என் மலர்
கிருஷ்ணகிரி
- தெய்வானை என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
- சசிகுமார், அவரது பெற்றோர் மகேந்திரன், சாரதா, தெய்வானை ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள நல்லப்பநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி அனுபிரபா (வயது 25).
குடும்ப தகராறு காரணமாக அனுபிரபா தனது தாய்வீட்டுக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சசிகுமார் தெய்வானை என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து பர்கூர் அனைத்து மகளிர் போலீசில் அனுபிரபா புகார் கொடுத்துள்ளார்.
அதன்பேரில் சசிகுமார், அவரது பெற்றோர் மகேந்திரன், சாரதா, தெய்வானை ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- ஜவளகிரி வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 40-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அங்கிருந்து வெளியேறின.
- வனத்துறை, வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டு யானைகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை,
கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 100-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தமிழக எல்லையான ஜவளகிரி, தளி, தேன்கனிக்கோட்டை, ஓசூர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் பல்வேறு குழுக்ககளாக பிரிந்து சுற்றித்திரிகின்றன.
மேலும் விவசாய நிலங்களில் புகுந்து நெல், ராகி, உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் தமிழக மாநில எல்லையான ஜவளகிரி வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 40-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அங்கிருந்து வெளியேறின.
பின்னர் பல்வேறு கிராமங்கள் வழியாக தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் புகுந்து யானைகள் முகாமி ட்டுள்ளன. முன்னதாக இந்த காட்டு யானைகள் கூட்டமாக தேன்கனிக்கோட்டை-அஞ்செட்டி சாலையில் மரக்கட்டா வனப்பகுதியில் சாலையை கடந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் ஆங்காங்கே தங்களது வாகனங்களை நிறுத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை நிறுத்தி காட்டு யானைகள் வனப்பகுதிக்கு செல்ல வழிவகை செய்தனர். அதன் பிறகு அந்த வழியாக போக்குவரத்து தொடங்கியது.
தற்போது 40 காட்டு யானைகளும் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டு உள்ளன. இதனால் வனப்பகுதியையொட்டி உள்ள கிராமமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
மேலும் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இரவு நேரங்களில் வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாய நிலங்களுக்கு மக்கள் செல்ல வேண்டாம்.
காட்டு யானைகள் தென்பட்டால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கிராம மக்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தினர்.
தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன் தலைமையிலான வனத்துறை, வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டு யானைகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் ஹெச்.டி.எப்.சி. வங்கியும் இணைந்து ரத்ததான முகாம் நடைபெற்றது.
- ரத்ததான முகாமில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் குருதிக்கொடை வழங்கினர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டமும் வேப்பனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் ஹெச்.டி.எப்.சி. வங்கியும் இணைந்து ரத்ததான முகாம் நடைபெற்றது. ரத்ததான முகாமிற்கு நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெகன் வரவேற்புரை ஆற்றினார்.
கல்லூரியின் முதல்வர் தனபால் தலைமை தாங்கினார். தன்னுடைய தலைமை உரையில், மாணவர்கள் படிக்கும் பொழுதே பொதுச் சேவைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று பேசினார். முகாமில் கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கி மருத்துவ அதிகாரி டாக்டர் வசந்தகுமார் ,வேப்பன பள்ளி வட்டார மருத்துவ அலுவலரான சரவணன் ,அய்யனார் ,சுகாதார ஆய்வாளர்கள் உமாசங்கர்,ஜெயசெல்வம் , பிரதீப் , ஹெச்.டி.எப்.சி. வங்கியின் துணை மேலாளரான விஜய்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ரத்ததான முகாமில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் குருதிக்கொடை வழங்கினர்.ரத்ததான முகாமிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலரான ஸ்டீபன் விக்டர் ஆண்டனி செய்திருந்தார். விழாவின் நிறைவாக நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.ரத்ததான முகாமில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
- ஒரு கூடை தக்காளி 50 ரூபாய் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- விவசாயிகள் தோட்டங்களில் தக்காளி பழங்களை பறிக்காமல் அப்படியே விட்டு உள்ளனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டத் தில் தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம், உத்தனப்பள்ளி, ராயக்கோட்டை, சூளகிரி ஆகிய பகுதிகளில் தக்காளிகள் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இங்கிருந்து தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரா ஆகிய பகுதிகளுக்கு தக்காளிகள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டு வரும் தக்காளி பழங்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. கடந்த காலங்களில் ஒரு கூடை தக்காளி பழங்கள் 1500 முதல் 2000 ரூபாய் வரை விற்பனையான நிலையில் தற்போது ஒரு கூடை தக்காளி 50 ரூபாய் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
தக்காளி அதிக அளவில் விளைச்சல் இருப்பதால் உற்பத்தி அதிகரித்து விலை வீழ்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் வேதனை அடைந்த தக்காளி விவசாயிகள் தோட்டங்களில் தக்காளி பழங்களை பறிக்காமல் அப்படியே விட்டு உள்ளனர். மேலும் பல விவசாயிகள் சாலையோரம் தக்காளி பழங்களை வீசி விட்டு செல்கின்றனர். சாலை ஒரங்களில் கிடக்கும் தக்காளி பழங்களை ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் விட்டு மேய்த்து வருகின்றனர்.
- அன்பு (19) மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேர் வந்து சாப்பாடு வாங்கியுள்ளனர்.
- 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் காட்டுநாயனபள்ளி பகுதியில் தாபா கடை நடத்தி வருபவர் விஜய் (வயது 25).இவரது கடைக்கு வந்த திருமலைநகர் பகுதியை சேர்ந்த அன்பு (19) மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேர் வந்து சாப்பாடு வாங்கியுள்ளனர்.
ஆனால் அதற்கு பணம் தரவில்லை. இது குறித்து கேட்டபோது விஜயிடம் தகராறு செய்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜய் தந்த புகாரின் பேரில் மகாராஜாக்கடை போலீசார் அன்பு உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பிரியாணி உணவை சாப்பிட்டுள்ளார். அப்போது அவருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது.
- மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த லக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தீர்த்தகிரி.
இவரது மகன் அருண்குமார் (வயது24). இவர் தேன்கனிக்கோட்டை தேர்பேட்டை பகுதியில் தங்கி இருந்து அங்குள்ள பர்னிச்சர் கடையில் வேலை செய்து வந்துள்ளார்.
நேற்று மதியம் அருண்குமார் தனது அறையில் நண்பர்களுடன் சிக்கன் பிரியாணி உணவை சாப்பிட்டுள்ளார். அப்போது அவருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது.
பின்னர் மூச்சு திணறல் ஏற்பட்டு நெஞ்சு வழிப்பதாக அவர் நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.
உடனடியாக அவரை நண்பர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதி த்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தேன்கனி க்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரியாணி சாப்பிட்ட வர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.
- கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை நுழைவாயில் பூட்டப்பட்டு பேரிகார்டு வைக்கப்பட்டது.
- ஏழை எளிய மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி, காந்தி ரோடு சாலையில் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வந்தது. கிருஷ்ணகிரி நகரின் மையத்தில் அமைந்துள்ள இந்த மருத்துவமனையில் நாள்தோறும், 500-க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். சர்க்கரை, ரத்த கொதிப்பு உள்ளிட்டவைகளுக்கு மாத்திரை, மருந்துகளும் இங்கேயே வழங்கப்பட்டு வந்தன.
கிருஷ்ணகிரி நகர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் இதனால் எளிதில் வந்து சிகிச்சை பெற முடிந்தது. கடந்த சில வாரங்களாக ஒவ்வொரு சிகிச்சைகளாக குறைக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை நுழைவாயில் பூட்டப்பட்டு பேரிகார்டு வைக்கப்பட்டது. இனி எந்த சிகிச்சைகளாக இருந்தாலும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கே செல்ல வேண்டும் என அங்கு இருந்தவர்கள் நோயாளிகளை திருப்பி அனுப்பினர். இதனால் அரசு மருத்துவமனைக்கு வந்தவர்கள் அனைவரும் ஏமாற்றத்தோடு திரும்பி சென்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கடந்த சில வாரங்களாகவே இந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதில்லை, டாக்டர்கள் இருப்பதில்லை. ஆனாலும் நாங்கள் காத்திருந்து சிகிச்சை பெற்று வந்தோம். தற்போது போலுப்பள்ளியில் இருக்கும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு, 12 கி.லோ மீட்டர் தொலைவு செல்ல வேண்டும். அவசர சிகிச்சைக்கு வருபவர்களும், சி.டி.,ஸ்கேன், உள்ளிட்டவைக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் கிருஷ்ணகிரி டோல்கேட் கடந்த செல்ல வேண்டிய அவலமும் ஏற்படுகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு வழக்கமாக செய்து வரும் புறநோயாளி சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்டவற்றை செயல்படுத்த வேண்டும் என்றனர்.
- தொல்லியல் மற்றும் கல்வெட்டுப் பயிற்சியை அளித்தனர்.
- அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களை பற்றியும், படங்களை காட்டி விளக்கம் அளித்தார்.
கிருஷ்ணகிரி,
உலக மரபு வாரத்தை யொட்டி, தமிழக தொல்லியல் துறை, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து, அரசு அருங்காட்சியகத்தில் ஆசிரியர்களுக்கான ஒருநாள் தொல்லியல் மற்றும் கல்வெட்டுப் பயிற்சியை அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில், வரலாற்று ஆய்வு குழுவின் தலைவர் நாராயணமூர்த்தி அனைவரையும் வர வேற்றார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி பேசுகையில், பழமையான பொருட்களை பாதுகாப்பது குறித்து ஆசிரியர்கள், மாணவர்களுக்கு எடுத்து ரைக்க வேண்டும். மாணவர்களை நேரடியாக கள ஆய்வுக்கு அழைத்துச் செல்லும்போது அவர்க ளுக்கு வரலாற்றின் மீது ஆர்வம் அதிகரிக்கும். புதையல் என்ற பெயரில் வரலாற்றுச் சின்னங்களை யாரும் சிதைக்கக்கூடாது. அவற்றை நாம் பாதுகாக்க வேண்டும் என்றார்.
இப்பயிற்சியில் ஆசிரியர்க ளுக்கு கல்வெட்டை எவ்வாறு படியெடுத்து படிப்பது என செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் பாறை ஓவியங்கள், தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி பற்றி அருங்காட்சியக காப்பாச்சியர் கோவிந்தராஜ் விளக்கிக் கூறினார்.
தொல்லியல் துறை அலுவலர் பரந்தாமன், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தொல்லியல் களங்கள் பற்றியும், கல்வட்டம், கற்திட்டை, கற்பதுகை பற்றியும், அகழ்வாய்வு பற்றியும், அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களை பற்றியும், படங்களை காட்டி விளக்கம் அளித்தார்.
ஊரில் உள்ள பழங்கால மரபுசார் பொருட்களையும், நினைவுச் செல்வங்களையும், பாதுகாக்க வேண்டும் என்றும், அவற்றினை மூடநம்பிக்கையால் அளிக்கக் கூடாது எனவும் வரலாற்று ஆய்வு குழுத் தலைவர் நாராயணமூர்த்தி கூறினார். இந்த பயிற்சியின் போது நகர்மன்ற உறுப்பினர் பாலாஜி, அருங்காட்சியக பணியாளர்கள் செல்வகுமார், பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.
- இலவச பயிற்சி வகுப்பு நாளை (28-ந் தேதி) காலை 10.30 மணி முதல் இவ்வலுவலகத்தில் தொடங்கப்படவுள்ளது.
- பாடவாரியாக தேர்வுகள் நடத்தப்பட்டு, ஒவ்வொரு தேர்விற்கான தனிநபர் ஆலோசனையும் வழங்கப்படும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவ லர் கவுரிசங்கர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை (28-ந் தேதி) காலை 10.30 மணி முதல் இவ்வலுவலகத்தில் தொடங்கப்படவுள்ளது.இவ்வகுப்பில், முந்தைய தேர்வுகளின் மாதிரி வினாத்தாள்கள் மற்றும் தேர்விற்கான பாடக்குறிப்புகள் வழங்கப்படும். மேலும் வாரம் ஒருமுறை பாடவாரியாக தேர்வுகள் நடத்தப்பட்டு, ஒவ்வொரு தேர்விற்கான தனிநபர் ஆலோசனையும் வழங்கப்படும்.
இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்ப முள்ளவர்கள் முன்பதிவு செய்துகொள்ளவும். மேலும், தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் தங்களது முகவரிக்கான ஆதாரம் ஆகியவற்றுடன், கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், இது தொடர்பான விபரங்களை 04242-291983 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக வேலைநாட்டிகளில் தொடர்பு கொண்டு அறிந்துகொள்ளலாம். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த, இத்தேர்விற்கு தயாராகும் தகுதிவாய்ந்த தேர்வர்கள் இவ்வகுப்புகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் தெரிவித்துள்ளார்.
- சிறப்பு சுருக்கமுறைத் திருத்த பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- டிசம்பர் 8-ந் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடை பெறுகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஜெயசந்திரபானு ரெட்டி, கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெத்ததாளப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள், கங்கலேரி அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்த பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியா ளர்களிடம் கூறியதாவது: -
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தர விற்கிணங்க, 1.1.2023-ம் தேதியினை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்கள், 18வயது நிறைவடைந்து நாளது வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் மற்றும் 17வயது பூர்த்தி அடைந்த இளம் வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்த்துக்கொள்ளும் வகையில் கடந்த 9-ந் தேதி முதல் வருகிற டிசம்பர் 8-ந் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடை பெறுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 287 வாக்குசாவடிகள், பர்கூர் தொகுதிக்குட்பட்ட 292 வாக்குசாடிவகள், கிருஷ்ணகிரி தொகுதிக்குட்பட்ட 308 வாக்குசாவடிகள், வேப்பனபள்ளி தொகுதிக்குட்பட்ட 312 வாக்குசாவடிகள், ஓசூர் தொகுதிக்குட்பட்ட 379 வாக்குசாவடிகள், தளி தொகுதிக்குட்பட்ட 302 வாக்குசாவடிகள் என மொத்தம் 1880 வாக்கு சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.
வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க படிவம் 6, வெளிநாடு வாழ் வாக்காளர்கள் பெயர் பதிவு செய்ய படிவம் 6ஏ., இறந்தவர் மற்றும் நிரந்தரமாக வெளியூர் சென்றுவிட்டவர்கள் பெயர் நீக்கம் செய்ய படிவம் 7, வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்யவும், நகல் வாக்காளர் அட்டையாள அட்டை விண்ணப்பிக்கவும் படிவம் 8 மற்றும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க படிவம் 6 பி., ஆகியவற்றை பூர்த்தி செய்து வாக்காளர் தாங்கள் வசிக்கும் இருப்பிடங்களுக்கு அருகாமையில் உள்ள வாக்கு சாவடிகளில் வழங்கலாம்.
எனவே, இளம் வாக்காளர்கள் (இன்று) ஞாயிற்றுக்கிழமை நடை பெறும் சிறப்பு முகாம்களில் உரிய படிவங்களை பூர்த்தி செய்து, தங்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் கூறினார்.
- மாற்றுத்திறன் மாணவர்கள் மற்றும் சாதாரண மாணவர்களுடன் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
- ஒருங்கிணைந்து கல்வி கற்கவும் தமிழக அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் மூலமாக மாற்றுத்திறனாளி குழந்தைகள் தின விழா நடைபெற்றது. மாற்றுத்திறன் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் தனி திறமைகளை வெளிக் கொண்டுவரும் விதத்திலும் சாதாரண மாணவர்களுடன் மாற்றுத்திறன் மாணவர்களும் ஒருங்கிணைந்து கல்வி கற்று நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபிக்கும் வகையில் கலை மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள் நடைபெற்று வந்தது. அதில் ஊத்தங்கரை ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாற்றுத்திறன் மாணவர்கள் மற்றும் சாதாரண மாணவர்களுடன் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி வழிகாட்டுதலின்படி நடைபெற்று வந்தது. இந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறன் மாணவர்கள் தாழ்வு மனப்பாண்மை அகற்றிடவும் சாதாரண மாணவர்களுடன் ஒருங்கிணைந்து கல்வி கற்கவும் தமிழக அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்த நிகழ்வில் வட்டார மேற்பார்வையாளர் வசந்தி மற்றும் ஆசிரியர் பயிற்றுனர் ஜெயமணி பாக்கியராஜ் ஆனந்தன் பிரபு ராஜ் கமல் ராஜசேகர் வசந்தி கோவிந்தராஜ் ஜெயபிரகாசம் சண்முகம் சிறப்பு பயிற்றுநர் காமாட்சி சுரேஷ் ரமேஷ் பிரபாகரன் வைரம்மாள் பிசியோதெரபி ஆசிரியர் கோகிலா மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகன், அரசு மேல்நிலைப்பள்ளி உதவி ஆசிரியை விஜயலட்சுமி, ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.
- அடிப்படை கல்வித்தகுதி உடைய பணியாளர்களின் அரசு வேலை மறுக்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகம் எதிரில், தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு சங்க தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் செந்தில்குமார் செழியன் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். மாவட்டத்தலைவர் சரவணன், வி.ஏ.ஓ., சங்க மாவட்டத் தலைவர் பூபதி, மாநில செயலாளர் பெருமாள், பட்டு வளர்ச்சித்துறை செல்வகுமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சந்திரன் சிறப்புரை ஆற்றினார். மாநில துணைத் தலைவர் வெங்கடேசன் நிறைவுரை ஆற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பேசியதாவது:- தமிழகம் முழுவதும் உள்ள 20 மாநகராட்சிகளில் மக்களின் அடிப்படை பணிகள் செய்து வரும், தூய்மைப் பணியாளர்கள், தெருவிளக்கு பராமரிப்பு பணியாளர்கள், குடிநீர் வழங்கல், துப்பரவு பணி மேற்பார்வையாளர்கள், வருவாய் உதவியாளர்கள், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர்கள், ஓட்டுனர்கள், இரவுக் காவலர், தரவு உள்ளீட்டாளர்கள், தட்டச்சர், மருத்துவர்கள், நகர சுகாதார செவிலியர்கள், தகவல் தொழில்நுட்பத் துறை பணியளர்களின் பணி பாதுகாக்கப்பட்ட, அடிப்படை கல்வித்தகுதி உடைய பணியாளர்களின் அரசு வேலை மறுக்கப்படுகிறது.
அத்துடன் கருணை அடிப்படை பணி வாய்ப்புகள் இல்லாமல் மாநகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள் ஓய்வுக்குப்பிறகு இந்த பணியிடங்கள் நிரப்பாமல் எதிர் வரும் காலங்களில் வெளிமுகமை மூலம் நிரப்பப்படும் என்றும், 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை 3417ஆக குறைக்கும் வகையில் கடந்த அக்டோபர் 20-ம் தேதி வெளியிட்டுள்ள அரசாணை 152-ஐ தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.






