என் மலர்
காஞ்சிபுரம்
ஸ்ரீபெரும்புதூர்:
அ.தி.மு.க. வில் இருந்து டி.டி.வி. தினகரன் விலக்கி வைக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி அணியை சேர்ந்த அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். இதை வரவேற்ற ஓ. பன்னீர்செல்வம் ‘எங்கள் தர்மயுத்தத்துக்கு கிடைத்த முதல் வெற்றி’ என்றார்.
ஓ. பன்னீர் செல்வத்தின் இந்த பேச்சுக்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்தார். , ஓ.பி.எஸ். நிர்ப்பந்தத்தால் டி.டி.வி. தினகரனை நாங்கள் விலக்கி வைக்கவில்லை. 1½ கோடி அ.தி.மு.க தொண்டர்கள் விருப்பத்தின் பேரிலேயே டி.டி.வி தினகரனை கட்சியில் இருந்து விலக்கினோம். “அமெரிக்காவில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கும் நான் தான் காரணம் என்று ஓ.பி.எஸ். சொன்னாலும் சொல்வார்” என்றார்.
டி. ஜெயக்குமாரின் இந்த பேச்சுக்கு ஓ.பி.எஸ் அணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி நேற்று அளித்த பேட்டியின் போது டி.ஜெயக்குமாரை கண்டித்தார்.
இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மணிமங்கலம் பகுதியில் உள்ள ஏரி மராமத்து பணியை அமைச்சர் டி. ஜெயக்குமார் பார்வையிட்டார். அப்போது பேட்டி அளித்த டி.ஜெயகுமார், ஓ. பன்னீர்செல்வத்தை மீண்டும் விமர்சித்தார்.
அமைச்சர் டி. ஜெயக்குமார் கூறியதாவது:-
டி.டி.வி. தினகரன் குடும்பத்தை சேர்ந்தவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த தொண்டர்களின் விருப்பம். ஏற்கனவே தெளிவாக சொல்லப்பட்டு விட்டது. இனி கட்சியிலும், ஆட்சியிலும் தினகரன் குடும்பத்தினர் தலையீடு இருக்காது.
ஓ. பி.எஸ் சிடம் ஒரு சில சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். மாவட்ட செயலாளர்கள் யாரும் இல்லை. வருமான வரித்துறை சோதனைக்கு அமைச்சர்கள் யாரும் பயப்படவில்லை. மடியில் கனமில்லை. வழியில் பயமில்லை.

ஜெயலலிதா ஆட்சி இந்த நான்கு ஆண்டுகள் மட்டும் அல்ல. வரும் தேர்தல்களிலும் மக்களை சந்தித்து மீண்டும் ஆட்சியை அமைப்போம். இது தான் எங்கள் இலக்கு. எல்லாவற்றிற்கும் முற்றுபுள்ளி வைத்த போதும், சிலர் ஒன்று ஒன்றாக தெரிவித்து வருகின்றனர். இதனால் அவர்கள் மனதில் தெளிவு இல்லை.
நாங்கள் எப்போது வேண்டுமானாலும் பேச தயாராக உள்ளோம். பேச வருவதற்கு அவர்களுக்கு விருப்பம் இல்லை.
கூரை ஏரி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் ஏரி வைகுண்டம் பார்த்தார்களாம். அந்த மாதிரி கதையாக அவர்கள் நிலை உள்ளது. அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சொன்னதை போல் தான் நாங்கள் நடக்கிறோம். தொண்டர்கள் மன ஓட்டத்தையே நான் பிரதிப்பலித்தேன். யாருடைய நிர்பந்தத்தின் காரணமாவும் தினகரனை ஒதுக்கி வைக்கிறேன் என்று சொல்லவில்லை.
தொண்டர்களின் உணர்வை நாங்கள் ஒன்று கூடி சொன்னோம். அதை ஓ.பி.எஸ். எங்களது வெற்றி என சொன்னால் என்ன அர்த்தம்?.
இவ்வாறு அவர் கூறினார்.
தாம்பரம்:
பல்லாவரம் தர்கா ரோடு பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் முகேஷ் (வயது 21). எழும்பூரில் உள்ளதனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு அவர் பல்லாவரம் ஜி.எஸ்.டி. சாலையை சேர்ந்த நண்பர் சதீஷ் குமாருடன் பல்லாரவத்துக்கு சென்றார். பின்னர் இரவு 11 மணி அளவில் இருவரும் பல்லாவரம் ரெயில் நிலையத்தையொட்டி உள்ள சுரங்கப்பாதை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.
அப்போது தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரெயில் அவர்கள் 2 பேர் மீதும் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே முகேஷ் பலியானார். சதீஷ்குமார் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடியபடி கிடந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ்குமார் பரிதாபமாக இறந் தார்.
இது குறித்து தாம்பரம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரெயில் மோதி நண்பர்கள் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பூதண்டலம், சக்தி நகரில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க கட்டிடம் கட்டப்பட்டது. இதில் இன்னும் 2 நாட்களில் மதுக்கடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிகிறது.
இதனை அறிந்த அப்பகுதி பெண்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் கடப்பாரை, சுத்தியலால் புதியதாக கட்டப்பட்ட மதுக்கடை கட்டிடத்தை இடித்து தள்ளினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரம் அடைந்த அவர்கள் ஸ்ரீபெரும்புதூர் - குன்றத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
ஸ்ரீபெரும்புதூர் டி.எஸ்.பி. சிலம்பரசன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மதுக்கடை குறித்து அகாரிகளிடம் பேசி முடிவு எடுப்பதாக தெரிவித்தனர்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேப்பம்பட்டை அடுத்த அயத்தூரில் டாஸ்மாக் கடை திறக்க புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அயத்தூர், சிறுகளத்தூர், தொட்டிகலை, கோயம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 100-க்கு மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் மதுக்கடைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் திருவள்ளூர்-பாக்கம் சாலையில் மறியல் செய்தனர்.
செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறும்போது, “கடந்த வாரம் இதே பகுதியில் மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய தாசில்தார் மதுக்கடையை திறக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து இருந்தார்.
ஆனால் தற்போது மீண்டும் அதே இடத்தில் மதுக்கடை திறக்க பணிகள் நடந்து வருகிறது. இதனை அதிகாரிகள் தடுத்து நிறத்த வேண்டும். அதுவரையில் நாங்கள் போராடுவோம்” என்றனர்
சென்னை விமான நிலையத்தில் இன்று காலை மஸ்கட் செல்லும் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் செல்ல வந்த பயணிகளின் உடமைகளை மத்திய தொழிற்படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
தான்சானியா நாட்டை சேர்ந்த சுலைமான் என்பவரது சூட்கேசை 'ஸ்கேன்' செய்தபோது அதில் ரூ.20 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து அமெரிக்க டாலரை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சுலைமானிடம் விசாரணை நடந்து வருகிறது.
திருப்போரூர்:
கேளம்பாக்கம் ஜோதி நகரில் நேற்று புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை அப்பகுதி மக்கள் கேளம்பாக்கம்- கோவளம் சாலையில் மறியல் செய்தனர்.
இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சமாதான பேச்சு நடத்தினர். ஆனால் பொதுமக்கள் டாஸ்மாக் கடை திறக்க கூடாது. உடனே மூட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மறியலை கை விட்டு கலைந்து சென்றனர்.
சிட்லபாக்கம் ஜெயேந்திரர் நகரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி இன்று காலை அப்பகுதியை சேர்ந்த 30 பேர் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த வந்தனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றனர்.
பள்ளிக்கரணை:
சேலையூரை அடுத்த ராஜ கீழ்ப்பாக்கம் சீனிவாச நகர், முதல் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன். சாப்ட்வேர் என்ஜினீயர். இவருடன் அவரது தாய் மைதிலி வசித்து வருகிறார்.
கார்த்திகேயன், வேலை சம்பந்தமாக டெல்லிக்கு சென்று விட்டார். இதையடுத்து வீட்டில் தனியாக இருந்த மைதிலி நேற்று இரவு அதே பகுதியில் உள்ள மற்றொரு மகன் வீட்டில் தூங்கினார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் கார்த்திகேயன் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் பீரோவில் இருந்த 165 பவுன் நகை, 4 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் நிலத்தின் பத்திரங்களை கொள்ளையடித்தனர்.
மேலும் கைரேகை, போலீஸ் மோப்ப நாயிடம் சிக்காமல் இருக்க வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி தப்பி சென்று விட்டனர்.
இன்று காலை மைதிலி தனது வீட்டுக்கு திரும்பி வந்த போது கதவு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது நகை, வெள்ளிப் பொருட்கள் கொள்ளை போய் இருப்பது தெரிந்தது.
வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் துணிகர கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர். எனவே மைதிலி வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற நபர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இது குறித்து சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலந்தூர்:
பாரதீய ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவரும், மேல்-சபை எம்.பி.யுமான சுப்பிரமணியசாமி இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
டி.டி.வி. தினகரன் மீது டெல்லி போலீசாரால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளது. அது வழக்கு என்று சொல்ல முடியாது. யார் குற்றம் சாட்டினாலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யலாம். அதன் மீது விசாரணை நடத்தி 'சார்ஜ்சீட்' பதிவு செய்த பின்னர்தான் வழக்கு வரும்.
தேர்தல் ஆணையத்திடம் பணம் கொடுத்து இரட்டை இலை சின்னத்தை தர வேண்டும் என்று யாரோ ஒருவர் பணம் கொடுத்ததாக டி.டி.வி. தினகரன் மீது குற்றம் சாட்டி உள்ளார். இது ஆதாரம் இல்லாதது.

அ.தி.மு.க.வில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஒரு பக்கம் இருக்கிறார்கள். ஓ.பன்னீர் செல்வம் மட்டும் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒரு எம்.எல்.ஏ. அவருக்கு எந்த அந்தஸ்தும் கிடையாது.
அப்படி இருக்கும்போது எந்த ஆதாரத்தில் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது என்று புரியவில்லை.
இந்த தடை தேர்தல் ஆணையத்தின் தவறான தீர்ப்பு. இது சசிகலா தலைமையிலான கட்சிக்கு எதிராக உள்ளது.
ஓ.பன்னீர்செல்வத்தின் பின்புலத்தில் பா.ஜனதா இருக்கிறது என்பதில் உண்மை இல்லை. கட்சியில் சில பேர் இருக்கலாம்.
நான் ஏற்கனவே சொன்னபடி டெல்லியில் 2 அமைச்சர்களும் சென்னையில் ஒருவரும் ஓ.பி.எஸ்சுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.
அ.தி.மு.க.வில் இரு அணிகள் என்பது கிடையாது. ஓ.பன்னீர்செல்வம் தனி மனிதர். அவருக்கு ஆதரவாக எத்தனை எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள் என்று கவர்னரிடம் காட்ட வில்லையே. சட்டசபையில் சசிகலா தலைமையிலான கட்சிக்கு தனி மெஜாரிட்டி இருக்கிறது என்று நிரூபிக்கப்பட்டு உள்ளது.
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளை பிரதமர் மோடி சந்திக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள்.
அது தமிழ்நாட்டின் பிரச்சினை. மாநில அரசு தான் தீர்வு காண வேண்டும். தமிழக முதல்- அமைச்சர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண என்னால் முடியாது என்று பிரதமரிடம் கூறினால் இதுபற்றி அவர் முடிவு எடுப்பார்.
விவசாயிகளின் போராட்டத்தை யாரோ பின்னால் இருந்து இயக்கி கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யார் என்று தெரிய வேண்டும்.
தி.மு.க. அனைத்து கட்சிகளையும் கூட்டி முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருப்பதால் எந்த பயனும் இல்லை. சாமானிய மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள்.
இந்த 'பந்த்' கம்யூனிஸ்டு போன்ற மனப்பான்மை உடையது. தமிழகத்தில் தி.மு.க. 6 முறை ஆட்சியில் இருந்தும் இதுதான் விவசாயிகளின் நிலை.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து விமானம் மூலம் இன்று சென்னை வந்தார்.
காலை 11.35 மணியளவில் விமான நிலையத்துக்கு வந்த அவர் நேரடியாக கவர்னர் மாளிகைக்கு சென்றார்.
தமிழகத்தில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கவர்னர் சென்னை வந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ரூ.89 கோடி பணப்பட்டுவாடா நடந்தது, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரி சோதனை, 3 அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு, இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி.தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்தது என்று அடுத்தடுத்து அரசியல் பரபரப்பு சூடு பிடித்து வருகிறது.

இந்த குழப்பமான அரசியல் சூழ்நிலை மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவாக வலுத்து வரும் போராட்டம் ஆகியவற்றை நேரடியாக ஆய்வு செய்யவே கவர்னர் அவசரமாக சென்னை வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆலந்தூர்:
செங்கல்பட்டை சேர்ந்தவர் வேலு (வயது 44). ஆலந்தூர் மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக இருந்தர்.
நேற்று இரவு அவர் ஆலந்தூர், எம்.கே.என்.சாலை மடுவிங்கரை பகுதியில் உள்ள பொது கழிப்பிடத்தில் கத்தி குத்து காயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பரங்கிமலை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து வேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதைக்காக குராம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வேலுவை கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான மர்ம வாலிபர் ஒருவர் செல்வது பதிவாகி இருந்தது.
இதனை வைத்து வாலிபர் ஒருவரை பிடித்து உள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று காலை சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் சென்றார். முன்னதாக அவர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தேர்தல் ஆணையத்தில் இன்று இரட்டைஇலை சின்னம் யாருக்கு என்ற விசாரணை நடக்கிறது. கண்டிப்பாக இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும்.

டி.டி.வி.தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்து முழு விவரம் இப்போது தெரியவில்லை. முழு விவரம் தெரிந்த பின்னர் கூறுகிறேன்.
அ.தி.மு.க.வின் இரு அணிகள் இணைவது தொடர்பாக இதுவரை யாரும் என்னை அணுகவில்லை. இணைவது தொடர்பாக யாரும் அணுகினால் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
செங்கல்பட்டு:
கூடுவாஞ்சேரியை அடுத்த காயரம்பேடு பிருந்தா அவன்யூவை சேர்ந்தவர் விஜய் ஆண்டனி. அதே பகுதியில் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
இவரது தொழிற்சாலை யில் சிலம்பொலி நகரை சேர்ந்த சரஸ்வதி என்பவர் வேலை பார்த்தார். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணியில் இருந்து விலகியதாக தெரிகிறது.
இந்த நிலையில் சரஸ்வதி தனக்கு சேர வேண்டிய சம்பள பணம் குறித்து விஜய் ஆண்டனியிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டு கேட்டு உள்ளார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் கோபம் அடைந்த விஜய்ஆண்டனி இதுபற்றி கேட்பதற்காக சரஸ்வதியின் வீட்டிற்கு சென்றார். அப்போது சரஸ்வதிக்கு ஆதரவாக சிலர் விஜய் ஆண்டனியிடம் தகராறில் ஈடுபட்டனர்.
இதையடுத்து விஜய் ஆண்டனி தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒரு முறை சுட்டு மிரட்டினார். இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விஜய் ஆண்டனியை கைது செய்தனர்.
தாம்பரம்:
தமிழகத்தில் 3321 மதுக் கடைகளையும் இந்தியா முழுவதும் 90 ஆயிரம் மதுக் கடைகளை மூட நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுத்த பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு காஞ்சி வடக்கு மாவட்டம் சார்பில் பாராட்டு விழா பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே நடந்தது.
விழாவில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-
டெல்லியில் போராடும் விவசாயிகளின் நிலை பரிதாபமாக உள்ளது. 50 ஆண்டுகாலம் தமிழகத்தை தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளே ஆட்சி செய்துள்ளன. விவசாயிகளின் இன்றைய பரிதாப நிலைக்கு இந்த இரு கட்சிகளுமே காரணம்.
டெல்லியில் போராடிய விவசாயிகளை முதன் முதலில் சந்தித்து ஆதரவு தெரிவித்தது அன்புமணி தான். அவர் பாராளுமன்றத்தில் பேசும் போது கூட, “தாய், தந்தைக்கு பிறகு விவசாயிகளை கடவுளாக பார்க்க வேண்டும். நாம் சாப்பிடும் உணவை விவசாயிதான் உற்பத்தி செய்து தருகிறார்” என்று கூறியுள்ளார். விவசாயிகளுக்காக பா.ம.க. மட்டுமே குரல் கொடுக்கிறது.
நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் மூடப்பட்டு விட்டன. இது நமக்கு கிடைத்த பாதி வெற்றி. மதுக்கடைகளை மூடும் விவகாரத்தில் முழு வெற்றி விரைவில் கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அன்பு மணி ராமதாஸ் பேசும் போது, இந்த பாராட்டு விழாவை பொது மக்கள் வீதி வீதியாக எடுத்திருக்க வேண்டும். மதுவின் மூலம் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் தமிழகத்தில் உயிர் இழந்து வருகின்றனர். புதிய மதுக்கடைகளை திறக்க பொதுமக்கள் அனுமதிக்க கூடாது என்றார்.
விழாவுக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். பூக்கடை முனுசாமி வர வேற்றார். தட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தார். ஐ.நா. கண்ணன், அரங்கநாதன் வாழ்த்துரை வழங்கினர். ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, திருக்கச்சூர் ஆறுமுகம், வழக்கறிஞர் பாலு ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன், திலகம், ரவி, ரேணுகா கிருஷ்ணன், சேகர், கோவிந்தன், மதி, கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.






