என் மலர்
செய்திகள்

கேளம்பாக்கம்-சிட்லபாக்கத்தில் டாஸ்மாக் கடை மூடக்கோரி பொதுமக்கள் மறியல்
திருப்போரூர்:
கேளம்பாக்கம் ஜோதி நகரில் நேற்று புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை அப்பகுதி மக்கள் கேளம்பாக்கம்- கோவளம் சாலையில் மறியல் செய்தனர்.
இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சமாதான பேச்சு நடத்தினர். ஆனால் பொதுமக்கள் டாஸ்மாக் கடை திறக்க கூடாது. உடனே மூட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மறியலை கை விட்டு கலைந்து சென்றனர்.
சிட்லபாக்கம் ஜெயேந்திரர் நகரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி இன்று காலை அப்பகுதியை சேர்ந்த 30 பேர் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த வந்தனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றனர்.