என் மலர்
கிருஷ்ணகிரி
- அரிசி மண்டியில் வேலை செய்த பஞ்சப்பள்ளி முரளி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பணத்துடன் மாயமானதுடன் செல்போன் எண்ணையும் மாற்றிவிட்டார்.
- திருடிய பணத்தை வேலை செய்து கழித்து ெகாள்ளும்படியும் கூறி அழைத்து வந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பந்தாரப்பள்ளியை சேர்ந்தவர் முனியப்பன். இவர் அந்த பகுதியில் அரிசி மண்டி நடத்தி வருகிறார். அந்த கடையில் 5 பேர் வேலை பார்த்து வந்தனர். தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளியை சேர்ந்த முரளி (வயது 28) என்பவர் அந்த கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முரளி பழைய இரும்பு கடையில் இருந்த ரூ.3 லட்சத்துடன் மாயமானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை கிருஷ்ணகிரி ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள பொன்மலைகுட்டை சாலையில் உடலில் காயங்களுடன் அடித்துக்கொலை செய்யப்பட்ட நிலையில் பஞ்சப்பள்ளி முரளி பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் கொண்டு வரப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. சிறிது நேரம் ஓடி சென்ற மோப்ப நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இதையடுத்து கொலையுண்ட முரளியின் உடல் கிடந்த இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர், கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-
அரிசி மண்டியில் வேலை செய்த பஞ்சப்பள்ளி முரளி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பணத்துடன் மாயமானதுடன் செல்போன் எண்ணையும் மாற்றிவிட்டார். அவரது புதிய எண்ணை கண்டுபிடித்த அரிசி மண்டி உரிமையாளரின் உறவினரான அகர்நிவாஸ் (25), பஞ்சப்பள்ளி முரளியிடம் சமாதானம் பேசி மீண்டும் அவரை கடையில் வேலை பார்க்கும்படியும், திருடிய பணத்தை வேலை செய்து கழித்து ெகாள்ளும்படியும் கூறி அழைத்து வந்தார்.தனியாக வீடு எடுத்து கொடுத்து முரளியையும், அவரது மனைவியையும் அழைத்து வந்து தங்க வைத்துள்ளனர்.
இந்த நிலையில் பந்தாரப்பள்ளி அருகே பஞ்சப்பள்ளி முரளியுடன் அகர்நிவாஸ் மற்றும் அவருடைய கூட்டாளிகளான ஜிஞ்சுப்பள்ளி முரளி (20), கெலமங்கலம் முகமது சலீம் (25), தனசேகர் (24) ஆகியோர் சேர்ந்து நேற்று முன்தினம் மது குடித்தனர். பின்னர் மது போதையில் இருந்த பஞ்சப்பள்ளி முரளியை அவர்கள் கட்டையால் அடித்துக்கொலை செய்து கிருஷ்ணகிரி ஆஞ்சநேயர் கோவில் அருகே பொன்மலைகுட்டை சாலையில் உடலை வீசி விட்டு சென்றனர். மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அகர்நிவாஸ், ஜிஞ்சுப்பள்ளி முரளி, முகமது சலீம், தனசேகர் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- முன்னதாக அறிஞர் அண்ணா கலை, அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு வரவேற்பு விழா நடந்தது.
- முன்னாள் மாணவர்கள் தங்களுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி ,
கிருஷ்ணகிரி போலுப்பள்ளி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் தனபால் தலைமை தாங்கினார். கல்லூரியின் வேதியியல் துறை தலைவர் சிவக்குமார் வரவேற்றார்.
விழாவில் கல்லூரி முதல்வர் பேசுகையில் அறிஞர் அண்ணா கலை, அறிவியல் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் உயர் பதவிகளை அடைந்துள்ளனர். தற்போது கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மத்திய அரசு தேர்வுகள், தமிழ்நாடு தேர்வாணையத் தேர்வுகளில் வெற்றி பெற போட்டித் தேர்வுகளுக்குரிய பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது என்று பேசினார்.
விழாவில் தொலைக்காட்சி நடிகர் பழனி கலந்து கொண்டு நல்ல நூல்களை வாசிப்பதன் மூலம் வாழ்க்கை வளமாகும் என்று பேசினார். நூலகர் தனசீலன் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர். முன்னாள் மாணவர்கள் தங்களுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முடிவில் கரோலின் ரோஸ் நன்றி கூறினார்.
முன்னதாக அறிஞர் அண்ணா கலை, அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு வரவேற்பு விழா நடந்தது. கணினி அறிவியல் துறை தலைவி ராஜலட்சுமி வரவேற்றார். லட்சுமி சரஸ்வதி கல்வி அறக்கட்டளை அறங்காவலர் லாஸ்யா தொடக்க உரையாற்றினார். கல்லூரி தாளாளர் கூத்தரசன் வாழ்த்தி பேசினார். கல்லூரி முதல்வர் தனபால் சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தார். முடிவில் ஆங்கில துறை தலைவர் பிரகாஷ் நன்றி கூறினார்.
- இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
- கோவிந்தராஜிடம் தகராறு செய்த சண்முகம் அவரை காயப்படுத்தியுள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே யுள்ள கோட்டப்பள்ளி பழையூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 56).
விவசாயி. இவரது பக்கத்து வீட்டில் கோவிந்தராஜின் உறவினரான சண்முகம் (32) என்பவர் வசித்து வருகிறார். இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இதன் காரணமாக கோவிந்தராஜிடம் தகராறு செய்த சண்முகம் அவரை காயப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் கோவிந்தராஜ் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கோவிந்தராஜ் தந்த புகாரின் பேரில் மகாராஜாக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து சண்முகத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- விதமாகவும் மிளகாய் வத்தல் கொண்டு சிறப்பு யாகங்கள் நடத்தப்படுவது வழக்கம்.
- மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, விசேஷ அலங்காரங்களுடன் அம்மன் அருள் பாலித்தார்.
ஓசூர்
ஓசூர் அருகே மோரனபள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ராகு, கேது அதர்வண மகா பிரத்தியங்கிரா கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் கண் திருஷ்டி நீங்கவும், செய்வினை, பில்லி சூனியம், துஷ்ட சக்திகள் போன்றவற்றை அகற்றும் விதமாகவும் மிளகாய் வத்தல் கொண்டு சிறப்பு யாகங்கள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், நேற்று ஆவணி மாத பவுர்ணமி தினம் சிறப்பு பூஜைகளுடன் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில், மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, விசேஷ அலங்காரங்களுடன் அம்மன் அருள் பாலித்தார். அதேபோல ராகு , கேது, மகா கால பைரவர் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து வெள்ளிக்கவசம் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.
பின்னர் அம்மனுக்கு தீபாராதனை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இரவு மிளகாய் வத்தல் யாகம் நடைபெற்றது.
இதில், தமிழகம் மட்டு மின்றி ஆந்திரா, கர்நாடகா மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மா விளக்கு ஏற்றி வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர்.
- எதிர்பாராத விதமாக பின்னால் வந்த கார் ஒன்று அவர் மீது மோதிவிட்டது.
- தலையில் அடிபட்டு தூக்கி வீசப்பட்ட முருகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
தருமபுரி காமராஜ் நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 42). கூலி தொழிலாளியான இவர் ஒரு வேலைக்காக ஓசூர் சென்றுள்ளார்.
அங்கு வேலையை முடித்துக்கொண்டு ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் சூளகிரி அருகே நடந்து சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த கார் ஒன்று அவர் மீது மோதிவிட்டது.
இதில் தலையில் அடிபட்டு தூக்கி வீசப்பட்ட முருகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பல்வேறு ஆஃபர்கள் வழங்குவதாகவும் அறிவிப்பு வெளியானது.
- ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முண்டியடித்துக் கொண்டு உள்ளே புகுந்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி கே தியேட்டர் சாலையில் அமைந்துள்ள ஒரு ஜவுளிக்கடை துவங்கி முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு கடைக்கு முதலில் வரும் 500 வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரூபாய்க்கு புடவை எனவும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பல்வேறு ஆஃபர்கள் வழங்குவதாகவும் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பை பார்த்த பொதுமக்கள் காலை முதலே கடை வாசலில் குவியத் தொடங்கினர்.கடை திறக்கப்பட்டதும் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முண்டியடித்துக் கொண்டு உள்ளே புகுந்தனர். இதனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பணியாளர்கள் திணறினர். பெண்கள் தங்களுக்குப் பிடித்த புடவைகளை ஒரு ரூபாய் கொடுத்து வாங்கிச் சென்றனர்.
- தினமும் வீட்டில் வந்து தகராறு செய்வாராம்.
- கத்தியை எடுத்து வெங்கட்டம்மாவின் தலை மற்றும் பல்வேறு இடங்களில் குத்தியுள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி தாலுகா தாசினிப்பள்ளி சேர்ந்தவர் அப்பாதுரை (வயது 60). இவரது மனைவி வெங்கட்டம்மா (55). குடிப்பழக்கம் உள்ள அப்பாதுரை தினமும் வீட்டில் வந்து தகராறு செய்வாராம்.
இதேபோல நேற்றும் குடித்துவிட்டு வந்துள்ளார். அதனை வெங்கட்டம்மா கண்டித்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த அப்பாதுரை அருகே கிடந்த கத்தியை எடுத்து வெங்கட்டம்மாவின் தலை மற்றும் பல்வேறு இடங்களில் குத்தியுள்ளார்.
இதில் வெங்கட்டம்மா படுகாயம் அடைந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் வெங்கட்டம்மா புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பாதுரையை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- போச்சம்பள்ளி பகுதியில் தங்கி பிளாஸ்டிக் சேர்கள் விற்று வருகிறார்.
- பல்வேறு இடங்களில் தேடியும் ஆதம் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
மத்தூர்,
ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் சச்சலா பாலகிருஷ்ணன்.
இவர் தனது குடும்பத்துடன் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் தங்கி பிளாஸ்டிக் சேர்கள் விற்று வருகிறார்.
இவரது மகன் ஆதம் (வயது 10). கடந்த 8-ந்தேதி முதல் ஆதமை காணவில்லை.பல்வேறு இடங்களில் தேடியும் ஆதம் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து போச்சம்பள்ளி போலீசில் சச்சலா பாலகிருஷ்ணன் புகார் செய்துள்ளார்.
இந்த புகாரின்பேரில் போச்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிந்து மாயமான ஆதம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
- திருமண கோஷ்டியினர் வந்த கார் பிரபு மீது மோதியது.
- இந்த விபத்து குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மத்தூர்
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் பிரபு (வயது 24). எண்ணெய் ஆலை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
இவர் தனது மோட்டார்சைக்கிளில் பெரியதலப்பாடியிலிருந்து சிங்காரப்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது திருப்பத்தூர் மாவட்டத்திலிருந்து திருமண கோஷ்டியினர் வந்த கார் பிரபு மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட பிரபு படுகாயம் அடைந்தார்.அவரை தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- தமிழ்நாட்டில் இந்த சூழலில், துறையை உருவாக்குவதேயாகும்.
- குறு,சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் கொள்முதல் தேவைகளை பூர்த்தி செய்கின்றன.
ஓசூர்,
ஓசூரில், தமிழ்நாடு விண்வெளித் தொழில் வளர்ச்சி சங்கம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் மற்றும் ஓசூர் சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் சங்கம் (ஹோஸ்டியா) ஆகியவை இணைந்து விண்வெளி மற்றும் பாதுகாப்பு மாநாட்டினை ஓசூரில் நடத்தின.
ஓசூர் மூக்கண்டபள்ளி பகுதியில் உள்ள ஓட்டல் ஹில்ஸ் என்ற நட்சத்திர ஓட்டலில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, கூடுதல் தலைமை செயலரும், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருமான ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், கூடுதல் தலைமை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா பேசியதாவது: -
தமிழ்நாட்டில் விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் சூழலை மேம்படுத்தவும் 2016-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு விண்வெளித்தொழில் வளர்ச்சி சங்கத்தின் நோக்கம், உலகம் முழுவதும் உள்ள சமூகங்களில் பங்குதாரர்களுடன் ஈடுபடுவது மற்றும் தமிழ்நாட்டில் இந்த சூழலில், துறையை உருவாக்குவதேயாகும். அதன் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக தமிழ்நாடு விண்வெளித் தொழில் வளர்ச்சி சங்கத்தின் சார்பில், ஓசூரில் வாங்குபவர் - விற்பனையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், ஓசூர் ஒரு சிறந்த விண்வெளி மற்றும் பாதுகாப்பு கூறுகள் மையமாக பரிணமிக்கும் திறனை கொண்டுள்ளது. குறிப்பாக, தமிழ்நாடு பாதுகாப்பு வழித்தடத்தில் பாதுகாப்பு அமைச்சகத்தால் அடையாளம் காணப்பட்ட பாதுகாப்பு முனைகளில் ஓசூர் ஒன்றாகும்.சமீப காலமாக இந்த பகுதியில் ஏராளமான விண்வெளி மற்றும் பாதுகாப்பு திட்டங்கள் உருவாகி வருகின்றன. மேலும் ஓசூர் விண்வெளி மற்றும் பாதுகாப்பு கூறுகளுக்கான முக்கிய விற்பனை தளமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லார்சன் மற்றும் டுபுரோ பாதுகாப்பு மற்றும் கப்பல் கட்டமைப்பு, இயக்கவியல் தொழில்நுட்பங்கள், எச்.ஏ.எல்.ஹெலிகாப்டர் மண்டலம், திருச்சி கட்டளை தொழிற்சாலை, மற்றும் சென்னை கனரக வாகன தொழிற்சாலை ஆகிய நிறுவனங்கள் மேக் இன் இந்தியாவை ஆதரிப்பதற்காக 100 மற்றும் அதற்கு மேற்பட்ட குறு,சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் கொள்முதல் தேவைகளை பூர்த்தி செய்கின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் இதில் தமிழ்நாடு விண்வெளித் தொழில் வளர்ச்சி சங்க தலைவர்கள் எஸ். கிறிஸ்டோபர், ராமச்சந்திரன், ஓசூர் ஹோஸ்டியா தலைவர் வேல்முருகன், டிட்கோ திட்ட இயக்குனர் விநாயகம், டி. இ.ஏ.எல்.நிர்வாக இயக்குனர் ஸ்ரீதர், ஏ. இ.பி.எல்.நிர்வாக இயக்குனர் சுந்தரம் ஆகியோர் பேசினார்கள். முடிவில், பிராங்க்ளின் நன்றி கூறினார்.
- குழந்தைகளை குடற்புழு தொற்றிலிருந்து பாது காக்கும் பொருட்டு அல்பெண்டாசோல் மாத்திரை இலவசமாக வழங்கப்படுகிறது.
- பாலுட்டும் தாய்மார்கள் அல்லாத பெண்களுக்கும் இந்த மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
ஓசூர்,
ஓசூர் மாநகராட்சி, அரசு நடுநிலைப்பள்ளிகளில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் குழந்தைகளுக்கு தேசிய குடற்புழு நீக்க முகாமினை, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தொடங்கி வைத்து மாணவ மாணவியருக்கு அல்பெண்டாசோல் மாத்திரைகளை வழங்கி னார். இந்த முகாமிற்கு, ஒய். பிரகாஷ் எம்.எல்.ஏ, மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர், கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி கூறியதாவது:-
இந்த முகாம், வருகிற 16-ந்தேதியும் நடைபெறும். இந்த முகாம்களில், குழந்தைகளை குடற்புழு தொற்றிலிருந்து பாது காக்கும் பொருட்டு அல்பெண்டாசோல் மாத்திரை இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ், 1 வயது முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் இனப்பெருக்க 20 வயது முதல் 30 வயது வரையுள்ள தர்ப்பம் மற்றும் பாலுட்டும் தாய்மார்கள் அல்லாத பெண்களுக்கும் இந்த மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களில், 1,800 பள்ளிகள் மற்றும் 1,796 அங்கன்வாடி மையங்கள் மூலம் 7,01,724 பயனாளிகள் பயனடைவார்கள்.1 முதல் 13 வயதிற்குட்பட்ட குழந்தை களுக்கு அங்கன்வாடி மையங்களிலும், 14 வயது முதல் 19 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் கல்லூரிகளிலும் அல்பெண்டாசோல் மாத்திரைகள் வழங்கப்படு கிறது. மேலும், விடுபட்ட குழந்தைகளுக்கு வருகிற 16-ந் தேதி இந்த மாத்திரை வழங்கப்படவுள்ளது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
- வாகனம் மோதி 55 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் இறந்து கிடந்தார்.
- இவர் யார்? எந்த ஊர்? என்பது குறித்து தெரியவில்லை.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா ஒசூரில் சாலையின் அருகே உள்ள தனியார் வங்கி முன்பு வாகனம் மோதி 55 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் இறந்து கிடந்தார்.
இது குறித்து சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இவர் யார்? எந்த ஊர்? என்பது குறித்து தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.






