என் மலர்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியம் காங்கேயனூர் கிராமத்தில் வசிக்கும் 17 வயது நிரம்பிய சிறுமிக்கும், திருக்கோவிலூர் வட்டத்திலுள்ள கூவனூர் கிராமத்தில் வசிக்கும் சித்திரவேல் (வயது 26). என்பவருக்கும் திருக்கோவிலூர் வட்டம் கூவனூர் கிராமத்தில் உள்ள மணமகன் வீட்டில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீதருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்படி அதிகாரிகள் விரைந்து சென்று குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். மேலும் மாவட்ட சமூக நல அலுவலர் மூலம் சிறுமியின் பெற்றோருக்கு ஆலோசனை வழங்கினர். தொடர்ந்து சிறுமியை விழுப்புரத்தில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இது குறித்து கலெக்டர் கூறுகையில், இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான திருமணங்கள் உள்ளிட்ட பாதிப்புகள் ஏதேனும் இருப்பின் 1098 என்ற சைல்டு லைன் மூலமாகவும், பெண்களின் பாதுகாப்பு தொடர்பான 181 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவும் தெரிவிக்கலாம்.
மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தை திருமணம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.
திருக்கோவிலூர் நகர மன்ற தலைவராக விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் டி.என். முருகன் பதவி வகித்து வருகிறார்.
இவரின் செயல்பாடுகள் பற்றியும், நகராட்சியின் கவுன்சிலர்கள் செயல்பாடுகள் குறித்தும் திருக்கோவிலூர் சந்தப்பேட்டையை சேர்ந்த டேவிட் குமார் (வயது 49) என்பவர் அவரது முகநூலில் அவதூறாக பேசி இருந்தார். இதனால் டேவிட் குமாரிடம் நகர்மன்ற தலைவர் டி.என்.முருகன் நேரில் சென்று ஏன் தவறான தகவலை முகநூலில் பதிவு செய்கிறாய் என கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த டேவிட் குமார் நகராட்சி தலைவர் டி.என்.முருகனை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த தகவல் திருக்கோவிலூரில் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் நகர தி.மு.க. பிரமுகர்கள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரும் திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்திலும் பின்னர் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் புகார் செய்தனர். அதனைத் தொடர்ந்து திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி உத்தரவின்பேரில் திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோர் தி.மு.க. நகராட்சித் தலைவர் டி.என்.முருகனுக்கு கொலை மிரட்டல் விடுத்த டேவிட் குமார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இதேபோல் டேவிட்குமார் அ.தி.மு.க கவுன்சிலர்கள் குறித்து அவதூறு பரப்பியதால் திருக்கோவிலூர் நகர்மன்ற அ.தி.மு.க கவுன்சிலர்கள் மற்றும் நகர அ.தி.மு.க. நிர்வாகிகள் பலரும் நகர அ.தி.மு.க. செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு டேவிட்குமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். புகார் மனுவை பெற்றுக்கொண்ட திருக்கோவிலூர் போலீசார் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
அப்போது திருக்கோவிலூர் நகர்மன்ற அ.தி.மு.க. உறுப்பினர்கள் சி.ஆர். சம்பத், ஏ.வி.எம்.ரகு என்கிற முகேஷ், நகர அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆதம்ஷபி, வக்கீல் அசோக் மேத்தா, சிவசங்கரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். ஒரே சமயத்தில் திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.கவினர் குவிந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(28), திருக்கோவிலூரைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீ(25), இருவரும் 4 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களாக பிரிந்து வாழ்கின்றனர்.
மணிகண்டன், ஜெயஸ்ரீக்கு கடனாக 30 ஆயிரம் கொடுத்திருந்தார். அதில், 20 ஆயிரம் ரூபாயை ஜெயஸ்ரீ கொடுத்த நிலையில், மீதமுள்ள 10 ஆயிரம் ரூபாயை மணிகண்டன் போனில் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனையறிந்த ஜெயஸ்ரீயின் ஆண் நண்பரான டி.அத்திப்பாக்கத்தைச் சேர்ந்த சவரிமுத்து மகன் ரெமஷியஸ் (28) மொபைல் போன் மூலம் மணிகண்டனிடம் தட்டிக்கேட்டதால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ரெமஷியஸ் தனது நண்பர்கள் சந்தைப்பேட்டை கண்ணன் மகன் வினித் விஜய்(27), டி.அத்திப்பாக்கம் ஜோசப் கென்னடி(28) ஆகியோருடன் சென்று, மணிகண்டனை இரும்பு ராடு மற்றும் சுத்தியால் தாக்கினர்.
மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, ரெமஷியஸ், ஜோசப் கென்னடி ஆகியோரை கைது செய்தனர். வினித் விஜயை தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் சுவாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் 18 நாள் சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
தினந்தோறும் மகாபாரத சொற்பொழிவுகளும், சாமி வீதிஉலா நிகழ்ச்சிகளும் நடந்தது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சாமி திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலம், வெளி நாடுகளில் இருந்தும் வந்த ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கோவில் பூசாரியிடம் தாலி கட்டிக்கொண்டனர்.
பின்னர் கூத்தாண்டவருக்கு தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் வழிபட்டனர். கூத்தாண்டவரின் பெருமைகளை கூறி கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இன்று காலை கூத்தாண்டவர் கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான திருநங்கைகளும், பொதுமக்களும் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் இழுத்து சென்றனர்.
தேர் அனைத்து வீதிகளிலும் ஊர்வலமாக சென்று தெய்வநாயக செட்டியார் பந்தலடியை அடைந்தது. நேற்று தாலிகட்டிக்கொண்ட திருநங்கைகள் இந்து முறை சாசனபடி கணவர் இறந்துவிட்டால் ஒரு பெண்ணுக்கு என்னென்ன சடங்குகள் செய்வார்களோ அதன்படி செய்து தங்களது நெற்றியில் உள்ள குங்குமத்தை அழித்து, வளையல்களை உடைத்து கும்மியடித்து அழுதனர்.
பின்னர் அருகில் உள்ள கிணற்றில் நீராடிவிட்டு வெள்ளை நிற புடவை உடுத்தி திருநங்கைகள் அவரவர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இறந்துபோன கூத்தாண்டவர் சாமியை காளிகோவிலுக்கு தூக்கிக்சென்று படையல்போட்டு, கிடாவெட்டி வருகிற 22-ந் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
தேரோட்டத்தையொட்டி விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாண்டியன் உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமையில் உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. மகேஷ் மேற்பார்வையில் சுமார் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சியில் கோழி இறைச்சி கடை கழிவுகளை முறையாக கையாளுதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் சுப்ராயலு தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் குமரன், துப்புரவு ஆய்வாளர் உமாசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி துணை தலைவர் ஷமீம்பானு அப்துல்ரசாக் வரவேற்றார்.
கூட்டத்தில் நகராட்சி சேர்மன் பேசுகையில், கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் இயங்கும் சுமார் 50க்கும் மேற்பட்ட கோழி இறைச்சி கடைகளில் கழிவுகளை சுகாதாரமற்ற முறையில் ஆங்காங்கே கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே கோழி கழிவுகளை தனியாக கொட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளளது. அந்த இடத்தில் மட்டுமே கோழி கழிவுகளை கொட்ட வேண்டும்.
மேலும் தினந்தோறும் சேகரித்து வைத்துள்ள கோழி இறைச்சி கழிவுகளை மாலை 4 மணி முதல் 5 மணிக்குள் ஒவ்வொரு கடைகளிலும் நேரடியாக மினி டெம்போ மூலம் எடுத்து செல்ல குறைந்த வாடகை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அனைத்து கோழி கடை உரிமையாளர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதனையும் மீறி கழிவுகளை சுகாதாரமற்ற முறையில் கொட்டுவதை கண்காணித்து கண்டுபிடித்தால் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு நகராட்சி நிர்வாகத்தின் மூலம் ரூ.50 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும். மேலும் கோழி இறைச்சி கடை நடத்துவதற்கு தடை விதிக்கப்படும் என்றார். கூட்டத்தில் கவுன்சிலர்கள், கோழி இறைச்சி கடை உரிமையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே அசகளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் அண்ணாநகர் பஸ் நிறுத்தத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடம் விரைந்து வந்த கள்ளக்குறிச்சி தாசில்தார் பிரபாகரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ், வருவாய் ஆய்வாளர் பாலு ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
மயானத்திற்கு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும், தண்ணீர் வரி ரூ.360 செலுத்தினால் மட்டுமே 100 நாள் வேலைக்கான அட்டை வழங்கப்படும் என பொதுமக்களை நிர்பந்தம் செய்யக்கூடாது, அண்ணா நகர் பகுதிக்கு பகுதிநேர ரேஷன் கடை அமைத்து தர வேண்டும், தற்போது வழங்கும் குடிநீர் உப்பு நீராக உள்ளது எனவே ஏரிக்கரை அருகில் உள்ள கிணற்றில் இருந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சாலைகள் அமைத்து தரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.
கோரிக்கைகளை கேட்டறிந்த அதிகாரிகள் எந்த நிபந்தனையும் இல்லாமல் 100 நாள் வேலை திட்ட அட்டை அனைவருக்கும் 2 நாட்களில் வழங்கப்படும் என உறுதி அளித்தனர். மேலும் தங்களின் கோரிக்கைள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தனர்.
இதனை ஏற்று அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். அப்போது கிராம நிர்வாக அலுவலர் பழனிவேல், கிராம வார்டு உறுப்பினர் பெரியம்மாள் பெரியசாமி ஆகியோர் உடன் இருந்தனர். அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க வரஞ்சரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை பெருவிழா வருடந்தோறும் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
கடந்த 2 ஆண்டு காலமாக கொரோனா தொற்று பரவல் காரணமாக கூத்தாண்டவர் கோவில் திருவிழாவுக்கு தடைவிதிக்கப்பட்டது. தற்போது கொரோனா குறைந்து உள்ளதால் சித்திரை திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா கடந்த 5-ந் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினந்தோறும் மகாபாரத சொற்பொழிவுகள், சாமி வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில், சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சாமி திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி இன்று (19-ந் தேதி) மாலை கூத்தாண்டவர் கோவிலில் நடைபெறுகிறது.
அப்போது தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் நூற்றுக்கணக்கான திருநங்கைகள் கோவில் பூசாரியிடம் தாலி கட்டிக்கொள்வார்கள்.
இதனை தொடர்ந்து கோவில் அருகில் மலை போல் கற்பூரம் ஏற்றி விடிய விடிய கும்மி அடித்து அரவாணின் பெருமைகளை கூறி பாட்டுப்பாடி மகிழ்வார்கள். நாளை (20-ந் தேதி) காலை சித்திரை தேரோட்டமும், இதனை தொடர்ந்து பந்தலடியில் அரவாண் களப்பலிக்கு பிறகு திருநங்கைகள் கோயில் பூசாரியிடம் கட்டிய தாலியை அறுத்து வெள்ளை புடவை உடுத்திக்கொண்டு சோகத்துடன் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.
21-ந் தேதி விடையாத்தியும், 22-ந் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் 18 நாள் சித்திரை பெருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், கிராம பொதுமக்கள், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். விழாவையொட்டி ஏராளமான திருநங்கைகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே தியாகை ஊராட்சிக்கு உட்பட்ட சிறுவல் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகே மின்மாற்றி அமைந்துள்ளது. இந்த மின்மாற்றியில் இருந்து சிறுவல் கிராமத்தில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதே பகுதியில் உள்ள சுமார் 25 விவசாய மின் மோட்டார்களுக்கும் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி இப்பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதில் இந்த மின்மாற்றி பழுதடைந்தது. தகவலறிந்த மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக விரைந்து வந்து பழுதடைந்த மின்மாற்றியில் இருந்து செல்லும் இணைப்பை துண்டித்து விட்டு, தியாகை பகுதியிலுள்ள மின்மாற்றியில் இருந்து சிறுவல் கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு மட்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது.
இவ்வாறு தியாகை பகுதியிலுள்ள மின்மாற்றியில் இருந்து கூடுதலாக மின்னிணைப்பு வழங்கப்பட்டதால் சிறுவல் பகுதியில் வீடுகளில் குறைந்த அளவு மின்சாரம் வருவதாகவும், இதனால் வீடுகளில் பயன்படுத்தப்படும் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்டவைகள் அவ்வப்போது பழுதடைவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் சிறுவல் பகுதியில் உள்ள மின்மோட்டார்களுக்கு மின் இணைப்பு வழங்காததால் விவசாயிகள் நெல், கரும்பு போன்ற பயிர்களுக்கு மோட்டார் மூலம் நீர் இறைக்க முடியாமல் அவதிப்படுவதாக கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட தியாகதுருகம் மின்சார வாரிய அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து பழுதடைந்த மின் மாற்றியை கழற்றி சரி செய்து உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






