என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    கொலை வழக்கில் 7 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

    மாமல்லபுரம்:

    கோவளம் அருகே திருவிந்தை சவுக்கு தோப்பில் 2009ஆம் ஆண்டு மைலாப்பூர் சுரேஷ் என்பவர் கொலை செய்யப்பட்டார் இந்த வழக்கில் கூலிப்படையாக செயல்பட்ட மதுரை செல்லூரை சேர்ந்த ரவி(43) கைது செய்யப்பட்டான்.

    பின்பு ஜாமீனில் வெளி வந்தவன் 2010ல் இருந்து விசாரணைக்கு நீதிமன்றம் வராமல் தலைமறைவாக இருந்து வந்தான. அவனை பிடித்து ஜெயிலில் அடைக்க நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்தது. மாமல்லபுரம் போலீசார் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் தேடிவந்தனர். இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே கருங்காலி குப்பம் பகுதியில் ரவி தங்கி இருப்பதாக மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி உத்தரவின் பேரில் போலீஸ்காரர் மோகன் அங்கு சென்று ரவியை கைது செய்தார். பின்னர் சென்னை புழல் ஜெயிலில் ரவி அடைக்கப்பட்டான்.

    கிணற்றில் மூழ்கி மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அடுத்த ஓரிக்கை, ஆசிரியர் நகரைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் ஜெகன் (17). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    அதே பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டியன் மகன் தயாநந்தன் (19). சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வருகிறார்.

    நேற்று விடுமுறை தினம் என்பதால் ஜெகன், தயாநிதி, மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் விஷ்ணு (17), முருகுதமிழ் (19) ஆகிய 4 பேரும் ஓரிக்கை அடுத்த குருவிமலை பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் குளிக்க சைக்கிளில் சென்றனர்.

    கிணற்று படிக்கட்டுகளை பிடித்து குளித்துக் கொண்டிருந்த ஜெகன், தயாநந்தன் இருவரும் திடீரென தண்ணீ ரில் மூழ்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

    இதைபார்த்த மற்ற இரண்டு நண்பர்களும் இவர்களை பார்த்து காப்பாற்ற முடியாமல் பயந்து வீட்டிற்கு திரும்பி விட்டனர். நேற்று மாலை 4 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றது. நண்பர்கள் பயம் காரணமாக வீட்டில் சொல்லாமல் இருந்து விட்டனர். இந்நிலையில் வெகுநேர மாகியும் வீடு திரும்பாமல் இருந்த ஜெகன் மற்றும் தயாநந்தன் ஆகியோரின் பெற்றோர்கள் பல இடங்களில் தங்களின் மகன்களை தேடினர். அவர்கள் கிடைக்காததால் நண்பர்களிடம் விசாரித்தனர்.

    அப்போது அவர்கள் நடந்த சம்பவத்தை தெரிவித்தனர். இதை கேட்டு அலறியடித்து கொண்டு ரவி, மற்றும் தங்கபாண்டியன் இருவருடனும் பெற்றோர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    உடனடியாக காஞ்சிபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு அதிகாரிகள் 2 மணிநேரம் போராடி ஜெகன், தயாநந்தன் உடல்களை மீட்டனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களின் உடல்களை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    அச்சிறுப்பாக்கத்தில் டாஸ்மாக் ஊழியரிடம் இருந்து ரூ.2 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுராந்தகம்:

    காஞ்சீபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள சோத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தீனதயாளன்.

    இவர் அச்சிறுப்பாக்கம் எலப்பாக்கம் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு 10 மணிக்கு தீனதயாளன் மதுக்கடையை பூட்டிவிட்டு ரூ. 2 லட்சத்து 39 ஆயிரம் பணத்துடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றார். அவருடன் ஊழியர் மணியும் மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்தார்.சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது அவர்களை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்கள் தீனதயாளனின் மோட்டார் சைக்கிளை இடித்து கீழே தள்ளினார்கள்.

    பின்னர் தீனதயாளன் பையில் வைத்திருந்த ரூ. 2 லட்சத்து 39 ஆயிரம் பணத்தையும் கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றனர்.

    இது குறித்து தீனதயாளன் அச்சிறுப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
    மாமல்லபுரம் அருகே 2 மகன்களுடன் மாயமான பெண்ணை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த பையனூர் பழைய மகாபலிபுரம் சாலை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். பெயிண்டிங் வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி துளசி (வயது 25). இவர்களுக்கு ரதூன்ராஜ், ரதுனேஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    கடந்த 24-ந் தேதி ராஜேஷ் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் மனைவி துளசி, மகன்கள் ரதூன்ராஜ், ரதுனேஷ் ஆகிய 3 பேரும் இல்லை.

    பின்னர் அக்கம் பக்கத்திலும் உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடினார். இன்று வரை 3 பேரும் கிடைக்கவில்லை. எனவே மாமல்லபுரம் போலீசில் மனைவி துளசியையும், 2 மகன்களையும் காணவில்லை என ராஜேஷ் புகார் கொடுத்துள்ளார்.

    மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் தேடி வருகிறார்கள். துளசி பலமுறை கணவர் ராஜேசுடன் சண்டை போட்டு வீட்டைவிட்டு போய்விடுவதும் பின்னர் வந்து விடுவதுமாக இருந்து வந்துள்ளார். இந்த முறை போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு 2 குழந்தைகளையும் அழைத்து சென்றிருப்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் துளசியையும், குழந்தைகளையும் தேடி வருகிறார்கள்.

    சிறுவாணி தமிழகத்துக்கு சொந்தமானது என்று விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
    ஆலந்தூர்:

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிறுவாணி தண்ணீரில் கேரளாவுக்கு சிறிதளவு உரிமை கூட கிடையாது. மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி மேற்கு நோக்கி செல்லும் தண்ணீரில் ஒரு சொட்டு கூட தமிழகத்துக்கு தருவதற்கு கேரளா தயார் இல்லை. சிறுவாணி முழுக்க முழுக்க தமிழகத்துக்கு சொந்தமானது. இந்த தண்ணீர் அவர்களுக்கு தேவையும் இல்லை.

    இந்தநிலையில் சிறுவாணி தண்ணீரில் உரிமை கொண்டாடுவது வம்புக்கு இழுக்கும் செயல். இது கண்டனத்துக்குரியது. இந்த விவகாரத்தில் முழு விவரங்களை ஆய்வு செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.

    காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கம். அதை பாகிஸ்தானால் ஒன்றும் செய்ய முடியாது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுடன் கூடிய பொங்கல் விழா உறுதியாக நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருவான்மியூர் அருகே தறிகெட்டு ஓடி பஸ் மோதிய விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார், 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
    திருவான்மியூர்:

    சென்னை கானாத்தூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 42). மூன்று சக்கர தள்ளுவண்டியில் சாலையில் கிடக்கும் காகிதங்களை பொறுக்கி விற்கும் தொழிலாளி ஆவார். இவரது சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா கல்லறை தெரு ஆகும்.

    இவர் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் திருவான்மியூர் அருகே உள்ள கானாத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் காகிதங்கள் பொறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவு பஸ் வந்து கொண்டிருந்தது. டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் திடீரென்று பஸ் தறிகெட்டு ஓடி சாலை நடுவில் உள்ள தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு ஓடி தொழிலாளி ஆறுமுகம் மீது மோதியது. பின்னரும் பஸ் வேகமாக ஓடி சாலையோரம் சுவரில் மோதி நின்றது.

    இந்த விபத்தில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பஸ்சில் பயணம் செய்த பாவாடை உள்பட 4 பயணிகள் காயம் அடைந்தனர்.
    அடையாறு சாலையில் டேங்கர் லாரி கவிழ்ந்து ஆறாக ஓடிய எண்ணெயை பெண்கள் குடம் குடமாக பிடித்து சென்றனர்.
    திருவான்மியூர்:

    சென்னை துறைமுகத்தில் இருந்து மேடவாக்கத்தில் உள்ள காளீஸ்வரி நிறுவனத்துக்கு சொந்தமான டேங்கர் லாரி 20 ஆயிரம் லிட்டர் எண்ணெயை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. லாரியை தண்டையார்பேட்டையை சேர்ந்த டிரைவர் வரதராஜன் ஓட்டினார்.

    இன்று அதிகாலை 3.40 மணி அளவில் அடையாறு மேம்பாலம் அருகே லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் லாரி தறிகெட்டு ஓடியது.

    திடீரென்று லாரி சாலை நடுவில் இருந்த இரும்பு தடுப்பு வேலியை உடைத்துக் கொண்டு சென்றது. பின்னர் சாலை நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதியது. இதில் லாரியின் முன் சக்கரங்கள் துண்டுதுண்டாக உடைந்து சென்றன. பின் சக்கரமும் பஞ்சரானதால் லாரி கவிழ்ந்தது. இதனால் லாரியில் இருந்த எண்ணெய் ரோட்டில் ஆறாக ஓடியது. 10 ஆயிரம் லிட்டர் எண்ணெய் லாரியில் இருந்து ஓடியது.



    இதனால் அந்த பகுதி பெண்கள் மற்றும் பொது மக்கள் குடம் மற்றும் பக்கெட்டை எடுத்துக் கொண்டு அங்கு ஓடி வந்தனர். சாலையில் ஆறாக ஓடிய எண்ணெயை குடம் குடமாக பிடித்துச் சென்றனர். அதில் சிலர் எண்ணெய் வழுக்கி கீழே விழுந்தனர்.

    பின்னர் அதையும் பொருட்படுத்தாமல் எழுந்து எண்ணை பிடித்து சென்றனர். சுமார் 150-க்கும் மேற்பட்டவர்கள் எண்ணெய் பிடித்தனர்.

    தகவல் அறிந்ததும் அடையாறு போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொது மக்களை விரட்டிவிட்டனர். பின்னர் துப்புரவு ஊழியர்களை வரவழைத்து ரோட்டில் கொட்டிய எண்ணெயை சுத்தம் செய்தனர். பின்னர் 5 லாரிகளில் மணல் கொண்டு வந்து சாலையில் கொட்டி சரிசெய்தனர்.



    பின்னர் மாற்று லாரி கொண்டுவரப்பட்டு லாரியில் மிச்சம் இருந்த 10 ஆயிரம் லிட்டர் எண்ணெய் குழாய் மூலம் அதில் ஏற்றப்பட்டது.

    எண்ணெய் ரோட்டில் ஓடியதை மழைநீர் என்று கருதி அதில் 2 மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் கீழே விழுந்து காயம் அடைந்தனர்.
    மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை விமானத்தில் கடத்தி வந்த 4 ஆயிரம் அலங்கார ஆமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    சென்னையை சேர்ந்த முகமது சுதீப் (வயது 37) என்பவரின் உடமைகளை ஸ்கேன் செய்த போது அதில் ஏதோ அசைவது போல இருந்தது. எனவே அதை சுங்கத் துறை அதிகாரிகள் பிரித்து பார்த்தனர்.

    அப்போது ஒரு பையில் 4 ஆயிரம் சிவப்பு காது அலங்கார ஆமைகள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. அந்த ஆமைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அது எதற்காக கடத்தி வரப்பட்டது மருத்துவம் தொடர்பாக கடத்தி வரப்பட்டதா? அல்லது அலங்காரம் செய்வதற்காக கடத்தி வரப்பட்டதா என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    7 ஆண்டுகளாக பிறகு மாமல்லபுரம் மரகதபூங்கா திறக்க போவதால் உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் பஸ் நிலையம் அருகே கடந்த 2009-ம் ஆண்டு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் மரகத பூங்கா உருவாக்கப்பட்டது.

    பூங்கா வளாகத்தில் வார இறுதி நாளில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்த நடனத் திடல், நடைபயிற்சி நடைமேடை, சுற்றுலா பயணிகள் அமர்ந்து ஓய்வெடுக்க கல் இருக்கைகள், என மாமல்லபுரம் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் உருவாக்கப்பட்டது.

    பெயரளவுக்கு மரகத விழா என்ற பெயரில் ஒருமுறை நடன நிகழ்ச்சி மட்டும் நடத்தப்பட்டு பூங்கா மூடப்பட்டது. பின்னர் பராமரிப்பின்றி பாம்புகள் பதுங்கும் இடமாகவும், சமூக விரோதிகள் மது அருந்தும் வளாகமாகவும் சீரழிந்து கிடந்தது. நகரின் மையப்பகுதியில் அழகான பூங்கா பயனற்று கிடப்பதை கண்டு சுற்றுலா ஆர்வலர்கள் பலர் அரசு பார்வைக்கு கொண்டு சென்றனர்.

    இந்த நிலையில் அதை மேலும் மேம்படுத்தும் நோக்கத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் பூங்காவில் கூடுதலாக மூங்கில் குடில் உணவகம், கடல்மீன் ஸ்டால், சுற்றுலா தகவல் மையம், அம்மா குடிநீர், போன்ற வசதிகளுடன் விரைவில் திறக்கப்பட உள்ளது. சட்ட சபை கூட்டத்தில் அதற்கான அறிவிப்பும் வெளியானது.

    7 ஆண்டுகளாக மூடிக் கிடந்த மரகதபூங்கா திறக்க போவதால் உள்ளூர் மக்க ளும், சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஸ்ரீபெரும்புதூரில் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த ஓட்டல் ஊழியரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
    சென்னை:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பிரசன்ன ராமபுரத்தை சேர்ந்தவர் சின்னப்பராஜ். இவரது மனைவி அந்தோணியம்மாள். இந்த தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகன் ஜான் மார்ஷல் (வயது 24). ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் சமையல் கலை நிபுணராக (கேட்டரிங்) பணியாற்றி வந்தார்.

    கடந்த 24-ந்தேதி, தனது வீட்டருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் மோதியதில் ஜான் மார்ஷல் படுகாயம் அடைந்தார்.

    உடனடியாக அவர் மீட்கப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதையடுத்து மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் ஜான் மார்ஷல் மூளைச்சாவு அடைந்து விட்டதாக நேற்றுமுன்தினம் இரவு அவரது பெற்றோரிடம் டாக்டர்கள் தெரிவித்தனர்.

    ‘உயிர் போனாலும் உடல் உறுப்புகளாவது பூமியில் வாழட்டும்’, என்ற கனத்த இதயத்துடன் ஜான் மார்ஷலின் உடல் உறுப்புகளை தானமாக தர அவரது பெற்றோர் முன்வந்தனர்.

    இதையடுத்து சென்னை அரசு பொது மருத்துவமனையில் நேற்று இரவு ஜான் மார்ஷலின் உடலில் இருந்து இதயம், நுரையீரல், சிறுநீரகங்கள், கல்லீரல், கணையம் மற்றும் கண்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.

    தானமாக பெறப்பட்ட உடல் உறுப்புகள் மூலம் பலருக்கு மறுவாழ்வு கிடைக்க இருக்கிறது.
    பழவந்தாங்கலில் மர்ம காய்ச்சலுக்கு 2 பேர் பாதிக்கப்பட்டவர்களை குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    ஆலந்தூர்:

    பழவந்தாங்கல், நேரு காலனி 2-வது தெருவில் வசித்து வருபவர் மதிசேகர். இவரது மகள் மதிவதனி (வயது8).

    மீனம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    கடந்த சில நாடக்ளாக மதிவதனிக்கு காய்ச்சல் இருந்து வந்தது. உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதால் அவருக்கு நங்கநல்லூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதே போல் பழவந்தாங்கல் பி.வி.நகரைச் சேர்ந்த அம்பிகாவும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுபற்றி அறிந்ததும் ஆலந்தூர் மண்டல மாநகராட்சி உதவி நல அலுவலர் மல்லிகா, சுகாதார அலுவலர் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் காய்சலால் பாதிக்கப்பட்ட மதிவதனி, அம்பிகா ஆகியோருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து ஆஸ்பத்திரிக்கு சென்று கேட்டறிந்தனர்.பின்னர் பழவந்தாங்கல் பகுதியில் ஆய்வு செய்தனர்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து ஆஸ்பத்திரியில் கேட்டோம். அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இல்லை. சாதாரண வைரஸ் காய்ச்சல்தான். பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறத்தை சுகாதாரமாகவும், சுத்தமான குடிநீரையும் குடிக்க வேண்டும் என்றனர்.

    சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.42 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு இன்று அதிகாலை 2.30 மணிக்கு ஜெட்ஏர்வேஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது.

    இதில் பயணம் செய்யும் பயணிகளின் உடமைகளை சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த அபுபக்கர் (வயது 40), காசிம் (37), சென்னையை சேர்ந்த முகம்மது (29) ஆகியோரது சூட்கேஸ்களில் அமெரிக்க டாலர் மற்றும் பல்வேறு நாட்டு பணம் நிறைய இருந்தது. இது இந்திய மதிப்பில் ரூ.42 லட்சம் ஆகும்.

    இவற்றை கொண்டு செல்வதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லாததால் 3 பேரையும் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.

    சிங்கப்பூர் செல்ல 3 பேரும் டூரிஸ்ட் விசா வைத்திருந்ததால் ஹவாலா பணம் கடத்த முயற்சி செய்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    ×