என் மலர்tooltip icon

    செய்திகள்

    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது: விவசாய பணிகளை தற்காலிகமாக நிறுத்திய விவசாயிகள்
    X

    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது: விவசாய பணிகளை தற்காலிகமாக நிறுத்திய விவசாயிகள்

    பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைந்ததால் விவசாய பணிகளை தற்காலிகமாக விவசாயிகள் நிறுத்தியுள்ளனர்.
    கோபி:

    பவானிசாகர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரானது பவானி ஆற்றின் வழியாக கொடிவேரி அணையை வந்தடைகிறது. பின்னர், அங்கிருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை ஆகிய 2 வாய்க்கால்கள் துவங்குகின்றன. இந்த இரு வாய்க்கால் மூலம் 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.

    கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ந் தேதி கொடிவேரி அணையிலிருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. எனினும், பவானிசாகர் அணையில் தண்ணீர் இருப்பு குறைவாக இருந்ததால், இந்த இரு வாய்க்கால்களிலும் 95 நாட்களுக்கு முறை வைத்து தண்ணீர் திறந்துவிட பொதுபணி துறையினர் முடிவு செய்திருந்தனர்.

    பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழையின்மை காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து கடந்த 25 நாட்களாக 200 கன அடி மட்டுமே இருந்தது. இதனால், அணையின் நீர்மட்டம் மிகவும் குறைந்துவிட்டது.

    இவை தவிர சத்தி, கோபி நகராட்சிக்குட்பட்ட 200-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை விளங்கி வருகிறது.

    ஆகவே, இந்த அணையில் தற்போது இருக்கின்ற நீரின் அளவு குடிநீர் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதை கருத்தில் கொண்டு கோபியில் கொடிவேரி அணை பாசனதாரர்கள் சங்கத்தின் அவரசக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் அதன் தலைவர் தங்கம் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் துணை தலைவர் வக்கீல் தளபதி, பிரதாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்கும் பொருட்டு தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன பகுதியில் தற்காலிகமாக நடவு பணிகளை நிறுத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டது.

    மேலும் பவானிசாகர் அணையில் நீர்வரத்து அதிகரிக்கும் போது வேளாண்மை பணிகளை மீண்டும் தொடர்வது என்றும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×