என் மலர்
காஞ்சிபுரம்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பெரும் அளவில் தங்கம் கடத்தி கொண்டு வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து நேற்று அதிகாலை குவைத்தில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தது. இதில் ஆந்திராவைச் சேர்ந்த ராஜம்மாள் (வயது 46) என்பவர் வந்திருந்தார். இவர் மீது சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள் அவரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அவரிடம் இருந்த சூட்கேசில் எதுவும் இல்லை. இதையடுத்து தனி அறைக்கு அழைத்துச்சென்ற பெண் அதிகாரிகள் அவரை சோதனை செய்தனர். அப்போது உடலில் தங்கக்கட்டிகளை மறைத்து வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர்.
அவரிடம் இருந்து ரூ.48 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 600 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ராஜம்மாளை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.
இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே படப்பை மணிமங்கலம் சாலையில் தனியார் மீன் பண்ணை ஒன்று உள்ளது. இதன் அருகில் உள்ள குடோனில் மீன்கள் மற்றும் நாய்களுக்கு வழங்கப்படும் உணவுகள் மொத்தமாக வைக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் நேற்று காலை குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் மீன் மற்றும் நாய்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் வைக்கப்பட்டு இருந்த அட்டை பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 4 மணி நேரம் போராடி குடோனில் எரிந்த தீயை அணைத்தனர். ஆனாலும் தீ விபத்தில் அங்கு வைக்கப்பட்டு இருந்த உணவு பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு நகர விஜய் மக்கள் இயக்க இளைஞரணி தலைவர் பூக்கடை ஜின் விடுத்துள்ள அறிக்கையில், காஞ்சீபுரம் மாவட்டத்தில் விஜய் நடித்த தெறி படம் ஏராளமான தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படவில்லை.
இது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த நிலையில் தற்போது காஞ்சீபுரம் மாவட்டத்தில் தெறி படத்தின் திருட்டு வி.சி.டி.க்கள் வெளியாகி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜோசப்பிடம் புகார் கொடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
உத்திரமேரூர் தொகுதிகுட்பட்ட பகுதியில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிரசாரத்திற்காக பிரம்மாண்டமான மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் மேடை அருகே ஹெலிபேட் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. பிரசாரம் மாலை நடைபெறுவதால் ஒளிதரும் பிரம்மாண்டமான மின் விளக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. லட்சக்கணக்கான மக்கள் கூடும் நிலையில் பொது மக்களை சீராக வரிசையில் கூட்ட அரங்கிற்குள் அனுமதிக்க பல்வேறு இடங்களில் கட்டைகளால் தடுப்பு அமைக்கப்பட்டு வருகின்றன.
இப்பணிகளை காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளருமான வாலாஜாபாத் பா.கணேசன் மற்றும் தேர்தல் பணிக்குழுவினர் செய்து வருகின்றனர்.
42 ஏக்கர் பரப்பளவில் உள்ள பிரம்மாண்ட மைதானத்தில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் காஞ்சீபுரம், திருவள்ளுர், திருவண்ணாமலை மாவட்டத்தில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் 18 பேரை முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தி வாக்குகள் சேகரிக்கிறார்.
முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் வருகையை யொட்டி காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு பணிகளை கவனித்து வருகிறார்கள்.
திருக்கழுக்குன்றத்தை அடுத்த பரமசிவம்நகர் நேருதெருவில் வசிக்கும் கார்த்திக் என்பவரது குடிசை வீடு நேற்று மாலை தீப்பற்றி எரிந்தது. பலத்த காற்று காரணமாக அருகில் உள்ள பூபாலன், சுவாமிநாதன், வெங்கடேசன், சொக்கலிங்கம், அன்பு ஆகியோரின் குடிசை வீடுகளுக்கும் தீ பரவியது. தீயணைப்பு படையினர் சென்று போராடி தீயை மேலும் பரவ விடாமல் தடுத்து அணைத்தனர்.
தீப்பற்றிய 6 வீடுகளில் இருந்த ஆவணங்கள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமானது. தகவல் கிடைத்ததும் தாசில்தார் சீதா, வருவாய் ஆய்வாளர் சுமதி ஆகியோர் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண பொருட்கள் வழங்கினர். தீ விபத்து குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவான்மியூர் அருகே உள்ள கொட்டிவாக்கம் களத்துமேடு 4–வது தெருவைச் சேர்ந்தவர் சைமன் (50). ஆட்டோ டிரைவர். நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் சைமன் ஆட்டோ ஓட்டி வந்தார்.
கொட்டிவாக்கம் பெட்ரோல் பங்க் அருகே திரும்பும்போது மாநகர குப்பை லாரி ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சைமன் அதே இடத்தில் நசுங்கி பலியானார்.
லாரி டிரைவர் மற்றும் கிளினர் தப்பி ஓடிவிட்டனர். இந்த விபத்து குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்போரூர்:
காயாரை அடுத்த பனங்காட்டுபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார் பா.ம.க ஒன்றிய தலைவர். இவருடைய நண்பர் கண்ணதாசன். இவருக்கும், மாம்பாக்கம் ஜோதி நகரைச்சேர்ந்த சந்துரு என்ற சங்கருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது.
இதுகுறித்து இருவரும் தாழம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதில் கண்ணதாசனுக்கு ஆதரவாக அருண்குமார் சமாதானம் பேசியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சங்கர், மற்றும் அவரது மகன் ஜெகதீப் ஆகியோர் நேற்று இரவு கொளத்தூர் பஸ் நிலையம் அருகே அருண்குமாரை வழிமறித்து தாக்கினர்.
இதில் பலத்த காயமடைந்த அருண்குமார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்த காயார் சப்–இன்ஸ்பெக்டர் சித்ரா தேவி வழக்குபதிவு செய்து சங்கர், அவரது மகன் ஜெகதீசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
மாமல்லபுரத்தில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம் பகுதியை பார்க்க இந்தியர்களுக்கு ரூ. 10–ம், வெளிநாட்டவர்களுக்கு ரூ. 250–ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டது. இந்தியர்களுக்கு ரூ. 30–ம், வெளிநாட்டினருக்கு ரூ. 500–ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டன.
தொல்லியல் துறையினரின் இந்த திடீர் கட்டண உயர்வுக்கு சுற்றுலா பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி மாமல்லபுரத்தில் தே.மு.தி.க. – மக்கள் நலக்கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் மல்லை சத்தியா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தே.மு.தி.க. மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா. கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் மாமல்லபுரம் மக்கள் வாழ்வுரிமை மீட்புக் குழுவினரும் இதில் பங்கேற்றனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் தாலுக்கா போலீசார் செவிலிமேடு கூட்டுச் சாலைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாட்டு வண்டியில் மணல் கடத்திய தாயார் குளம் பகுதியைச் சேர்ந்த ராஜா, பிள்ளையார் பாளையம் பகுதியைச் சேர்ந்த முனியாண்டி, குமரேசன், ராமசந்திரன், ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் கீழகதிர்பூர் பகுதியில் மணல் கடத்திய அதே பகுதியைச் சேர்ந்த பொன்னுரங்கம், வரதராஜ் ஆகியோரை பாலுச்செட்டிசத்திரம் போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்:
பாரதீய ஜனதா சார்பில் தமிழகம் முழுவதும் ‘தாமரை வெல்லட்டும், தமிழகம் மலரட்டும்‘ என்ற தலைப்பில் 50 தேர்தல் பரப்புரை வாகனம் இன்று துவக்கி வைக்கப்படுகிறது.
இந்த வாகனங்களில் வீடியோ திரை பொருத்தப்பட்டுள்ளது. தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 8 வாகனங்கள் துவக்கி வைக்கப்பட்டது.
பாரதீய ஜனதா கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் கலந்து கொண்டு தேர்தல் பிரசார வாகனங்களை தொடங்கி வைத்தார். அவர் வேட்டி–சட்டை அணிந்து வந்திருந்தார். மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், மாநில பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழகம் முழுவதும் இன்று வீடியோ திரையுடன் கூடிய 50 தேர்தல் பரப்புரை வாகனம் துவக்கி வைக்கப்படுகிறது. இதில் ஆண்ட கட்சிகள், ஆளும் கட்சிகள் ஆகியவற்றின் ஊழல், மது பிரச்சினை போன்றவை வீடியோ மூலம் மக்களுக்கு விளக்கப்படும். மேலும் மத்திய அரசின் நல்ல திட்டங்கள் பற்றியும் வீடியோ மூலம் எடுத்துரைக்கப்படும்.
பா.ஜனதா ஆட்சி மலர்ந்தால் என்னென்ன திட்டங்கள் செய்யப்படும் என்பது பற்றியும், மக்களிடம் பிரசாரம் செய்யப்படும்.
தேசிய செயலாளர் அமித்ஷா நாளை திருச்சி வருகிறார். அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களை அறிமுகப்படுத்துகிறார்.
தேர்தல் கமிஷன் மற்ற கட்சிகளிடம் கெடுபிடி காட்டுகிறது. ஆனால் ஆளும் கட்சிக்கு தனிவழிமுறையை கையாளுகிறது. தேர்தல் கமிஷன் பாரபட்சமாக நடக்கிறது.
விருத்தாசலத்தில் நடந்த முதல்–அமைச்சரின் தேர்தல் பிரசார கூட்டத்தில் 2 பேர் பலியானது வருத்தம் அளிக்கிறது. அவர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்ள முதல் வரை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மோகன்ராஜா, தாம்பரம் தொகுதி பொறுப்பாளர் செம்பாக்கம் தேவசுப்பரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆலந்தூர்:
மடிப்பாக்கம் சீனிவாச நகரை சேர்ந்தவர் அரிதாஸ். இவர் கடந்த 2009 ஆண்டு வேளச்சேரி மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது டிப்பர் லாரி மோதி பலியானார்.
விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் திரிசூலம் இந்திரா நகரை சேர்ந்த சாந்தகுமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சைதாப்பேட்டை 4–வது நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை முடிந்து நீதிபதி ஆபிரகாம்லிங்கன் தீர்ப்பளித்தார். அதில் விபத்து ஏற்படுத்திய டிரைவர் சாந்தகுமாருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் விலங்குகளை கோடைகால வெப்பத்தில் இருந்து பாதுகாக்க நேற்று மாலை முதல் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
பூங்காவில் உள்ள யானைகள் வெப்பத்தை தணித்துக்கொள்வதற்காக சகதிப்புரள் குட்டை, குளியல் குட்டை அமைக்கப்பட்டு உள்ளது. பார்வையாளர்கள் கண்டுகளிக்க தினந்தோறும் மாலை 3 மணி முதல் 4 மணி வரை யானைகளுக்குத் தெளிப்பான் குளியல் செய்யப்படுகிறது.
மேலும் யானைகளுக்கு உணவு வழங்கப்படுவதைப் பார்வையாளர்கள் மாலை 4 மணிக்கு கண்டுகளிக்கலாம். யானைகளுக்கு வழங்கப்படும் வழக்கமான உணவுகளுடன் கோடைகால உணவாக தர்பூசணி வழங்கப்படுகிறது.
மனித குரங்குகளுக்கு கோடைகால உணவாக தர்பூசணி, இளநீர், வெள்ளரி, லஸ்ஸி ஆகியவை வழங்கப்படுகிறது. மேலும் தெளிப்பான் குளியலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிங்கவால் குரங்கு, நாட்டுக்குரங்கு, செங்குரங்கு, கருங்குரங்கு, அனுமன் குரங்கு, கப்புச்சின் குரங்கு போன்ற குரங்கினங்களுக்கு தர்பூசணி, வெள்ளரி ஆகியவை வழங்கப்படுகிறது.
சிறுகரடி மற்றும் இமாலய கருங்கரடி ஆகியவற்றுக்கு கோடைகால உணவாக தர்பூசணி வழங்கப்படுகிறது. பறவைகள் இருப்பிடங்களைச் சுற்றிலும் சணல் கோணிகள் கட்டப்பட்டு காலை மாலை இரு வேளைகளிலும் தண்ணீர் தெளிக்கப்பட்டு குளிர்ச்சியான சூழ்நிலை உருவாக்கப்படுகிறது.
காட்டு ஆடு, வெளிமான், வராகமான், புள்ளிமான், சதுப்புநில மான், நீலமான், கடமான், காட்டுக்கழுதை, செந்நாய், சிறுத்தை, சிங்கம் போன்ற விலங்குகளின் இருப்பிடங்களில் பிரமிடு வடிவ கொட்டகைகள் அமைக்கப்பட்டு கூரை வேயப்பட்டு உள்ளது. இத்தகைய கொட்டகைகளில் அதிகப்படியான குளிர்ச்சி நிலவுவதால் விலங்குகள் அதன் அடியில் ஓய்வு எடுத்துக்கொள்கின்றன.
ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை, நெருப்புக்கோழி ஆகிய விலங்குகள் இருப்பிடங்களில் நீர்த்தெளிப்பான் அமைக்கப்பட்டு உள்ளது. வெப்பத்தை தணித்துக்கொள்ளும் பொருட்டு இதர விலங்குகளின் இருப்பிடங்களில் உள்ள நீர்ப்பிடிப்பு குட்டைகளில் எப்பொழுதும் நீர்த்தேக்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.






