என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாமல்லபுரம் அருகே கார் மோதி 9-ம் வகுப்பு மாணவி பலி - பொதுமக்கள் மறியல்
    X

    மாமல்லபுரம் அருகே கார் மோதி 9-ம் வகுப்பு மாணவி பலி - பொதுமக்கள் மறியல்

    மாமல்லபுரம் அருகே கார் மோதி 9-ம் வகுப்பு மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தை அடுத்த தேவநேரி மீனவர் பகுதியை சேர்ந்தவர் கலையரசன். இவரது மகள் சினேகா (வயது 15). கோவளத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இன்று காலை சினேகாவும் அதே பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி இந்துஜாவும் பஸ் ஏறுவதற்காக தேவநேரி கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்றனர். அப்போது மாமல்லபுரத்தில் இருந்து அடையாறு செல்லும் மாநகர் பஸ் வந்தது.

    உடனே இருவரும் அதில் ஏறுவதற்காக வேகமாக சாலையை கடந்து சென்றனர். அந்த நேரத்தில் பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் அவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

    சினேகா காரின் கண்ணாடியில் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த இந்துஜா உயிருக்கு போராடினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து நடந்ததும் காரில் இருந்த 3 வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள், விபத்து நடந்த இடத்தில் பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும். வேகத்தடை மற்றும் எச்சரிக்கை பலகை வைக்க கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மாமல்லபுரம் டி.எஸ்.பி. சேகர், இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    காரை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×