என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    மேடவாக்கத்தில் என்ஜினீயர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடைய மனைவி மற்றும் கள்ளக்காதலனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    சென்னையை அடுத்த மேடவாக்கம் காந்தி நகர் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வந்தவர் என்ஜினீயர் அறிவழகன் (35).

    சென்னையில் பிரபல தியேட்டருடன் கூடிய வணிக வளாகத்தில் எலக்ட்ரிக்கல் என்ஜினீயராக வேலை செய்து வந்த இவர் நேற்று முன்தினம் இரவு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். நள்ளிரவு 11.30 மணி அளவில் அறிவழகனின் வீட்டு கதவை தட்டிய கும்பல் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பியதாக தகவல் வெளியானது. இதனை தடுக்கச் சென்ற மனைவி சுரேகாவுக்கு கத்திக்குத்து விழுந்தது. அவர் ஆஸ்பத்திரியில் மயங்கிய நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கொலை செய்யப்பட்ட அறிவழகனின் உடல் வீட்டுக்கு வெளியில் கிடந்தது. அவரது உடல் அருகே காலி மதுபாட்டில்களும், பிளாஸ்டிக் டம்ளர்களும் கிடந்தன.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் மேடவாக்கம் உதவி கமி‌ஷனர் கோவிந்த ராஜ், பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, கையில் காயத்துடன் லேசாக மயங்கிய நிலையில் காணப்பட்ட சுரேகா, ‘‘புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சிலர் மது அருந்தியதை என் கணவர் தட்டிக்கேட்டார். அந்த நபர்களே மீண்டும் வீட்டு அருகில் வைத்து மது அருந்தினர். இதுபற்றி மீண்டும் கேட்டபோது எனது கணவரை குத்திக் கொன்றுவிட்டு தப்பி விட்டனர் என தெரிவித்தார். அவரை காப்பாற்ற சென்ற என்னையும் போதை ஆசாமிகள் கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்று விட்டனர்’’ என்றும் சுரேகா கூறினார்.

    இதையே புகார் மனுவாகவும் போலீசிடம் அவர் அளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட போலீசார் அது தொடர்பாகவே முதலில் விசாரணை நடத்தினர். ஆனால் சுரேகா கூறியது போல நள்ளிரவு நேரத்தில் கும்பலாக யாரும் அப்பகுதிக்கு வந்தது போன்று தெரியவில்லை. இதனால் போலீசாரின் சந்தேகப்பார்வை சுரேகா மீது விழுந்தது.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த அவரிடம் போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தினர். அப்போது சுரேகா, அதே பகுதியை சேர்ந்த கணபதி என்கிற சூர்யா என்ற வாலிபரை காதலித்து வந்தது தெரிய வந்தது. அவருடன் சேர்ந்தே கணவர் அறிவழகனை சுரேகா தீர்த்துக் கட்டியிருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து சுரேகாவையும், கள்ளக்காதலன் கணபதியையும் போலீசார் இன்று காலை கைது செய்தனர்.

    அறிவழகனுக்கும், சுரேகாவுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 4 வயதில் சாதனா என்ற பெண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் அதே தெருவில் வசித்து வந்த கணபதியுடன் சுரேகாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதற்கு அறிவழகன் தடையாக இருந்தார்.

    மனைவி சுரேகாவின் நடவடிக்கைகளில் அடிக்கடி சந்தேகம் அடைந்த அறிவழகன் பலமுறை அவரை கண்டித்துள்ளார். இப்படி கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த அறிவழகனை தீர்த்துக்கட்ட சுரேகாவும், கணபதியும் திட்டமிட்டனர். அதன்படியே நேற்று முன்தினம் இரவு கணபதி, அறிவழகனின் வீட்டுக்கு சென்றார்.

    பின்னர் 2 பேரும் சேர்ந்து அறிவழகனை தலையணையால் அமுக்கியும், கத்தியால் குத்தியும் கொலை செய்தனர். ஆனால் குடிபோதையில் இருந்தவர்களே கணவரை கொன்று விட்டதாக சுரேகா நாடகம் ஆடியது தெரிய வந்தது.

    சுரேகாவும், கணபதியும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

    ஒன்றும் அறியாத 4 வயது குழந்தை சாதனா தவியாய் தவிக்கிறது.
    ஸ்ரீபெரும்புதூர் அருகே இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். தப்பியோடிய கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வெங்காடு கிராமத்தில் வசித்து வருபவர் சிசு. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மினு (வயது 18). இவர்களது சொந்த ஊர் ஒடிசா மாநிலம் ஆகும்.

    கடந்த 1-ந்தேதி முதல் சிசுவின் வீடு வெளிப்பக்கம் பூட்டி கிடந்தது. கணவன்- மனைவி இருவரும் வெளியூர் சென்று இருக்கலாம் என்று அக்கம்பக்கத்தினர் நினைத்து இருந்தனர்.

    இந்த நிலையில் பூட்டி கிடந்த வீட்டில் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசியது. இது பற்றி அப்பகுதி மக்கள் ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இன்ஸ்பெக்டர் கண்ணையன் மற்றும் போலீசார் விரைந்து வந்து வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு உடல் அழுகிய நிலையில் மினு அரை நிர்வாணத்தில் பிணமாக கிடந்தார். கழுத்து துப்பட்டாவால் இருக்கப்பட்டு இருந்தது.

    அவரது கணவர் சிசு மாயமாகி இருந்தார். எனவே அவர் குடும்பதகராறில் மனைவியை கொன்று வீட்டை பூட்டி தப்பி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
    கேளம்பாக்கம் கடலில் மூழ்கி என்ஜினியரிங் மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    திருப்போரூர்:

    பூந்தமல்லியில் உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தவர் குணால் (வயது -21) இவரது சொந்த ஊர் மத்திய பிரசேத மாநிலம் ஆகும்.

    புத்தாண்டையொட்டி குணால் தனது நண்பர்கள் 10 பேருடன் கோவளத்திற்கு சென்றார். கடலில் இறங்கி அனைவரும் குளித்தனர். அப்போது ராட்சத அலை குணாவை கடலுக்குள் இழுத்து சென்றது அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் பலியான குணாவின் உடல் நேற்று மாலை செம்மஞ்சேரி கடல் பகுதியில் கரை ஒதுங்கியது.
    பள்ளிக்கரணை அருகே புத்தாண்டில் மதுகுடித்ததை கண்டித்த வாலிபரை முகமூடி கும்பல் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருவான்மியூர்:

    பள்ளிக்கரணையை அடுத்த மேடவாக்கம் கூட்ரோடு கற்பக விநாயகர் கோவில் தெருவில் வசித்து வந்தவர் அறிவழகன் (வயது 36). சத்யம் தியேட்டரில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.

    இவரது மனைவி சுரேகா (24). இவர்களுக்கு 3 வயதில் சாதனா என்ற பெண் குழந்தை உள்ளது.

    நேற்று இரவு அறிவழகன் வீட்டில் குடும்பத்துடன் தூங்கினார். இரவு 11 மணி அளவில் மர்ம கும்பல் வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டது.

    அறிவழகன் எழுந்து கதவை திறந்த போது முகமூடி அணிந்த 4 மர்ம நபர்கள் கையில் பயங்கர ஆயுதங்களுடன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    கண் இமைக்கும் நேரத்தில் கொலைக்கும்பல் அறிவழகனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். தலை, கழுத்தில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார்.

    அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்து வெளியே வந்த சுரேகா, கணவர் அறிவழகன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் மர்ம கும்பலை தடுத்தார். ஆத்திரம் அடைந்த அவர்கள் சுரேகாவையும் சரமாரியாக வெட்டினர். அவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கினார்.

    இதற்குள் அக்கம் பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர். உடனே கொலைக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    பலத்த காயம் அடைந்த அறிவழகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த சுரேகாவுக்கு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது நிலைமை மோசமாக உள்ளது.

    புத்தாண்டையொட்டி அப்பகுதியில் சில வாலிபர்கள் மது அருந்தி இருக்கிறார்கள். அவர்களை அறிவழகன் தட்டி கேட்டு விரட்டி இருக்கிறார். இந்த மோதலில் அறிவழகன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

    இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கேளம்பாக்கம் அருகே காதல் ஜோடி வி‌ஷம் குடித்து தற்கொலை முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்போரூர்:

    கேளம்பாக்கத்தை அடுத்த புதுப்பாக்கம் எம்.ஆர்.ராதா தெருவில் வசித்து வருபவர் மாதவன் (வயது 25) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திகாவும் (20) கடந்த 3 ஆண்டாக காதலித்து வந்தனர். இது பற்றி தெரிந்ததும் காதல் ஜோடியை பெற்றோர் கண்டித்தனர்.

    இதனால் வாழ்க்கையில் ஒன்று சேரமுடியாது என்று நினைத்த காதல் ஜோடி தற்கொலை செய்ய முடிவு செய்தனர்.

    நேற்று மாலை அதே பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் மாதவனும், கார்த்திகாவும் வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தனர்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்படுகிறது.

    இது குறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தாம்பரத்தில் தாறுமாறாக ஓடிய ஆட்டோ மோதி பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
    தாம்பரம்:

    தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கம் பெரியார் நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சந்திரா (வயது 65). இவரது வீட்டிற்கு பெரம்பூரை சேர்ந்த உறவினர் காமாட்சி வந்திருந்தார்.

    நேற்று இரவு அவர்கள் 2 பேரும் மாடம்பாக்கம் மெயின் ரோட்டில் உள்ள மருந்து கடைக்கு சென்றார். பின்னர் அவர்கள் சாலையோரம் நடந்து வந்தனர். அப்போது தாறுமாறாக வந்த லோடு ஆட்டோ திடீரென அவர்கள்மீது மோதியது.

    இதில் சந்திரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பலத்த காயம் அடைந்த காமாட்சி உயிருக்கு போராடினார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் லோடு ஆட்டோ டிரைவரை பிடித்து சரமாரியாக தாக்கினர். மேலும் லோடு ஆட்டோவை கவிழ்த்தி நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் சேலையூர் போலீசார் விரைந்து வந்து டிரைவரை மீட்டனர். அவர் மாடம்பாக்கத்தை சேர்ந்த அரி கிருஷ்ண பாண்டி என்பதும், மது போதையில் லோடு ஆட்டோவை ஓட்டி வந்ததும் தெரிந்தது.

    பலத்த காயம் அடைந்த காமாட்சிக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து தாம்பரம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.48 லட்சம் மோசடி செய்த ரெயில்வே ஊழியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவான்மியூர்:

    சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் சேகர் (54). ரெயில்வே துறையில் ஊழியராக பணிபுரிகிறார். இவர் ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக செலக்கம்மா, திலகம், சதீஷ் உள்ளிட்ட 8 பேரிடம் ரூ.48 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்தார்.

    இதற்கு அயனாவரத்தைச் சேர்ந்த சுகுணா (27), திருவலாங்காடு பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் (50), திருமலை (58) ஆகியோர் செயல்பட்டனர். இதுகுறித்து வந்த புகாரின் பேரில் திருவள்ளூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    சுகுணா மற்றும் சாமிநாதனை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான சேகர் இன்று கைது செய்யப்பட்டார். தலை மறைவான திருமலையை போலீசார் தேடி வருகின்றனர்.
    காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க கலெக்டர் கஜலட்சுமி தலைமையில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி தலைமையில், ரொக்கமில்லா பரிவர்த்தனை குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    செல்போன்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு வங்கி பரிவர்த்தனைகள் குறித்து இந்த முகாமினில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

    மேலும் இது குறித்து மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி மக்களும் அறிந்து கொள்ளும் விதத்தில் ரொக்கமில்லா பரிவர்த்தனை குறித்த பயிற்சிகள் வட்டார அளவிலான அலுவலர்களுக்கு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அனைத்து துறை அலுவலர்களும் தங்களுடைய களப்பணியாளர்களை இது போன்ற பயிற்சி முகாமினில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்து பொதுமக்களிடையே ரொக்க மில்லா பரிவர்தனை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனவும் கலெக்டர் கஜலட்சுமி கேட்டுக் கொண்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சவுரிராஜன் மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    கல்பாக்கம் அணுமின் நிலையம் சார்பில் ரூ.4½ லட்சம் செலவில் புதுஎடையூர், புதுகல்பாக்கம் பகுதி கடலில் 5 கிலோ மீட்டர் தொலைவில் செயற்கை பவளப்பாறைகளை உருவாக்க முடிவெடுக்கப்பட்டு உள்ளது.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அருகே புதுஎடையூர், புதுகல்பாக்கம் ஆகிய மீனவ கிராமங்கள் உள்ளது. இந்த நிலையில் வடபகுதி கோவளத்திலும், தென்பகுதி கல்பாக்கத்திலும் செயற்கை பவளப்பாறைகள் அதிகமாக உள்ளன.

    அங்கு அதிகளவில் மீன்கள் கிடைத்தாலும் ஊர் கட்டுப்பாடு காரணமாக புதுஎடையூர், புதுகல்பாக்கம் கிராம மீனவர்கள் அங்கு சென்று மீன்பிடிக்க முடியாத நிலை உள்ளது.

    இதனால் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டு மீனவ கிராமங்களுக்கு இடையே மோதல் சம்பவமும் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் கல்பாக்கம் அணுமின் நிலையம் சார்பில் ரூ.4½ லட்சம் செலவில் புதுஎடையூர், புதுகல்பாக்கம் பகுதி கடலில் 5 கிலோ மீட்டர் தொலைவில் செயற்கை பவளப்பாறைகளை உருவாக்க முடிவெடுக்கப்பட்டு உள்ளது.

    அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அணுமின் நிலைய இயக்குனர் ரவிசத்ய நாராயணா முன்னிலையில் கையெழுத்தானது. இதில் ஊர் தலைவர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    பல்லாவரம் அருகே சிக்னல் கோளாறால் மின்சார ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
    தாம்பரம்:

    பல்லாவரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி இன்று காலை 9.15 மணியளவில் மின்சார ரெயில் புறப்பட்டு சென்றது.

    பல்லாவரம் - திரிசூலம் இடையே சென்ற போது இணைப்பு தண்டவாள பகுதி மாறததால் சிக்னல் கோளாறு ஏற்பட்டு இருந்தது.

    இதையடுத்து கடற்கரை நோக்கி சென்ற அனைத்து ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதேபோல் தாம்பரம் நோக்கி சென்ற ரெயில்களும் நிறுத்தப்பட்டன.

    இது குறித்து தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஊழியர்கள் விரைந்து வந்து தண்டவாளத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து 9.45 மணியளவில் தண்டவாளம் சரிசெய்யப்பட்டு சிக்னல் சீரானது. மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டதால் அதில் இருந்த பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

    வார்தா புயலில் சேதம் அடைந்த பள்ளி கட்டிடத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் வாலாஜாபாத் சாலையில் உள்ள கீழ் ஒட்டிவாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு கீழ்ஒட்டிவாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் படித்து வருகின்றனர்.

    கடந்த மாதம் வீசிய வர்தா புயல் காரணமாக பள்ளி கட்டிடத்தின் மீது அருகில் உள்ள மரம் முறிந்து விழுந்தது. இதில் பள்ளியின் மேற்கூரை முற்றிலும் சேதமடைந்த கட்டிடத்தில் விழுந்த மரம் மட்டும் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது. சேதமடைந்த பள்ளியின் மேற்கூரை இது வரை சீரமைக்கப்படவில்லை.

    இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது:-

    பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரை மீது விழுந்த மரத்தின் ஒருபகுயை மட்டுமே அகற்றினோம். ஒருபெரிய கிளை இன்னும் கூரை மீதே உள்ளது. மேலும் ஓடுகள் மற்றும் செங்கற்கள் பள்ளி வளாகத்திலேயே சிதறி கிடக்கின்றன. சேதமடைந்த வகுப்பு கட்டிடங்கள் இடிந்து விழும் நிலை உள்ளது. சில சமயங்களில் மாணவ மாணவிகள் அபாயகரமான அந்த கட்டிடத்தின் அருகில் சென்று விளையாடுவதால் ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என பயமாக உள்ளது.

    தற்போது அரையாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறை அளித்து இன்று பள்ளி திறந்துள்ள நிலையில் விடுமுறை சமயத்தில் பள்ளி கட்டிடம் சீரமைக்கப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால் சீரமைப்பு பணிகள் ஏதும் நடக்கவில்லை.

    எனவே மாவட்ட நிர்வாகம் சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் .

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    பழவந்தாங்கலில் இன்று காலை மின்சார ரெயிலில் இருந்து விழுந்து தாய்-மகள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    ஓட்டேரியை சேர்ந்தவர் சந்திரா (வயது 54). இவரது மகள் அம்பிகா (26). இவர் திருமணம் ஆகி மடிப்பாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். புத்தாண்டையொட்டி சந்திரா, மகள் வீட்டிற்கு சென்றிருந்தார்.

    இன்று காலை இருவரும் பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில் நின்றனர். அவர்கள் கடற்கரையை நோக்கி சென்ற மின்சார ரெயிலில் ஏறினர்.

    அப்போது அவர்கள் வைத்திருந்த கைப்பையை பிளாட்பார இருக்கையிலேயே மறந்து வைத்திருந்தது தெரிந்தது.

    இதற்குள் மின்சார ரெயில் பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட தயாரானது. அதிர்ச்சி அடைந்த சந்திராவும், அம்பிகாவும் ஓடும் ரெயிலில் இருந்து இறங்க முயன்றனர்.

    இதில் நிலைதடுமாறிய இருவரும் அடுத்தடுத்து பிளாட்பாரத்தில் விழுந்தனர். தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே சந்திராவும், அம்பிகாவும் பரிதாபமாக இறந்தனர்.

    அவர்கள் வைத்திருந்த பையில் மருத்துவமனை சீட்டுகள் இருந்தது. ஆஸ்பத்திரிக்கு செல்ல அவர்கள் வந்தபோது ரெயிலில் இருந்து விழுந்திருந்கலாம் என்று தெரிகிறது. அவர்களை பற்றிய மற்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.

    இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவத்தால் சென்னை கடற்கரை மார்க்கத்தில் சிறிது நேரம் மின்சார ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×