என் மலர்
காஞ்சிபுரம்
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன.
இப்போது மூடப்பட்ட கடைகளை குடியிருப்பு பகுதிகளில் திறக்க அதிகாரிகள் முயற்சி எடுத்து வருகிறார்கள். இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்து உள்ளனர். தமிழகம் முழுவதும் மதுக்கடைக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.
சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பிரதான சாலையில் புதிய மதுக்கடை திறக்க கட்டுமான பணி நடக்கிறது. குடியிருப்பு பகுதியில் மதுக்கடை திறக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் மதுக் கடைக்கு எதிராக பெண்கள், சிறுவர்கள், மாணவர்கள் உள்பட சுமார் 150-க்கும் மேற்பட்டோர் சாலை ஓரத்தில் கையில் பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் மதுக்கடைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். பொதுமக்களின் இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
செம்மஞ்சேரி போலீசார் அங்கு விரைந்து வந்து சமாதான பேச்சு நடத்தினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
உச்சநீதிமன்றத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 3,321 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுத்த பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு பாராட்டு விழா மற்றும் வெற்றி விழா பொதுக்கூட்டம் பா.ம.க. கட்சி சார்பில் திருக்கழுக்குன்றத்தில் நடந்தது.
மாநில துணை பொதுச் செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-
மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்று பாட்டில்களில் அச்சடித்து ஒட்டி விட்டு மக்களை குடிக்க சொல்கின்றனர். உங்களுக்கு நாட்டை ஆள என்ன தகுதி இருக்கின்றது. ரூ.200, 300 வாங்கிக்கொண்டு இரட்டை இலைக்கும், உதயசூரியனுக்கும் ஓட்டு போடுவதை பெண்கள் நிறுத்த வேண்டும். அந்த தப்பை மீண்டும் செய்யா தீர்கள். சிந்திக்க நேரம் வந்து விட்டது.
குடியை கொண்டு வந்தவர்களை மீண்டும் கோட்டையில் உட்கார வைக்காதீர்கள்.
இவ்வாறு அவர்பேசினார்.
கூட்டத்தில் டாக்டர் அன்புமணி பேசுகையில், 3321 மதுக்கடைகளை பா.ம.க. கட்சி மூடி இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை பெயர் மாற்றம் செய்ய மாநில அரசு முயற்சித்து வருகிறது. இந்த சாலைகளை மாநகராட்சி சாலையாகவும் நகராட்சி மற்றும் ஊரக சாலையாகவும் மாற்றி 2,000 மது பானக்கடைகளை திறக்க முயற்சித்து வருகிறது. நாம் ஆட்சிக்கு வந்தால் ஒரு சொட்டு சாராயம் இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்.
சாராயம் விற்பதற்காகவே சாலைகளின் பெயர்களை மாற்றுகின்றனர். நாங்கள் நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடருவோம். மாவட்ட தலைநகரங்களில் இதை கண்டித்து வரும் 27-ந்தேதி போராட்டம் நடத்த உள்ளோம் என்று பேசினார்.
கூட்டத்தில் மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, வழக்கறிஞர், கி.பாலு, மாநில துணை தலைவர் கவிஞர் திலகாமணி, மாநில இளைஞர் அணி செயலாளர் ராஜேஸ்வரி பிரியா, காஞ்சி மத்திய மாவட்ட செயலாளர் வாசு, மாநில துணை பொதுசெயலாளர் பொன். கங்காதரன், மாநில துணை தலைவர் சக்தி கமலா அம்மாள், மாவட்ட தலைவர் கணேசமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் கணேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவான்மியூர்:
பெசன்ட்நகரை சேர்ந்தவர் உமா. மாநகராட்சி துப்புரவு ஊழியர். இவர் பெசன்ட்நகர் எல்லியட்ஸ் கடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்டார்.
அங்குள்ள குப்பை தொட்டியை பார்த்த போது ஒரு பையில் கட்டு கட்டாக இலங்கை நாட்டு பணம் இருந்தது. இந்திய ரூபாயின் மதிப்பு 11 லட்சத்து 89 ஆயிரம் ஆகும்.
அதனை தொழிலாளி உமா மீட்டு சாஸ்திரி நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் பணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பணத்தை வீசி சென்றவர்கள் யார்? கடத்தல் பணமா? என்பது குறித்து விசாரணை நடக்கிறது.
குப்பை தொட்டியில் ரூ.11½ லட்சம் இலங்கை நாட்டு பணம் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவான்மியூர்:
துரைப்பாக்கத்தை அடுத்த கல்லுக்குட்டை பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 27). கால் டாக்சி டிரைவர்.
நேற்று இரவு அவர் அதே பகுதியில் நண்பர்கள் மணிகண்டன், மாரிமுத்து, கோபி ஆகியோருடன் மது குடித்தார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த மாரிமுத்து உள்பட 3 பேரும் சேர்ந்து குமாரை தாக்கி கீழே தள்ளினர். பின்னர் அவரது தலையில் கல்லை போட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே குமார் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து துரைப்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து குமாரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
மேலும் கொலை தொடர்பாக மணிகண்டன், மாரிமுத்து, கோபியை கைது செய்தனர். கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
செங்கல்பட்டு:
தாம்பரம் அருகே உள்ள பொத்தேரி இன்ஜீனியர் கல்லூரியில் படித்து வருபவர் ஜான் ஆக்ரின்(20). சமையல் கலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது சொந்த ஊர் நாகர்கோவில்.
கல்லூரி விடுதியில் தங்கி படித்து வரும் ஜான் ஆக்ரின் தினமும் இரவு மாடியில் செல்போனில் பாட்டு கேட்டவாறு நடந்து கொண்டிருப்பார்.
நேற்று இரவு உணவு அருந்தி விட்டு விடுதியின் இரண்டாவது மாடிக்கு சென்றார். அப்போது அவரது செல்போனில் பாடல் கேட்டு கொண்டிருந்தார்.
திடீரென்று தவறி கீழே விழுந்தார். இதை பார்த்த மாணவர்கள் அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இன்று காலை ஜான் ஆக்ரின் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
தமிழ்நாட்டில் உள்ள 3321 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுத்த பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை பாராட்டும் வெற்றி விழா பொதுக்கூட்டம் காஞ்சீபுரம் மத்திய மாவட்டம் சார்பில் நாளை திருக்கழுக்குன்றத்தில் நடக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள 3321 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுத்த பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை பாராட்டும் வெற்றி விழா பொதுக்கூட்டம் காஞ்சீபுரம் மத்திய மாவட்டம் சார்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருக்கழுக்குன்றம் பஸ்நிலையம் அருகில் நடக்கிறது.
கூட்டத்துக்கு அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்குகிறார். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, வழக்கறிஞர் க.பாலு, மாநில துணை பொதுச்செயலாளர் கி.ஆறுமுகம், காஞ்சி மத்திய மாவட்ட செயலாளர் பூ.வி.கி.வாசு, மாவட்ட துணை செயலாளர் எம்.ஜே.அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
பள்ளிக்கரணை:
பள்ளிக்கரணை அருகே நுக்கம்பாளையம் எழில் நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மகன் பரத்வாஜ் (17). 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவன் நண்பர்களுடன் ஒட்டியம்பாக்கத்தில் உள்ள குட்டையில் குளிக்க சென்றான். அப்போது ஆழமான பகுதியில் சென்றதால் தண்ணீரில் மூழ்கினான். இதை பார்த்த நண்பர்கள் பயத்தில் அங்கிருந்து ஓடி விட்டனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மாணவன் பரத்வாஜ் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்போரூர்:
திருப்போரூரில் செயல்பட்டு வந்த 4 மதுக்கடைகள் கடந்த 1-ந்தேதி முதல் மூடப்பட்டன. இதற்கு மாற்றாக புதிதாக மதுக் கடைகள் திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருப்போரூர்-இள்ளலூர் சாலையில் புதிதாக அரசு மதுக்கடை கடந்த 19-ந்தேதி திறக்கப்பட்டது. மறுநாள் கண்ணகப்பட்டு, இள்ளலூர் ஊராட்சியைச்சேர்ந்த கிராம மக்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு மதுக் கடையால் இரவு நேரத்தில் இச்சாலைவழியே செல்ல முடியாது என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக கூறி மதுக் கடையை மூடக்கோரி திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதனால் திருப்போரூர்- இள்ளலூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திருப்போரூர் போலீசார், மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கிராமமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். சுமார் 2 மணிநேர பேச்சு வார்த்தைக்கு பிறகு கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதற்கிடையில் நேற்று பகல் சாலைமறியலில் ஈடுபட்ட கிராமமக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காஞ்சீபுரம் சென்று மாவட்ட கலெக்டரை சந்தித்து அங்கு மதுக்கடை திறந்தால் கிராம மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மனுவாக கொடுத்தனர். கிராம மக்களின் மனுவை பரிசீலித்த கலெக்டர் சம்பந்தப்பட்ட மதுக்கடையை உடனடியாக மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து கிராம மக்கள் கலெக்டருக்கு நன்றி தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடை 2 நாட்களில் கிராம மக்களின் போராட்டத்தால் மூடப்பட்டது.
தமிழகம் முழுவதும் கோடை வெப்பம் மிக அதிகளவில் உள்ள நிலையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் மிக அதிக அளவில் உள்ளது.
காஞ்சீபுரத்தைச் சுற்றியுள்ள ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் தொழிற்சாலைகள் மற்றும் கல்லூரிகள் உள்ளதால் தொழிலாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகளை ஏற்றிச் செல்லும் வாகனங் கள் அதிகளவில் காஞ்சீபுரம் சாலைகளில் இயக்கப்படுகின் றன. எனவே எந்த நேரத்திலும் காஞ்சீபுரம் சாலைகள் நெரிசலாகவே காணப்படுகிறது.
மேலும் கோயில்களுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் பட்டுசேலைகள் எடுக்கவரும் வெளிமாநில மக்களும் அதிகளவில் வாகனங்களில் வருவதால் போக்குவரத்து காவல்துறையினர் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பணி செய்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட காவல் துறையினரால் வெயிலில் பணியாற்றும் போலீசாருக்கு நீர்மோர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்படும் திட்டம் நடைமுறையில் இருந்தது.
தற்போது அத்திட்டம் செயல்பாட்டில் இல்லை. எனவே கடும் வெயிலில் கடமையாற்றும் போலீசாருக்கு வெயிலின் தாக்கம் குறைக்கும் வகையில் நீர்மோர் மற்றும் குளிர்பானங்களை வழங்கும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
காஞ்சீபுரம்:
2017-ஆம் ஆண்டிற்கான உசூ என்னும் சீன தற் காப்புக்கலை சாம்பியன் போட்டிகள் அர்மேனியா நாட்டில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு காஞ்சீபுரம் உசூ அசோசியேசனில் பயிற்சி பெற்ற காஞ்சீபுரம் தனியார் பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவி ஆர்.ஏ. கயல்விழி மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவி வி.ஹரிணி ஆகியோர் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள்மாநில மற்றும் தேசிய அளவில் நடந்த உசூ போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாக இந்த போட்டிக்கு பயிற்சி பெற்று தற்போது உலக அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாணவிகளை உசூ தற்காப்புக்கலை பயிற்சியாளரும், உசூ அசோசியேசன் காஞ்சீபுரம் மாவட்ட செயலாளருமான டாக்டர் செந்தாமரைக்கண்ணன், தலைவர் பூர்ணச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் பாராட்டினார்கள்.
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் இன்று நடைபெறும் பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள காஞ்சீபுரம் வழியாக சென்ற அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் காஞ்சீபுரம் வந்து காமாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
விவசாயிகள் மற்றும் தமிழக மக்களுக்கு மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நன்மைகளை செய்துள்ள நிலையில் திமுக மற்றும் எதிர்கட்சிகள் அறிவித்துள்ள பந்த் தேவையற்றது.

இது மக்களுக்கு இடையூறையே ஏற்படுத்தும். விவசாயிகளுக்காக மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு முழுமையாக கொண்டு செல்ல வேண்டும். டெல்லியில் போராடும் விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிடவேண்டும். விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் வகையிலேயே நமது பணி இருக்க வேண்டும்.

இந்நிலையில் ஸ்டாலின் கூட்டிய அனைத்து கட்சி கூட்டமும், 25ம் தேதி அறிவித்துள்ள பந்தும் தேவையற்றது. இது மக்களுக்கு எந்தவிதத்திலும் நன்மை தராது. அதிமுகவின் இரண்டு அணிகளும் விரைவாக இணைய வேண்டும். இதில் ஏற்படும் தாமதம் அரசியலில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தும். எனவே இரு அணிகளும் விரைவில் இணைந்து மக்கள் நல பணிகளில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த நெமிலியை சேர்ந்தவர் தீபன்சக்கரவர்த்தி. விடுதலை சிறுத்தைகள் கட்சி முகாம் பொறுப்பாளர்.
நேற்று இரவு அவர், அதே பகுதியில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி வைக்கப்பட்டு இருந்த பேனர்களை அகற்றி மினி லாரியில் ஏற்றிக் கொண்டு இருந்தார். உடன் அவரது நண்பர்களும் இருந்தனர்.
அப்போது 2 மோட்டார் சைக்கிளில் 4 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் மினி லாரியை ஓரமாக நிறுத்தும்படி கூறி தீபன் சக்கரவர்த்தியிடம் தகராறில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள் அரிவாளால் தீபன் சக்கரவர்த்தியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.
பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீபன் சக்கரவர்த்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
முன்விரோதத்தில் திட்டமிட்டு அவரை தீர்த்துக்கட்ட மர்ம கும்பல் வந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் இன்ஸ்பெக்டர் கண்ணையன் விசாரணை நடத்தி வருகிறார்.






