என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    காஞ்சீபுரம் அருகே தரைப் பாலத்தில் லாரி மோதிய விபத்தில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    காஞ்சீபுரம்:

    திருவள்ளூரை அடுத்த புட்லூர் சி.எஸ்.ஐ.பள்ளி தெருவில் வசித்தவர் பாபு (41). மினிவேன் டிரைவர். புட்லூர் பக்தவச்சலம் நகரை சேர்ந்த கிளீனர் ஜெபஸ்டின்.

    இருவரும் திருவள்ளூரில் இருந்து மினி லாரியில் பர்னிச்சர் சாமான்களை ஏற்றிக் கொண்டு பெங்களூருக்கு சென்றனர். அங்கு பர்னிச்சர் சாமான்களை இறக்கி விட்டு மீண்டும் திருவள்ளூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    காஞ்சீபுரம் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை தாமல் பகுதியில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி அங்கிருந்த தரைப் பாலத்தில் மோதியது.

    இதில் டிரைவர் பாபு அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். கிளீனர் ஜெபஸ்டின் படுகாயம் அடைந்து காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து பாலுச்செட்டி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இதேபோல், வாலாஜாபாத்தை அடுத்த ஒரகடத்தில் தனியார் கார் தொழிற்சாலை உள்ளது. இங்கு அரியலூர் மாவட்டம் எடைக்காடு கிராமத்தை சேர்ந்த என்ஜினீயர் தியாகராஜன் (29) இளநிலை பொறியாளராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் பணியின்போது எந்திரத்தில் ஏற்பட்ட பழுதை நீக்கும் முயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக எந்திரம் திடீரென இயங்கியது. இதில் தியாகராஜனின் தலை நசுங்கியது. உடனடியாக அவரை தாம்பரம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே தியாகராஜன் பரிதாபமாக இறந்தார்.
    காஞ்சீபுரம் நீதிமன்ற வளாகத்தில் புதியதாக கூடுதல் மாவட்ட விரைவு நீதிமன்றம் திறப்பு விழா நடந்தது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி புதிய மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தை திறந்து வைத்து பேசினார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் நீதிமன்ற வளாகத்தில் புதியதாக கூடுதல் மாவட்ட விரைவு நீதிமன்றம் திறப்பு விழா நடந்தது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கலந்து கொண்டு புதிய மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தை திறந்து வைத்து பேசினார்.

    அப்போது அவர் பேசுகையில், ‘நீதிமன்றத்தையோ, நீதிப் பணியையோ யாரும் சொந்தம் பாராட்டாமல், பொது சேவையாக கருதி அனைத்து பொது மக்களுக்கும் உதவிடும் வகையில் பணியாற்ற வேண்டும். விரைவில் தமிழகம் முழுவதும் புதிய நீதிமன்றங்கள் உருவாக உள்ளது. இதனால் தேக்கம் அடைந்துள்ள ஏராளமான வழக்குகள் நிறைவுபெரும்’ என்றார்.

    விழாவில் காஞ்சீபுரம் மாவட்ட நீதிபதி ஆர்.செல்வகுமார், மாவட்ட நீதிபதி-2 ஜி.கருணாநிதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜா.முத்தரசி, வழக்கறிஞர் சங்க தலைவர்கள் அப்துல் ஹக்கீம், ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ஸ்ரீபெரும்புதூர் அருகே தலையில் கல்லைப்போட்டு வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டூர் கோட்டை காட்டரம்பாக்கம் சாலையில் உள்ள ஏரிக்கரை அருகே 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    அவரது தலை, கல்லை போட்டு நசுக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மணிமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கொலையுண்ட வாலிபர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரியவில்லை.

    அவர் ஜீன்ஸ் பேண்ட்டும், சட்டையும் அணிந்து இருந்தார். வடமாநிலத்தவர் தோற்றத்தில் காணப்பட்டார்.

    முன்விரோதத்தில் அவரை யாரேனும் கடத்தி கொன்று வீசினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடந்து வருகிறது.

    இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மாயமானவர்கள் பற்றிய விபரத்தையும் சேகரித்து வருகிறார்கள். வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மேல்மருவத்தூர் அருகே அரசு பஸ்-லாரி மோதலில் 20 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுராந்தகம்:

    திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை அரசு பஸ் புறப்பட்டது. சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் அதில் இருந்தனர்.

    அதிகாலை 6.30 மணி அளவில் மேல்மருவத்தூர் அருகே அரசு பஸ் வந்து கொண்டு இருந்தது. அப்போது சாலையோரத்தில் பழுதாகி நின்ற லாரி மீது திடீரென அரசு பஸ் மோதியது.

    இதில் பஸ்சின் முன்பகுதி, பலத்த சேதம் அடைந்தது. டிரைவர் உள்பட 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் மேல் மருவத்தூர் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களுக்கு செங்கல்பட்டு, மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    காயம் அடைந்தவர்கள் விபரம் உடனடியாக தெரிய வில்லை. அவர்கள் சென்னை, திருவண்ணாமலை பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.

    இந்த விபத்தால் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை 9.30 மணிக்கு பிறகே போக்கு வரத்து சீரானது.

    இது குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்போரூரை அடுத்த சிறுதாவூர் காட்டுப்பகுதி சாலை ஓரத்தில் லேசான காயத்துடன் பூனை சாயலில் நரி முகத்தை போன்று அதிசய விலங்கு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
    திருப்போரூர்:

    திருப்போரூரை அடுத்த சிறுதாவூர் காட்டுப்பகுதி சாலை ஓரத்தில் லேசான காயத்துடன் பூனை சாயலில் நரி முகத்தை போன்று அதிசய விலங்கு ஒன்று இருந்தது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்போரூர் வனத்துறையினர் சுமார் அரை அடி உயரமும், 1 அடி நீளமும் உடைய அந்த விலங்கை கூண்டில் பிடித்து வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

    இந்த விலங்கு அரிய வகை இந்தியன் சிறிய புனுக்கு பூனை என்பது தெரிய வந்தது. மரம் ஏறும் வகையைச் சார்ந்தது என்பதும், சிறிய வகை உயிரினங்களை உணவாக உட்கொள்ளும் என தெரிவித்தனர். காட்டுப் பகுதியிலிருந்து சாலைக்கு வந்த போது அடையாளம் தெரியாத வாகனத்தால் அடிபட்டு காயம் ஏற்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. உடனடியாக அதை வனத் றையினர் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
    மலேசியாவில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை பயணிகள் வந்த விமானத்தில் ஒரு கிலோ தங்கம் கடத்திய 10 பேர் கும்பல் சிக்கியது.
    ஆலந்தூர்:

    மலேசியாவில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது குழுவாக வந்த 10 பேர் தலா 100 கிராம் வீதம் தங்க கட்டி கடத்தி வந்தது தெரிந்தது. அவர்களிடம் இருந்து மொத்தம் 1 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    விசாரணையில் அவர்கள் சென்னையை சேர்ந்த அய்யாசாமி என்பவரது தலைமையில் சுற்றுலா விசாவில் மலேசியாவில் இருந்து வந்தது தெரிந்தது. அதிகாரிகளிடம் சிக்காமல் இருப்பதற்காக ஒவ்வொரு வரும் 100 கிராம் தங்க கட்டிகளாக பிரித்து கடத்தி வந்து உள்ளனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து விலை உயர்ந்த தலா ஒரு ஐபோன் வீதம் மொத்தம் 10 ஐபோனும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், ஐபோனின் மொத்த விலை ரூ.36 லட்சம் ஆகும். இதுதொடர்பாக 10 பேரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதே போல் மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 700 கிராம் தங்கம் கடத்தி வந்த சென்னையை சேர்ந்த இஸ்மாயில் சிக்கினார். அவரிடம் இருந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.21 லட்சம் ஆகும்.
    தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வீதம் நிவாரண தொகை வழங்கப்பட வேண்டும் என்று வைகோ கூறினார்.
    ஆலந்தூர்:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மதுரை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் இன்று காலை நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வரலாறு காணாத வறட்சி தமிழகத்தை வாட்டி வதைக்கிறது. இதனால் விவசாயிகள் தற்கொலை சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

    இது மேலும் தொடர கூடாது. தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வீதம் நிவாரண தொகை வழங்கப்பட வேண்டும். உயிர் இழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும்.

    ஜல்லிக்கட்டு குறித்த விவாதம் அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் மாறி, மாறி நடத்தி கொண்டிருக்கிற நிலையில் ஜல்லிக்கட்டு நடக்குமா? நடக்காதா? என்ற ஏக்கம், கவலை தென் மாவட்ட மக்களுக்கு நிலவுகிறது.

    ம.தி.மு.க. சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாமல்லபுரம் கடலில் வார்தா புயலுக்குப்பின் பலாசிமீன் என்று சொல்லக்கூடிய பலூன் பிஷ் அரியவகை மீன்கள் அதிக அளவில் வலைகளில் சிக்குகிறது.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் கடலில் வார்தா புயலுக்குப்பின் பலாசிமீன் என்று சொல்லக்கூடிய பலூன் பிஷ் அரியவகை மீன்கள் அதிக அளவில் வலைகளில் சிக்குகிறது.

    இந்த மீன் கடலுக்குள் இருக்கும் போது சாதாரண மீன்கள் போன்று தெரியும். மீனவர்களின் வலைகள் பட்டதும் அதன் உடல் முழுவதும் உள்ள முட்கள் வலைகளை கிழித்து சேதப்படுத்தும்.

    இந்த வகை மீன்களின் முட்கள் சீனா, ஜப்பான் போன்ற வெளிநாடுகளில் மருந்துக்கு பயன்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் பலாசி மீன்கள் விலை போவதில்லை. இதனை உணவுக்கும் பயன்படுத்த முடியாது.

    எனவே பிடிபடும் பலாசி மீன்களை மீனவர்கள் கடலோரத்தில் வீசி விடுவார்கள். இதனால் துர்நாற்றம் வீசி சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன் மாமல்லபுரம் கடலோரத்தை சுற்றி பார்க்கும் சுற்றுலா பயணிகளின் கால்களையும் குத்தி கிழித்து காயப்படுத்துகிறது.

    மீன் முள்களில் வி‌ஷத் தன்மை இருப்பதால் பேரூராட்சி நிர்வாகம் கடலோர பகுதிகளை தினசரி ஆய்வு செய்து மீன்களை அப்புறப்படுத்தி தூய்மையாக வைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    மத்தூர் அருகே கள்ளகாதல் தகராறில் கூலித்தொழிலாளி மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கருங்காலிப்பட்டியைச் சேர்ந்தவர் பச்சியப்பன் கூலித்தொழிலாளி.

    இவரது மனைவி மகேஸ்வரி(28). இவர் கடந்த 30-ந் தேதி தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்துக் கொண்டார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பச்சியப்பன் மத்தூர் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மகேஸ்வரி உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மகேஸ்வரிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மதன் மோகன் என்பவருக்கு கடந்த சில ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்தது தெரிய வந்தது.  இதனை தட்டி கேட்டதால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த மகேஸ்வரி தனது உடலில் மண்எண்ணை ஊற்றிக் கொண்டு தீவைத்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து மதன்மோகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பச்சியப்பன்-மகேஸ்வரி தம்பதிக்கு நவீன் (12), நித்திஷ்(8) என்ற 2 மகன்கள் உள்ளது குறிப்பிடதக்கது.
    காஞ்சீபுரம் அருகே ஆசிரியை தாக்கியதால் மாணவி கைகள் வீங்கியது. இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுக்கா போலீசில் மாணவி காவ்யாவின் பெற்றோர் புகார் தெரிவித்தனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த படுநெல்லி கிராமத்தை சேர்ந்தவர் ரவி. அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மகள் காவ்யா. இவர் படுநெல்லி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    நடந்து முடிந்த அரையாண்டு தேர்வில் காவ்யா குறைவான மதிப்பெண் பெற்றதாக தெரிகிறது. இதனை கண்டித்து ஆசிரியை ஒருவர் காவ்யாவின் கையில் பிரம்பால் தாக்கினார். அவரது இரண்டு கைகளிலும் மணிக்கட்டு பகுதிகள் வீங்கியது.

    வலியால் துடித்த காவ்யா பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு செல்லாமல் வகுப்பு அறையிலேயே அழுது கொண்டு இருந்தார். இதுபற்றி அறிந்ததும் அவரது பெற்றோர் பள்ளிக்கு சென்று காவ்யாவிடம் விபரம் கேட்டனர். அப்போது ஆசிரியை தாக்கியது குறித்து அழுது கொண்டு தெரிவித்தார்.



    காயம் அடைந்த காவ்யாவுக்கு உடனடியாக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுக்கா போலீசில் மாணவி காவ்யாவின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாம்பரம் பகுதியில் விடிய விடிய நடந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாததால் 12 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    தாம்பரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி உத்தரவின் பேரில் தாம்பரம் வருவாய் கோட்ட அலுவலர் ராஜேந்திரன், தாசில்தார்கள் குமுதா, இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் நேற்று இரவு புறநகர் பகுதிகளில் லாரிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    பல்லாவரம், தாம்பரம், முடிச்சூர் மற்றும் சேலையூர் பகுதிகளில் விடிய விடிய நடந்த சோதனையில் கருங்கல், மணல் ஏற்றி வந்த 12 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. உரிய ஆவணங்கள் இல்லாததால் அவை பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மேடவாக்கத்தில் கொலை செய்யப்பட்ட என்ஜினீயர் அறிவழகனின் மனைவி சுரேகாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் வாக்குமூலத்தில் பரபரப்பான தகவல்களை தெரிவித்துள்ளார்.
    சென்னை:


    மேடவாக்கத்தில் கொலை செய்யப்பட்ட என்ஜினீயர் அறிவழகனின் மனைவி சுரேகாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கைதான சுரேகா, கணவர் அறிவழகனை கொலை செய்ய திட்டம் போட்டது குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

    கள்ளக்காதலன் கணபதியுடன் பழகிய பின்னர் என்னால் கணவருடன் சந்தோ‌ஷமாக வாழபிடிக்கவில்லை. அவ்வப்போது எனது கணவரும் சந்தேகப்பட்டு என்னுடன் சண்டை போடுவார்.

    இதுபற்றி கணபதியிடம் நான் தெரிவித்தேன். அறிவழகனை கொன்று விட்டு 2 பேரும் சேர்ந்து வாழலாம் என்று கணபதி கூறினார். எப்படி கொலை செய்வது என்று குழப்பமாக இருந்தது.

    சாப்பாட்டில் வி‌ஷம் வைத்தோ, அல்லது தூக்க மாத்திரைகளை அதிகம் கலந்தோ அறிவழகனுக்கு தெரியாமல் கொடுத்து விடலாமா? என்றும் யோசித்தோம். ஆனால் அந்த திட்டம் கைகூடாமல் போய் விட்டது.

    இந்த நேரத்தில் தான் புத்தாண்டு கொண்டாட்டத் தின் போது, எங்கள் பகுதியில் வைத்து இளைஞர்கள் சிலர், மது அருந்தினர். இதனை எனது கணவர் அறிவழகன் தட்டிக்கேட்டார். அப்போது மது குடித்த இளைஞர்களுக்கும், எனது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கணவரை கொலை செய்து விட்டு பழியை அந்த இளைஞர்கள் மீது போடுவதற்கு திட்டம் போட்டோம்.

    இதன்படி, நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் நான்தான் கணபதியை வீட்டுக்கு வரச்சொன்னேன்.

    அவர் வந்ததும் நானே கதவை திறந்து விட்டேன். அப்போது எனது கணவர் அறிவழகன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். 2 பேரும் சேர்ந்து தலையணையால் அமுக்கினோம். அப்போது அவர் திமிறியதால் கத்தியால் குத்திக் கொன்றோம்.

    பின்னர் கையையும், காலையும் பிடித்து கணவர் அறிவழகனின் உடலை வெளியில் தூக்கி வந்து வீட்டுக்கு அருகில் வீசினோம். போதையில் இருந்த வாலிபர்களே அறிவழகனை கொலை செய்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முடிவு செய்தோம்.

    இதற்காக தயாராக வைத்திருந்த காலி மதுபாட்டில்களையும், பிளாஸ்டிக் டம்ளர்களையும் உடலின் அருகில் வீசினோம்.

    பின்னர் கள்ளக்காதலன் கணபதியை அங்கிருந்து தப்பிச் சென்றுவிடுமாறு கூறினேன். இதன்படி கணபதி, ஓடிவிட்டார். நான் உடனே வீட்டுக்குள் சென்று சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து எனது கையில் வெட்டிக்கொண்டேன். பின்னர் எனது தாய் சம்பூர்ணத்துக்கு போன் செய்து, வீட்டு அருகில் மது அருந்தியவர்கள் கணவரை கொலை செய்து விட்டு எனது நகைகளை பறித்துக் கொண்டு சென்று விட்டனர் என்று ஏமாற்றினேன். அவரும் உறவினர்களும் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தனர்.

    இதன் மூலம் எங்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் வராது என்றும், போலீசாரை திசை திருப்பி விடலாம் என்றும் நினைத்தோம்.

    இவ்வாறு சுரேகா வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    அறிவழகன் கொலை செய்யப்பட்ட போது 4 வயது குழந்தையான சாதனா வீட்டிலேயே தூங்கிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
    ×