என் மலர்
செய்திகள்

பா.ஜனதா தேர்தல் பிரசார வாகனங்கள்: முரளிதரராவ் தொடங்கி வைத்தார்
தாம்பரம்:
பாரதீய ஜனதா சார்பில் தமிழகம் முழுவதும் ‘தாமரை வெல்லட்டும், தமிழகம் மலரட்டும்‘ என்ற தலைப்பில் 50 தேர்தல் பரப்புரை வாகனம் இன்று துவக்கி வைக்கப்படுகிறது.
இந்த வாகனங்களில் வீடியோ திரை பொருத்தப்பட்டுள்ளது. தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 8 வாகனங்கள் துவக்கி வைக்கப்பட்டது.
பாரதீய ஜனதா கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் கலந்து கொண்டு தேர்தல் பிரசார வாகனங்களை தொடங்கி வைத்தார். அவர் வேட்டி–சட்டை அணிந்து வந்திருந்தார். மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், மாநில பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழகம் முழுவதும் இன்று வீடியோ திரையுடன் கூடிய 50 தேர்தல் பரப்புரை வாகனம் துவக்கி வைக்கப்படுகிறது. இதில் ஆண்ட கட்சிகள், ஆளும் கட்சிகள் ஆகியவற்றின் ஊழல், மது பிரச்சினை போன்றவை வீடியோ மூலம் மக்களுக்கு விளக்கப்படும். மேலும் மத்திய அரசின் நல்ல திட்டங்கள் பற்றியும் வீடியோ மூலம் எடுத்துரைக்கப்படும்.
பா.ஜனதா ஆட்சி மலர்ந்தால் என்னென்ன திட்டங்கள் செய்யப்படும் என்பது பற்றியும், மக்களிடம் பிரசாரம் செய்யப்படும்.
தேசிய செயலாளர் அமித்ஷா நாளை திருச்சி வருகிறார். அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களை அறிமுகப்படுத்துகிறார்.
தேர்தல் கமிஷன் மற்ற கட்சிகளிடம் கெடுபிடி காட்டுகிறது. ஆனால் ஆளும் கட்சிக்கு தனிவழிமுறையை கையாளுகிறது. தேர்தல் கமிஷன் பாரபட்சமாக நடக்கிறது.
விருத்தாசலத்தில் நடந்த முதல்–அமைச்சரின் தேர்தல் பிரசார கூட்டத்தில் 2 பேர் பலியானது வருத்தம் அளிக்கிறது. அவர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்ள முதல் வரை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மோகன்ராஜா, தாம்பரம் தொகுதி பொறுப்பாளர் செம்பாக்கம் தேவசுப்பரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






