என் மலர்
கிருஷ்ணகிரி
- யோகாவிற்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
- பதக்கங்களை வேளாங்கண்ணி பள்ளி மாணவர்கள் பெற்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில் கடந்த மாதம் 23-ம் தேதி யோகாவிற்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் பல பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளி மாணவ, மாணவியர்கள் 55 பேர் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.முதல் கட்டப்போட்டியில் நடனத்துடன் கூடிய யோகா முறையில் மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர்.
"சாம்பியன் ஆப் சாம்பியன்" என்ற பதக்கங்களை வேளாங்கண்ணி பள்ளி மாணவர்கள் பெற்றனர். "காமன் ஆசனாஸ்" என்ற யோகாவிற்கு பதக்கமும், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கும் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பள்ளியின் தாளாளர் கூத்தரசன் மற்றும் துணை முதல்வர் மஞ்சுளா தலைமையில் கேடயமும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கி மாணவர்களை கவுரவப்படுத்தினர்.
- மாவட்ட இளைஞர்காங்கிரஸ் கூட்டம் நடந்தது.
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில், கிழக்கு மாவட்ட இளைஞர்காங்கிரஸ் கூட்டம் மாவட்ட தலைவர் சரத்குமார் தலைமையில் நடந்தது.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் நடராஜன், தமிழ்நாடு இளைஞர்காங்கிரஸ் பொதுச் செயலாளர் விக்னேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கிருஷ்ணகிரி வடக்கு மாவட்டத்தில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமிப்பது, வருகிற 16-ந் தேதி மாவட்ட செயற்குழு கூட்டம் நடத்துவது, ஓசூர்-கிருஷ்ணகிரி-ஜோலார்பேட்டை ரெயில் திட்டம் வர கடுமையாக பாடுபட்ட காங்கிரஸ் எம்.பி., செல்லகுமாருக்கு பாராட்டு தெரிவிப்பது, இத்திட்டத்தை, தான்கொண்டு வந்ததாக கூறும் பா.ஜனதா செய்தி தொடர்பாளரும், முன்னாள் எம்.பி.,யுமான நரசிம்மனுக்கு கண்டனம் தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் கிருஷ்ணகிரி வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராஜ்குமார், பர்கூர் சட்டசபை தொகுதி தலைவர் கார்த்திக், அஜித் பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தட்ரஅள்ளி மாரியம்மன் கோவில் அருகே வந்த போது காரின் முன் பக்கத்தில் இருந்து திடீரென புகை வந்தது.
- நடுரோட்டில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்தூர்:
தருமபுரி கோட்டை தெருவை சேர்ந்தவர் தமிழரசன். இவர் நேற்று தனது காரில் 3 பேருடன் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளிக்கு ஜாதகம் பார்ப்பதற்காக சென்றனர்.
பின்னர் மீண்டும் மாலை போச்சம்பள்ளியில் இருந்து தருமபுரிக்கு அகரம் வழியாக வந்து கொண்டிருந்தனர்.
அப்போது தட்ரஅள்ளி மாரியம்மன் கோவில் அருகே வந்த போது காரின் முன் பக்கத்தில் இருந்து திடீரென புகை வந்தது.
இதனை பார்த்த தமிழரசன் உடனடியாக காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கி தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினார். அதற்குள் கார் வேகமாக தீப்பிடித்துக்கொண்டது.
இது குறித்து போச்சம்பள்ளி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பற்றி எரிந்துக்கொண்டிருந்த கார் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அதற்குள் கார் முழுவதும் எரிந்து சேதமானது. நடுரோட்டில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். கார் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- ஆய்வு உபகரணங்கள் பற்றிய பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளன.
- எம்.ஜி.ஆர் கல்லூரி முதல்வர் முத்துமணி, உயிர்த்தொழில் நுட்பவியல் துறைத்தலைவர் நீதிராஜன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
ஓசூர்,
ஒசூரில் உள்ள எம்.ஜி.ஆர். கல்லூரியும், பெங்களுரு அரசு உதவிபெறும் ஐ.பி.ஏ.பி. நிறுவனமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்றியுள்ளது.
இதன் மூலம், மாணவர்கள் அந்த நிறுவனத்திற்குச் சென்று உயிர்த்தகவலியல் துறை, உயிர்த்தொழில் நுட்பவியல் துறை, சார்ந்த பயிற்சிகளை மேற்கொள்ளவும், பயிற்சி முடிந்ததும் வேலைவாய்ப்பு கிடைக்கும் நோக்கத்துடன் அந்நிறுவனத்தின் இயக்குநருடன் ஒப்பந்தமிடப்பட்டது.
மேலும், பெங்களுரு 'சேன்ஜீன் பயோடெக்' நிறுவன ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாணவர்கள் சமகால ஆய்வு, ஆய்வு உபகரணங்கள் பற்றிய பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளன.
முன்னாள் துணைவேந்தரும், அதியமான் கல்விக்குழும ஆலோசகருமான முத்துச்செழியன் முன்னிலையில், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், நிறுவன தலைவர் பிரசாத், எம்.ஜி.ஆர் கல்லூரி முதல்வர் முத்துமணி, உயிர்த்தொழில் நுட்பவியல் துறைத்தலைவர் நீதிராஜன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
- இலக்கியங்களில் இருந்து பக்தி சொற்பொழிவு நடைபெறுகிறது.
- பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஓசூர்,
ஓசூர் - பஸ்தி சாலையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில்,கடந்த 28-ஆம் தேதி தொடங்கி நாளை(ஞாயிற்றுக்கிழமை) வரை நாள்தோறும், திருமுறை விண்ணப்பம், ஸ்ரீ ராம நாம தாரக மந்திர ஜெபம், பஞ்சாட்ச மந்திர ஜெபம், அய்யப்ப சாமி பஜனைகள், ராமாயணம், மகாபாரதம், பாகவதம், நாராயணீயம் மற்றும் பகவத் கீதை உள்ளிட்ட பக்தி இலக்கியங்களில் இருந்து பக்தி சொற்பொழிவு நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று, உலக நன்மைக்காக மகா ருத்ர யாகம் நடைபெற்றது. அதிகாலையில் மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கிய யாகத்தில் 121 குருக்கள் பங்கேற்று, தொடர்ந்து 8 மணி நேரம் ருத்ர யாகத்தை நடத்தினர்
இந்த மகா ருத்ர யாகத்தில், 1,008 ருத்ர பாராயணம் வைபவமும் நடைபெற்றது. மேலும் விழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
உலக அமைதி மற்றும் நன்மை வேண்டியும் மக்கள் அனைவரும் நலமுடன் வாழ்வதற்காக வேண்டியும் இந்த மகா ருத்ர ஹோமம் நடத்தப்படுவதாகவும் தொடர்ந்து 18 ஆண்டுகள் நடைபெற்று, 19-வது ஆண்டாக இந்த ஆண்டும் மகா ருத்ர யாகம், சிறப்பாக நடைபெற்றதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
- தேசிய மாசு கட்டுப்பாட்டுத்தின விழா நேற்று நடைபெற்றது.
- மாணவ மாணவிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே போலுப்பள்ளியில் உள்ள அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய மாசு கட்டுப்பாட்டுத்தின விழா நேற்று நடைபெற்றது. கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெகன் வரவேற்புரை ஆற்றினார்.இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் தனபால் தலைமை வகித்து பேசினார். தேசிய மாசு கட்டுப்பாட்டு தினத்தை முன்னிட்டு மாணவ மாணவியர்களுக்கு முன்மாதிரியாக 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்தார். மேலும் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கினார் விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஸ்டீபன் விக்டர் ஆண்டனி மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். விழாவின் நிறைவாக நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் ராமமூர்த்தி நன்றி கூறினார். விழாவில் நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவியர்கள கலந்து கொண்டனர்.
- இந்து முன்னணி அமைப்பின் தலைவராக இருப்பவர் கலைகோபி.
- சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு இந்த புகார் குறித்து விசாரித்து வருகிறார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் தலைவராக இருப்பவர் கலைகோபி (வயது 31). இவரது அலுவலகம் கார்னேசன் திடல் பகுதியில் உள்ளது.
இந்நிலையில் கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியில் சிலரை கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சிப்பதாகவும் ,அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கலைகோபி போலீசில் புகார் கூறியிருந்தார்.
இந்த சூழலில் கலைகோபியின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு அவருக்கு மிரட்டல் விடப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ராஜேஷ், சரவணா உள்ளிட்ட சிலர் மீது கிரிஷ்ணகிரி டவுன் போலீசில் கலைகோபி புகார் கொடுத்துள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு இந்த புகார் குறித்து விசாரித்து வருகிறார்.
- கூடுதல் கலெக்டர்( வளர்ச்சி) வந்தனா கார்க் ஆய்வு மேற்கொண்டார்.
- வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் ஊராட்சி பணிகள் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர்( வளர்ச்சி) வந்தனா கார்க் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வுப் பணிகளின் போது தளி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலு ரெட்டி, தளி வட்டார வளர்ச்சி அலுவலர் விமல் ரவிக்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், மற்றும் ஊராட்சி மன்ற செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அண்ணி முனி ரத்தினம்மாவை கட்டையால் அடித்தார்.
- மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் கிராமத்தில் சுற்றித்திரிந்ததாக அப்பகுதி மக்கள் போலீசாரிடம் கூறியுள்ளனர்.
தேன்கனிக்கோட்டை,
தேன்கனிக் கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட தளி அருகே கும்ளாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பில்லப்பா (வயது 50). இவருடைய மனைவி முனிரத்தினம்மா (45). இவர் அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் அவரைக்காய் பறித்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த பில்லப்பாவின் தம்பியான மட்டப்பா என்ற கோபாலப்பா (வயது 45) என்பவர் தோட்டத்தில் அவரைக்காய் பறிக்க கூடாது என கூறியும் எப்படி பறிக்கலாம் என கூறி அவரது அண்ணி முனி ரத்தினம்மாவை கட்டையால் அடித்தார்.
இதில் படுகாயம் அடைந்த முனிரத்தினம்மா சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்த தளி போலீசார் சடலத்தை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் கோபாலப்பாவை கைது செய்தனர். கோபாலப்பாவின் மனைவி கடந்த சில ஆண்டுக்கு முன் அவரை பிரிந்து சென்றதால் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் கிராமத்தில் சுற்றித்திரிந்ததாக அப்பகுதி மக்கள் போலீசாரிடம் கூறியுள்ளனர்.இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது.
- யானையின் உடல் பாகங்கள் பிற உயிரினங்களுக்கு உணவாக விட்டு செல்லப்பட்டது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டம் காவேரி தெற்கு வன உயிரின சரணாலயத்தில் உரிகம் வனச்சரகம் உள்ளது. இங்குள்ள காட்டில் உன்சேபச்சிகொல்லை சரக பகுதியில் நேற்று வன ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது.
இது குறித்து வன பணியாளர்கள் ஓசூர் வன கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவருடைய தலைமையில் உதவி வன பாதுகாவலர் ராஜமாரியப்பன், உரிகம் வனச்சரக அலுவலர் வெங்கடாசலம் மற்றும் சரக வன ஊழியர்கள் அங்கு விரைந்து சென்றனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்ததும் தருமபுரி மண்டல வன பாதுகாவலர் பெரியசாமி சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த யானையை பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து ஓசூர் வன கால்நடை உதவி மருத்துவர் பிரகாஷ் தலைமையில் மருத்துவ குழுவினர் அங்கேயே யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். சுமார் 4 மணி நேரம் இந்த பிரேத பரிசோதனை நடந்தது.
அதில் யானைக்கு 36 முதல் 38 வயது இருந்ததும், யானையின் உடலில் வெளிப்பகுதியில் காயங்கள் இருந்ததும் தெரியவந்தது. காட்டில் யானைகளுக்கு இடையே சண்டை நடந்ததும், இதில் பெண் யானை காயம் அடைந்து இறந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து யானையின் உடல் பாகங்கள் பிற உயிரினங்களுக்கு உணவாக விட்டு செல்லப்பட்டது.
- மாவட்ட குற்ற பிரிவு போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தனர்.
- பணி நியமன ஆணைகள் போலியானது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம்பர்கூர் அருகேயுள்ள அச்சமங்கலம் பகுதியை சேர்ந்த சுதாகர் மற்றும் 26 பேர் மாவட்ட குற்ற பிரிவு போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தனர்.
அதில் போச்சம்பள்ளியை சேர்ந்த யாரப்பாஷா, கிருஷ்ணகிரியை சிறந்த சண்முகம், வெங்கடேசன், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ரகுகுமார் ஆகியோர் அரசு வேலை வாங்கித்தருவதாக தங்களிடம் ரூ.78 லட்சத்து 74 ஆயிரம் வாங்கி ஏமாற்றி விட்டதாகவும், அவர்கள் கொடுத்த பணி நியமன ஆணைகள் போலியானது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த புகார் குறித்து இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி விசாரணை நடத்தி வருகின்றார்.
- கஞ்சா ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- துண்டு பிரசு ரங்கள் மூலமாகவும், ஒலிபெருக்கியின் மூலமாக வும் விழிப்புணர்வு செய்யப்பட்டது.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியில் வனத்துறையின் சார்பில் பொதுமக்களுக்கு கஞ்சா ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி வன சரக அலுவலர் ரவி தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி சரக வனவர்கள் தேவேந்திரன், அண்ணாதுரை, சம்பத்கு மார், வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுமக்களுக்கு கஞ்சா பயன்படுத்துவதால் அதன் தீமைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. வனப்பகுதியை யொட்டி விளைநிலங்களில் விவசாயி கள் அனுமதியின்றி மின்வேலிகள் அமைக்க கூடாது. பொதுமக்கள் வனப்பகுதிக்குள் அனுமதியின்றி செல்ல கூடாது. காட்டு யானைகள் மற்றும் வனவிலங்குகளை பொதுமக்கள் துன்புறுத்து தல் கூடாது என்பது குறித்து துண்டு பிரசு ரங்கள் மூலமாகவும், ஒலிபெருக்கியின் மூலமாக வும் விழிப்புணர்வு செய்யப்பட்டது.
மேலும் கஞ்சா செடிகள் வளர்ப்பவர்கள் மீதும், விலங்குகளை துன்புறுத்துபவர்கள் மீதும், வனப்பகுதியை அருகே விவசாய நிலங்களில் அனுமதி இன்றி மின் கம்பிகள் அமைப்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் வேப்பனப்பள்ளி மகாராஜா கடை, பர்கூர், சிந்தாம்பள்ளி ஆகிய வன காப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






