என் மலர்
காஞ்சிபுரம்
ஆலந்தூர்:
மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று நள்ளிரவு மர்ம வாலிபர் தொலைபேசியில் பேசினார்.
அப்போது “மும்பை, சென்னை, ஐதராபாத் ஆகிய மூன்று விமான நிலையங்களில் ஏதாவது, ஒரு இடத்தில் இருந்து புறப்படும் விமானத்தை தீவிரவாதிகள் கடத்த உள்ளனர்.
மேலும் அதனை நடுவானில் வெடிக்க வைக்கவும் திட்டமிட்டு இருக்கிறார்கள். முடிந்தால் காப்பாற்றி கொள்ளுங்கள்” என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டான்.

இதே போல் இ-மெயில் மூலமும் விமானத்தை கடத்த போவதாக தகவல் கிடைத்தது. பெண் ஒருவர் அனுப்பிய அந்த தகவலில் 6 வாலிபர்கள் விமானத்தை கடத்தபோவதாக கூறியதை தான் கேட்டதாக அதில் தெரிவித்து இருந்தார்.
இந்த மிரட்டலை தொடர்ந்து சென்னை, மும்பை , ஐதராபாத் ஆகிய 3 விமான நிலைய அதிகாரிகளுக்கும் , மத்திய உளவுத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக சென்னை, மும்பை, ஐதராபாத் விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க அவர்கள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. பாதுகாப்பு பணியில் கூடுதல் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வெடிகுண்டு நிபுணர்களும் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.
விமான நிலையத்துக்கு வரும் அனைத்து வாகனங்களும் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது.
வெளிநாட்டு முனையம், உள்நாட்டு முனையத்துக்கு வரும் பயணிகள் அனைவரும் கூடுதல் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால். சென்னை விமான நிலையம் பரபரப்பாக காணப்படுகிறது.
பாதுகாப்பு கருதி சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரு நாள் மட்டும் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாட்டம் உள்ளதா. என்பது குறித்து கண்காணிப்பு கேமிரா மற்றும் ரோந்து பணி மூலம் போலீசார் தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
இதே போல் மும்பை, ஐதராபாத் விமான நிலையத்திலும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா மே 10-ந் தேதி தமிழகம் வருகிறார்.
மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன், வீரமணி ஆகியோர் பா.ஜனதா தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது என்று கூறுகிறார்கள்.

தமிழகத்தில் பா.ஜனதா கண்டிப்பாக கால் ஊன்றும்.
டெல்லியில் போராடும் விவசாயிகள் உள்நோக்கத்துடன் போராடவில்லையென்றால் பல கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் ஆகியோர் அவர்களை சந்தித்து பேசும்போது அவர்கள் போராட்டத்தை கைவிட்டிருக்கலாமே. ஏன் போராட்டத்தை கைவிடவில்லை.

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை ராகுல் காந்தி சந்தித்து பேசினார். நதிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த ராகுல் காந்தி நதிகள் இணைப்பு சங்க விவசாயிகளை சந்தித்து பேசியது முரண்பாடானது.
தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் ராகுல் காந்தி கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் பேசி தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சீபுரம்:
மேற்கு தாம்பரம், ஜோதி நகரைச் சேர்ந்தவர் பெத்து ராஜ் (வயது 58). சென்னையில் உள்ள மத்திய சுங்கத்துறையில் சூப்பிரண்டாகப் பணியாற்றி வந்தார். இவரது மகள் பிரியா (24) பி.டெக். முடித்து உள்ளார்.
பிரியாவுக்கு பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக விசாரிப்பதற்காக நேற்று காலை பெத்துராஜ் மகளுடன் பெங்களூருக்கு காரில் சென்றார். பெத்துராஜ் காரை ஓட்டினார்.
வேலை முடிந்ததும் இரவு இருவரும் காரில் சென்னை நோக்கி திரும்பி கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 3.30 மணி அளவில் காஞ்சீபுரத்தை அடுத்த பொன்னேரிக்கரை சென்னை- பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது.
அப்போது காரின் பின் பக்க டயர் வெடித்தது. இதில் நிலைதடுமாறிய கார் சாலையோரத்தில் உருண்டு கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பெத்து ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். பிரியாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் காஞ்சீபுரம் தாலுக்கா இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த பிரியாவை சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பலியான பெத்து ராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடும்படி சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதனால் தமிழகம் முழுவதும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டன.
மூடப்பட்ட கடைகளுக்கு பதிலாக குடியிருப்பு பகுதிகளில் புதிய மதுக்கடைகள் திறக்க அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல இடங்களில் பெண்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.
நேற்று முன்தினம் திருப்பூர் சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்ணை போலீஸ் அதிகாரி தாக்கிய சம்பவத்துக்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் திருப்போரூர் அருகே புதிதாக கட்டப்பட்ட மதுக்கடையை இடித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்போரூரை அடுத்த ஆலத்தூரில் இருந்த மதுக் கடை கடந்த சில நாட்களுக்கு முன்பு மூடப்பட்டது. இதையடுத்து சிறுதாவூர் சாலை, ஏரிக்கரை அருகே தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் புதிய மதுக்கடை திறக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கான கட்டுமான பணியும் நடந்தது.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தனர். இதனால் கடந்த சில நாட்களாக கட்டுமான பணி நடைபெறாமல் இருந்தது.
இதற்கிடையே கடந்த 2 நாட்களாக மீண்டும் கட்டுமான நடைபெற்றது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆலத்தூர் பகுதி மக்கள், பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கடப்பாரை, சுத்தியல், இரும்பு கம்பியுடன் அங்கு திரண்டனர்.
அவர்கள், புதிய மதுக்கடை கட்டிடத்தை இடித்து தள்ளினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு எற்பட்டது.
தகவல் அறிந்ததும் திருப்போரூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் சமாதான பேச்சு நடத்தினர். ஆனால் சமாதானத்தை ஏற்காமல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திடீரென பொதுமக்கள் சிறுதாவூர் சாலையில் மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பொதுமக்களின் இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இது குறித்து கிராம மக்கள் கூறும்போது, “புதிய மதுக்கடை திறந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மது போதையில் வாகனம் ஓட்டி செல்பவர்களால் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படும். மேலும் இந்த பகுதியில் ஊராட்சி குடிநீர் கிணறு உள்ளது. அதில் கழிவுகள் கொட்டப்பட்டால் குடிநீர் ஆதாரம் பாதிக்கும். எங்களுக்கு மதுக்கடை வேண்டாம். இதற்காக நாங்கள் போராட தயாராக உள்ளோம். மதுக்கடையை அகற்றும் வரை எங்களது போராட்டம் தொடரும்” என்றார்.
இலங்கையில் இருந்து இன்று காலை 7.30 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.
ஆந்திரா மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த முகமது ரபீக்கிடம் சோதனை செய்தபோது அவர் வைத்திருந்த எமர்ஜன்சி லைட்டில் 1 கிலோ 50 கிராம் எடை கொண்ட தங்க கட்டிகள் இருந்தன.
அதே போல் சவுதி அரோபியாவில் இருந்து இன்று காலை 6.30 மணிக்கு சென்னைக்கு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ஆந்திரா மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த மெகபூப் பாஷா என்பவரை சோதனை செய்தபோது அவர் வைத்திருந்த ஹோம் தியேட்டரில் 950 கிராம் மதிப்புள்ள தங்க கட்டிகள் இருந்தன.
முகமது ரபீக், மெகபூப் பாஷா இருவரிடமும் விசாரித்தபோது அவர்கள் உறவினர்கள் என்று தெரிய வந்தது. அவர்கள் 3 நாட்களுக்கு முன்பு சுற்றுலா விசாவில் சவுதி அரேபியா சென்றுள்ளனர். அங்கிருந்து முகமது ரபீக் இலங்கை வழியாகவும், மெகபூப் பாஷா நேரடியாகவும் தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது.
தாங்கள் வேலை இல்லாமல் இருப்பதாகவும் ஒரு கும்பல் சொன்னதின் பேரில் தங்கத்தை கடத்தி வந்ததாகவும் தங்கத்தை கொண்டு கொடுத்தால் ரூ.5000 பணம் தருவார்கள் என்றும் தெரிவித்தனர்.
அவர்களை கடத்தல் கும்பலுக்கு போன் செய்ய வைத்தனர். அதன் பேரில் விமான நிலைய பார்க்கிங் பகுதியில் சென்று கொண்டிருந்த கடத்தல்காரன் ஒருவனை கைது செய்தனர்.
அதே போல் முகமது ரபீக், மெகபூப் பாஷா ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.60 லட்சம் ஆகும்.
ஆலந்தூர்:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை சந்தித்து பேசினார்.
பின்னர் நேற்று நள்ளிரவு விமானம் மூலம் அவர் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். விஜயகாந்த் ஆணைக்கிணங்க அவர்களை சந்தித்து பேசினேன். தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தேன். அவர்களுடன் மண் சோறு சாப்பிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டேன்.
விவசாயி அய்யாக்கண்ணு பேசும்போது, கட்சிக்காரர்களுடன் நாங்கள் பேசினால் எங்களுக்கு அரசியல் சாயம் பூசுகிறார்கள் என்று வேதனையோடு தெரிவித்தார்.

விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக நான் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினேன். மற்ற மத்திய மந்திரிகளை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
பிரதமரை சந்தித்து கோரிக்கைகளை தெரிவித்தால் மட்டுமே போராட்டம் முடிவுக்கு வரும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். நாங்களும் எங்களால் முடிந்த வரையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். விவசாயிகள் நன்றாக இருந்தால்தான் நாம் நன்றாக இருக்க முடியும். எனவே விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அரசியல் கட்சியை தடை செய்ய வேண்டும்.
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியிருப்பது ஊழல் நிறைந்திருப்பதையே காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
துபாயில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை 5.30 மணிக்கு பயணிகள் விமானம் வந்தது. 164 பயணிகள் அதில் இருந்தனர்.
ஓடு தளத்தில் தரையிறங்கிய போது விமானத்தின் முன்பக்க சக்கரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டு சுழலாமல் நின்றது. இதனால் ஓடு தளத்தில் சக்கரம் உரசி புகை ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த விமானி சாமர்த்தியமாக விமானத்தை நிறுத்தினார்.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இழுவை எந்திரம் வரவழைக்கப்பட்டு அந்த விமானத்தை இழுத்து வழக்கமான இடத்தில் நிறுத்தினர். பின்னர் பயணிகள் அனைவரும் பத்திரமாக இறங்கிச் சென்றனர்.
இச்சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த விமானம் காலை 6.15 மணிக்கு மீண்டும் டெல்லிக்கு புறப்பட இருந்தது. இதை தொடர்ந்து கோளாறு சரி செய்யப்பட்டு சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
ஆலந்தூர்:
தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பூரில் மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்ணை போலீஸ் அதிகாரி மிருகத்தனமாக தாக்கியதை வன்மையாக கண்டிக்கிறேன். அந்த போலீஸ் அதிகாரியை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
மதுக்கடைகளை மூட வேண்டும் என்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. நெடுஞ்சாலைகளை குறுக்கு சந்துகளாக பெயர் மாற்றி புதிய மதுக்கடைகள் திறக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். தமிழக அரசு புதிய மதுக்கடைகளை திறக்க கூடாது. அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும்.

மதுக்கடைகளுக்கு எதிராக விரைவில் தமிழகம் முழுவதும் பா.ஜனதா போராட்டம் நடத்தும்.
விவசாயிகளுக்கு உத்தர பிரதேச பா.ஜனதா அரசு பயிர்க்கடனை தள்ளுபடி செய்தது. அதே போல் பயிர்க்கடனை தள்ளுபடி செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கும் உண்டு.
மோடி அரசு விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. தமிழகத்தில் இதில் 50 லட்சம் விவசாயிகள் வரை சேரலாம். ஆனால் வெறுமனை 13 ஆயிரம் பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். இதுபற்றி தமிழக அரசு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வில்லை.
டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் போராட்டத்தை கைவிட வேண்டும். அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்வு காத்திருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சுங்குவார்சத்திரம் குளக்கரை தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகள் புவனேஸ்வரி (வயது 17). பன்னூரில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். தற்போது ஆண்டு இறுதி தேர்வு எழுத இருந்தார்.
இவரும் அதே பகுதி வேளாங்கண்ணி நகரை சேர்ந்த ஜமீலும் (24) கடந்த 2 ஆண்டாக காதலித்து வந்தனர். பேரம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஜமீல் பஸ்சில் செல்லும் போது புவனேஸ்வரியுடனான காதலை வளர்த்து வந்தார்.
காதல் விவகாரம் இருவீட்டு பெற்றோருக்கும் தெரிய வந்தது. ஆரம்பத்தில் இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் புவனேஸ்வரியின் பெற்றோர் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த வாரத்தில் அவர்கள் மீண்டும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது பற்றி ஜமீல் அவர்களிடம் கேட்ட போது கண்டித்ததாக தெரிகிறது. இதனால் காதல் ஜோடி கவலை அடைந்தனர்.
நேற்று மாலை புவனேஸ்வரியின் பெற்றோர் அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். வீட்டில் புவனேஸ்வரி மட்டும் தனியாக இருந்தார்.
இது பற்றி அறிந்த ஜமீலும் அங்கு வந்தார். வாழ்வில் ஒன்று சேரமுடியாத அவர்கள் தற்கொலை செய்ய முடிவு செய்தனர்.
இருவரும் மின்விசிறி கொக்கியில் ஒரே துப்பட்டா வால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இரவு நீண்ட நேரத்திற்கு பின்னர் புவனேஸ்வரியின் பெற்றோர் வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது புவனேஸ்வரியும், ஜமீலும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து சுங்குவார் சத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து 2 போரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
காதல்ஜோடி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெருங்களத்தூர் பஸ் நிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலையில் இருந்த 2 மதுக்கடைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மூடப்பட்டது.
இதையடுத்து பெருங்களத்தூர், சதானந்தபுரம் சாலையில் புதிதாக 2 மதுக்கடைகள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
குடியிருப்புக்கு மத்தியில் திறக்கப்படும் இந்த மதுக்கடைகளுக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் புதிதாக அமைக்கப்பட்ட மதுக்கடையை முற்றுகையிட்டனர்.
மதுக்கடையை இடமாற்றம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பா.ஜனதா தேசிய பொதுக்குழு உறுப்பினர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம், மாவட்ட துணைத் தலைவர் பொற்றாமரை சங்கரன், விஜயபாரதி, சுபாஷ் மற்றும் தி.மு.க.வினர் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
அப்போது சிலர் மதுக்கடை போர்டை அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பீர்க்கன்கரணை போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
ஜெர்மனி நாட்டை சேர்ந்த லோமன் ஜென்னு என்ற பெண் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தார்.
கடந்த 2-ந்தேதி பட்டிபுலம் கடற்கரையில் அவர் ஓய்வு எடுத்து கொண்டு இருந்தார். அப்போது 3 பேர் கும்பல் அவரை கத்தி முனையில் மிரட்டி அருகில் உள்ள சவுக்கு தோப்புக்குள் தூக்கி சென்று கற்பழித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.
இது தொடர்பாக மாமல்லபுரம் போலீசார் வழக்குபதிவு செய்தனர். குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
பின்னர் லோமன் ஜென்னு வாரணாசிக்கு சென்று விட்டார். இதையடுத்து குற்றவாளிகள் என்று சந்தேகப்படுபவர்களின் புகைப்படத்தை ‘வாட்ஸ் அப்’பில் அனுப்பி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை சந்தேகத்துக்கிடமான 2 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களை திருப்போரூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமனி தலைமையில் தனிப் படை போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அவர்களின் புகைப்படத்தை வாட்ஸ்-அப் மூலம் லோமன் ஜென்னுக்கு போலீசார் அனுப்பினர். இதில் ஒருவர் தன்னை கற்பழித்த குற்றவாளி என்று அவர் உறுதிப்படுத்தி உள்ளார்.
இதையடுத்து பிடிபட்ட 2 வாலிபர்களையும் ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களின் கூட்டாளிகளையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
குற்றவாளிகளை நேரில் அடையாளம் காட்ட லோமன் ஜென்னுவை மாமல்லபுரத்துக்கு வருமாறு போலீசார் அழைத்து உள்ளனர். அவர் ஓரிரு நாளில் இங்கு வருவார் என்று தெரிகிறது.
இது குறித்து தனிப்படை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, கற்பழிப்பு சம்பவம் நடந்த நேரத்தில் பட்டிபுலம் பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தில் பதிவான அழைப்புகளை வைத்து விசாரணையை தொடங்கினோம்.
சுமார் 400 அழைப்புகள் பதிவாகி இருந்தது. இதில் சந்தேகத்திற்கிடமான 50 பேர் பட்டியலை சேகரித்து ரகசியமாக கண்காணித்து 2 பேரை பிடித்து உள்ளோம். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது” என்றார்.
ஆலந்தூர்:
பழவந்தாங்கல் அருகே உள்ள மூவரசன்பேட்டை, கிருஷ்ணா நகரில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று இரவு விற்பனை முடிந்து ஊழியர்கள் கடையை பூட்டிச் சென்றனர்.
நள்ளிரவில் வந்த 3 பேர் கும்பல் மதுக்கடை ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த ரூ. 6 லட்சத்து 78 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்தனர். மேலும் 3 பெட்டி மதுபாட்டில்களையும் எடுத்து வெளியே வந்தனர்.
அந்த நேரத்தில் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் மார்ட்டின், பாஸ்கர் ஆகியோர் வெளியே வந்தனர். அவர்கள் கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர்.
இதற்குள் கொள்ளை கும்பல் 2 மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். அப்போது அவ்வழியே ரோந்து வந்த போலீஸ்காரர் ரவியும் அவர்களை மடக்க முயன்றார்.
ஆனால் கொள்ளையர்கள் மதுபாட்டில் பெட்டியை வீசி விட்டு ரூ. 6 லட்சத்து 78 ஆயிரத்துடன் தப்பி சென்று விட்டனர். இது குறித்து பழவந்தாங்கல் போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






