என் மலர்
செய்திகள்

திருப்போரூரில் பொதுமக்கள் போராட்டத்தால் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடை 2 நாளில் மூடப்பட்டது
திருப்போரூர்:
திருப்போரூரில் செயல்பட்டு வந்த 4 மதுக்கடைகள் கடந்த 1-ந்தேதி முதல் மூடப்பட்டன. இதற்கு மாற்றாக புதிதாக மதுக் கடைகள் திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருப்போரூர்-இள்ளலூர் சாலையில் புதிதாக அரசு மதுக்கடை கடந்த 19-ந்தேதி திறக்கப்பட்டது. மறுநாள் கண்ணகப்பட்டு, இள்ளலூர் ஊராட்சியைச்சேர்ந்த கிராம மக்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு மதுக் கடையால் இரவு நேரத்தில் இச்சாலைவழியே செல்ல முடியாது என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக கூறி மதுக் கடையை மூடக்கோரி திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதனால் திருப்போரூர்- இள்ளலூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திருப்போரூர் போலீசார், மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கிராமமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். சுமார் 2 மணிநேர பேச்சு வார்த்தைக்கு பிறகு கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதற்கிடையில் நேற்று பகல் சாலைமறியலில் ஈடுபட்ட கிராமமக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காஞ்சீபுரம் சென்று மாவட்ட கலெக்டரை சந்தித்து அங்கு மதுக்கடை திறந்தால் கிராம மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மனுவாக கொடுத்தனர். கிராம மக்களின் மனுவை பரிசீலித்த கலெக்டர் சம்பந்தப்பட்ட மதுக்கடையை உடனடியாக மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து கிராம மக்கள் கலெக்டருக்கு நன்றி தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடை 2 நாட்களில் கிராம மக்களின் போராட்டத்தால் மூடப்பட்டது.






