என் மலர்
கிருஷ்ணகிரி
- தீவிர வாகன சோதனையால், 51 ஆயிரத்து, 157 கிலோ புகையிலை பொருட்கள் பிடிபட்டுள்ளன.
- குற்ற வழக்கில் தொடர்புடைய, 35 பேர் மற்றும் கடத்தல் வழக்குகளில், 4 பேர் உட்பட, 39 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலீசாரின் துரித நடவடிக்கைகளால் கடந்தாண்டில் (2022) கொலை, கொள்ளை சம்பவங்கள் குறைந்துள்ளன. கடந்த, 2021-ம் ஆண்டு 66 கொலை வழக்குகள் பதிவான நிலையில், கடந்தாண்டு, 50 கொலை வழக்குகளாக குறைந்துள்ளன. இது, 28 சதவீதம் குறைவாகும். பதிவான, 50 வழக்குகளில், 49-ல், குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
அதே போல திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் பதிவான வழக்குகளில், 77 சதவீத சம்பவங்களில் குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடித்து உள்ளனர். திருடு போன சொத்துக்களும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. கடந்த, 2021-ல், கர்நாடகத்தில் இருந்து கடத்தப்பட்ட, 26 ஆயிரத்து, 574 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கடந்த ஆண்டு போலீசார் மேற்கொண்ட தீவிர வாகன சோதனையால், 51 ஆயிரத்து, 157 கிலோ புகையிலை பொருட்கள் பிடிபட்டுள்ளன.
மாவட்டத்தில் கஞ்சா பெரிய அளவில் பிடிபடவில்லை. அஞ்செட்டி, ஒசூர், தளி, உள்ளிட்ட பகுதிகளில் சிறிய அளவில் மட்டுமே சிக்கி உள்ளது. அதன்படி மாவட்டத்தில் உள்ள, 3,000 கிராமங்களில், 2,900 கிராமங்கள் கஞ்சா இல்லாத கிராமங்களாக மாறி உள்ளன.
சந்துகடை, அனுமதி யற்ற பார்கள் மூட ப்பட்டு கள்ளசந்தை மது விற்பனையை தடுக்க நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும். இதனால் பெருமளவில் குற்ற சம்பவங்கள் குறையும்.
அதேபோல மாவட்டத்தில் 'ரெட் சோன்' என பார்க்கப்படும் காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி டவுன், ஓசூர் சிப்காட், ஹட்கோ, சூளகிரி, மத்திகிரி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதுடன், வாகன சோதனைகள், கண்காணிப்பை அதிகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கட்டப்பஞ்சாயத்து வழக்குகளில் உடனடியாக வழக்கு பதிந்து அவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. கடந்தஆண்டில் தொடர் குற்ற வழக்கில் தொடர்புடைய, 35 பேர் மற்றும் கடத்தல் வழக்குகளில், 4 பேர் உட்பட, 39 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அவ்வழியே செல்லமுடியாத அளவிற்கு துர்நாற்றமும் வீசுகிறது.
- குப்பைகளை ஆற்றங்கரையில் கொட்ட தடை விதிக்க வேண்டும்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே அரசம்பட்டி - பண்ணந்தூர் புதிய பாலம் அருகில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் தென் ஈஸ்வர் கோவில் அமைந்துள்ளது.
இங்கு தினந்தோறும் பல்வேறு இடங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வந்து வழிபடுகின்றனர். அதுமட்டுமின்றி ஆற்றங்கரையில் நீராடுவது, இயற்கை அழகை பார்த்து ரசிப்பது அருகாமையில் தடுப்பணை உள்ளது.
இத்தடுப்பணையை காணவும், நீராடவும் மக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் தற்போது இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அரசம்பட்டி ஊராட்சியை சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை ஆற்றங்கரையிலும், ஆற்றிலும் கொட்டுவதோடு, தீ வைக்கின்றனர்.
இதனால் அப்பகுதி புகைமண்டலமாக உள்ளது. அத்துடன் அவ்வழியே செல்லமுடியாத அளவிற்கு துர்நாற்றமும் வீசுகிறது. இங்கு மாடுகள், ஆடுகள் போன்றவை மேய்ச்சலுக்கு விடப்படுகின்றன.
ஆனால் தற்போது குப்பைகளை கொட்டப்படுவதால் கால்நடைகள் வளர்த்தல் மிகவும் சிரமமாக இருக்கிறது, பல்வேறு வகையான நோய்கள் பரவுகின்றன. எனவே குப்பைகளை ஆற்றங்கரையில் கொட்ட தடை விதிக்க வேண்டும் என்று அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், பர்கூர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.
- சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் 35 பள்ளி விடுதிகள் மற்றும் 9 கல்லூரி விடுதிகள் என மொத்தம் 44 விடுதிகள் இயங்கி வருகிறது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை இந்திரா நகரில் பிற்படுத்தப்பட்டோர் நல தறை சார்பில் 100 மாணவர்கள் தங்கும் வகையில் அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பல்தொழில் நுட்ப கல்லூரி மாணவர் விடுதி கட்டப்பட்டுள்ளது. அதை கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், பர்கூர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் பேசியதாவது:-
கிருஷ்ணகிரி மாவ ட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் 35 பள்ளி விடுதிகள் மற்றும் 9 கல்லூரி விடுதிகள் என மொத்தம் 44 விடுதிகள் இயங்கி வருகிறது.
கல்லூரி விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை வேண்டி அதிகளவில் விண்ண ப்பங்கள் வரப்பெறுவதால் மாணவ, மாணவிகளின் நலன் கருதி, ஊத்தங்கரை தாலுகாவில் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல தொழில்நுட்பக்கல்லூரி மாணவர் விடுதி 100 மாணவர்கள் எண்ணிக்கையுடன் தொடங்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது.
மாணவர்களுக்கு தினமும் புதிதாக மாற்றப்பட்ட உணவுப்பட்டியலின்படி, காலை மற்றும் இரவு உணவாக இட்லி, இடியாப்பம், பூரி, பொங்கல், சப்பாத்தி, தோசையும், மதிய உணவாக சாதம், சாம்பார், ரசம், கூட்டு, சிக்கன், மட்டன், முட்டையும், பண்டிகை கால சிறப்பு உணவுகளும் வழங்கப்படுகின்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், ஒன்றிய குழு தலைவர் உஷாராணி குமரேசன், ஒன்றிய குழு துணைத்தலைவர் சத்தியவாணி செல்வம், பேரூராட்சி தலைவர் அமானுல்லா, பேரூராட்சி துணைத்தலைவர் கலைமகள் தீபக், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- இந்த கிராமத்தில் எருது விடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
- கிராம நிர்வாக அதிகாரி ராயக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகேயுள்ளது பாலையூர். பொங்கல் விழாவை ஒட்டி இந்த கிராமத்தில் எருது விடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இந்நிலையில் பாலையூர் கிராம நிர்வாக அதிகாரி வெங்கடாசலம் என்பவர் ராயக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரில் எருது விடும் நிகழ்ச்சியில் அரசின் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
அதன்பேரில் நிகழ்ச்சியை நடத்திய பஞ்சாயத்து தலைவர் மூர்த்தி, திருப்பதி, முனியப்பன், நாகன் ஆகியோர் மீது ராயக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- வெங்கடசாமி, கொடூரமான முறையில் இறந்து கிடந்தார்.
- யாரேனும் கொலை செய்து போட்டு சென்றார்களா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியகோட்டப்பள்ளி பக்கமுள்ள பெத்தளப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடசாமி (வயது 65). விவசாயி. இவர் நேற்று முனதினம் வழக்கம் போல தனது விவசாய நிலத்திற்கு வேலைக்காக சென்றார்.
மாலை அவரது நிலம் வழியாக பொதுமக்கள் சிலர் சென்றனர். அந்த நேரம் அங்கு வெங்கடசாமி, கொடூரமான முறையில் இறந்து கிடந்தார். அவரது கை, கால், தொடை மற்றும் கழுத்து பகுதியில் தோல்கள் உரிந்த நிலையில் இருந்தது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து அவரது மகன் ஆனந்தனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் இது குறித்து மகராஜகடை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் பிணமாக கிடந்த வெங்கடசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
முதியவர் வெங்கடசாமியை யாரேனும் கொலை செய்து போட்டு சென்றார்களா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக சந்தேக மரணம் பிரிவின் கீழ் மகராஜகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தன்னுடன் பணிபுரியும் ஒருவருடன் அறைஏடுத்து தங்கியிருந்தார்.
- ஹரிகிருஷ்ணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கிருஷ்ணகிரி,
மாவட்டம் ஜக்கேரிபகுதியை சேர்ந்தவர் உபேந்திரா. இவரது மகன் ஹரிகிருஷ்ணன் (வயது 28)
இவர் குருபரபல்லியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அங்கு தன்னுடன் பணிபுரியும் ஒருவருடன் அறைஏடுத்து தங்கியிருந்தார்.
இந்நிலையில் பொங்கல் விளவுக்க்க விடுமுறையில் ஹரிகிருஷ்ணன் ஊருக்கு வந்தார்.
இந்நிலையில் வீட்டில் யாருமில்லாதபோது ஹரிகிருஷ்ணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவரது அண்ணன் பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின்பேரில் குருபரபள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- விழாவில், இந்தாண்டு ஓய்வு பெறும் மெர்சி என்ற ஆசிரியை கவுரவிக்கப்பட்டார்.
- நடனமாடிய அனைவருக்கும் தலா ரூ.1,000- வீதம் பரிசுப் பொருள், தண்ணீர் பாட்டில், இனிப்பு ஆகியவற்றை குழந்தை பிரான்சிஸ் வழங்கினார். மேலும் ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்குவதாக கூறினார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் புனித ஜான் போஸ்கோ அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு, ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனத்தின் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் ஏஞ்சலா முன்னிலை வகித்தார்.
இதில், மாவட்ட கல்வி அலுவலர் கோவிந்தன், தொடக்கக்கல்வி அலுவலர் முனிராஜ், ஓசூர் தூய இருதய ஆண்டவர் ஆலய பங்குத்தந்தை சூசை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவில், இந்தாண்டு ஓய்வு பெறும் மெர்சி என்ற ஆசிரியை கவுரவிக்கப்பட்டார்.
பள்ளிக் குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போர்டு, ஆண்டு விழாவில் நடனமாடிய அனைவருக்கும் தலா ரூ.1,000- வீதம் பரிசுப் பொருள், தண்ணீர் பாட்டில், இனிப்பு ஆகியவற்றை குழந்தை பிரான்சிஸ் வழங்கினார். மேலும் ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்குவதாக கூறினார்.
மேலும் விழாவில், பள்ளி தலைமையாசிரியை ஜெயந்தி, சமத்துவபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கோபாலப்பா, ஓசூர் ஏஞ்சல்ஸ் ரோட்டரி சங்க தலைவி ஆலிவ் சாந்தி, மாநகராட்சி கவுன்சிலர்கள் இந்திராணி, பாக்யலட்சுமி, தேவி மற்றும் ஆசிரிய, ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆர்பாட்டங்களை செய்து வருகின்றனர்.
- விவசாய உபகரணங்கள் களப்பை மற்றும் கருப்பு கொடியை பறக்க விட்டு 15-வது நாளாக உத்தனப்பள்ளி ஆர்.ஐ அலுவலகம் அருகே தொடர்ந்து காத்திப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் - சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி ஊராட்சி மற்றும் அயர்னப்பள்ளி, நாகமங்களம் ஊராட்சி பகுதிகளான விளை நில பகுதிகளில் 6-வது சிப்காட் நில எடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆர்பாட்டங்களை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் விவசாய உபகரணங்கள் களப்பை மற்றும் கருப்பு கொடியை பறக்க விட்டு 15-வது நாளாக உத்தனப்பள்ளி ஆர்.ஐ அலுவலகம் அருகே தொடர்ந்து காத்திப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது.
- இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே கோவிந்தன் பரிதாபமாக உயிரிழந்தார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே கர்ணப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது50). இவர் இன்றுகாலை இருசக்கர வாகனத்தில் சின்னார் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே கோவிந்தன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொய்க்கால் குதிரை ஆட்டம் நிகழ்த்திய ஏகலைவன் கலை குழுவினருக்கு பரிசு களை வழங்கினார்.
- மாணவ, மாணவிகள் எதிர்மறை எண்ணங்களை அழித்து, புதிய எண்ணங்களை பொங்கல் திருநாள் முதல் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே போலுப்பள்ளியில் உள்ள அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் வேளாங் கண்ணி கல்வி குழுமத்தின் அறங்காவலரும், அறிஞர் அண்ணா கல்லூரியின் தாளாளருமான கூத்தரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான பரதநாட்டியம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் நிகழ்த்திய ஏகலைவன் கலை குழுவினருக்கு பரிசு களை வழங்கினார்.
அதேபோல அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கபடி, கோலம் , சிலம்பாட்டம், தப்பாட்டம், நடனம் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி களை பாராட்டி, பரிசுகளை வழங்கினார்.
அறிஞர் அண்ணா கல்லூரி முதல்வர் தனபால் தனது பொங்கல் வாழ்த்துரையில் மாணவ, மாணவிகள் எதிர்மறை எண்ணங்களை அழித்து, புதிய எண்ணங்களை பொங்கல் திருநாள் முதல் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அனைவருக்கும் உதவிடம் மனப்பான்மையை பொங்கல் விழா மூலம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார். விழாவில மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து மகிழ்ச்சியுடன் பண்டிகையை கொண்டாடினார்கள். இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
- கிரிஷ் தனக்கு தங்கை முறையுள்ள பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
- மனமுடைந்த கிரிஷ், அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக் கோட்டை அருகே பெட்டமுகிலாளம் ஊராட்சி போலுக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் கிரிஷ் (18). 9-ஆம் வகுப்பு படித்துள்ள இவர், ஈரோடு மாவட்டத்தில் உள்ள நூல் மில்லில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 13-ம் தேதி, பொங்கல் விடுமுறையை முன்னிட்டு சொந்த கிராமத்திற்கு வந்திருந்தார். இதனிடையே, கிரிஷ் தனக்கு தங்கை முறையுள்ள பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த பெற்றோர்கள் அவரை கண்டித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் (17ம் தேதி) இரவு அந்த சிறுமி, கிரிஷை தேடி அவரது இல்லத்திற்கு சென்றுள்ளார். இதையறிந்த சிறுமியின் தந்தை, அண்ணன் சிவகுமார், கணேசன், சந்திரன் ஆகியோர், கிரிஷ் வீட்டிற்கு சென்று இருவரையும் அடித்துள்ளனர். பின்னர் சிறுமியை விட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதனால் மனமுடைந்த கிரிஷ், அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார், நேற்று அவரது சடலத்தை கைப்பற்றி, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து, உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இது குறித்து கிரிஷின் தாய் பசம்மா(34), தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில், வாலிபரை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியின் தந்தை, அவரது அண்ணன் சிவகுமார், கணேசன், சந்திரன், வீரபத்திரன், சரவணன் உள்பட 6 பேரை கைது செய்து ஒசூர் கிளை சிறையில் அடைத்தனர்.
- கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா எனக் கண்டறிந்து சொல்வதைத் தடை செய்யும் சட்டத்தின் படி கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கேட்கக் கூடாது.
- எளிய முறையிலான திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும். பெண் கல்விக்கு முன்னுரிமை தர வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கி உறுதிமொழியை படிக்க அனைத்து அரசு துறை அலுவலர்களும் திரும்ப படித்து எடுத்துக் கொண்டனர்.
தொடர்ந்து பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-
பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் பெண் குழந்தைகளின் விகிதம் மற்றும் பிறப்பு விகித எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு அறிமுகப் படுத்தப்ப ட்டுள்ளது.
இந்த திட்டம் நமது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த மாதம் முதல் செயல்பட உள்ளது. பெண் மீதான மற்றும் பெண் குழந்தை மீதான வெறுப்பை நீக்கிக் கொள்ள வேண்டும். ஆண்,பெண் பாலின சமத்துவத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா எனக் கண்டறிந்து சொல்வதைத் தடை செய்யும் சட்டத்தின் படி கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கேட்கக் கூடாது. வரதட்சணை வாங்கவோ, கொடுக்கவோ கூடாது. எளிய முறையிலான திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும். பெண் கல்விக்கு முன்னுரிமை தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) குமரேசன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு திட்ட அலுவலர் சிவகாந்தி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






