என் மலர்
கிருஷ்ணகிரி
- அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் விரும்புகிறார்.
- சசிகலாவை அ.தி.மு.க.வில் இணைப்பது தொடர்பாக முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி:
அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரியில் நடந்தது.
இந்த கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், கிருஷ்ணகிரி முன்னாள் அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான கோவிந்தராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தராஜ் நிருபர்களிடம் கூறுகையில், அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் விரும்புகிறார்.
அவர் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் நாங்கள் அவருடன் இருக்கிறோம். நிச்சயமாக அ.தி.மு.க. ஒன்றுபடும். சசிகலாவை அ.தி.மு.க.வில் இணைப்பது தொடர்பாக முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அவர் இணைவார் என தெரிவித்தார்.
- இரண்டு வாகனங்களின் முன்பக்க பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
- விபத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த வெப்பாலம்பட்டி கிராமம் அருகே இன்று காலை தனியார் பள்ளி பேருந்து மாணவர்களை ஏற்றி சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த எருமியாம்பட்டி கல்லூரி பேருந்தின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் இரண்டு வாகனங்களின் முன்பக்க பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது பற்றி ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பொதுமக்கள் உதவியுடன் விபத்தில் படுகாயம் அடைந்த 30-க்கும் மேற்பட்டோரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். லேசான காயத்துடன் மாணவர்கள் உயிர்தப்பினர்.
இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விபத்தில் சிக்கிய பள்ளி, கல்லூரி வாகன ஓட்டுனர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டம் குறித்து, மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் பி.எஸ்.சீனிவா சன் ஆய்வு செய்தார்.
- இதில், ஊராட்சி தலைவர் ஸ்ரீபிரியா சுப்பிரமணி, வார்டு உறுப்பினர் சுதாகர், பள்ளி தலைமையாசிரியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓசூர்,
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, மாணவர்க ளுக்கு காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டம், பள்ளிகளில் செயல்படுத்த ப்பட உள்ளது. இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பாத்தகோட்டா வில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மாவட்ட தி.மு.க. செயலாளரும், ஓசூர் எம்.எல்ஏ.வுமான ஒய். பிரகாஷ் வழிகாட்டுத லின்பேரில், மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டம் குறித்து, மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் பி.எஸ்.சீனிவா சன் ஆய்வு செய்தார்.
இதில், ஊராட்சி தலைவர் ஸ்ரீபிரியா சுப்பிரமணி, வார்டு உறுப்பினர் சுதாகர், பள்ளி தலைமையாசிரியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்டத்தில் பெய்து கனமழை காரணமாக மலை கிராமத்திற்கு செல்லும் சாலை முழுவதும் தண்ணீரில் மூழ்கியது.
- தண்ணீர் செல்ல வழியில்லாமல் இடுப்பளவு தண்ணீரில் தினமும் கிராம மக்கள் ஆபத்தான முறையில் கிராம மக்கள் கயிறு கட்டி கடந்து சென்று வருகின்றனர்.
வேப்பனபள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகே உள்ள ஏக்கல்நத்தம் மலை கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த மலைகிராமத்திற்கு சுமார் 3 கிலோமீட்டர் தொலைவு அடர்ந்த வனப்பகுதியில் ஆபத்தான முறையில் பயணம் செய்ய வேண்டும்.
இந்நிலையில் கடந்த பல வருடங்களாக இந்த கிராமத்திற்கு சாலை இல்லாமல் இருந்தது. கிராம மக்கள் பல வருடங்களாக போராடி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கிராமத்தில் ஆபத்தான அடர்ந்த வனப்பகுதியில் முதல் முறையாக தார் சாலை வசதி அமைக்கப்பட்டது.
மாவட்டத்தில் பெய்து கனமழை காரணமாக மலை கிராமத்திற்கு செல்லும் சாலை முழுவதும் தண்ணீரில் மூழ்கியது. தார் சாலை அமைக்கும் பொழுது தாழ்வான பகுதிகளில் தரை மேம்பாலம் ஏதும் அமைக்கப்படாமல் சாலை அமைக்கப்பட்டதால் இப்பகுதியில் மலையில் இருந்து வரும் நீர் முழுவதும் சாலையில் தேங்கி நிற்கிறது.
தண்ணீர் செல்ல வழியில்லாமல் இடுப்பளவு தண்ணீரில் தினமும் கிராம மக்கள் ஆபத்தான முறையில் கிராம மக்கள் கயிறு கட்டி கடந்து சென்று வருகின்றனர்.
தண்ணீர் வற்றாமல் சாலையில் தேங்கி நிற்பதால் இப்பகுதியில் பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமலும் வீட்டிலேயே உள்ளனர். ரேஷன் பொருட்கள் மற்றும் அன்றாட காய்கறிகளை வாங்க கூட ஆபத்தான முறையில் தினமும் கயிறு கட்டி தண்ணீரில் இறங்கி ஒரு சிலர் மட்டும் பயணம் செய்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இடுப்பளவு தண்ணீரில் கயிறு கட்டி தினமும் கிராம மக்கள் பயணம் செய்து வருகின்றனர். பல வருடங்களாக போராடி பெற்ற சாலை சிறிதும் பயன்படாமல் உள்ளதால் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் உடனடியாக தரை மேம்பாலம் அமைத்து கிராமத்திற்கு சாலையை சீராக அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
- சமாதிக்கு மஞ்சள் குங்குமம் மாலை அணிவித்து பால் அபிஷேகம் செய்தனர்.
- நோய் நொடிகள் நீங்கவும், மழை வேண்டியும், கிராம மக்கள் வணங்கி சிறப்பு வழிபாடு செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் உள்ள ராயக்கோட்டை சாலையில் பெத்த தாளாப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட தின்னகழனி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தானமாக கோவில் காளை வழங்கி உள்ளனர்.
அந்த கோவில் காளையை கிராம மக்கள் தெய்வமாக வணங்கி வந்தனர். தைத்திருநாள் பொங்கல் பண்டிகை போது எருது விடும் விழா போன்ற நிகழ்ச்சிகளில் இந்த கோவில் காளை பங்கேற்று வந்தது.
கிராம மக்கள் சாமியாக வணங்கி வந்த இந்த கோவில் காளை கடந்த 2018&ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி உடல்நிலை குறைவால் உயிர் இழந்தது. இதனால் சோகம் அடைந்த கிராம மக்கள் கோவில் காளையை மாரியம்மன் கோவிலுக்கு எதிரே கிராமத்தின் மையப்பகு தியில் நல்லடக்கம் செய்தனர்.
அத்துடன் முக்கிய திருவிழா பண்டிகை காலங்களில் உயிரிழந்த காளைக்கு சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர்.
அதேபோல் ஆண்டு தோறும் கோவில் காளைக்கு உயிரிழந்த நாளில் கிராம மக்கள் அதனை நினைவு நாளாக அனுசரித்து வருகின்றனர். அந்த வகையில் நான்காம் ஆண்டு நினைவு நாள் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி கிராம மக்கள் மேள தாளங்கள் முழங்க தேங்காய், பூ, பழம், கடலை, மஞ்சள், குங்குமம், வெல்லம், போன்ற பூஜை தட்டுகளுடன் அம்மன் தேர் முன்பே செல்ல ஏராளமான பெண்கள் ஊர்வலமாக கோவில் காளை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள சமாதிக்கு சென்றனர்.
அங்கு அமைக்க ப்பட்டுள்ள சமாதிக்கு மஞ்சள் குங்குமம் மாலை அணிவித்து பால் அபிஷேகம் செய்தனர். அமைதி வேண்டியும், நோய் நொடிகள் நீங்கவும், மழை வேண்டியும், கிராம மக்கள் வணங்கி சிறப்பு வழிபாடு செய்தனர். அதை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தின்னகழனி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
இன்றைய உலகில் மனிதர்கள் இயற்கை எய்தினால் ஒரு சில ஆண்டுகளில் மறந்து விடும் நிலையில் கோவில் காளைக்கு கிராம மக்கள் ஒன்றிணைந்து 4 ஆண்டுகளாக நினைவு நாள் அனுசரிக்கப்படும் சம்பவம் கிருஷ்ணகிரியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- ஒவ்வொரு தாலுக்காவில் ஒரு கிரா மத்தில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
- தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், முகவரி, தொலைபேசி எண் மாற்றம் தொடர்பான மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்தார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டத் தில் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களை வதற்கும், மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் போன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்ய காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஒவ்வொரு தாலுக்காவில் ஒரு கிரா மத்தில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
அதன்படி அஞ்செட்டி தாலுகா உரிகம் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் நடந்த பொது விநியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் குடிமை பொருள் வட்ட வழங்கல் தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், முகவரி, தொலைபேசி எண் மாற்றம் தொடர்பான மனுக்களை பெற்று நடவடிக்கை எடுததார்.
இந்நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் ரமேஷ், கிராம நிர்வாக அலுவலர் தம்பிதுரை, ரேஷன் கடை விற்பனையாளர் ரூபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.
- இந்த ஊர்வலம் புதிய பஸ் நிலையத்தில் தொடங்கி பழையபேட்டை டி.பி.ரோடு, காந்தி ரோடு வழியாக புதுப்பேட்டை ஐந்து ரோடு பகுதியில் நிறைவடைந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக சர்வதேச நீலவான தூய காற்று தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி கொடிய சைத்து தொடங்கி வைத்தார்.
இந்த ஊர்வலத்தில், இயற்கையை நேசிப்போம், இனியாவது திருந்துவோம், வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் தூய்மையான காற்றை சுவாசிப்போம்,
செல்போன் சூடாவதை பார்த்து கவலைப்படும் நாம் பூமி சூடாவதை எண்ணி கவலைப்படுவது இல்லை. இயற்கையை நேசிப்போம் இயற்கையுடன் வாழ வேண்டும் என யோசிப்போம். ஓசோனில் ஓட்டை நமக்கெல்லாம் வெட்கை. மரங்கள் வளர்ப்போம் ஓசோன் காப்போம்.
ஓசோனின் தேவை நமக்கெல்லாம் அதுதான் போர்வை. ஓசோனைக் காப்போம் பூமியை காப்போம். ஓசோனைக் காப்பாற்றுங்கள் அல்லது அடுத்த தலைமுறைக்கு ஆபத்தை கொடுங்கள் என 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.
இந்த ஊர்வலம் புதிய பஸ் நிலையத்தில் தொடங்கி பழையபேட்டை டி.பி.ரோடு, காந்தி ரோடு வழியாக புதுப்பேட்டை ஐந்து ரோடு பகுதியில் நிறைவடைந்தது.
ஊர்வலத்தில் மாவட்ட சுற்று சூழல் பொறியாளர் வெங்கடேசன், உதவி சுற்றுசூழல் பொறியாளர் சுமித்ராபாய், உதவி பொறியாளர்கள் ரங்கசாமி, தீனதயாளன், வினோதினி, தாசில்தார் சம்பத் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- இவர் ஓசூர் பகுதியில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
- கடந்த மாதம் 13-ந்தேதி அன்று தான் தங்கியிருந்த இடத்திலிருந்து வெளியே சென்ற ரவி அதன்பிறகு திரும்பவில்லை.
கிருஷ்ணகிரி,
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியை ரவி (வயது 26). இவர் ஓசூர் பகுதியில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த மாதம் 13-ந்தேதி அன்று தான் தங்கியிருந்த இடத்திலிருந்து வெளியே சென்ற ரவி அதன்பிறகு திரும்பவில்லை.
இது பற்றி தகவல் அறிந்த ரவியின் தந்தை ராஜேந்திரன் தந்த புகாரின்பேரில் ஓசூர் ஹட்கோ போலீசார் வழக்கு பதிந்து மாயமான ரவியை தேடி வருகின்றனர்.
- கூலி தொழிலாளியான இவர் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார்.
- கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாரியப்பன் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 53). கூலி தொழிலாளியான இவர் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார்.
இதில் மனமுடைந்து கடந்த 11-ந்தேதி விஷம் குடித்து விட்டார். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாரியப்பன் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த தற்கொலை சம்பவம் குறித்து காவேரிப்பட்டிணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கணினி பயிற்சி, அழகுகலை பயிற்சி உள்ளிட்ட திறன் பயிற்சிகள் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் வழங்கப்பட்டது.
- பயிற்சி பெற்ற அனைத்து பெண்களுக்கும் சான்றி தழ்கள் வழங்கப்பட்டன.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தை திருமணத்தின் மூலம் மீட்கப்பட்ட சிறுமிகள், மற்றும் பள்ளி இடையில் நின்ற பெண் குழந்தைகளுக்கும், மறுவாழ்வு அளிக்கும் நோக்கத்தில் கணினி பயிற்சி, அழகுகலை பயிற்சி உள்ளிட்ட திறன் பயிற்சிகள் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து. பயிற்சி பெற்ற அனைத்து பெண்களுக்கும் சான்றி தழ்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். ஆராதனை அறக்கட்டளை நிறுவனர் ராதா வரவேற்றார்.
ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிர மணியன், மற்றும் ஓசூர் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சான்றிதழ்கள் வழங்கி பேசினர்.
- சாலையில் இருந்த பள்ளத்தை கவனிக்காமல் வண்டியை ஓட்டிய ரமேஷ் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
- மூதாட்டி தனது மருமகளுடன் சூரம்பட்டி நோக்கி சென்றபோது சக்கரத்தில் புடவை சிக்கியதால் தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள மிட்டப்பள்ளியை சேர்ந்தவர் ரமேஷ்
(வயது 35).
இவர் தனது மோட்டார்சைக்கிளில் புலியாண்டப்பள்ளியில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றார்.
ரமேஷ் குடிபோதையில் வாகனத்தை ஓட்டி சென்றுள்ளார். வழியில் சாலையில் இருந்த பள்ளத்தை கவனிக்காமல் வண்டியை ஓட்டிய ரமேஷ் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்த ரமேஷை கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல மற்றொரு இருசக்கர வாகன விபத்தில் நாகரசம்பட்டி அருகேயுள்ள வேலம்பட்டியை சேர்ந்த பட்டம்மாள் (68) என்ற மூதாட்டி தனது மருமகளுடன் சூரம்பட்டி நோக்கி சென்றபோது சக்கரத்தில் புடவை சிக்கியதால் தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்ட அவர் மேல்சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- நிறுவனத்தில் உள்ளே இருந்த கல்லாபெட்டியை உடைத்த கும்பல் அதற்குள் இருந்த ரூ.8 லட்சம் பணத்தை திருடியுள்ளது.
- நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா உள்ளிட்ட விலையுயர்ந்த மின்சாதன பொருட்களையும் திருடி கொண்டு கும்பல் தப்பிவிட்டது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே அந்திவாடியில் பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட்டின் துணை நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
பிளிப்கார்ட்டில் பதிவு செய்யப்படும் பொருட்கள் இந்த நிறுவனத்திற்கு வரும். பின்னர் இங்கிருந்து தான் வாடிக்கையாளர்களுக்கு அவை வினியோகிக்கப்படும்.
நேற்றிரவு இந்த நிறுவனத்தின் பின்புறம் உள்ள ஜன்னல் கம்பிகளை எந்திரம் மூலம் அறுத்து உள்ளே மர்ம கும்பல் ஒன்று புகுந்துள்ளது.
நிறுவனத்தில் உள்ளே இருந்த கல்லாபெட்டியை உடைத்த அந்த கும்பல் அதற்குள் இருந்த ரூ.8 லட்சம் பணத்தை திருடியுள்ளது.
மேலும் அந்த நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா உள்ளிட்ட விலையுயர்ந்த மின்சாதன பொருட்களையும் திருடி கொண்டு அந்த கும்பல் தப்பிவிட்டது.
இன்று அதிகாலை அந்த நிறுவனத்தை ஊழியர்கள் திறந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது கல்லா பெட்டி உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதனை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே வைக்கப்பட்டிருந்த பணம் காணாமல் போய் இருந்தது. மேலும் பொருட்கள் சிதறி கிடந்தன. நிறுவனத்தின் பின்புறத்தின் ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டு கிடந்தது.
இது குறித்து மத்திகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் மோப்பநாய் அழைத்து வரப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. கைரேகைகளை பதிவு செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.






