என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • சில நேரங்களில் யானைகள் மாணவர்களை விரட்டி வந்துள்ளது.
    • மாணவ, மாணவிகளின் நலன் கருதி பஸ் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள பொம்மதாத்தனூர் கெட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் நேற்று மாவட்ட கலெக்டர் சரயுவிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் கிராமத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 4 கி.மீ., தொலைவில் உள்ள பொம்மதாத்தனூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசுப் பள்ளிக்கு சென்று வருகின்றனர். ஆனால் இந்த 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு பஸ் வசதி இல்லை. இதனால் தினமும் அடர்ந்த காட்டின் வழியாக பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்த காட்டில் யானைகள் நடமாட்டம் உள்ளதால், ஒவ்வொரு நாளும் மாணவ, மாணவிகள் உயிரைப் பணயம் வைத்து பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

    சில நேரங்களில் யானைகள் மாணவர்களை விரட்டி வந்துள்ளது. எனவே மாணவ, மாணவிகளின் நலன் கருதி பஸ் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும். மேலும் எங்கள் கிராமத்தில் பள்ளிக்கூடம், மருத்துவமனை, ரேஷன் கடை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லை. எனவே இவற்றையும் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர், உதவி கலெக்டரிடம், இந்த கிராமத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதியையும் நேரில் சென்று உடனே செய்து தர வேண்டும். அருகில் சென்று கொண்டிருக்கும் பஸ்சை இந்த கிராமத்தின் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    • அந்த மினிபேருந்தும் சில நேரங்களில் முறையாக இயக்கப்படு வதில்லை.
    • மினி பேருந்தை பொது மக்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள பெத்த கொள்ளு கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்திற்கு அரசு பஸ்கள் இயக்குவதில்லை. மேலும் தனியார் மினி பேருந்து மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனை அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் அந்த மினிபேருந்தும் சில நேரங்களில் முறையாக இயக்கப்படு வதில்லை. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் அவதி அடைந்தனர்.

    இதையடுத்து இன்று காலை ஓசூர்- பெத்த கொள்ளு என்ற கிராமத்திற்கு சென்ற மினி பேருந்தை பொது மக்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த பகுதிக்கு அரசு பேருந்து இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கோபுர கலசங்களில் ஊற்றுவதற்காக கங்கை, யமுனை, சரஸ்வதி, காவேரி, கோதாவரி, துங்கபத்ரா, மானசரோவர் உள்ளிட்ட 12 நதிகளிலிருந்து புனித நீர் நேற்று கொண்டுவரப்பட்டது.
    • மேலும் ஒரு வேனிலும், நதிகளின் நீர் நிரப்பப்பட்ட கேன்கள் மலைக்கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டன.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் புதிதாக அமைக்கப்பட்டு, நாளை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    இதையொட்டி கோபுர கலசங்களில் ஊற்றுவதற்காக கங்கை, யமுனை, சரஸ்வதி, காவேரி, கோதாவரி, துங்கபத்ரா, மானசரோவர் உள்ளிட்ட 12 நதிகளிலிருந்து புனித நீர் நேற்று கொண்டுவரப்பட்டது.

    இதையடுத்து ஓசூர் ராமநாயக்கன் ஏரி அருகில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில், நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பின்னர் மேளதாளம் முழங்க 100-க்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் புனித நீர் கலசங்களை சுமந்தவாறு ஊர்வலமாக, மலைக்கோவிலுக்கு கொண்டு சென்றனர்.

    மேலும் ஒரு வேனிலும், நதிகளின் நீர் நிரப்பப்பட்ட கேன்கள் மலைக்கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டன. இதில், மாநகராட்சி மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ், மற்றும் இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பழனியம்மாள் (65) உள்பட 10 பேரை வெறிநாய் ஒன்று கடித்து குதறியது.
    • அவர்கள் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள சந்தூர் பகுதியில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன.

    இந்த நிலையில் காக்கங்கரையைச் சேர்ந்த வேலு (வயது40), பழனியம்மாள் (65) உள்ளிட்ட 10 பேரை வெறிநாய் ஒன்று கடித்து குதறியது. இதில் காயம் அடைந்த அவர்கள் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பொதுமக்களை வெறி நாய் கடித்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சாலைகளில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் மற்றும் வெறி நாய்களை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு குறை தீர்க்கும் முகாம் கிருஷ்ணகிரியில் நடைபெற உள்ளது.
    • பெண் குழந்தை பாதுகாப்பு திட்டப் பயனாளிகளுக்கு உரிய திட்ட பணிகளை மேற்கொள்ள சிறப்பு குறை தீர் முகாம் நடத்தப்படும்.

    கிருஷ்ணகிரி, 

    கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு குறை தீர்க்கும் முகாம் கிருஷ்ணகிரியில் நடைபெற உள்ளது.

    இது தொடர்பாக கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் செவ்வாய் கிழமை அன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டப் பயனாளிகளுக்கு உரிய திட்ட பணிகளை மேற்கொள்ள சிறப்பு குறை தீர் முகாம் நடத்தப்படும்.

    முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் விண்ணப்பித்து பல வருடங்கள் கடந்தும் வைப்புத்தொகை ரசீதுகள் கிடைக்கப்பெறாமல் உள்ள பயனாளிகள், 18 வயது பூர்த்தியடைந்தும் முதிர்வுத்தொகை கிடைக்கப்பெறாமல் உள்ள பயனாளிகள் ஆகியோர் உரிய சான்றுகளோடு ஆஜராகி இச்சிறப்பு குறை தீர் முகாமில் கலந்துகொண்டு பயன் பெறலாம்.

    இந்த திட்டத்தில் பயனடைய, இத்திட்டத்தில் பதிவு செய்து நாளது தேதி வரை வைப்புத்தொகை ரசீதுகள் கிடைக்கப்பெறாத பயனாளிகள் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்த ஒப்புகை ரசீதுடன் வடிய இணைய வழி விண்ணப்பத்துடன் இச்சிறப்பு முகாமில் கலந்துகொள்ள வேண்டும். இத்திட்டத்தில் பதிவு செய்து வைப்புத்தொகை ரசீது பெற்று, 18 வயது பூர்த்தியடைந்து முதிர்வுத்தொகை கிடைக்கப்பெறாத பயனாளிகள், வைப்புத்தொகை ரசீது நகல், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், பிறப்பு சான்றிதழ், பயனாளியின் நடப்பில் உள்ள வங்கிக் கணக்கு முகப்பு புத்தக நகல், பயனாளியின் (தாய் மற்றும் மகள்) வண்ணப் புகைப்படம் 2 ஆகிய சான்றுகளோடு இச்சிறப்பு முகாமில் கலந்து கொள்ள வேண்டும்.

    மேலும், இந்த திட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண்.21, மாவட்ட கலெக்டர் அலுவலகம், கிருஷ்ணகிரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்திராபள்ளி பகுதி தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே இந்திராபள்ளி பகுதி தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 2யூனிட் செம்மண் அனுமதியின்றி கடத்தி கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. அப்போது வண்டியை ஓட்டி வந்த டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

    இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் செம்மண் கடத்திய டிப்பர் லாரியை பறிமுதல் செய்து அதேபகுதியைச் சேர்ந்த டிரைவர் ரமேஷ் (வயது21), வண்டி உரிமையாளர் சோமனஅள்ளியைச் சேர்ந்த தர்மன் ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள், குடிநீர், தெருவிளக்கு குழந்தைகளின் கல்வி திறன் குறித்து கேட்டறிந்தார்.
    • அங்கு வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகள் மிகவும் பழுதடைந்துள்ளது.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி தாலுகா நாட்றாம்பாளையம் ஊராட்சி கேரட்டி மற்றும் தொட்டமஞ்சி ஊராட்சி கெம்பக்கரை கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்கள் மற்றும் இருளர் இன மக்கள் குடியிருப்புகளை கலெக்டர் சரயு நேரில் பார்வையிட்டார்.

    நாட்றாம்பாளையம் ஊராட்சி கேரட்டி இருளர் இன மக்கள் குடியிருப்புகளை நேரில் பார்வையிட்டு அங்கு வசிக்கும் மக்களிடம் அடிப்படை வசதிகளான குடிநீர், தெருவிளக்கு குழந்தைகளின் கல்வி மற்றும் நியாயவிலைகடையில் உணவு பொருட்கள் வழங்கல் மற்றும் வாழ்வாதரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

    தொடர்ந்து இங்குள்ள குடியிருப்பு வீடுகள் மிகவும் பழுதடைந்துவுள்ள நிலையில் மழை காலங்களில் மிகவும் சிரமமாக உள்ளது என இருளர் இன மக்கள் தெரிவித்தனர். உடனடியாக வீடுகள் பழுதுபார்ப்பு மற்றும் புதிய குடியிருப்புகள் கட்ட அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டு விரைவில் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

    மேலும் இங்குள்ள குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்பவேண்டும். குடியிருப்பு பகுதிகளை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு போதிய மருத்துவ வசதி, மற்றும் தடுப்பூசி உரிய காலத்தில் செலுத்திக்கொள்ள வேண்டும். முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை இல்லாதவர்கள் அஞ்செட்டியில் நடைபெறும் பன்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமிற்கு சென்று உடனடியாக விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து மாணவ, மாணவிகளின் வாசிப்பு திறன் மற்றும் கல்வி திறனை கலெக்டர் கேட்டறிந்தார். மேலும் அஞ்செட்டியில் நடைபெற்ற பன்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொள்ள சிறப்பு பஸ்களில் சென்று மருத்துவ சிகிச்சை பெற்றவர்களிடம் மருத்துவ வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    தொடர்ந்து கலெக்டர் தொட்டமஞ்சி ஊராட்சி கெம்பக்கரை கிராமத்தில் வசிக்கும் 37 மலைவாழ் மக்கள் குடியிருப்புகளை நேரில் பார்வையிட்டு அங்கு வசிக்கும் பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள், குடிநீர், தெருவிளக்கு குழந்தைகளின் கல்வி திறன் குறித்து கேட்டறிந்தார். அங்கு வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகள் மிகவும் பழுதடைந்துள்ளது. தங்களுக்கு புதிய வீடுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

    புதிய வீடுகள் வழங்குவதற்கு போதிய நடவடிக்கை எடுக்கப்படும். அதேப்போல குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். குழந்தை திருமணத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். குடியிருப்புகளை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின் போது ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, அஞ்செட்டி தாசில்தார் அனிதா, துணை தாசில்தார்கள் பன்னீர்செல்வம், கிருஷ்ணமூர்த்தி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

    • நிலக்கடலையில் கூடுதல் மகசூல் பெற மானிய விலையில் ஜிப்சம் பெற்று கொள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
    • ஏக்கருக்கு 160 கிலோ வீதம் செடியின் வேர் அருகில் ஜிப்சம் இட்டு மண் அணைக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    நிலக்கடலையில் கூடுதல் மகசூல் பெற மானிய விலையில் ஜிப்சம் பெற்று இடுவீர் என கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஷ்குமார் அறிவுரை வழங்கியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி வட்டாரத்தில் நிலக்கடலை நடப்பு ஆண்டில் சுமார் 2700 ஏக்கர் வரை பயிரிட திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது மழை பரவலாக பெறப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி நிலக்கடலை விதைப்பு மேற்கொள்ள விவசாயிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். நிலக்கடலையில் கூடுதல் மகசூல் பெற சில எளிய தொழில்நுட்பங்களான, நிலக்கடலை விதைப்பதற்கு முன்னர் அடியுரமாக ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 35 கிலோ டி.ஏ.பி. 40 கிலோ பொட்டாஷ், என்ற வீதத்தில் கடைசி உழவிற்கு முன்னதாக இட வேண்டும். உடன் ஏக்கருக்கு 160 கிலோ ஜிப்சம் அடியுரமாக கடைசி உழவின் பின் விதைப்பதற்கு முன் இட வேண்டும்.

    அவ்வாறு விதைப்பின் போது ஜிப்சம் இட இயலவில்லை எனில், மண்ணில் ஈருப்பதம் இருக்கும் போது, மானாவரி நிலக்கடலை சாகுபடியில் பயிர் விதைப்பு செய்த நாளில் இருந்து 40 முதல் 75 நாட்களுக்குள்ளும், இறவை நிலக்கடலைக்கு 40 முதல் 45 நாட்களுக்குள்ளும், ஏக்கருக்கு 160 கிலோ வீதம் செடியின் வேர் அருகில் ஜிப்சம் இட்டு மண் அணைக்க வேண்டும். இத்துடன் ஏக்கருக்கு 4 கிலோ போராக்ஸ் கலநது இட பயிரில் சீரான வளர்ச்சி காணப்படும்.

    மேலும், நிலக்கடலை பயிருக்கு ஏக்கருக்கு 5 கிலோ நுண்ணூட்ட உரக்கவையை 3 வாணில மணலுடன் கலந்து மேலுரமாக தெளிப்பதால் பயிருக்கு தேவையான அனைத்து நுண்ணூட்ட சத்துக்களும் குறைபாடின்றி கிடைப்பதால் பயிர் செழித்து வளரும். கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஜிப்சம், நுண்ணூட்ட கலவை ஜி.எஸ்.டி நீங்கலாக 50 சதவீத மானியத்தில் கிடைக்கும். அனைவரும் வாங்கி நிலக்கடலைக்கு இட்டு பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    நிலக்கடலைக்கு ஜிப்சம் இட வேண்டியதின் அவசியம் குறித்து வேளாண்மை அலுவலர் பிரியா, விவசாயிகளுக்கு தெரிவித்ததாவது: நிலக்கடலை பயிரின் ஒரு சிறப்பம்சம் என்னவெனில் "வெளியில் பூ பூத்து மண்ணுக்குள் காய்க்கும்" பயிர் ஆகும். நிலக்கடலையின் பூ கருவுற்ற பின்னர், அதன் ஊசியானது நிலத்தில் இறங்கி காயாக மாறும். இந்த சமயத்தில் ஜிப்சம் இடுவதால் மண்ணின் கடினத்தன்மை நீங்கி, இலகு தன்மை அடைவதுடன் எளிதி கருவுற்ற பூவின் ஊசி அரும்பு முனை உடையாமல் மண்ணுக்குள் இறங்கி அனைத்து பூக்களும் காய்களாக மாறி அதிக மகசூல் பெற வழி செய்கின்றது. ஒற்றை காய்கள் இல்லாமல் இரு விதை காய்களாக உருவாகுவதற்கு ஜிப்சம் உறுதுணை செய்வதால் ஏக்கருக்கு 20 சதவீதம் வரை அதிக மகசூல் பெற இயலும். ஜிப்சத்தில் உள்ள கால்சியம் சத்து நல்ல முதிர்ச்சியுடன் கூடிய காய்கள் உருவாகவும், பொட்டு திடமாக உருவாகவும் வழி செய்வதால் நல்ல தரமான மணிகள் உருவாகவும் உதவுகின்றது. சல்பர் சத்து அதிக எண்ணெய்ச் சத்துடன் கூடிய நிலக்கடலை உருவாகவும் வழி செய்வதால் நல்ல தரமான மணிகள் உருவாவதுடன் பூச்சி நோயிலிருந்து பயிரைக் காப்பாற்றுகின்றது. ஜிப்சம் மண்ணை இலகுவாக்கி பொலபொலப்பு தன்மையுடன் வைத்து இருப்பதால், மழை நீரை சேமித்து வைக்கின்றது. மேலும், அறுவடை சமயத்தில் காய்கள் அறுபடாமல் முழுமையாக கிடைக்க வழி ஏற்படுகின்றது. எனவே, விவசாயிகள் சிறப்பான மகசூல் பெற உதவி செய்கின்றது. எனவே, இந்த பருவத்தையும், ஈரப்பதத்தையும் உபயோகித்து தொழில்நுட்பங்களை தவறாது பயன்படுத்தி நிலக்கடலையில் கூடுதல் மகசூல் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிங்காரப்பேட்டை பகுதியில் போலீசாருக்கு பணம் வைத்து சூதாடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • பணம் வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த சோமசுந்தரம் (34), கரிய பெருமாள்வலசை ஏழுமலை (36) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை பகுதியில் போலீசாருக்கு பணம் வைத்து சூதாடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நடுப்பட்டி மாரியம்மன் கோவில் அருகில் பணம் வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த சோமசுந்தரம் (34), கரிய பெருமாள்வலசை ஏழுமலை (36) ஆகிய 2 பேரை கைது செய்தனர். 

    • ஏரியில் புனித நீராடி, தீர்த்த குடங்களுடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
    • சேலத்து மாரியம்மன் ஆலயத்தில் மங்கள இசையுடன் விநாயகர் வழிபாடு, நவக்கிரக ஹோமம் நடைபெற்றது.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை நேதாஜி சாலையில் உள்ள ஸ்ரீ சேலத்து மாரியம்மன் கோவில் மற்றும் ஸ்ரீ எல்லம்மா தேவி கோவில் ராஜகோபுரம் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    விழாவையொட்டி மகாகும்பாபிஷேக பிரதிஷ்டை விழா கடந்த 23ம் தேதி துவங்கியது தொடர்ந்து கோயிலில் தினம்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    கடந்த வெள்ளிக்கிழமை மேள தாளங்கள் முழங்க நகரின் முக்கிய சாலைகளின் வழியாக பக்தர்கள் ஆடி, பாடி ஊர்வலமாக சென்று தேவராஜன் ஏரியில் புனித நீராடி, தீர்த்த குடங்களுடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    இதையடுத்து சேலத்து மாரியம்மன் ஆலயத்தில் மங்கள இசையுடன் விநாயகர் வழிபாடு, நவக்கிரக ஹோமம் நடைபெற்றது. மாலை விநாயகர் வழிபாடு நடைபெற்றது.

    தொடர்ந்து கணபதி ஹோமம் நவக்கிரஹ யாகபூஜை நடைபெற்றது. மதியம் அஷ்டபந்தனம் நடைபெற்றது. இரவு மகா மாரியம்மன் விமான கலசம் ஸ்தாபிதம் செய்தல் நிகழ்ச்சி நடந்தது.

    அதனை தொடர்ந்து மாரியம்மன் சிலை பீடத்தில் நிலை நிறுத்தல், எந்திர ஸ்தாபனம் அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும், இரவு 3-ம் கால யாக பூஜையும் நடந்தது.

    நேற்று காலை யாகசாலைபூஜையும், தொடர்ந்து யாத்ரா தானம் நடந்தது. இதையடுத்து புனித தீர்த்த கலசங்கள் யாக சாலையில் இருந்து புறப்பாடு நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து மாரியம்மன் எல்லம்மா தேவி ஆகிய தெய்வங்களின் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    இதையடுத்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்ன தானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் குழுவினர் செய்திருந்திருந்தனர்.

    • கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வாரச்சந்தை ஞாயிற்றுகிழமை தோறும் கூடுவது வழக்கம்.
    • வெள்ளாடு மற்றும் செம்மறி ஆட்டுக் கிடாய்கள் வரத்து அதிகமாக இருந்தது.

    மத்தூர்,

    பக்ரீத் பண்டிகையொட்டி போச்சம்பள்ளி வாரசந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஜோராக நடைபெற்றது. அந்த ஆடுகளை வாங்குவதற்காக போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் வியாபாரிகள் குவிந்ததால் வாரசந்தை களை கட்டியது.

    வாரசந்தை

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வாரச்சந்தை ஞாயிற்றுகிழமை தோறும் கூடுவது வழக்கம். இச்சந்தையில் குண்டூசி முதல் தங்கம் வரை அனைத்தும் விற்கப்படுவதால், சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொது மக்கள் வாரச்சந்தைக்கு வந்து ஒரு வாரத்திற்கு தேவையன பொருட்களை வாங்கி செல்வது வழக்கம்.

    இந்நிலையில் வருகிற 29-ந் தேதி அன்று பக்ரீத் பண்டிகையையொட்டி திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆர்வத்துடன் ஆடுகளை வாங்கி சென்றனர். இதன் காரணமாக ரூ. 1 கோடி வரை ஆடுகள் வியாபாரம் நடந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கிராமங்களில் பண்டிகைகளை எதிர்பார்த்து விவசாயிகள் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். பண்டிகை காலங்களில் விற்பனை செய்யும்போது சராசரி விலையை விட சற்று கூடுதல் விலை விற்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி கொண்டனர்.

    வெள்ளாடு மற்றும் செம்மறி ஆட்டுக் கிடாய்கள் வரத்து அதிகமாக இருந்தது. பொட்டு, மயிலை, நாடு, செம்மறி என ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிடாய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. 15 கிலோ எடை கொண்ட ஆடுகள், ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனையாகின. சுமார் ரூ.1 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • புனித ஆரோக்கிய அன்னை பாரம்பரிய ஆலயத்தில் நூற்றாண்டு தொடக்க விழா நேற்று கொண்டாடப்பட்டது.
    • மத்திகிரியில் நூற்றாண்டு விழா காணும் பாரம்பரிய ஆலயம் புதுப்பிக்கப்பட்டு நினைவு சின்னமாக பாதுகாக்கப்பட வேண்டும்.

    ஓசூர்,

    ஓசூர் அருகே மத்திகிரியில் 1924-ஆம் ஆண்டு கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க புனித ஆரோக்கிய அன்னை பாரம்பரிய ஆலயத்தில் நூற்றாண்டு தொடக்க விழா நேற்று கொண்டாடப்பட்டது.

    இந்த விழாவிற்கு, தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமை தாங்கி, ஆடம்பர திருப்பலி மற்றும் சிறப்பு மறையுரையுடன் விழாவை தொடங்கி வைத்தார்.

    தருமபுரி மறைமாவட்டத்தில் உள்ள மத்திகிரி குதிரைப்பாளையத்தில் 1924-ம் ஆண்டு கட்டப்பட்டுள்ள புனித ஆரோக்கிய அன்னை பாரம்பரிய ஆலயம் நூற்றாண்டுகளை கடந்தும், இப்பகுதி மக்களிடையே சிறப்புமிக்க வரலாற்று நினைவு சின்னமாக திகழ்கிறது.

    பல்வேறு வரலாற்று சிறப்புகளை கொண்டுள்ள மத்திகிரி குதிரைப்பளையத்தில் உள்ள பாரம்பரிய ஆலயத்தின் நூற்றாண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமை தாங்கி, சிறப்பு ஆடம்பர திருப்பலி மற்றும் சிறப்பு மறையுரை நிகழ்த்தி,விழாவை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து அவர் பேசும் போது, மத்திகிரியில் நூற்றாண்டு விழா காணும் பாரம்பரிய ஆலயம் புதுப்பிக்கப்பட்டு நினைவு சின்னமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

    மேலும் இந்த விழாவில், மத்திகிரி ஆலய பங்கு தந்தை கிறிஸ்டோபர், தர்மபுரி மறை மாவட்ட ஓசூர் வட்டார தலைமை குரு பெரியநாயகம், அருட்தந்தை ராயப்பர், அருட்சகோதரிகள் மற்றும் நூற்றுக்கணக்கான பங்கு மக்கள் பங்கேற்றனர்.

    ×