாநில முன்னாள் முதல்-மந்திரி சித்தராமை யாவுடன் சந்தித்து இதன் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்துள்ளேன். இதன் பொருட்டு பெங்களூரு மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைவர் கடந்த மே 23-ந் தேதி மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலருக்கு கடிதம் எழுதப்பட்டது.

    அதில், இந்த திட்டத்திற்கு கர்நாடகா முதல்-மந்திரி அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாகவும், தமிழக அரசு அதற்கான ஆய்வினை மேற்கொள்ள வேண்டும் என்றும் கர்நாடகா முதல்-மந்திரி குறிப்பிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டம் இரண்டு மாநில அரசு பகுதிகளை இணைக்கும் திட்டம். மெட்ரோ ரெயில் சேவைக்கான செலவு அதிகமாக இருப்பின் அதே பயனுடன் ஆனால் குறைந்த செலவினமான மெட்ரோ லைட் திட்ட சேவையை செயல்படுத்தினால் போதும். இரு மாநில அரசின் பங்கேற்பு மத்திய அரசின் பங்களிப்பு சேர்ந்து செயல்படுத்த வேண்டியுள்ளது.

    எனவே கிருஷ்ணகிரி மாவட்ட வளர்ச்சியோடு மிக வேகமாக வளர்ந்து வருகிற ஓசூர் மாநகராட்சியின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு தாங்கள் இத்திட்டத்தை செயல்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். ஓசூரில் இருந்து பொம்மசந்திரா 20 கி.மீ., தூரம் உள்ளது. அதில் தமிழக எல்லை என்பது 9 கிலோ மீட்டர் தான் உள்ளது. எனவே தாங்களே இத்திட்டத்தை முன்னெடுத்து நிறைவேற்றித் தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து கொண்டுவரப்பட்ட ஒட்டகங்கள் மீட்கப்பட்டன.
    • அவற்றைமீண்டும் ராஜஸ்தானுக்கே அனுப்ப உள்ளனர்.

    ஓசூர்,

    ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ஒட்டகங்களை அதிக அளவில் அழைத்து வந்து பக்ரீத் பண்டிகைக்கு இறைச்சிக்காக வெட்டுவதற்கு, ஓசூர் பகுதியில் அடைத்து வைத்து, உணவு மற்றும் தண்ணீர் வழங்காமல் சித்திரவதை செய்து வருவதாக டெல்லியை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் சஞ்சய் குல்கர்னி என்பவர் ஓசூர் அட்கோ காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது மத்திய பிரதேசத்தை சேர்ந்த கோவிந்த் பர்வா என்பவரும் அவருடன் சிலரும் 18 ஒட்டகங்களை ஓரிடத்தில் அடைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஓசூர் பகுதியில் 3 ஒட்டகங்களை வைத்து சவாரி செய்யும் தொழில் செய்து வருவதாகவும், கர்நாடக மாநிலத்தில் ஒட்டகங்களை வைத்து தொழில் செய்ய கெடுபிடி ஏற்பட்டதால் அதிகளவில் ஒட்டகங்களை இங்கு வரவழைத்து நாங்கள் பராமரித்து வருகிறோம், மேலும், நாங்கள் இந்துக்கள், ஒட்டகங்களை இறைச்சிக்காக வெட்ட மாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்த 18 ஒட்டகங்களை மீட்டனர். பின்னர் அந்த ஒட்டகங்களை ஓசூர் மாநகராட்சி அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர். இந்த ஒட்டகங்கள் அனைத்தும் ஓசூர் பெங்களூர் சாலையில் உள்ள ஒரு மைதானத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட ஒட்டகங்கள் அனைத்தும் ,பெங்களூருவில் உள்ள கோசாலை வசம் ஒப்படைத்து, அங்கிருந்து இன்னும் ஒருசில நாட்களில், ராஜஸ்தானுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, ஆணையாளர் பாலசுப்பி ரமணியன் உத்தரவின்பேரில் மாநகராட்சி அதிகாரிகள் செய்துள்ளனர்.

    • 10, 12-ம் வகுப்புகளுக்கு துணை தேர்வு நடக்கிறது.
    • வெற்றிபெற கலெக்டர் அறிவுரை

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், தங்களது திறமைகளை பயன்படுத்தி சிறப்பு துணைத் தேர்வில் வெற்றிபெற வேண்டும் என கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி அறிவுரை வழங்கியுள்ளார்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறவில்லையே என்று விரக்தி அடையாமல், அடுத்த கட்ட தேர்வில் வெற்றி பெற்று, தங்களின் தனித்திறமையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். 10, 11 மற்றும் 12-ம் வகுபபு தேர்வு எழுதாத மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை மூலம் சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சி வகுப்பை பயன்படுத்தி இம்மாதம் (ஜூலை) நடைபெறும் சிறப்பு துணைத் தேர்வில் வெற்றி பெற்று, இவ்வாண்டே உயர் கல்வி பயிலலாம். சிறப்பு துணைத் தேர்வு முடியும் வரை செல்போன் மற்றும் இதர பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தவிர்த்து, சிற்பபு தேர்வில் கவனம் செலுத்தி மாணவர்கள் வெற்றிபெற வேண்டும். மாணவர்களுக்கு பாடங்களில் ஏதேனும் சந்தேகம் ஏற்படின், தாங்கள் படித்த பள்ளிக்கு சென்று, தங்களது சந்தேகத்தை ஆசிரி யர்களிடம் கேட்டு நிவர்த்தி செய்துகொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்து ்கொள்கிறேன். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • கிருஷ்ணகிரி அருகே 2 டாஸ்மாக் ஊழியர்கள் விபத்தில் உயிரிழந்தனர்.
    • மோட்டார்சைக்கிளில் சென்றவர்கள் விபத்தில் சிக்கி பலியானார்கள்.

    கிருஷ்ணகிரி,

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பண்ணாரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 42). கிருஷ்ணகிரி மாவட்டம் சுருளிஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (45).

    இவர்கள் 2 பேரும் கிருஷ்ணகிரி அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தனர். நேற்று சக்திவேலுவும், மாரிமுத்துவும் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி-ஓசூர் சாலையில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரி சேஸ் அவர்கள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட சக்திவேல், மாரிமுத்து 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    அந்த வழியாக சென்றவர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சக்திவேல் உயிரிழந்தார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக பெங்களூரு கொண்டு செல்லப்பட்ட மாரிமுத்து அங்கு உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஊத்தங்கரை வாரசந்தையில் மாடுகள் விற்பனை களைகட்டியது.
    • இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேருந்து நிலையம் அருகே மாட்டு சந்தை வெள்ளிக்கிழமை நாட்களில் நடைபெறும். இந்த சந்தையில் ஊத்தங்கரை மட்டுமின்றி சுற்றுப்புற பகுதியில் உள்ள கிராமப் பகுதிகளான சிங்காரப்பேட்டை ,அனுமன் தீர்த்தம் , காரப்பட்டு, சாமல்பட்டி மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களாக உள்ள திருப்பத்தூர் தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் கால்நடைகளுடன் வந்து குவிந்தனர்.

    மாடுகளை வாங்குவதற்காக கேரளம் மாநிலம், ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் திரண்டனர். மாடுகள் விற்பனை களைகட்டியது. ஒரேநாளில் 50 லட்சத்திற்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் இந்த வார சந்தைக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் வாகனங்கள் சிரமம் இன்றி சென்று வரும் வகையில் பாதைகளை விரிவுபடுத்த வேண்டும் என்பதே பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • கிருஷ்ணகிரி நகராட்சி வார்டில் கால்வாய் கட்டும் பணி நடக்கிறது.
    • நகராட்சி தலைவர் அதை தொடங்கி வைத்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நக ராட்சிக்கட்பட்ட 16-வது வார்டு லண்டன்பேட்டை சாந்திநகரில், பல ஆண்டு களாக கழிவுநீர் கால்வாய் சீரமைக்காததால், கழிவுநீர் சாலையில் ஓடியது. இதனால் இப்பகுதியில் புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இதையடுத்து வார்டு உறுப்பினர் விநாயகத்தின் வேண்டுகோளின் பேரில், நகராட்சி நிர்வாகத்தின் சார்பில், ரூ.9.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் நகராட்சி தலைவர் பரிதாநவாப் பங்கேற்று, கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில், வார்டு உறுப்பினர் விநாயகம், புஷ்பா, வட்டச் செயலாளர்கள் கண்ணன், ஆண்ட்ரோஸ், வட்டப் பிரதிநிதி சோபி, காங்கிரஸ் கட்சியின் நகர துணைத் தலைவர் குமார் மற்றும் கனல்சுப்பிரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.

    ×