என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகளின் நிலைக்கு அ.தி.மு.க.-தி.மு.க.வே காரணம்: ராமதாஸ்
    X

    விவசாயிகளின் நிலைக்கு அ.தி.மு.க.-தி.மு.க.வே காரணம்: ராமதாஸ்

    விவசாயிகளின் இன்றைய பரிதாப நிலைக்கு தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இரு கட்சிகளுமே காரணம் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

    தாம்பரம்:

    தமிழகத்தில் 3321 மதுக் கடைகளையும் இந்தியா முழுவதும் 90 ஆயிரம் மதுக் கடைகளை மூட நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுத்த பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு காஞ்சி வடக்கு மாவட்டம் சார்பில் பாராட்டு விழா பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே நடந்தது.

    விழாவில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

    டெல்லியில் போராடும் விவசாயிகளின் நிலை பரிதாபமாக உள்ளது. 50 ஆண்டுகாலம் தமிழகத்தை தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளே ஆட்சி செய்துள்ளன. விவசாயிகளின் இன்றைய பரிதாப நிலைக்கு இந்த இரு கட்சிகளுமே காரணம்.

    டெல்லியில் போராடிய விவசாயிகளை முதன் முதலில் சந்தித்து ஆதரவு தெரிவித்தது அன்புமணி தான். அவர் பாராளுமன்றத்தில் பேசும் போது கூட, “தாய், தந்தைக்கு பிறகு விவசாயிகளை கடவுளாக பார்க்க வேண்டும். நாம் சாப்பிடும் உணவை விவசாயிதான் உற்பத்தி செய்து தருகிறார்” என்று கூறியுள்ளார். விவசாயிகளுக்காக பா.ம.க. மட்டுமே குரல் கொடுக்கிறது.

    நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் மூடப்பட்டு விட்டன. இது நமக்கு கிடைத்த பாதி வெற்றி. மதுக்கடைகளை மூடும் விவகாரத்தில் முழு வெற்றி விரைவில் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அன்பு மணி ராமதாஸ் பேசும் போது, இந்த பாராட்டு விழாவை பொது மக்கள் வீதி வீதியாக எடுத்திருக்க வேண்டும். மதுவின் மூலம் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் தமிழகத்தில் உயிர் இழந்து வருகின்றனர். புதிய மதுக்கடைகளை திறக்க பொதுமக்கள் அனுமதிக்க கூடாது என்றார்.

    விழாவுக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். பூக்கடை முனுசாமி வர வேற்றார். தட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தார். ஐ.நா. கண்ணன், அரங்கநாதன் வாழ்த்துரை வழங்கினர். ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, திருக்கச்சூர் ஆறுமுகம், வழக்கறிஞர் பாலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன், திலகம், ரவி, ரேணுகா கிருஷ்ணன், சேகர், கோவிந்தன், மதி, கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    Next Story
    ×