என் மலர்
காஞ்சிபுரம்
தமிழ்நாடு அரசு பொது சுகாதார செவிலியர் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசு கிராம செவிலியர்கள் சங்கம் சார்பில் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நடைபெற்றது.
சங்கத்தின் மாநில பொருளாளர் ஜேனக் பாய் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பவானி, வசந்தகுமாரி, ரெமா முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் நிர்மலா உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். நர்சுகளுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.
மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம சுகாதார நிலைய நர்சு பணியிடங்களை நிரப்ப வேண்டும், 5 ஆயிரம் மக்களுக்கு ஒரு துணை சுகாதார நிலையம் உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர். உண்ணாவிரத போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட நர்சுகள் பங்கேற்றனர்.
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமானநிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
சட்டசபையோ, பாராளுமன்றமோ எதுவாக இருந்தாலும் எதிர்க்கட்சி என்று இருக்க வேண்டும். தி.மு.க வின் ஆதரவை வைத்து சட்டசபை தேர்தலில் 8 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரசின் செயல்பாடு காலதாமதமாக இருக்கிறது.
அது ஆளும் கட்சிக்கு ஆதரவாக அமையும். இதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.
சட்டசபையில் சபாநாயகரும், ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சிகளுக்கு பேச வாய்ப்பு தரவேண்டும். எதிர்கட்சிகளும் கொடுக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும்.
தமிழகத்துக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறுவது கர்நாடகத்தின் வழக்கமான பதில்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சீபுரம் கல்பாக்கம் அடுத்த வாயலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கவிசியாமளா. இவர் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டரிடம் கண்ணீர் மல்க மனு ஒன்றை அளித்தார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:-
எனது கணவர் முத்துவேல் ராஜா (27). குவைத் நாட்டிற்கு இரண்டு ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் டிரைவர் வேலைக்கு முருகானந்தம் என்பவர் அவரை அழைத்து சென்றார்.
மாதம் 30 ஆயிரம் சம்பளம் என கூறிய அவரிடம் இந்த வேலைக்காக 1 லட்ச ரூபாய் கொடுத்தோம். கடந்த மாதம் வெளிநாடு சென்ற எனது கணவர் கடந்த 1-ந் தேதி முதல் என்னுடன் பேசவில்லை.
மேலும் அதற்குமுன் பேசுகையில் தன்னுடன் தங்கியிருந்த முருகானந்தம் சண்டையிட்டதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் எனது கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த திங்கட்கிழமை (22-ந் தேதி) மாலை 4 மணிக்கு இறந்ததாக எனக்கு தகவல் கிடைத்தது.
எனது கணவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் வருகிறது. நான் 3 குழந்தைகளுடன் மிகவும் கஷ்டத்தில் உள்ளேன். எனது கணவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவி செய்ய வேண்டும். ஏழ்மையான நிலையில் உள்ள எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.
மேடவாக்கம், வேளச்சேரி மெயின்ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வந்தவர் அரவிந்த் குமார் (வயது 19). இவரது சொந்த ஊர் திருவண்ணாமலை ஆகும்.
அரவிந்த்குமார் அதே கல்லூரியில் பேராசிரியையாக இருக்கும் ஒருவரிடம் அவரது வீட்டுக்கு பாடம் சம்பந்தமாக அடிக்கடி சென்று வந்தார். அப்போது இருவரும் இடையே நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி அரவிந்த்குமார் திடீரென மாயமானார். அதேநாளில் கல்லூரி பேராசிரியையும் மாயமாகி இருந்தார்.
இதுகுறித்து இருதரப்பினரும் சேலையூர் போலீசில் புகார் செய்தனர். மறுநாள் பேராசிரியை மட்டும் வீட்டுக்கு திரும்பி வந்தார். அரவிந்த்குமார் நிலைமை என்ன ஆனது என்று தெரியாமல் இருந்தது.
இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி பெருங்களத்தூர் அருகே தண்டவாளப் பகுதியில் அரவிந்த்குமார் இறந்து கிடந்தார். அவரது உடலை தாம்பரம் ரெயில்வே போலீசார் மீட்டனர். பிரேத பரிசோதனை முடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ரெயில் மோதி அரவிந்த்குமார் இறந்ததாக கூறப்பட்டது.
இதற்கிடையே மாணவர் அரவிந்த்குமாரின் தந்தை ரவிச்சந்திரன் மற்றும் அவரது உறவினர்கள் அரவிந்த்குமார் சாவில் மர்மம் இருப்பதாக பரபரப்பு புகார் தெரிவித்து உள்ளனர்.
இதுபற்றி ரவிசந்திரன் கூறும் போது, பேராசிரியை மாயமான அதே நாளில் அரவிந்த்குமாரும் மாயமாகி இருந்தார். பேராசிரியை திரும்பி வந்ததும் எனது மகன் குறித்து முறையாக விசாரிக்கவில்லை.
பின்னர் ரெயில் மோதி அரவிந்த்குமார் இறந்து கிடப்பதாக தெரிவித்தனர். அவனது சாவில் மர்மம் உள்ளது. இது குறித்து பேராசிரியையிடம் விசாரணை நடத்த வேண்டும்’ என்றார். புகார் கூறப்பட்டு உள்ள கல்லூரி பேராசிரியைக்கு திருமணமாகி கணவரும், 2 மகன்களும் உள்ளனர். காதல் தகராறில் அரவிந்த்குமார் தீர்த்து கட்டப்பட்டு கொலையை மறைக்க உடலை தண்டவாளத்தில் வீசி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதுதொடர்பாக அந்த கல்லூரி பேராசிரியையிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆலந்தூர்:
கிண்டி நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் ஆரிப் சபினி (37), தனியார் கல்லூரி பேராசிரியர். இவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு கல்லூரிக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பிரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ15 ஆயிரம், மற்றும் 2 செல்போன்கள் கொள்ளையடிக்கபட்டு இருந்தது. மேலும் ஒரு லேப்டாப்பும் கொள்ளை போனது.
காஞ்சிபுரம்:
பாலாற்றின் குறுக்கே ஆந்திரஅரசு தடுப்பணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்பாட்டம் நடை பெற்றது.
பா.ம.க. கட்சியின் இளைஞரணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-
பாலாற்றினை பாதுகாக்க பா.ம.க. பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இதே கோரிக்கைக்காக இரு வாரங்களுக்கு முன்பு வேலூரில் ஆர்பாட்டம் நடத்தினோம்.
ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தற்போது 7 புதிய தடுப்பணைகள் கட்டி இருக்கிறார்கள். மேலும் 5 இடங்களில் உள்ள தடுப்பணைகளின் உயரத்தினை உயர்த்த திட்டமிட்டு தற்போது புல்லூர் என்ற பகுதியில் உள்ள தடுப்பணையின் உயரத்தினை 7 அடியில் இருந்து 16 அடியாக உயர்த்தி உள்ளார்கள்.
ஆந்திரஅரசின் இந்த செயலால் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் என சுமார் 1 கோடி பேர் பாதிக்கப்படுவர்.
குடிப்பதற்கும், வேளாண்மைக்கும் நீர்பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆந்திர அரசு வனத்துறை, சுற்றுச்சூழல் துறைகளின் அனுமதியின்றி இந்த அடாவடி செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
தமிழகத்தின் நீர் மேலாண்மை முறையாக கடை பிடிக்கப்படாததால் கடந்த ஆண்டு தமிழகத்தில் பெரும் வெள்ளம் ஏற்பட்ட போது 31 டிஎம்சி நீர் வீணாக கடலில் கலந்தது. தமிழக விவசாயிகள் பொது மக்களின் நலன்களை காக்க தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் பாலாறு சம்மந்தமாக போடப்பட்ட வழக்குகளில் விரைவு காட்ட வேண்டும்.
நீர்ஆதாரங்களை பெருக்கும் வகையில் புதிய அணைகள் மற்றும் தடுப்பணைகளை கட்ட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் காமராஜர் ஆட்சிகாலத்திற்கு பிறகு புதிய அணைகள் ஏதும் கட்டப்படவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்றாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. நிர்வாகிகள் ஜி.கே.மணி, திருகச்சூர் ஆறுமுகம், பொன்கங்காதரன், சக்திக மலாம்மாள், மகேஷ்குமார், உமாபதி, செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இன்று காலை டெல்லி செல்வதற்காக பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக சட்டமன்றம் ஆரோக்கியமற்றதாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது. ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சியினரை அனுசரித்து செல்ல வேண்டும்.
எதிர்க்கட்சியினர் தங்களுக்கு கொடுக்கப்படும் நேரத்தை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தில் தத்தளித்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை வழிநடத்த தி.மு.க. தலைவர் கருணாநிதி சட்டமன்றத்திற்கு வர வேண்டும்.
அனைவரும் காவல் துறை மானிய கோரிக்கையை எதிர்பார்த்து கொண்டு இருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு காவல் துறை மானிய கோரிக்கை ஏமாற்றம் அளித்தது.
ஏன் என்றால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை. இதை தடுக்க காவல் துறையில் உள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசு சட்டப்படி நடக்கவில்லை. அதனால் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது சரியே.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவான்மியூர்:
சாந்தோம் அருகே நொச்சி குப்பம் துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார், மீனவர். நேற்று இரவு நொச்சிக் குப்பம் மீன் மார்க்கெட் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது 8 பேர் கொண்ட கும்பல் அவரை கீழே தள்ளிவிட்டு அரிவாளால் சரமாரியாக தலை, கழுத்து, மார்பில் வெட்டியது. பின்னர் அக்கும்பல் தப்பி ஓடிவிட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் ராஜ்குமாரை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் சுயநினைவு இல்லாமல் உள்ளார்.
இதுகுறித்து மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
பல்லாவரம் அடுத்த திரிசூலம் எம்.ஜி.ஆர். நகர் கண்ணபிரான் தெருவைச் சேர்ந்தவர் முருகன். சமையல் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வேலம்மாள்.
இவரும் மூத்த மகனும் சென்னை விமான நிலையத்தில் ஒப்பந்த ஊழியர்களாக வேலை பார்த்து வருகிறார்கள்.
2-வது மகன் தினேஷ் (18) வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். மேலும் மது போதைக்கு அடிமையாகி இருந்தார்.
இதனை கண்டித்த பெற்றோர் அவரை வேலைக்கு செல்லுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதனால் பெற்றோர் பேச்சை கேட்காத தினேஷ் ஊர் சுற்றியபடியே இருந்தார். இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று மாலை வீட்டில் வேலம்மாளும், தினேசும் மட்டுமே இருந்தனர். அப்போது வேலம்மாள் தினேசை வேலைக்கு செல்லுமாறு கூறினார். இதில் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த தினேஷ் சமையல் அறையில் இருந்த மண்எண்ணையை எடுத்து வேலம்மாள் மீது ஊற்றி தீ வைத்தார்.
தீயில் கருகி அலறிய வேலம்மாளின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர் மீது எரிந்த தீயை அணைத்து பல்லாவரம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தினேசை மடக்கி பிடித்து பல்லாவரம் போலீசில் ஒப்படைத்தனர்.
மேல் சிகிச்சைக்காக வேலம்மாளை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு வேலம்மாள் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பல்லாவரம் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். கைது செய்யப்பட்ட தினேஷ் மீது குற்ற வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மாமல்லபுரத்தை அடுத்த தேவநேரி மீனவர் பகுதியை சேர்ந்தவர் கலையரசன். இவரது மகள் சினேகா (வயது 15). கோவளத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இன்று காலை சினேகாவும் அதே பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி இந்துஜாவும் பஸ் ஏறுவதற்காக தேவநேரி கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்றனர். அப்போது மாமல்லபுரத்தில் இருந்து அடையாறு செல்லும் மாநகர் பஸ் வந்தது.
உடனே இருவரும் அதில் ஏறுவதற்காக வேகமாக சாலையை கடந்து சென்றனர். அந்த நேரத்தில் பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் அவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
சினேகா காரின் கண்ணாடியில் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த இந்துஜா உயிருக்கு போராடினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து நடந்ததும் காரில் இருந்த 3 வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள், விபத்து நடந்த இடத்தில் பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும். வேகத்தடை மற்றும் எச்சரிக்கை பலகை வைக்க கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாமல்லபுரம் டி.எஸ்.பி. சேகர், இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
காரை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இலங்கையில் சண்டை நடந்தபோது அங்கிருந்து புலம் பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகள் கல்விக்காக பெங்களூரூவில் இலங்கையை சேர்ந்த ஞானசேகர், தொண்டு நிறுவனம் தொடங்கி ஒரு கட்டிடத்தை 25 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்து ஆங்கில வழி கல்வி பயிற்றுவித்து வந்தார். குத்தகைகாலம் முடிந்த பிறகு பெங்களூருவில் உள்ள இந்த இடத்தின் உரிமையாளர் குத்தகையை நீட்டித்து தர மறுத்துவிட்டார்.
இதனால் இலங்கை தமிழர் வாழும் முகாம்களுக்கு பல மாணவர்கள் சென்றது போக மீதமுள்ள மாணவ-மாணவிகள் பலரை காஞ்சீபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் உள்ள ஒரு கட்டிடத்தை வாடகை எடுத்து தொண்டு நிறுவனம் தங்கவைத்தது. இதில் அச்சரப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 17 மாணவர்களும், அரசு மகளிர் பள்ளியில் 11 மாணவிகளும் சேர்க்கப்பட்டனர். கல்லூரியில் 2 மாணவிகள் பட்டப்படிப்பு பயின்று வருகின்றனர். செண்டிவாக்கம் கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 20 பேர் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் செண்டிவாக்கத்தில் படிக்கும் 20 மாணவ-மாணவிகளின் கல்வி கட்டணம் தொண்டு நிறுவனத்திடம் இருந்து கிடைக்குமா? என்ற சந்தேகத்தின் பேரில் அவர்களை பள்ளி நிர்வாகம் இடைநீக்கம் செய்தது.
இது பற்றி அறிந்த கலெக்டர் கஜலட்சுமி, செண்டிவாக்கம் பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள மாணவ- மாணவிகளின் கல்வி தடைபடாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அதன் பேரில் செண்டிவாக்கம் பள்ளி நிர்வாகம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள மாணவ- மாணவிகளை நாளை (திங்கட்கிழமை) முதல் பள்ளிக்கு வர அனுமதி அளித்தது.
இதனிடையே மத்திய புலனாய்வு துறை, மாநில உளவு பிரிவு மற்றும் அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் ஆகியோர் மாணவ-மாணவிகள் அனுமதி பெற்று இங்கு தங்கியுள்ளனரா? என விசாரணை மேற்கொண்டனர். நேற்று மாலை மதுராந்தகம் உதவி கலெக்டர் அன்புச்செல்வன், மதுராந்தகம் வட்டாட்சியர் கற்பகம், மண்டல தாசில்தார் நாகராஜன் ஆகியோர் தொண்டு நிறுவனத்தில் ஆய்வு செய்தனர்.
தி.மு.க. பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு சென்றார். முன்னதாக அவர், விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கேள்வி:- சட்டசபையில் போட்டி கூட்டம் நடத்துவதால் மக்களுக்கு என்ன பயன்?
பதில்:- நாங்கள் போட்டி கூட்டம் நடத்தவில்லை. மாதிரி கூட்டம், சட்டமன்றம் எப்படி நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிற வகையில் மாதிரி கூட்டம் நடத்தினோம்.
கேள்வி:- மக்கள் நல்வாழ்வு மானிய விவாதம் முடிந்துவிட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் 4 குழந்தைகள் இறந்துவிட்டதை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்:- திருவள்ளூர் மாவட்டத்தில் திருவாலங்காடு ஒன்றியத்தில் 4 குழந்தைகள் இறந்து உள்ளதாக செய்திகள் வந்து உள்ளது. அதில் 25 பேர் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. குடிநீரில் கழிவுநீர் கலந்துவிட்டதாக சொல்கிறார்கள். எனவே போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டமன்ற கூட்டத் தொடரில் நாங்கள் கலந்துகொண்டு இருந்தால் இதுபற்றி பேசி இருப்போம்.
கேள்வி:- மாதிரி கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படுமா?
பதில்:- நீங்கள் வந்து பாருங்கள் தெரியும்.
கேள்வி:- போலீஸ் மானிய கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ளவில்லையே?
பதில்:- கலந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே இதை செய்து உள்ளனர்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.






