என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனிதர்கள் இறந்தாலே மறந்துவிடும் நிலையில்   4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த கோவில் காளைக்கு நினைவு நாள் கடைபிடிப்பு
    X

    கிருஷ்ணகிரி அருகே தின்னகழனி கிராமத்தில் உயிரிழந்த கோவில் காளைக்கு நான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஊர் பொதுமக்கள் சமாதியில் சிறப்பு பூஜை செய்து வழிப்பட்ட போது எடுத்த படம்.

    மனிதர்கள் இறந்தாலே மறந்துவிடும் நிலையில் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த கோவில் காளைக்கு நினைவு நாள் கடைபிடிப்பு

    • சமாதிக்கு மஞ்சள் குங்குமம் மாலை அணிவித்து பால் அபிஷேகம் செய்தனர்.
    • நோய் நொடிகள் நீங்கவும், மழை வேண்டியும், கிராம மக்கள் வணங்கி சிறப்பு வழிபாடு செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் உள்ள ராயக்கோட்டை சாலையில் பெத்த தாளாப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட தின்னகழனி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தானமாக கோவில் காளை வழங்கி உள்ளனர்.

    அந்த கோவில் காளையை கிராம மக்கள் தெய்வமாக வணங்கி வந்தனர். தைத்திருநாள் பொங்கல் பண்டிகை போது எருது விடும் விழா போன்ற நிகழ்ச்சிகளில் இந்த கோவில் காளை பங்கேற்று வந்தது.

    கிராம மக்கள் சாமியாக வணங்கி வந்த இந்த கோவில் காளை கடந்த 2018&ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி உடல்நிலை குறைவால் உயிர் இழந்தது. இதனால் சோகம் அடைந்த கிராம மக்கள் கோவில் காளையை மாரியம்மன் கோவிலுக்கு எதிரே கிராமத்தின் மையப்பகு தியில் நல்லடக்கம் செய்தனர்.

    அத்துடன் முக்கிய திருவிழா பண்டிகை காலங்களில் உயிரிழந்த காளைக்கு சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர்.

    அதேபோல் ஆண்டு தோறும் கோவில் காளைக்கு உயிரிழந்த நாளில் கிராம மக்கள் அதனை நினைவு நாளாக அனுசரித்து வருகின்றனர். அந்த வகையில் நான்காம் ஆண்டு நினைவு நாள் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது.

    இதையொட்டி கிராம மக்கள் மேள தாளங்கள் முழங்க தேங்காய், பூ, பழம், கடலை, மஞ்சள், குங்குமம், வெல்லம், போன்ற பூஜை தட்டுகளுடன் அம்மன் தேர் முன்பே செல்ல ஏராளமான பெண்கள் ஊர்வலமாக கோவில் காளை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள சமாதிக்கு சென்றனர்.

    அங்கு அமைக்க ப்பட்டுள்ள சமாதிக்கு மஞ்சள் குங்குமம் மாலை அணிவித்து பால் அபிஷேகம் செய்தனர். அமைதி வேண்டியும், நோய் நொடிகள் நீங்கவும், மழை வேண்டியும், கிராம மக்கள் வணங்கி சிறப்பு வழிபாடு செய்தனர். அதை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தின்னகழனி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    இன்றைய உலகில் மனிதர்கள் இயற்கை எய்தினால் ஒரு சில ஆண்டுகளில் மறந்து விடும் நிலையில் கோவில் காளைக்கு கிராம மக்கள் ஒன்றிணைந்து 4 ஆண்டுகளாக நினைவு நாள் அனுசரிக்கப்படும் சம்பவம் கிருஷ்ணகிரியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×