என் மலர்
ஈரோடு
ஈரோடு ரெயில் நிலையத்திற்கு அருகில் டீசல் என்ஜின் பணிமனை உள்ளது. இந்த பணிமனையில் டீசல் நிரப்புதல், என்ஜினில் பழுது நீக்கம் ஆகிய பணிகள் செய்யப்படும்.
இந்த நிலையில் ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து பணிமனைக்கு 3 ரெயில் என்ஜின்கள் நேற்று மதியம் கொண்டு செல்லப்பட்டன. அடுத்தடுத்து ஒன்றாக இணைக்கப்பட்டு இந்த என்ஜின்கள் கொண்டு செல்லப்பட்டன. காசிப்பாளையத்தில் புதிதாக கட்டப்படும் பாலம் அருகில் பணிமனைக்கு செல்லும் தண்டவாளத்தின் வழியாக என்ஜின்களை டிரைவர் ஓட்டிச்சென்றார். அப்போது திடீரென முதலில் சென்ற 2 என்ஜின்கள் தடம் புரண்டன. இதில் முதலில் சென்ற ரெயில் என்ஜினின் பின்புறம் உள்ள 6 சக்கரங்களும், 2-வதாக இணைக்கப்பட்டு இருந்த என்ஜினின் வலதுபுறம் உள்ள 3 சக்கரங்களும் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி நின்றது. தடம் புரண்டதை அறிந்த டிரைவர் என்ஜின்களை உடனடியாக நிறுத்தினார்.
ரெயில் நிலையத்தில் இருந்து பணிமனைக்கு செல்லும் தண்டவாளப்பாதை மாறும் இடம் என்பதால் டிரைவர் என்ஜின்களை மெதுவாக ஓட்டி சென்றார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதுபற்றி என்ஜின் டிரைவர் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இதையடுத்து தடம் புரண்ட ரெயில் என்ஜின்களை மீட்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது முதல் என்ஜினும், 2-வது என்ஜினும் பிரிக்கப்பட்டது. அதன்பின்னர் பணிமனையில் இருந்து பளுதூக்கும் எந்திரம் (ஜாக்கி) வரவழைக்கப்பட்டு ரெயில் என்ஜின்களை தண்டவாளத்தில் இருந்து தூக்கி நிறுத்தும் பணி நடந்தது. நேற்று மாலையில் ரெயில் என்ஜின்கள் தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தப்பட்டன. அதன்பின்னர் பழுதடைந்த தண்டவாளம் சீரமைக்கப்பட்டது.
ரெயில் என்ஜின்கள் தடம் புரண்ட தண்டவாளம் பணிமனைக்கு செல்லும் வழி என்பதால் மற்ற ரெயில்கள் செல்வதில்லை. இதனால் நேற்று ரெயில் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை. எனவே அனைத்து ரெயில்களும் சரியான நேரத்திற்கு வந்து சென்றன. ரெயில் என்ஜின்கள் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு காந்தி நகர் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி சூரம்பட்டி போலீஸ் சப்–இன்ஸ் பெக்டர் சரோஜினி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
அப்போது அங்கு பணம் வைத்து சூதாடியதாக செந்தில் (47), சத்திய மூர்த்தி (35), வெங்கடேஷ் (34), தங்கவேல் (57), ராஜி (59), சந்திரன் (65) சுரேந்திராஜா (47) ஆகிய 8 பேர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் இருந்து ரூ. 19 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி அருகே மழை பெய்ய வேண்டி கிராம மக்கள் வினோத வழிபாடு செய்தனர்.
சீரங்கம்பாளையம், டி.மேட்டுப்பாளையம், வெள்ளியம்பாளையம், சின்னி கவுண்டன்வலசு, பெருமாபாளையம், கனக புரம், கொண்டவநாயக்கன் பாளையம் ஆகிய கிராமப் பொதுமக்கள் ஒன்று கூடினர்.
இவர்கள் மழை பெய்ய வேண்டியும், கிராமம் செழிக்க வேண்டியும் சிறப்பு பூஜைகள் செய்து வினோத வழிபாடு நடத்தினர்.
கிராமத்து மக்கள் தங்கள் வீட்டில் உள்ள உபயோகமற்ற கூடைகள், முறம், உலக்கை, விவசாயத்திற்கு பயன் படுத்திய நுகம், கருவத்தடி, மற்றும் சிதைந்து போன சாமி சிலைகள் உடைந்த அம்மி, குழவிகள் போன்ற பொருட்களை கொண்டு வந்தனர். கிராமஎல்லையில் யாருக்கும் தெரியாமல் போட்டனர்.
பிறகு ஏழு ஊர் பொது மக்களும் ஊரின் எல்லையில் ஒன்று கூடி கோழிகள் பலி கொடுக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்றது.
இதையடுத்து வேறு கிராமத்து மக்கள் கொண்டுவந்து போட்டுச் சென்ற உடைந்த பழைய பொருட்கள், சாமி சிலைகளை தாரை தப்பட்டையுடன் ஊர்வலமாக எடுத்து சென்று லக்காபுரம் அருகே காவிரி ஆற்றில் போடப்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘‘ஒவ்வொறு கிராம எல்லையிலும் எல்லை மாகாளியம்ன் கோவில் இருக்கும் மழையில்லாத காலங்களில் மழை பெய்யவேண்டியும், நாடு செழித்து மக்கள் வளமுடன் வாழ வேண்டும் என்றும் ஊர்மக்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும் எனவும் இது போல் வழிபாடு நடத்துவது வழக்கம்’’ என்றனர்.
ஈரோடு:
சென்னிமலை அருகே உள்ள காப்புக்காடு கணுவாய் மலைக்கோவில் பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு மரத்தில் ஒரு முதியவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்த வனத்துறையினர் இது பற்றி சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தூக்கில் தொங்கிய முதியவரின் பிணத்தை தூக்கு கயிற்றில் இருந்து இறக்கினர்.
இதன்பிறகு பிரேத பரிசோதனைக்கு அவரது உடல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தற்கொலை செய்து கொண்டவருக்கு சுமார் 70 வயதிருக்கும். அர் இறந்து 3 நாட்களுக்கு மேல் ஆகி உள்ளதால் அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவர் யார் எந்த ஊர் என்பது தெரியவில்லை.
இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்ட வனப்பகுதியான சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் பகுதியில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த மழை தண்ணீர் வனப்பகுதிக்குள் சிறுசிறு குட்டைகள் போல்தேங்கி நிற்கிறது. இந்த தேங்கிய மழை தண்ணீரில் தற்போது பெரிய... பெரிய... கொசுக்கள் உற்பத்தியாகி நிரம்பி உள்ளது.
இந்த கொசுக்கள் யாவும் வன விலங்குகளை பாதம் பார்க்கிறது. அதிலும் யானைகளை மொய்த்து கடித்து பின்னிவிடுகிறது.
இந்த கொசுக்கடிக்கு பயந்து யானைகள் ஆளை விட்டால் போதும் என தற்போது காட்டைவிட்டு வெளியேறி ஊருக்குள் புகுகிறது. பவானிசாகர் வனப்பகுதி விளாமுண்டி காட்டிலிருந்து கடந்த 3 நாட்களாக 5 யானைகள் கொண்ட கூட்டம் ஊருக்குள் புகுந்து விடுகிறது.
பு.புளியம்பட்டி அருகே உள்ள பெரிய கள்ளிப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 5 யானைகளும் புகுந்து சுற்றி திரிகிறது.
இப்படி சுற்றிதிரியும் யானைகள் கண்ணில் தென்படும் வாழைத் தோட்டத்துக்குள் புகுந்து வாழைகளை துவம்சம்செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மிகவும் கவலையுடன் உள்ளனர்.
நேற்று முன்தினம் தேவேந்திரன் என்பவரின் தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் நூற்றுக்கும் மேற்பட்ட வாழைகளை மிதித்தும் தின்றும் சேதப்படுத்தியது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் வனத்துறை ஊழியர்கள் 25 பேர் திரண்டு வந்து யானைகளை காட்டுக்குள் விரட்டினர். காட்டுப்பக்கம் செல்லும் யானைகள் வனத்துக்குள் புகாமல் ஊர் எல்லையிலேயே மேய்கிறது.
இதனால் பவானிசாகர், பு.புளியம்பட்டி அருகே உள்ள கிராம மக்கள் குறிப்பாக விவசாயிகள் மிகவும் கவலையுடன் உள்ளனர். ஊருக்குள் யானைகள் வராமல் தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
காலை நடை திறப்பு 5 மணிக்கு இருந்தது கிருத்திகை விழாகுழு சார்பாக சிறப்பு பூஜை நடத்தினர். மதியம் பக்தர்கள் வருகை அதிகமாக காணப்பட்டது. மலை கோவிலுக்கு செல்ல கோவில் நிர்வாகம் சார்பாக பஸ் இயக்கப்பட்டது. ஆடிகிருத்திகையையொட்டி ஈரோடு மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்னிமலை முருகனை வழிபட்டு செல்கிறார்கள்.
ஈரோடு மாவட்டத்துக்கு உள்பட்ட சத்தியமங்கலம் வனப்பகுதி புலிகள் காப்பகமாக கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. 1,455 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், தலமலை, கேர்மாளம், டி.என்.பாளையம் ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன.
இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட அடர்ந்த வனப்பகுதிகளான தலமலை, கெஜலட்டி, தெங்குமரஹடா, தாளவாடி, பவானிசாகர் ஆகியவை புலிகள் வசிக்க உகந்த இடங்களாக உள்ளன.
இந்த பகுதிகளில் மனித நடமாட்டம் குறைவாகவும், நீர் நிலைகள் உள்ள இடமாகவும், அதிக பரப்பளவு கொண்டதாகவும் இருப்பதால் புலிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து உள்ளது. இதன் காரணமாக கடந்த 2013-ம் ஆண்டு 22-ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை, தற்போது எடுத்த கணக்கெடுப்பில் சுமார் 60 ஆக உயர்ந்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இந்த அளவுக்கு புலிகள் எண்ணிக்கை உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புலிகள் காப்பகத்தை பராமரிக்க ஆண்டுக்கு மத்திய அரசின் சார்பில் 70 சதவீதமும், தமிழ்நாடு அரசின் சார்பில் 30 சதவீதமும் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. இதில் புலிகள் பாதுகாப்பு, நீர் நிலைகள் ஏற்படுத்துதல், தடுப்பணை கட்டுதல், கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தல் உள்பட பல்வேறு பணிகளுக்காக ரூ.5 கோடி வரை ஒதுக்கப்படுகிறது.
இந்த தகவலை சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குனர் கே.ராஜ்குமார் தெரிவித்தார்.
ஈரோடு மூலப்பாளையம் கரூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகள் பிரியா (வயது 19). இவர் அங்குள்ள ஒரு பழக்கடையில் விற்பனை பிரிவில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் கடந்த 9-10-2014 அன்று பழக்கடையில் இருந்த ரூ.6 ஆயிரத்தை காணவில்லை.
இந்த நிலையில் அதே கடையில் வேலை செய்த திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை செக்கட்டாம்பட்டி தெற்கு வீதியை சேர்ந்த ராஜா என்கிற அழகர்ராஜா(29) என்ற வாலிபர் பிரியா தான் அந்த பணத்தை திருடியதாக அவர் மீது குற்றம் சுமத்தினார். இதனால் அவமானத்தில் மனம் உடைந்த பிரியா, மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து பிரியாவை தற்கொலைக்கு தூண்டியதாக அழகர்ராஜாவை போலீசார் கைது செய்து அவர் மீது ஈரோடு மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பு கூறினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட அழகர்ராஜாவுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.100 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
ஆப்பக்கூடல்:
அத்தாணி அருகே உள்ள மூங்கில் பட்டி என்ற இடத்தை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 22) பெயிண்டர்.
இவர் மோட்டார் சைக்கிளில் வேலை விஷயமாக ஆப்பக்கூடல் அருகே உள்ள கருவாடி புதூர் என்ற இடத்தில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக வெங்காயம் ஏற்றி கொண்ட வேனும் மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் பலத்த அடிபட்ட கோபிநாத் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் அவர் பரிதாபமாக இறந்தார்
விபத்தில் இறந்த கோபிநாத்துக்கு சுபாஷினி என்ற மனைவியும் இளவரசன் (3) என்ற மகனும், கவுசல்யா (1)என்ற மகளும் உள்ளனர்.
இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
பவானி சாகர் அருகே உள்ள பெரியகள்ளிப்பட்டி சித்தன் குட்டை என்ற இடத்தை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 65). விவசாயி. உடல் நலம் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் நோய் குணமாகாததால் அவர் மனம் உடைந்தார்.
இதை தொடர்ந்து ரங்கசாமி தோட்டத்துக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை குடித்து விட்டார். இதனால் மயங்கிய நிலையில் கிடந்த அவரை சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பிறகு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒருதனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் குருநாத புரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 50). இவரது மனைவி பழனியம்மாள் (46).
ராமச்சந்திரனுக்கு மனவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதையொட்டி அவர்களிடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று முன்தினம் இரவும் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்பிறகு இரவில் படுத்து தூங்கிய பழனியம்மாள் கழுத்தில் அரிவாளால் ராமசந்திரன் வெட்டி படுகொலை செய்தார்.
இதன்பிறகு அங்கிருந்து அவர் தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவம் குறித்து வெள்ளி திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
தப்பி ஓடிய கணவர் ராமச்சந்திரனை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் தப்பி ஓடிய ரவிச்சந்திரன் நேற்று இரவு 8 மணியளவில் வெள்ளி திருப்பூர் அடுத்த புரவிபாளையம் என்ற ஊரில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.
குருசாமி என்பவரது வீட்டு அருகே சென்ற போது அங்கிருந்தவர்களிடம் “நான் ராமச்சந்திரன் என் மனைவியை வெட்டி கொன்று விட்டேன். நானும் இப்போது விஷம் குடித்து விட்டேன்” என்று கூறி கொண்டே வீதியில் மயங்கி விழுந்தார்.
அவர் மயங்கி விழுந்த பகுதி அம்மாப்பேட்டை போலீஸ் பகுதி என்பதால் அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்தனர்.
மயங்கி கிடந்த ராமச்சந்திரனை ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் இன்று அதிகாலை 2 மணிக்கு அவர் இறந்தார்.
வெள்ளி திருப்பூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மனைவியை நடத்தையில் சந்தேகப்பட்டு வெட்டி கொன்ற கணவனும் தற்கொலை செய்து கொண்டது அந்தியூர் பகுதியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஆடி கிருத்திகை நேற்று வந்து உள்ளது. இதை யொட்டி ஈரோடு மாவட்ட முருகன் கோவில்களில் அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
சென்னிமலை முருகன் கோவில், ஈரோடு திண்டல்மலை வேலாயுதசாமி கோவில், கோபி பச்சமலை முருகன் கோவில் உள்பட ஈரோடு மாவட்டத்தில் உள்ளஅனைத்து முருகன் கோவில்களிலும் இன்று முருகப்பெருமானுக்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
இதன்பிறகு விசேஷ பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன.
இதில் ஏராளமான பக்தாகள் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.






