என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • பல்வேறு இடங்களில் இருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்துக் கொண்டனர்.
    • மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னைத் திருத்தலத்தில், ஈஸ்டர் சிறப்பு திருப்பலி பூஜைகள் நடைபெற்றது.

    திருத்தலத்தின் பங்குத்தந்தை இசையாஸ் திருப்பலி பூஜைகளை நிறைவேற்றி வைத்தார்.

    இதன் முன்னதாக, அடக்கம் செய்யப்பட்ட கல்லறையில் இருந்து மூன்றாவது நாள் இயேசு உயிர்த்தெழும் நிகழ்வு ஒளி வெள்ளத்தில் சிறப்பாக நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து, இயோசுவை வரவேற்கும் வகையில் அனைவரும் கைகளிலும் மெழுகுவர்த்தி ஏந்தி, சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

    இந்த சிறப்பு திருப்பலியின் போது, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்துக் கொண்டனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து ெகாண்டு வழிபட்டனர்.

    இதேபோல் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    • அ.தி.மு.க., சார்பில், எல்.ஐ.சி., அலுவலகம் அருகில் நேற்று தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
    • ஒன்றிய செயலாளர் கண்ணியப்பன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அசோக்குமார் முன்னிலை வகித்தார்.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், எல்.ஐ.சி., அலுவலகம் அருகில் நேற்று தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

    ஒன்றிய செயலாளர் கண்ணியப்பன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அசோக்குமார் முன்னிலை வகித்தார். அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., தண்ணீர் பந்தலைத் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு தர்பூசணி, நீர்மோர், இளநீர், குடிநீர் பாட்டில் போன்றவற்றை வழங்கினார்.

    நிகழ்ச்சியில், மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, காவேரிப்பட்டணம் ஒன்றிய செயலாளர் பையூர் ரவி உள்பட பலர் பங்கேற்றனர். இதேபோல் நகர அ.தி.மு.க.,

    சார்பில், கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகிலும், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகிலும் அமைத்திருந்த தண்ணீர் பந்தல் திறப்பு விழாவிற்கு, நகர செயலாளர் கேசவன் தலைமை தாங்கினார்.

    அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அசோக்குமார் முன்னிலை வகித்தார். அ.தி.மு.க., துணை பொதுச் செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., தண்ணீர் பந்தலைத் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு தர்பூசணி, நீர்மோர், இளநீர், ஆரஞ்சி, ஜூஸ் பாட்டில், குடிநீர் பாட்டில் போன்றவற்றை வழங்கினார். நிகழ்ச்சியில் மற்றும் 33 வட்டச் செயலாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • ராகுல் காந்திக்கு 2 ஆண்டு காலம் சிறைதண்டனை விதித்திருக்கிறது மேலும் அவரை எம்.பி. பதவியிலிருந்தும் நீக்கம் செய்துள்ளது.
    • ஜனநாயக விரோத செயலை கண்டித்து, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) மாபெரும் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.ஏ.முரளிதரன், ஓசூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    " ராகுல் காந்தியின் "பாரத் ஜோடோ" யாத்திரை, மிகப்பெரிய வெற்றி பெற்றதை பா.ஜனதா கட்சியினரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்த பொறாமையினால் மோடி அரசு, ராகுல் காந்தியை நாடாளுமன்றத்திற்குள் நுழைய விடக்கூடாது என்ற பழிவாங்கும் நோக்கத்தில், சூரத் நீதிமன்றத்தில் 2019-ஆம் ஆண்டு போடப்பட்ட அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு காலம் சிறைதண்டனை விதித்திருக்கிறது மேலும் அவரை எம்.பி. பதவியிலிருந்தும் நீக்கம் செய்துள்ளது.

    இத்தகைய ஜனநாயக விரோத செயலை கண்டித்து, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) மாபெரும் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது.

    அன்று காலை 8 மணியளவில் தொடங்கவுள்ள இந்த போராட்டத்திற்கு, கிருஷ்ணகிரி எம்.பி. டாக்டர் செல்ல குமார் தலைமை தாங்குகிறார்.

    இவ்வாறு, முரளிதரன் நிருபர்களிடம் கூறினார்.

    அப்போது, மாவட்ட பொருளாளர் மகாதேவன், மாநகர காங்கிரஸ் தலைவர் தியாகராஜன், மாவட்ட துணைத்தலைவர் கீர்த்தி கணேஷ், மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.

    • பள்ளியில் இளைஞர்கள் மது, கஞ்சா, சிகரெட் ஆகியவற்றை பயன்படுத்தி மதுக்கூடாரமாக பயன்னடுத்தி வருகின்றனர்.
    • இனிமேல் இது போல் நடைபெறாதவாறு பள்ளிக்கூடத்தை முழுவதுமாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும்

    காவேரிபட்டினம்

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். காவேரிப்பட்டணம் அங்காளம்மன் கோவில் பின்புறம் தனியாருக்கு சொந்தமான பழைய பள்ளிக்கூடம் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது.

    இந்த பள்ளியில் இளைஞர்கள் மது, கஞ்சா, சிகரெட் ஆகியவற்றை பயன்படுத்தி மதுக்கூடாரமாக பயன்னடுத்தி வருகின்றனர்.

    இது பற்றி அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

    16 லிருந்து 18 வயது உள்ள வாலிபர்கள் இங்கு இரவில் 12 மணி வரை மது, கஞ்சா, சிகரெட் போன்றவற்றை உபயோகப் படுத்துகின்றனர். இதனால் இப்பகுதியில் நாங்கள் வாழ்வதற்கு அச்சமாக உள்ளது. இது பற்றி அந்த வாலிபர்களிடம் இங்கு வரக்கூடாது என்று எச்சரித்தால் அவர்கள் எங்களை தகாத வார்த்தையில் திட்டுகின்றனர்.

    எனவே இனிமேல் இது போல் நடைபெறாதவாறு பள்ளிக்கூடத்தை முழுவதுமாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

    உடனடியாக காவல்துறையினர் சம்பந்தப்பட்ட அந்த இடத்தில் உரிமையாளரை அழைத்து பேசி அப்பகுதியில் சமூக விரோத செயல்கள் நடைபெறாத வகையில் அடிக்கடி ரோந்துப் பணியில் ஈடுபடுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    • பழுதான மின்கம்பம் ஒன்று மிகவும் மோசமான நிலையிலும் உடைந்து விடும் அபாய நிலையில் உள்ளது.
    • அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த பெரிய தள்ளப்பாடி பஞ்சாயத்து ஜீவா நகர் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    இந்த பகுதியில் குடியிருக்கும் வீட்டின் அருகாமையிலே பழுதான மின்கம்பம் ஒன்று மிகவும் மோசமான நிலையிலும் உடைந்து விடும் அபாய நிலையில் உள்ளது.

    அவற்றை உடனடியாக மாற்றி அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இப்பகுதியில் போதுமான சாலை வசதி மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.

    கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் மின்விளக்கு எரிவதில்லை எனவும், இதனால் விஷ ஜந்துக்களின் தொல்லை அதிகமாக இருப்பதாகவும் உடனடியாக இந்த அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    மழைக்காலங்களில் இப்பகுதிகளில் இருந்து வெளியே செல்வது மிகவும் சவாலான நிலையில் காணப்படுகிறது. அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    இந்த அடிப்படை வசதி தொடர்பாக ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலர் தொடர்பு கொண்டு கேட்டபோது நேரில் ஆய்வுகள் மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்வதாக கூறினார்.

    மேலும் பழுதான மின்கம்பத்தை மாற்றி அமைப்பது தொடர்பாக சிங்காரப்பேட்டை உதவி செயற்பொறியாளர் தொடர்பு கொண்ட போது உடனடியாக மின்கம்பத்தை மாற்றி அமைப்பதாக கூறினார்.

    • குளத்தின் அருகே கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சத்ரபதி வீர சிவாஜியின் 9 அடிசிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
    • தலைவர் நடராஜன் குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.

    குழித்துறை:

    குழித்துறை அருகே மேல்புறத்தை அடுத்த வட்டவிளையில் தோட்டத்துமடம் நவநீதகிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவிலையொட்டி கோவில் குளம் உள்ளது. இந்த குளத்தின் அருகே கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சத்ரபதி வீர சிவாஜியின் 9 அடிசிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

    இந்த சிலைக்கு சத்ரபதி வீரசிவாஜி பிறந்த தினம், சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் ராம நவமி, விஜயதசமி ஆகிய தினங்களில் இந்து அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

    இந்த சிலையை நேற்று நள்ளிரவில் ஒரு கும்பல் உள்ளே புகுந்து தலைப்பாகத்தை உடைத்து உள்ளது. இச்சம்பவம் இன்று அதிகாலை முதல் காட்டுத்தீ போல் பரவியது. இதையடுத்து ஆலய நிர்வாகிகள் மற்றும் இந்து அமைப்பினர் அங்கு குவிந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். சிலையின் தலைப்பகுதியை போலீசார் துணியால் மூடினர். மேலும் ஆலய தலைவர் நடராஜன் குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். தற்போது அப்பகுதியில் பதட்ட நிலை வருவதால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • விபத்து குறித்து அப்பகுதியினரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பிக்கப் வேன் அதிவேகமாக வந்ததால் விபத்து நேரிட்டது என தெரிவித்தனர்.
    • விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்தூர்:

    திருவண்ணாமலையில் இருந்து பூக்கள் லோடு ஏற்றி பிக்கப் வாகனம் ஒன்று கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த பாம்பாறு அணை அருகே இன்று காலை வந்து கொண்டிருந்தது.

    அப்போது கர்நாடக மாநிலம், மாண்டியாவிலிருந்து திருக்கோவிலூர் அய்யனார் கோவிலுக்கு 14 பேர் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தில் மீது பிக்கப் வேன் எதிர்பாராதவிதமாக மோதியது.

    இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் பயணித்த மண்டியா மாவட்டம், தமிழ் நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (வயது45) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 2 பேருக்கு பலத்த காயமும், மற்றவர்களுக்கு லேசான காயமும் ஏற்பட்டது.

    விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியான வெங்கடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 2 பேருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த விபத்து குறித்து அப்பகுதியினரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பிக்கப் வேன் அதிவேகமாக வந்ததால் விபத்து நேரிட்டது என தெரிவித்தனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு பிக்கப் வேன் டிரைவர், உடன் வந்தவர் என 2 பேர் தப்பியோடி விட்டனர்.

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் மீண்டும் என்னிடம் துருவி துருவி விசாரணை நடத்தியதில் மூதாட்டியை கொலை செய்தது ஒப்பு கொண்டேன் என கூறினார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து மூதாட்டியை கொலை செய்ததாக வெங்கடேசனை கைது செய்து ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி அடுத்துள்ள கும்மனூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னியம்மாள். மூதாட்டியான இவர் கடந்த கடந்த மாதம் 31-ந்தேதி அன்று கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    இது குறித்து கல்லாவி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது மூதாட்டி கொலை காரணம் பற்றி எதுவும் கிடைக்கவில்லை. இதனால் போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

    இதையடுத்து போலீசார் நேற்று மூதாட்டியின் பேரன் வெங்கடேசன் (வயது45) என்பவரை பிடித்து துருவி துருவி விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் போலீசாரிடம் கூறுகையில் எனது பாட்டி பொன்னியம்மாள் என்னுடைய சட்டை பையில் இருந்து ரூ.1000 பணம் எடுத்துள்ளார்.

    இது பற்றி கேட்டதில் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்ததில் நான் எனது பாட்டி என்று கூட பார்க்காமல் பொன்னியம்மாளை கல்லை போட்டு கொலை செய்தேன்.

    இது பற்றி யாருக்கும் தெரியாத வகையில் நான் வீட்டில் வழக்கம் போல் இருந்தேன். போலீசார் என்னிடம் முதலில் விசாரணை நடத்திய போது நான் இந்த கொலை குறித்து எதுவும் தெரியாது என்று கூறினேன்.

    பின்னர் போலீசார் மீண்டும் என்னிடம் துருவி துருவி விசாரணை நடத்தியதில் மூதாட்டியை கொலை செய்தது ஒப்பு கொண்டேன் என கூறினார்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து மூதாட்டியை கொலை செய்ததாக வெங்கடேசனை கைது செய்து ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

    • நீரில் குவியல் குவியலாக நுரை பொங்கி காணப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
    • இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது விழுவதாலும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    ஓசூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் கெலவரப்பள்ளி அணைக்கு அதிகளவில் நுரைபொங்கி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இன்று அணைக்கு, விநாடிக்கு 340 கனஅடிநீர் வந்தது, விநாடிக்கு 340 கனஅடி நீரானது, தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது..

    கெலவரப்பள்ளி அணையிலிருந்து வெளியேற்றப்படும் தென்பெண்ணை ஆற்று நீரில் குவியல் குவியலாக நுரை

    பொங்கி காணப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    கர்நாடகா மாநில தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள், ரசாயன கழிவுகளை, தென்பெண்ணை ஆற்றில் கலப்பதை வழக்கமாக கொண்டுள்ளன.

    தற்போது தென்பெண்ணை ஆற்றில் குவியல் குவியலாக வெளியேறும் ரசாயன நுரை, துர்நாற்றம் வீசுவதுடன்,வெள்ளை நிறத்தில் பனி போர்த்தியது போல் காணப்படுகிறது. மேலும் இவை காற்றில் பறந்து அந்த பகுதியில் உள்ள செடிகொடிகள் மீது திட்டு, திட்டாக படர்வதும், அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது விழுவதாலும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

    • கடந்த 4-ந் தேதி ஏற்பட்ட பிரச்சினையில், குமாரை சீனிவாசன் கல்லால் தாக்கினார்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சீனிவாசனை கைது செய்தனர்.

    ஊத்தங்கர

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா நொச்சிப்பட்டி அருகே உள்ள பெரியபூம்பட்டியை சேர்ந்தவர் குமார் (வயது 53). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (60). இவர்களுக்குள் நில பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த 4-ந் தேதி ஏற்பட்ட பிரச்சினையில், குமாரை சீனிவாசன் கல்லால் தாக்கினார்.

    இதில் காயம் அடைந்தகுமார் சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்டார். அது குறித்து அவர் ஊத்தங்கரை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சீனிவாசனை கைது செய்தனர்.

    • மாணவனின் தற்கொலைக்கு பள்ளி தலைமை ஆசிரியர் காரணம் என கவுதமின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
    • ஒழுங்கீனமான முறையில் நடந்து கொண்ட தலைமை ஆசிரியர் எட்வர்ட் ராஜ்குமாரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை அடுத்த அத்திமரத்துபள்ளத்தை சேர்ந்தவர் கவுதம் (வயது 17). இவர் சிகரலப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் அவர் பள்ளி ஆசிரியர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாக அவரது பெற்றோருக்கு புகார் சென்றது.

    இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் எட்வர்ட் ராஜ்குமார் கவுதமின் பெற்றோரை அழைத்து மாணவனுக்கு அறிவுரை கூறி அனுப்பினார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் கவுதம் தற்கொலை செய்து கொண்டார்.

    மாணவரின் தற்கொலைக்கு பள்ளி தலைமை ஆசிரியர் காரணம் என கவுதமின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இதனால் தலைமை ஆசிரியர் எட்வர்ட் ராஜ்குமாருக்கு மருத்துவ விடுப்பு அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர் எட்வர்ட் ராஜ்குமார், பள்ளி ஆசிரியர்களிடம் நான் தான் தலைமை ஆசிரியர். அதை மறந்து விட்டீர்களா என கூறி திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் வகுப்பில் இருந்த மேசை, ஜன்னல் கண்ணாடிகளையும் உடைத்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, பள்ளியில் ஒழுங்கீனமான முறையில் நடந்து கொண்ட தலைமை ஆசிரியர் எட்வர்ட் ராஜ்குமாரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். 

    • அ.தி.மு.க.சார்பில், ஓசூரில் கட்சிக்கு தீவிர, உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
    • முகாமிற்கு, முன்னாள் நகர்மன்ற உறுப்பினருமான பி.ஆர்.வாசுதேவன் தலைமை தாங்கினார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க.சார்பில், ஓசூரில் கட்சிக்கு தீவிர, உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

    ஓசூர் - தேன்கனிக்கோட்டை சாலையில் கூட்டு ரோடு அருகேயுள்ள தனியார் மண்டபத்தில் நடந்த முகாமிற்கு, மாநகர தெற்கு பகுதி செயலாளரும், முன்னாள் நகர்மன்ற உறுப்பினருமான பி.ஆர்.வாசுதேவன் தலைமை தாங்கினார். இதில், மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி கலந்துகொண்டு, கட்சி நிர்வாகிகளிடம் உறுப்பினர் படிவத்தை வழங்கி தொடங்கி வைத்தார். மேலும், கட்சியினருக்கு ஆலோசனைகள் வழங்கி நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்.

    இதில், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், மாவட்ட துணைசெயலாளர் மதன், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் நாராயணன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாநகராட்சி மண்டல குழு தலைவர் ஜெயப்பிரகாஷ், அமைப்பு சாரா ஓட்டுனர் சங்க மாவட்ட செயலாளர் சென்னகிருஷ்ணன் உள்பட பலர் பேசினர். மேலும் முகாமில்,கூட்டுறவு வீட்டு வசதிசங்க தலைவர் நடராஜன், மாவட்ட சிறுபான்மை பிரிவு நிர்வாகி சாச்சு மற்றும் மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர், பகுதி நிர்வாகிகள், ஒன்றிய, மாநகராட்சி கவுன்சிலர்கள், கட்சியினர் கலந்து கொண்டனர்.

    ×