என் மலர்tooltip icon

    ஈரோடு

    பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைந்ததால் விவசாய பணிகளை தற்காலிகமாக விவசாயிகள் நிறுத்தியுள்ளனர்.
    கோபி:

    பவானிசாகர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரானது பவானி ஆற்றின் வழியாக கொடிவேரி அணையை வந்தடைகிறது. பின்னர், அங்கிருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை ஆகிய 2 வாய்க்கால்கள் துவங்குகின்றன. இந்த இரு வாய்க்கால் மூலம் 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.

    கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ந் தேதி கொடிவேரி அணையிலிருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. எனினும், பவானிசாகர் அணையில் தண்ணீர் இருப்பு குறைவாக இருந்ததால், இந்த இரு வாய்க்கால்களிலும் 95 நாட்களுக்கு முறை வைத்து தண்ணீர் திறந்துவிட பொதுபணி துறையினர் முடிவு செய்திருந்தனர்.

    பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழையின்மை காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து கடந்த 25 நாட்களாக 200 கன அடி மட்டுமே இருந்தது. இதனால், அணையின் நீர்மட்டம் மிகவும் குறைந்துவிட்டது.

    இவை தவிர சத்தி, கோபி நகராட்சிக்குட்பட்ட 200-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை விளங்கி வருகிறது.

    ஆகவே, இந்த அணையில் தற்போது இருக்கின்ற நீரின் அளவு குடிநீர் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதை கருத்தில் கொண்டு கோபியில் கொடிவேரி அணை பாசனதாரர்கள் சங்கத்தின் அவரசக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் அதன் தலைவர் தங்கம் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் துணை தலைவர் வக்கீல் தளபதி, பிரதாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்கும் பொருட்டு தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன பகுதியில் தற்காலிகமாக நடவு பணிகளை நிறுத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டது.

    மேலும் பவானிசாகர் அணையில் நீர்வரத்து அதிகரிக்கும் போது வேளாண்மை பணிகளை மீண்டும் தொடர்வது என்றும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
    மொடக்குறிச்சி அருகே வேன் டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    குமாரபாளையம் அருகே உள்ள மேட்டுவலவு என்ற இடத்தை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் சுரேஷ்குமார் (வயது 23).

    இவர் மொடக்குறிச்சி அருகே உள்ள ஆலத்து பாளையத்தில் 3 மாதமாக தங்கி வேன் டிரைவர் வேலை பார்த்து வந்தார்.

    குளூர் ரோட்டில் தான் தங்கி இருந்த மாடி வீட்டில் சுரேஷ்குமார் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

    மொடக்குறிச்சி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உறவினர்கள் அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்தனர்.

    மேலும் அரசு ஆஸ்பத்திரி முன் கூடி சாலை மறியல் நடத்தவும் முயன்றனர். அப்போது போலீசார் அங்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ‘‘போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்’’ என்று போலீசார் தெரிவித்தனர். இதையொட்டி மறியலை கைவிட்டு உறவினர்கள் உடலை வாங்கி சென்றனர். இதனால் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு நிலவியது.

    10-ம் வகுப்பு படித்து விட்டு ஆஸ்பத்திரி நடத்தி வந்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
    ஈரோடு:

    தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் டாக்டருக்கு படிக்காமலேயே டாக்டர் என்று கூறி பலர் பொதுமக்களுக்கு வைத்தியம் பார்த்து வருகிறார்கள்.

    இதனால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார் காரணமாக தமிழ்நாடு முழுவதும் போலி டாக்டர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள்.

    இது போல ஈரோடு மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் போலி டாக்டர்கள் உள்ளார்களா? என்று போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஈரோடு அருகே அவல் பூந்துறையில் உள்ள வெள்ளோடு ரோட்டில் ஒருவர் டாக்டருக்கு படிக்காமலேயே பொதுமக்களுக்கு வைத்தியம் பார்த்து வந்தது தெரிய வந்தது.

    இதையொட்டி அரச்சலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அப்போது அங்கு ஆஸ்பத்திரி நடத்தி வந்த விஜய பூபதி (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து உள்ள அவர் அந்த பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக ஆஸ்பத்திரி நடத்தி வந்ததும், ஏராளமான பொதுமக்களுக்கு அவர் வைத்தியம் பார்த்ததும் தெரிய வந்தது.

    கைது செய்யப்பட்ட விஜய பூபதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 10-ம் வகுப்பு மட்டுமே படித்த போலி டாக்டரிடமா நாம் இதுவரை வைத்தியம் பார்த்தோம்? என்று அவர்கள் அதிர்ச்சியுடன் கூறினர்.
    வேளாண் கருவிகளை வாடகைக்கு எடுக்கலாம் என்று விவசாயிகளுக்கு கலெக்டர் பிரபாகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாண் எந்திரமய மாக்குதல் உப இயக்கத்தின் மூலம் 2016-17-ம் ஆண்டில் வேளாண் கருவிகள் வாடகை மையம் அமைத்து பயனடைய வேளாண் விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இந்த மையத்திலிருந்து வேளாண் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான வேளாண் கருவிகளை வாடகைக்கு எடுத்து பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த சேவை மையம் மூலம் டிராக்டர், பவர்டில்லர் போன்ற உழவு கருவிகளும், பல்வகை பயிர் கதிரடிக்கும் எந்திரம் போன்ற தானியங்கி எந்திரங்களும், பயிர் பாதுகாப்பு கருவிகளும், நெல், கரும்பு மற்றும் வாழை போன்ற பயிர்களுக்குத் தேவையான (விதை விதைத்தல் முதல் அறுவடை வரை) கருவிகளை கீழே குறிப்பிடப்பட்டுள்ள விவசாயிகள் குழுவினர் மானிய விலையில் வாங்கி விவசாயிகளுக்குக் குறைந்த வாடகையில் வழங்கலாம்.

    இந்த வேளாண் கருவிகள் வாடகை மையத்தினை பண்ணை மகளிர் திறன் மேம்பாட்டுக் குழுக்கள், நபார்டு வங்கியால் அமைக்கப்பட்ட வேளாண் குழுக்கள், முன்னோடி விவசாயிகள் சேர்ந்த குழுக்கள் மற்றும் தனிப்பட்ட தொழில் முனைவோர் ஏற்று நடத்தலாம்.

    ஒவ்வொரு வாடகை மையமும் ரூ.25.00 லட்சம் செலவில் அமைக்கவும், அதில் வேளாண் கருவிகளின் விலையில் 40 சதவீதம் அல்லது ரூ.10 லட்சம் இதில் எது குறைவோ அந்த தொகை மானியமாக குழுவிற்கு விடுவிக்கப்படும். மீதி 60 சதவீதமான 15 லட்சத்தை பயனாளிகள் குழுவின் பங்களிப்பாக செலுத்த வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களில் 11 வட்டாரங்களான ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி, அம்மாபேட்டை, அந்தியூர், கோபி, டி.என்.பாளையம், நம்பியூர், தாளவாடி, சத்தி ஆகிய வட்டாரங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.

    அதற்கான நிதி ஒதுக்கீடு ரூ.110 லட்சம் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பான விண்ணப்பங்கள் தனிப்பட்ட விவசாயத் தொழில் முனைவோர்- விவசாயக் குழுக்களிடமிருந்து பெறப்பட்டு வருகின்றன.

    இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு ஈரோடு வருவாய் கோட்ட விவசாயிகள், உதவி செயற் பொறியாளர் 73, ஜெயபாரதி மஞ்சள் கிடங்கு, மஞ்சள் வளாகம், நசியனூர் ரோடு, நசியனூர் அஞ்சல், ஈரோடு -638107 தொலைபேசி எண்-0424-2555011என்ற முகவரியிலும், கோபி வருவாய் கோட்ட விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் தெற்குபார்க் வீதி, கோபி, தொலைபேசி எண். 04285- 229159 அலுவலகத்தையும் அணுகலாம்.

    பள்ளிகள் இடையேயான மாநில கிரிக்கெட் போட்டியில் கோத்தகிரி பள்ளி அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
    ஈரோடு:

    தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள ஐ.சி.எஸ்-ஐ.எஸ்.சி பள்ளிகளுக்கு இடையே ஆண்டுதோறும் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. 2016-17ம் கல்வி ஆண்டுக்கான கிரிக்கெட் போட்டியை நிரந்தர அங்கீகாரம் பெற்ற பெருந்துறை தி யுனிக் அகாடமி பள்ளி எடுத்து நடத்தியது.

    மொத்தம் 2 நாட்கள் நடந்த இந்த போட்டி தி யுனிக் அகாடமி பள்ளி மைதானத்திலும் மற்றும் பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி மைதானத்திலும் விறுவிறுப்பாக நடந்தது.

    மொத்தம் 14 பள்ளிகள் கலந்து கொண்டன. நாக்-அவுட் முறையிலும் பி.சி.சி.ஐ-ன் விதிமுறைகளை கடைபிடித்தும் இப்போட்டி நடத்தப்பட்டது. போட்டியை ஏ.எஸ். ஐ.எஸ்.சி.தமிழ்நாடு என்ற அமைப்பின் தலைவர் டாக்டர் சார்லஸ் தொடங்கி வைத்தார்.

    இதன் இறுதி போட்டியில் கோத்தகிரி ரிவர் சைடு பப்ளிக் பள்ளி அணியும், சென்னை சிஷ்யா பள்ளி அணியும் மோதின. டாஸ் வென்ற கோத்தகிரி அணி வீரர்கள் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தனர். அந்த அணி வீரர் ரோஹித் ராம் 94 ரன்கள் எடுத்தார். ராம் நிகேஷ் 36 ரன்னும், ராம் நரேஷ் 27 ரன்னும் எடுத்தனர்.

    200 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கோடு களம் இறங்கிய சென்னை அணி 9.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 48 ரன்களுடன் சுருண்டது. கோத்தகிரி பள்ளி மாணவர்கள் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர்.

    கோத்தகிரி அணி வீரர் நிகேஷ் 4 விக்கெட்டையும் ரோஹித் ராம் 3 விக்கெட்டையும் சாய்த்தனர். தொடர் நாயகனாக ரோஹித் ராம் தேர்வு செய்யப்பட்டார். இளம் விளையாட்டு வீரராக கோவை வீரர் சச்சின் விநாயக் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த பேட்ஸ்மேனாக கோத்தகிரி வீரர் ராம் நரேஷ் தேர்வு செய்யப்பட்டார்.

    முதல் மற்றும் 2-ம் பரிசு பெற்ற அணிகளுக்கு கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இவற்றை பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ்.குப்புசாமி வழங்கி பாராட்டினார்.

    பரிசளிப்பு விழாவில் தி யுனிக் அகாடமி பள்ளி தலைவர் இளங்கோ, பள்ளி முதல்வர் உமயவள்ளி இளங்கோ பள்ளியின் நிர்வாக இயக்குனரும் தமிழக கிரிக்கெட் அணி வீரருமான அஸ்வின் இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டு வீரர்களுக்கு வாழ்த்து கூறினர். முடிவில் பள்ளி மாணவி ஸ்ரீ நிதி நன்றி கூறினார்.
    ஈரோடு ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து உடல் நசுங்கி ராணுவ வீரர் பலியானார்
    ஈரோடு:

    கரூர் மாவட்டம் வேங்கல் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 37). பஞ்சாப்பில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்தார்.

    இவர் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். பிறகு பணிக்கு செல்ல கரூரிலிருந்து ரெயிலில் புறப்பட்டார்.

    இந்த ரெயில் இன்று காலை ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்தது. சிறிது நேரம் நின்று அந்த ரெயில் புறப்பட்டு சென்றது. ராணுவ வீரர் ராஜேந்திரன் ரெயில் படிக்கட்டில் நின்றபடி சென்றதாக கூறப்படுகிறது. ரெயில் சென்று கொண்டிருந்த போது திடீரென 3 மற்றும் 4-வது பிளாட்பார்முக்கு இடையே தண்டவாளத்தில் தவறி விழுந்து விட்டார்.

    இதில் ரெயில் அவர் மீது ஏறியதில் ராஜேந்திரன் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவத்தால் ஈரோடு ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஈரோடு ரெயில்வே போலீசார் ராஜேந்திரன் உடலை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.

    ரெயில் மோதி பலியான ராணுவ வீரர் ராஜேந்திரனுக்கு தமிழ் செல்வி என்ற மனைவியும், கவனீஸ்குமார் என்ற ஒரு மகனும், காயத்ரி என்ற ஒரு மகளும் உள்ளனர்.
    பவானிசாகர் அணையில் தண்ணீர் திறக்கக்கோரி கீழ்பவானி விவசாயிகள் சாலை மறியல் ஈடுபட்ட பெண்கள் உள்பட 400 பேர் கைது செய்யப்பட்டனர்
    சென்னிமலை:

    கீழ்பவானி வாய்க்காலில் பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என கீழ் பவானி பாசன விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    தண்ணீர் திறக்காவிட்டால் சென்னிமலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆடு- மாடுகளுடன் பஸ் நிலையம் முன் மறியல் போராட்டம் நடத்தப்படும் என கீழ்பவானி விவசாயிகள் சங்க நிர்வாகியும் முருங்கத்தொழுவு பஞ்சாயத்து தலைவருமான ரவி அறிவித்திருந்தார்.

    அதன் படி விவசாய சங்கத்தினர் மற்றும் ஏராளமான விவசாயிகள் இன்று காலையிலேயே மறியல் போராட்டம் நடத்த சென்னிமலை பஸ் நிலையம் அருகே குவிந்தனர்.

    பிறகு அவர்கள் சென்னிமலை பஸ் நிலையம் அருகே மறியல் செய்து கோ‌ஷங்கள் எழுப்பினர். மறியல் செய்த 150 பெண்கள் உள்பட 400-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    விவசாயிகள் போராட்டத்தையொட்டி ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டனர். இதனால் சென்னிமலையில் காலையில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    சென்னிமலை, ஈங்கூர், பெருந்துறை உள்பட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் அணி வகுத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று கூறி கர்நாடகாவில் பல்வேறு இடங்களில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகம்-கர்நாடகம் இடையே முற்றிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    சத்தியமங்கலம்:

    காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

    இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அம்மாநில விவசாயிகள் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று கூறி வருகிறார்கள். கர்நாடகாவில் பல்வேறு இடங்களில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    மாண்டியா மற்றும் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் கர்நாடகா விவசாயிகள் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது.

    இதனால் நேற்று மதியம் முதல் தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டன.

    ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய ஊர்களில் இருந்து சத்தியமங்கலம், பண்ணாரி, ஆசனூர், தாளவாடி வழியாக தினமும் 50-க்கும் மேற்பட்ட பஸ்கள் மைசூர், பெங்களூர், கொல்லேகாலுக்கு இந்த பஸ்கள் அனைத்தும் இன்று 2-வது நாளாக இயக்கப்படவில்லை. ஒரு சில பஸ்கள் தமிழக எல்லையான தாளவாடி வரை செல்கிறது.

    இதே போல் கர்நாடகா மாநிலத்தில் இருந்து வரும் பஸ்கள் அந்த மாநில எல்லையான புளிஞ்சூர் வரை வந்து திரும்பி செல்கிறது.

    தாளவாடி அருகே உள்ள சாம்ராஜ்நகர் நஞ்சன் கூடு, மைசூர் ஆகிய இடங்களில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர்.

    அப்பகுதியில் உள்ள தமிழக வியாபாரிகள் முன் எச்சரிக்கையாக கடைகளை அடைத்துள்ளனர்.

    ஈரோடு மாவட்டம் பண்ணாரி சோதனை சாவடியில் இருந்து மலைப்பகுதி தொடங்குகிறது. இந்த வழியாக தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் கர்நாடகாவுக்கு செல்லும்.

    இவை அனைத்தும் பண்ணாரி சோதனை சாவடியில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    கோவையில் இருந்து கர்நாடகா மாநில அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பெங்களூரு, மைசூரு, மண்டியா, கொள்ளேகால் உள்ளிட்ட பகுதிகளுக்கு 60 பஸ்கள் இயக்கப்படுகிறது. நேற்று காலை முதல் பஸ் போக்குவரத்து நடைபெறவில்லை.

    தமிழக-கர்நாடகா எல்லை பகுதியான புஞ்சூர் பகுதியில் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. எல்லைப்பகுதியில் இருந்து உள்ளூர் பஸ்கள் மூலம் பொதுமக்கள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

    கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் கர்நாடக போக்குவரத்து கழக பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தி முடிந்து கர்நாடக மாநிலத்துக்கு செல்ல வேண்டிய பயணிகள் நேற்று காந்திபுரம் பஸ் நிலையத்தில் திரளாக காத்திருந்தனர்.

    இரவில் ஒரு சில பஸ்களே போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. கோவையில் இருந்து பெங்களூரு, மைசூருக்கு சேலம் வழியாக செல்லும் தமிழ்நாடு அரசு பஸ்கள் ஓசூர் வரை மட்டும் இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

    கர்நாடகாவில் பதட்டம் நிலவுவதால் நீலகிரி மாவட்டத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் தமிழக வாகனங்களை போலீசார் அனுமதிக்கவில்லை. இன்று 2-வது நாளாக வாகனங்கள் அனைத்தும் எல்லையில் திருப்பி அனுப்பப்பட்டன. ஒரு சில வாகனங்கள் எல்லை பகுதியான கக்கனல்லாவில் நிறுத்தப்பட்டன.

    இதனால் சுற்றுலா பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர். சில மீட்டர் தூரம் வனப்பகுதிக்குள் அவர்கள் நடந்து சென்று, பஸ் மாறி தாங்கள் செல்லும் பகுதிகளுக்கு சென்றனர்.

    தமிழகத்தில் இருந்து ஓசூர் வழியாக பெங்களூரு செல்லும் 300-க்கும் மேற்பட்ட தமிழக அரசு பஸ்கள் நேற்று முதல் இயக்கப்படவில்லை.

    3 நாட்கள் விடுமுறை முடிந்து நேற்று பெங்களூருக்கு தமிழக பயணிகள் ஏராளமானோர் புறப்பட்டனர். ஓசூரில் தமிழக பஸ்கள் நிறுத்தப்பட்டதால் இரவு முழுவதும் காத்து கிடந்தனர்.

    கர்நாடகாவில் இருந்து ஓசூருக்கு இயக்கப்படும் கர்நாடக அரசு பஸ்கள் மட்டும் வழக்கம் போல இயக்கப்பட்டன. இதனால் அந்த பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இன்று காலையிலும் தமிழக பஸ்கள் இயங்காததால் குறிப்பிட்ட நேரத்திற்கு அலுவலக பணி மற்றும் பள்ளி-கல்லூரிகளுக்கு செல்வோர் செல்ல முடியாமல் தவிக்கும் நிலை நீடித்தது.

    இதே போல சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து மாதேஸ்வரன் மலை வழியாக மைசூர் செல்லும் தமிழக பஸ்கள் கொளத்தூரை அடுத்த பாலாறு சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டன. கர்நாடகாவில் இருந்து மாதேஸ்வரன் மலை வழியாக மேட்டூர், ஈரோடுக்கு இயக்கப்படும் கர்நாடக அரசு பஸ்களும் பாலாறு சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டன.

    தமிழகம்-கர்நாடகம் இடையே முற்றிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சரக்கு வாகனங்களில் வந்துள்ள வெளி மாநில டிரைவர்களும், கிளீனர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தவித்தபடி உள்ளனர்.

    இதன் காரணமாக கோவை, சேலம், ஈரோடு மாவட்டங்களில் கர்நாடக மாநில எல்லைகளில் பதட்டம் நிலவுகிறது.
    பசியுடன் இருப்பவர்களுக்கு உணவளியுங்கள் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் தூத்துக்குடி முதியவர் சைக்கிளில் பிரசாரம் மேற்கொண்டார்.
    ஈரோடு:

    தூத்துக்குடியை சேர்ந்தவர் சிவபாஸ்கரன். தன்னை ஒரு பரதேசி (சாமியார்) என்று கூறிக்கொள்ளும் இந்த 70 வயது முதியவர் தமிழகம் முழுவதும் சைக்கிளில் சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார்.

    சிவ பாஸ்கர சாமியார் சைக்கிளில் ஈரோடு வழியாக சென்றார். அப்போது அவர் தான் செல்லும் வழியில் கண்ட மக்களுக்கு துண்டு நோட்டீசை விநியோகம் செய்து பேசினார்.

    பொது மக்கள் மத்தியில் அவர் பிரசாரம் செய்து பேசியதாவது:-

    முதலில் நம் தாய்-தந்தையரை வணங்குங்கள் அவர்கள்தான் முதலில் நாம் வணங்க வேண்டிய தெய்வங்கள். அப்புறம் வேண்டுமானால் கோவிலுக்கு செல்லுங்கள்.

    நீங்கள் செய்ய வேண்டியது. மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள், செய்யக்கூடாதது பயனற்ற விவாதத்தை தவிருங்கள். முறையான வாழ்க்கைக்கு உழைப்பு, திறமை நேர்மை இந்த மூன்றும் வேண்டும்.

    எப்போதும் உங்களிடம் இருக்க வேண்டியது. நாட்டுப்பற்று, மொழிப்பற்று, நாம் ஒவ்வொருவரும் தமிழனாக வாழ வேண்டும்.

    மிகப்பெரிய நோய் பேராசை அதை அண்ட விடாதீர்கள் விரட்டியடியுங்கள். மிகவும் கீழ்த்தரமான வி‌ஷயம் பொறாமை அதை விட்டொழியுங்கள். மிகவும் வேண்டியது பணிவு வேண்டாதது வெறுப்பு.

    கோழி, ஆடு, மாடு, மீன் போன்ற ஊர்வன, பரப்பன, கால்நடைகளை துடிதுடிக்க ரத்தம் சொட்டச்சொட்ட கொன்று இறந்த உயிர்களின் பிண உடலை உண்பது அறிவியல் ஆகுமா? ஆன்மீகம் ஆகுமா? மனிதத்தன்மை ஆகுமா? எல்லாம் உயிர்களையும் எரிக்கும் சுடுகாடா... உங்கள் வயிறு? உயிர் உடம்பே ஆலயம். உயிர் இரக்கமே வழி. ஆகவே உயிர்களை கொல்லாதீர்கள் மாமிசங்களை உண்ணாதீர்.

    மதி கெடுக்கும் கொடிய மதுவை அருந்தாதீர். எல்லா உயிர்களின் பசியை தீர்ப்பது பரம புண்ணியம். பசியுடன் உள்ளவர்களுக்கு உணவளியுங்கள். அவர்களின் பசியை போக்குங்கள்.

    இவ்வாறு வழி நெடுக பிரசாரம் செய்தபடி சென்றார் சிவபாஸ்கர பரதேசி.
    ஈரோடு அருகே குடிப்பதை மறக்க முடியாததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு தீயணைப்பு நிலையம் அருகே உள்ள கள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் காந்திமுருகன் (வயது34). இவரது மனைவி சுகுணா (31).

    காந்திமுருகனுக்கு குடி பழக்கம் இருந்து வந்தது. “போதைக்கு அடிமையாகி விடாதீர்கள் குடிப்பதை மறந்து குடும்பத்தை பாருங்கள்” என்று அவரது மனைவி சுகுணா அடிக்கடி கூறி வந்தாராம்.

    மேலும் குடிப்பதை நிறுத்திவிட்டு வேலைக்கு செல்லுங்கள் எல்லாம் சரியாகி விடும் என்று ஆறுதல் கூறியும் வந்தாராம். எனினும் அவரால் குடிக்காமல் இருக்க முடிய வில்லை. இதனால் அவர் வேதனையில் இருந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 18-ந் தேதி அவர் வி‌ஷம் மருந்தை எடுத்து குடித்து விட்டார். அவரை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் கடந்த 2-ந் தேதி பரிதாபமாக இறந்து விட்டார்.

    இது குறித்து அவரது மனைவி சுகுணா கொடுத்த புகாரின் பேரில் ஈரோடு தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாகுமார் விசாரணை நடத்தி வருகிறார்.

    ஈரோடு மாவட்டத்தில் ரெயிலில் பயணித்த ஓய்வு பெற்ற அரசு பெண் ஊழியரிடம் இருந்து 14 பவுன் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ஈரோடு:

    ஈரோட்டை சேர்ந்தவர் ஏசுரத்தினமணி (வய62). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவரது மனைவி ஸ்டெல்லா சுமதி (59). ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.

    இவர்கள் நேற்று கோவையில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரெயிலில் புறப்பட்டனர். கோவை வந்த அவர்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னர் பயணிகள் ரெயில் மூலம் மாலை ஈரோட்டுக்கு புறப்பட்டனர்.

    ரெயில் திருப்பூரை கடந்து பெருந்துறை அடுத்த ஈங்கூர் ரெயில் நிலையத்தில் நின்றது. ஸ்டெல்லா சுமதி ஜன்னல் அருகே அமர்ந்திருந்தார். சிறிது நேரத்தில் ரெயில் புறப்பட தயாரானது.

    அப்போது பிளாட்பாரத்தில் நின்ற வாலிபர் ஜன்னல் அருகே ஓடிவந்து ஸ்டெல்லா சுமதி கழுத்தில் அணிந்திருந்த 14½ பவுன் நகையை பறித்தான். அதிர்ச்சியடைந்த ஸ்டெல்லா சுமதி திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டார். அப்போது ரெயில் புறப்பட்டது.

    சுதாரித்துக்கொண்ட பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். உடனே ரெயில் நிறுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பெண்ணிடம் நகைப்பறிக்கப்பட்டது தெரிய வந்தது.

    கொள்ளையனை போலீசாரும், பயணிகளும் தேடினர். புதர் நிறைந்த பகுதியில் மறைந்து கொள்ளையன் தப்பியிருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து ஸ்டெல்லா இன்று காலை திருப்பூர் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையனை தேடி வருகிறார்கள்.
    தாளவாடி அருகே கர்நாடக மாநில மது விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    தாளவாடி அருகே உள்ள திகினாரையை சேர்ந்தவர் ருமா சந்திரன் (வயது 65). இவர் திகினாரை பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டு தடை செய்யப்பட்ட கர்நாடகா மாநில மது பாட்டில்களை விற்பனை செய்து கொண் டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட தாளவாடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பழனிசாமி முதியவர் ருமாசந்திரனை கைது செய்தார். அவரிடம் இருந்து விஸ்கி பாக்கெட்டுகள் மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைது செய்யப்பட்ட ருமாசந்திரன் பிறகு ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

    இது குறித்துதாளவாடி போலீசார் கூறும் போது, தடை செய்யப்பட்ட கர்நாடகா மது பாட்டில்களையோ, மது பாக்கெட்டுகளையோ அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடாது. ரோந்து வரும் போலீசார் அவர்களை கைது செய்து வழக்கு தொடருவார்கள் என்று கூறி உள்ளனர்.

    ×