என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • விவசாயி பெரியாசாமியை யானைகள் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    • யானை தாக்கி விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கிருஷ்ணகிரி:

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வனச்சரகத்திற்கு உட்பட்ட பஞ்சப்பள்ளி காட்டுப் பகுதியில் இருந்து 2 காட்டுயானைகள் வெளியேறி, கடந்த 25-ந் தேதி காவேரிப்பட்டிணம் பகுதிக்கு வந்தன. தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித் திரிந்த யானைகளை, வனத்துறையினர் காரியமங்கலம் அருகே உள்ள சஞ்சீவராயன் மலைப்பகுதிக்கு விரட்டினர்.

    இந்த நிலையில், கிருஷ்ணகிரி அணை அருகேயுள்ள போலுகுட்டை பகுதியில் முகாமிட்டிருந்த இரு யானைகளையும் வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

    இதனிடையே நெக்குந்தி வழியாக நேற்று அதிகாலையில் கிருஷ்ணகிரி நகரின் அருகே உள்ள சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆவின் மேம்பாலம் எதிரே உள்ள தேவசமுத்திரம் ஏரிக்கு இரு யானைகள் வந்தது.

    இந்த யானைகள் ஏரியின் நடுப்பகுதிக்கு சென்ற உற்சாக குளியல்போட்டு விளையாடின. மேலும், ஏரியின் நடுவே மின்கம்பம் உள்ளதால், அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    மேலும், வனத்துறையினர் ஏரியில் இருந்து யானைகள் தேசிய நெடுஞ்சாலைக்குள் வராமல் தடுக்க தேவையான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் நேற்றிரவு அந்த 2 காட்டுயானைகள் ஏரியில் இருந்து வெளியேறி கிருஷ்ணகிரி நகரில் லைன்கொள்ளை பகுதிக்குள் புகுந்தது. இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

    அப்போது விவசாயி பெரியாசாமியை யானைகள் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த விவசாயியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து அந்த காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    யானை தாக்கி விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கிருஷ்ணகிரி,மே.6- இந்த பொதுக்கூட்ட ங்களுக்கு சம்பந்தப்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திட வேண்டும்.
    • கூட்டங்கள் சிறப்பாக நடத்துவதற்கு ஏதுவாக அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டும்

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

    இது தொடர்பாக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. தலைவரும், தமிழக முதல் -அமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆணைப்படி, திராவிட மாடல் ஆட்சியின் 2 ஆண்டு கால சாதனைகளை விளக்கி கிருஷ்கிரி மாவட்டத்தில் பொதுக்கூட்டங்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 9-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது.

    அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஊத்தங்கரை தெற்கு ஒன்றியம் கல்லாவி பஸ் நிலையத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் நான் பேசுகிறேன்.

    கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றியம் பெத்ததாளப்பள்ளி பாரத கோவிலில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் குடியாத்தம் குமரனும், மத்தூர் வடக்கு ஒன்றியத்தில் குன்னத்தூரில் மாலை 5.30 மணிக்கு தலைமை கழக பேச்சாளர் கருணாநிதியும், காவேரிப்பட்டணம் கிழக்கு ஒன்றியம் அகரம் கூட்டு ரோட்டில் மாலை 6 மணிககு தலைமை கழக பேச்சாளர் வயலூர் கிருஷ்ணமூர்த்தியும் பேசுகிறார்கள்.

    நாளை மறுநாள் (திங்கட் கிழமை) காவேரிப்பட்டணம் மேற்கு ஒன்றியம் பையூர் பெரியார் சிலை அருகில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் நான் பேசுகிறேன்.

    மத்தூர் தெற்கு ஒன்றியம் சாமல்பட்டடியில் மாலை 5.30 மணிக்கு நடக்கும் கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் சூர்யா வெற்றி கொண்டானும், ஊத்தங்கரை மத்திய ஒன்றியம் மிட்டப்பள்ளியில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் தமிழ் கொண்டான் பேசுகிறார்.

    தொடர்ந்து 9-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பர்கூர் தெற்கு ஒன்றியம் ஜெகதேவியில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் தமிழக துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பேசுகிறார். அன்றைய தினம் போச்சம்பள்ளி பஸ் நிலையத்தில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியும், கிருஷ்ணகிரி நகரம் 5 ரோடு ரவுண்டானா அருகில் நடைபெறும் கூட்டத்தில் நானும், ஊத்தங்கரை வடக்கு ஒன்றியம் மகனூர் பட்டியில் நடக்கும் கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் சுபா சந்திரசேகரும், கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றியம் குருபரப்பள்ளி கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் பிரம்மபுரம் பழனியும், பர்கூர் வடக்கு ஒன்றியம் ஒப்பதவாடி கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் தா.பழூர் இளஞ்செழியனும் பேசுகிறார்கள்.

    இந்த பொதுக்கூட்ட ங்களுக்கு சம்பந்தப்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திட வேண்டும். கூட்டங்கள் சிறப்பாக நடத்துவதற்கு ஏதுவாக அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டும்.

    அதே போல நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்களுக்கு மாநில, மாவட்ட நகர, ஒன்றிய, பேரூர் கழக கிளை நிர்வாகிகள், பி.எல்.ஏ.2 வாக்குச்சாவடி முகவர்கள் உறுதுணையாக இருக்க கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த 3-ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
    • பவனி வந்த தேரின் மீது பக்தர்கள் உப்பு, மிளகு ஆகியவற்றினை தூவி தங்களது நேர்த்திகடனை செலுத்தினார்கள்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வரட்டனப்பள்ளி அருகே புஷ்பகிரி புனித மலர்மலை மாதா திருத்தல தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த 3-ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    இந்த தேர் திருவிழாவின் போது, நாள்தோரும் ஆலயத்தின் பங்கு தந்தையர்களால் ஜெபங்களுடன், சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    இவ்விழாவின் இறுதிநாளில் திருத்தேர் பவணி வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக ஆலயத்தில் தருமபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி பூஜையுடன் புது நன்மை மற்றும் உறுதிபூசூதல் ஆகிய அருட்கொடைகள் சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் வழங்கப்பட்டது.

    பின்னர், புனித மலர்மலை மாதாவின் அலங்கரிக்கப்பட்ட தேர் பவனி நடைபெற்றது. வானவேடிக்கையுடன் தொடங்கிய தேர் பவணியை, மறைவட்ட முதன்மைக்குரு . ஜார்ஜ் புனித நீர் தெளித்து, மந்திரித்து தொடக்கி வைத்தார். பவனி வந்த தேரின் மீது பக்தர்கள் உப்பு, மிளகு ஆகியவற்றினை தூவி தங்களது நேர்த்திகடனை செலுத்தினார்கள்.

    இந்த திருவிழாவில், கிருஷ்ணகிரி, சுண்டம்பட்டி, எலத்தகிரி, கந்திகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான கிருஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.

    • பாதை எது, குழி எது என்று தெரியாமல், 5-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலையில் உள்ள மண் திட்டு மீது மோதி விபத்துக்கு ள்ளானது.
    • சம்மந்த ப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளத்தை மூடவேண்டும்

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டியில் இருந்து போச்சம்பள்ளி செல்லும் சாலையில் உள்ள நேரு நகர் அருகே சாலை ஒரத்தில் கூட்டு குடிநீர் இணைப்பு கொடுப்பதற்கு பள்ளம் தோண்டும் குழாய் உடைப்பு ஏற்பட்டது.

    இந்த குழாய் அடைப்பை சரி செய்ய தோண்டப்பட்ட மண்ணை சாலையில் கொட்டிவிட்டு எந்த அறிவிப்பு பலகையும் வைக்காமல் அலட்சியமாக அப்படியே விட்டு சென்று விட்டனர்.

    இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் பாதை எது, குழி எது என்று தெரியாமல், 5-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலையில் உள்ள மண் திட்டு மீது மோதி விபத்துக்கு ள்ளானது.

    இது குறித்து சம்மந்த ப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளத்தை மூடவேண்டும் என்று வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கை விடுக்கின்றனர்.

    • தற்போது மாவட்டத்தில் 24 மாங்கூழ் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது.
    • சுமார் 2.5 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழ கூழ் உற்பத்தி செய்யப்படுகிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் மாங்கனிகள் விலை நிர்ணயம் குறித்த முத்தரப்பு கூட்டம் நேற்று நடந்தது. முத்தரப்பு கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகவரித்துறை சார்பில் மாங்கனிகளுக்கு விலை நிர்ணயம் குறித்த முத்தரப்பு கூட்டம் நடந்தது. கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார்.

    கூட்டத்திற்கு விவசாயிகள் மாங்காய்களை கொண்டு வந்திருந்தனர். அதனை கலெக்டர் பார்வையிட்டார்.

    பின்னர் விவசாயிகள் பேசியதாவது:-

    இந்த ஆண்டில் மகசூல் பாதிப்பால் விளைச்சல் குறைந்துள்ளது. வருவாய் இழப்பு காரணமாக மா மரங்களை விவசாயிகள் அழித்து வரும் நிலையில் உள்ளூர் மா விவசாயிகளை காக்க மாவட்ட நிர்வாகம், மாங்கூழ் தொழிற்சாலை நிர்வாகத்தினர் முன்வர வேண்டும். மேலும் மாவிற்கு குறைந்தபட்சம் கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை வழங்க வேண்டும் என்று பேசினர்.

    தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:-

    கொள்முதல் விலை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அல்போன்சா, மல்கோவா, இமாம் பசந்த், பங்கனப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு ரக மாங்காய்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் பெங்களூரா, அல்போன்சா ரக மாங்காய்கள் கூழ் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. தற்போது மாவட்டத்தில் 24 மாங்கூழ் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது.

    இதன் மூலம் சுமார் 2.5 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழ கூழ் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு 5 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழங்கள் தேவைப்படுகிறது.

    இந்த ஆண்டில் விவசாயிகளின் நலன்கருதி கிருஷ்ணகிரி மாவட்ட மா விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாம்பழ கூழ் தொழிற்சாலை உரிமையாளர்கள் கொள்முதல் விலையை படிபடியாக உயர்த்தி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் வேளாண்மை இணை இயக்குனர் முகமது அஸ்லாம், தோட்டக்கலை இணை இயக்குனர் பூபதி, வேளாண் விற்பனை மற்றும் வணிகவரித்துறை துணை இயக்குனர் காளிமுத்து, கலெக்டரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி, புள்ளியியல் அலுவலர் குப்புசாமி மற்றும் மா விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான நேர்காணல் நடத்தினர்.
    • நேர்காணலில் தேன்கனிக்கோட்டை பேரூராட்சி மன்ற உறுப்பினர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தேன்கனிக்கோட்டை,

    சேலத்தில் இளைஞர் அணி மாநில செயலாளர் மற்றும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான நேர்காணல் நடத்தினர்.

    இந்நிகழ்ச்சியில் இளைஞர் அணியின் மாநிலத் துணைச் செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.

    மேலும் நேர்காணலில் இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் மற்றும், தேன்கனிக்கோட்டை பேரூராட்சி மன்ற உறுப்பினர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
    • அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்துள்ள மொட்றகை பகுதியை சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் கடந்த 2-ந்தேதி அன்று வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

    இது குறித்து அஞ்செட்டி போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    • கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
    • மனமுடைந்து காணப்பட்ட நந்தினி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகேயுள்ள உழசந்திரம் பகுதியை சேர்ந்தவர் சிவராஜ். இவரது மனவைி நந்தினி (வயது24). இவர்களுக்கு திருமணமாகி 5 வருடம் ஆகியுள்ள நிலையில் 2 பெண் குழந்தைகள் உள்ளன.

    இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று மீண்டும் இருவருக்கும் தகராறு நடந்தது. இதில் மனமுடைந்து காணப்பட்ட நந்தினி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள காளிகுட்டு பகுதியை சேர்ந்தவர் திம்மராஜ். இவரது மனைவி மல்லிகா (32). கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் மல்லிகா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 28-ந்தேதி அன்று சரவணன் தனது பாட்டி வீடான கோனேரிபள்ளிக்கு செல்வதாக கூறி சென்றார்.
    • அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜ். இவரது மகன் சரவணன் (வயது24). இவரது மனைவி அப்சனா. இவர்கள் காதலித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளன.

    இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி அன்று சரவணன் தனது பாட்டி வீடான கோனேரிபள்ளிக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் அங்கு அவர் வரவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து அவரதுமனவைி அப்சனா சூளகிரி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான வாலிபரை தேடி வருகின்றனர்.

    • செந்தாரப்பள்ளி பகுதியில் வந்த போது நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தார்.
    • சிகிச்சை பலனின்றி நேற்று தாரா உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், செம்பரம்முத்தூர் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால். இவரது மனைவி தாரா (வயது42). இவர் கடந்த 3-ந்தேதி அன்று இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது செந்தாரப்பள்ளி பகுதியில் வந்த போது நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று தாரா உயிரிழந்தார். இது குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் கார்த்திகேயன் மீது மோதியது.
    • இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    ஓசூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா சக்கில்நத்தம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (21). இவர் சூளகிரியில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 2-ந் தேதி மாலை அவர் கிருஷ்ணகிரி- ஓசூர் சாலையில் பேரண்டப்ப ள்ளி பக்கமாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் கார்த்திகேயன் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் அட்கோ போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நள்ளிரவு ஒரு மணியவில் மீண்டும் அலுவலகம் வந்து பார்த்தபோது அலுவலகத்தின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
    • அலுவலகத்தின் வெளியே புதிய மின்மாற்றிகள் உடைக்கப்பட்டு சேதமாகி இருந்தது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த ஓசூர் தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக கொல்லப்பள்ளியில் மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த அலுவலகத்தில் கொல்லப்பள்ளி, சின்னாறு, முருகனப்பள்ளி, ேமடுப்பள்ளி, திம்மிடி–நாய்க்கனபள்ளி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சேவை மற்றும் மின்சார துறை சம்பந்தமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மேலும் இந்த அலுவலகத்தில்தான் 20-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் மின் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர்.

    மேலும், இந்த அலுவலகத்தில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தேவையான புதிய மின்மாற்றி மாற்றுவதற்கு உண்டான செம்பி கம்பிகள் உள்பட பல்வேறு மின்சாதன பொருட்கள் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டுள்ளது.

    மின்வாரிய அலுவலகத்தில் அதே பகுதியைச் சேர்ந்த லைன்மேன் முருகன் என்பவர் பணியாற்றி வருகிறார்.

    இவர் நேற்று இரவு அலுவலகத்தை பூட்டிவிட்டு வெளியே சென்றார். சிறிது நேரம் கழித்து நள்ளிரவு ஒரு மணியவில் மீண்டும் அலுவலகம் வந்து பார்த்தபோது அலுவலகத்தின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் அலுவலகத்தின் வெளியே புதிய மின்மாற்றிகள் உடைக்கப்பட்டு சேதமாகி இருந்தது.

    உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது அலுவலகம் முழுவதும் பொருட்கள் சூறையாடப்பட்ட நிலையில் சிதறி கிடந்தன. இதுகுறித்து முருகன் உடனே உதவி செயற்பொறியாளர் பழனி என்பவருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்த அவர் உடனே அலுவலகத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது, புதிய மின்மாற்றிகளில் இருந்து சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள செம்பு கம்பிகள் மற்றும் மின்சாதன பொருட்கள், ஆவணங்கள் ஆகியவைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து உதவி செயற்பொறியாளர் பழனி சூளகிரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி மற்றும் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதிகளில் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில மாதங்களுக்கு சூளகிரியை அடுத்த பேரிகையில் மின்வாரிய அலுவலகத்திலும் இதேபோன்று மர்ம கும்பல் ஒன்று பொருட்களை சூறையாடி கொள்ளையடித்து சென்றது. இதில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் மீண்டும் கொல்லப்பள்ளியில் உள்ள அரசு அலுவலகமான மின்வாரிய அலுவலகத்தை மர்ம கும்பல் கைவரிசை காட்டியுள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும், பீதியும் ஏற்பட்டுள்ளது.

    ×