என் மலர்tooltip icon

    ஈரோடு

    பவானி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பவானி:

    பவானியை அடுத்த நெரிஞ்சிப்பேட்டை படகுத்துறை பகுதியை சேர்ந்தவர் பாரதி. இவரது மனைவி மீனா (வயது 21). மீனா தனது சகோதரர் செல்வம் என்பவருடன் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    பவானி மேட்டூர் ரோடு ஊராட்சிக்கோட்டை அருகே வந்த போது அந்த வழியாக வந்த ஒரு கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மீனா தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் மீது கார் ஏறியது. இதில் மீனா, செல்வம் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவர்களை மீட்டு பவானி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மீனா மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி மீனா பரிதாபமாக இறந்தார். இது குறித்து பவானி போலீசார் விசாரனை செய்து வருகிறார்கள்.

    கொடுமுடி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் டயர் வெடித்ததில் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
    கொடுமுடி:

    கொடுமுடி அருகே உள்ள பாசூர் பழனி கவுண்டன் பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் முத்துக்குமார்(வயது 29) தொழிலாளி.

    இவர் தனது அத்தை ராமாயி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

    பழனி கவுண்டம் பாளையம் அருகே வரும்போது மோட்டார் சைக்கிளின் முன்புற டயர் திடீர் என்று வெடித்தது. இதனால் தாறுமாறாக ஓடிய மோட்டார் சைக்கிளில் இருந்து முத்துக்குமாரும், ராமாயியும் கீழே விழுந்தனர்.

    இதில் தலையில் பலத்த அடிபட்ட முத்து குமார் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த ராமாயி ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து மலையம், பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வயதான பெண் ஒருவர் கவனிக்க யாரும் இல்லாததால் பசியால் தவிக்கும் என்னை அனாதை இல்லத்தில் சேருங்கள் என்று ஈரோடு ரெயில்வே போலீசாரிடம் கூறினார்.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையத்தில் இன்று காலை ரெயிலில் செல்வதற்காக ஏராளமான பேர் வந்தனர். இதே போல ஈரோட்டுக்கு வந்தவர்கள் அவசர அவசரமாக தங்களுக்கு ஊருக்கு செல்வதாக புறப்பட்டு சென்றனர்.

    அப்போது 3-வது பிளாட் பாரத்தில் படுத்து இருந்த வயதான ஒரு பெண் அழுதபடி இருந்தார். இவரை அந்த வழியாக சென்ற யாருமே கண்டு கொள்ளவில்லை.

    அப்போது அந்த வழியாக ரெயில்வே போலீசார் ரோந்து சென்றனர். அவர்கள் பிளாட்பாரத்தில் அழுதபடி படுத்திருந்த அந்த மூதாட்டியிடம் விசாரித்தனர்.

    அப்போது அவர் ‘‘என்னை கவனிக்க யாருமே இல்லை. நான் அனாதையாகி விட்டேன். இந்த வயதான காலத்தில் தினமும் பசியால் துடிக் கிறேன். எனவே என்னை ஏதாவது முதியோர் இல்லத்தில் சேருங்கள். அங்கு சென்றாலாவது எனக்கு வயிறார சாப்பாடு கிடைக்கும்’’ என்று அழுதபடியே கூறினார்.

    அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்த ரெயில்வே போலீசார் அவரிடம் மேலும் விசாரித்தனர்.

    அப்போது அவரது பெயர் பவானி (வயது 70). சிதம்பரம் கவரப் பேட்டையில் உள்ள மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த சம்பந்தம் என்பரின் மனைவி என்பதும் தெரியவந்தது.

    எனக்கு குழந்தைகள் இல்லாததால் தனது கணவர் வேறு ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். இப்போது கணவர் இறந்த நிலையில் 2-வது மனைவியின் மகன்கள் என்னை கவனிக்க வில்லை என்று கூறினார்.

    இதனால் போலீசார் அந்த மூதாட்டிக்கு காலை உணவு வாங்கி கொடுத்தனர். முதியோர் இல்லத்தில் சேர்க்கவும் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

    ஈரோடு அருகே படுத்து தூங்கிய மூதாட்டி தீயில் கருகி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு அருகே 46 புதூர் சின்ன பச்சப்பாளியில் உள்ள விளையாட்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் வெங்கடாச்சலம்.இவரது மனைவி பொன்னம்மாள் (வயது 70). சம்பவத்தன்று இரவு இவர் தனது வீட்டில் கட்டிலில் படுத்து தூங்கினார். கொசு தொல்லை அதிகமாக இருந்ததால் தனது அருகில் கொசுவர்த்தி பற்ற வைத்திருந்தார்.

    இந்த கொசுவர்த்தியில் இருந்து பரவிய தீ அதிகாலையில் பொன்னம்மாளின் சேலையில் பிடித்து எரிந்தது. இதில் அவரது நெஞ்சு, வயிறு, மற்றும் கால் தொடைகளில் தீக்காயம் ஏற்பட்டது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மகன் கந்தன் மற்றும் பொன்னம்மாளின் தம்பி குப்புசாமி ஆகியோர் பொன்னம்மாள் மீது பிடித்து எரிந்த தீயை அணைத்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிசிக்சை பலன் இல்லாமல் பொன்னம்மாள் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஸ்பின்னிங் மில்லில் வேலையை விட்டு நிறுத்தியதால் காரை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    கர்நாடக மாநிலம் சிமோகா என்ற இடத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 32). இவர் இப்போது திருவண்ணாமலையில் உள்ள ஆதமங்களாபுரம் என்ற இடத்தில் வசித்து வருகிறார்.

    திருப்பூரில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்த மஞ்சுநாத் பிறகு சிவகிரி செல்வநகரில் உள்ள ஒரு ஸ்பின்னிங் மில்லில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த மில்லின் உரிமையாளருக்கு இவர் கார் ஓட்டி வந்தார். இந்தநிலையில் மஞ்சுநாத்தின் நடவடிக்கை அவருக்கு பிடிக்கவில்லை. இதனால் மஞ்சுநாத்தை அவர் வேலையில் இருந்து நிறுத்தி விட்டார். இதனால் மஞ்சுநாத் ஆத்திரம் அடைந்தார். இதை தொடர்ந்து அவர் மில்லின் உரிமையாளர் வீட்டுக்கு சென்றார். அங்கு போர்டிகோவில் நிறுத்தி இருந்த காரை திருடிய அவர் அதை திருவண்ணாமலைக்கு கொண்டு செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

    இது பற்றி சிவகிரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடப்பட்ட காரையும் அதை திருடி சென்ற மஞ்சுநாத்தையும் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சிவகிரி அருகே உள்ள அஞ்சூர் என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக காரை ஓட்டி சென்ற மஞ்சு நாத்தை போலீசார் மடக்கி பிடித்து கைதுசெய்தனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதுசெய்யப்பட்ட மஞ்சு நாத் கொடுமுடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    கனரா வங்கி எஸ்.சி.எஸ்.டி ஊழியர் சங்கம் சார்பில் சென்னை வட்ட மாநாடு ஈரோட்டில் இன்று நடந்தது.

    இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.

    முன்னதாக திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    காவிரி நதி நீர் பிரச்சனை தொடர்பாக தென் மாநில முதல் அமைச்சர்களின் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமையா கூறியதை எங்கள் கட்சி வரவேற்கிறது. சட்ட ரீதியாக மட்டும் அல்லாமல் அரசியல் ரீதியாகவும் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

    முதல் அமைச்சர் ஜெயலலிதா உடனே அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இது தொடர்பாக ஆலோசனை நடத்த வேண்டும். இது தொடர்பாக அனைத்து கட்சிகள் அடங்கிய குழு அமைத்து பிரதமர் மோடியை சந்தித்து நமது கருத்தை வலியுறுத்த வேண்டும்.

    கோவையிலும், சிவகங்கையிலும் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்திய தலித்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

    சில கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக தலித்துகள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்துவதில் ஆர்வமாக உள்ளன. இவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பெருந்துறை அருகே பஸ்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவி உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

    ஈரோடு:

    கோவையில் இருந்து ஈரோட்டுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஒரு அரசு பஸ் வந்து கொண்டு இருந்தது. இந்த பஸ் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் பகுதியில் வந்தபோது அந்த வழியாக ஒரு லாரி வந்து கொண்டு இருந்தது.

    ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருந்து சிமெண்ட் பாரம் ஏற்றி கொண்டு வந்த அந்த லாரியும் பஸ்சும் கண் இமைக்கும்  நேரத்தில் நேருக்கு நேர் மோதி கொண்டன.

    இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் பயந்து போய் அய்யோ அம்மா என்று அலறினார்கள்.

    இதில் பஸ்சில் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிசியோ தெரபி படித்து வரும் அவினாசியை சேர்ந்த விஜி வேகா (20) என்ற மாணவி இன்று கல்லூரிக்கு செல்வதற்காக வந்து கொண்டு இருந்தார்.

    பஸ் -லாரி மோதலில் மாணவி விஜி வேகா படுகாயம் அடைந்தார். மேலும் பஸ்சில் பயணம் செய்த பிரியா (வயது 19), ராமாத்தாள் (41), முத்தாயாள் (65), சஞ்சீவ் குமார் (49) ஆகியோரும் காயம் அடைந்தனர்.

    மேலும் கிணத்துக்கடவை சேர்ந்த லாரி டிரைவர் குமார வடிவேலுக்கு இந்த விபத்தில் காலில் முறிவு ஏற்பட்டது. இடுபாடுகளுக்குள் சிக்கிய அவரை மீட்டனர்.

    இந்த விபத்தில் காயம் அடைந்த 6 பேரும் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதையொட்டி இன்று 5-வது நாளாக கர்நாடகத்துக்கு தமிழக பஸ்கள் செல்வது நிறுத்தப்பட்டது.
    சத்தியமங்கலம்:

    தமிழகத்துக்கு கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதையொட்டி கர்நாடகாவில் கடந்த 4 நாட்களாக பதட்டம் நிலவி வருகிறது.

    கன்னட அமைப்பினரும் அம்மாநில விவசாய சங்கத்தினரும் தமிழ்நாட்டுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் காரணமாக தமிழகம்-கர்நாடகம் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டது. தமிழக பஸ்கள் செல்வதும் நிறுத்தப்பட்டது.

    ஈரோடு, கோவை, திருப்பூர் மற்றும் சத்தியமங்கலத்திலிருந்து திம்பம்-ஆசனூர் மலைப்பதை வழியாக கர்நாடகா மாநிலம் செல்லும் தமிழக பஸ்கள் 4-வது நாளாக நேற்று நிறுத்தப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் தண்ணீர் திறக்கப்படுவதை எதிர்த்தும் தமிழகத்தை கண்டித்தும் கர்நாடகாவில் இன்று கன்னட அமைப்பினரும் விவசாய சங்கத்தினரும் முழு அடைப்பு (வேலை நிறுத்தம்) செய்ய அழைப்பு விடுத்தனர்.

    இந்த அமைப்பினர்களும் பல்வேறு கட்சியினரும் கன்னட சங்கத்தினரும் சேர்ந்து முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்தனர்.

    இதையொட்டி இன்று 5-வது நாளாக கர்நாடகத்துக்கு தமிழக பஸ்கள் செல்வது நிறுத்தப்பட்டது. நேற்று வரை கர்நாடக மாநில பஸ்கள் ஈரோடு, கோவை, திருப்பூர், சத்தியமங்கலம் வந்து சென்றது.

    ஆனால் இன்று கர்நாடகாவில் பந்த்தையொட்டி கர்நாடக மாநில பஸ்களும் தமிழகத்துக்கு வருவது நிறுத்தப்பட்டன.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி வழியாக தினமும் ஏராளமான லாரிகள், சரக்கு வாகனங்கள் செல்லும். இந்த வழியாக சென்றால் மத்திய பிரதேசம், பஞ்சாப், பீகார் மாநிலங்களும் எளிதில் சென்று விடுவதால் சத்தியமங்கலம் மலைப்பாதை 24 மணி நேரமும் பரபரப்பாக இருக்கும். போக்குவரத்து நெரிசலும் இருக்கும்.

    ஆனால் கர்நாடக மாநிலத்தில் பந்த்தையொட்டி இன்று சத்தியமங்கலம் மலைப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது.

    கர்நாடக மாநிலம் செல்லும் லாரிகள் மற்றும் வாகனங்கள் பாதுகாப்பு கருதி மலையடிவாரம் உள்ள பண்ணாரி வன சோதனை சாவடியில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    ஈரோடு மாவட்ட எல்லையான தாளவாடி வரை தமிழக பஸ்கள் சென்று திரும்பி விடுகின்றன. இதே போல் மற்ற வாகனங்களும் தாளவாடி செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் இன்று காலையிலிருந்தே பதட்டம் நிலவியது. போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள கன்னட கூட்டமைப்பு சங்கங்களின் தலைவர் வாட்டாள் நாகராஜ் சொந்த மாவட்டம் சாம்ராஜ் நகர் என்பதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. சாம்ராஜ் நகரில் தமிழர்கள் பலர் வசித்து வருகிறார்கள். மேலும் பலர் கடைகள் வைத்து உள்ளனர்.

    இதையொட்டி சாம்ராஜ் நகர் மாவட்டம் முழுவதும் பெங்களூருக்கு அடுத்தப்படியாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடைகள் யாவும் அடைக்கப்பட்டு உள்ளன. மாவட்டம் முழுவதும் வெறிச்சோடி கிடக்கிறது.

    தமிழர்களின் கடைகள், நிறுவனம் மீது தாக்குதல் நடந்து விடக்கூடாது என கருதி அங்கு போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

    சாம்ராஜ் நகரில் உள்ள பதட்ட நிலை ஈரோடு மாவட்ட கர்நாடக எல்லையான தாளவாடியிலும் நிலவி வருகிறது.

    இதையொட்டி தாளவாடியில் தமிழக போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு உள்ளனர்.
    ஈரோடு கஸ்பாபேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி கீழ்கண்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கஸ்பாபேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி கீழ்கண்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    கஸ்பாபேட்டை, முள்ளாம் பரப்பு, சினனியம்பாளையம், வேலாங்காட்டு வலச, வீரப்பம்பாளையம், 46 புதூர், ரங்கம்பாளையம், குறிக்காரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவிந்தநாய்க்கன் பாளையம்

    மற்றும் நஞ்சை ஊத்துக்குளி, செங்கராபாளையம், டி.மேட்டுப்பாளையம், ஆணைக்கல்பாளையம், ஈ.பி.நகர், இந்தியன் நகர், டெலிபோன் நகர், பாரதி நகர், மூலப்பாளையம், செட்டிபாளையம், சடையம் பாளையம், முத்துகவுண்டன் பாளையம், கருந்தேவன் பாளையம், சாவடிபாளைம் புதூர், ரகுபதிநாயக்கன் பாளையம், கிளியம்பட்டி, காகத்தான்வலசு ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

    இதேபோல் எழுமாத்தூர் துணை மின் நிலையத்திலும் நாளை பராமரிப்பு நடப்பதால் கீழ் இடங்களில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

    எழுமாத்தூர், மண்கரடு, செல்லாத்தாபாளையம், பாண்டிபாளையம், எல்லக்கடை காதக்கிணறு குலவிளக்கு, மொடக்குறிச்சி, குளூர், வடுகபட்டி, 60 வேலம்பாளையம், மணியம் பாளையம், வெள்ளபெத்தாம் பாளையம், வே.புதூர், கணபதிபாளையம், ஆனந்தம் பாளையம், எரப்பம் பாளையம், மின்னக்காட்டு வலசு, வெப்பிலி மற்றும் 88 வேலம்பாளையம்.

    இந்த தகவலை ஈரோடு தெற்கு செயற் பொறியாளர் சின்னுசாமி தெரிவித்துள்ளார்.

    அவல்பூந்துறை அருகே கார் மோதி 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த குறித்து அரச்சலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரச்சலூர்:

    தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்த பச்சமுத்து (வயது 40), ஈரோடு மூலப்பட்டறை பகுதியை சேர்ந்த செந்தில்குமார் இருவரும் அரச்சலூர் அருகே உள்ள அவல்பூந்துறை 4 ரோடு பகுதியில் நின்று கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்து கொண்டிருந்தது. எதிர்பாராவிதமாக அந்த கார் அவர்கள் மீது மோதியது. இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவர்களை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர்கள் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இது குறித்து பச்சமுத்து அரச்சலூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கோபி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து இன்று பஸ்களை சிறைபிடித்து பெண்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
    கோபி:

    கோபி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து இன்று பஸ்களை சிறைபிடித்து பெண்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

    கோபி அருகே உள்ள கூகலூர் அடுத்த கொன்னமடையில் குடிநீர் சரியாக வினியோகம் செய்யப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது. அப்பகுதியில் உள்ள 4 போர்களிலும் தண்ணீர் வரண்டு விட்டதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதனால் கூடுதல் போர்கள் அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    போர்கள் அமைக்காததை கண்டித்தும், குடிநீர் சீராக வழங்காததை கண்டித்தும் கொன்னமடையில் இன்று பெண்கள் காலி குடங்களுடன் ரோட்டில் அமர்ந்து திடீர் சாலை மறியல் ஈடுபட்டனர். இதில் ஆண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் பொதுமக்கள் வாகனங்கள் எதுவும் செல்லாதபடி கவுந்தபாடி- கோபி ரோட்டில் மரங்களையும் வெட்டி போட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 3 டவுண் பஸ்களையும் பெண்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் கிடத்ததும் சம்பவ இடத்துக்கு கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமை தலைமையில் போலீசார் விரைந்தனர். அவர்கள் சாலை மறியல் நடத்திய பெண்கள், பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் சீராக கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    கர்நாடகா மாநிலத்தில் தொடரும் போராட்டம் காரணமாக ஈரோடு மாட்டுச்சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்ததுள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் மாட்டுச்சந்தை நடைபெறும். இந்த சந்தையையொட்டி புதன்கிழமை இரவே மாடுகள் வந்துவிடும்.

    தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம் உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். அதிகாலை 4 மணிக்கு வியாபாரம் தொடங்கி பகல் 11 மணி வரை வியாபாரம் விறு,விறுப்பாக நடைபெறும்.

    கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக அந்த மாநிலத்தில் கன்னட அமைப்பினர், விவசாய அமைப்பை சேர்ந்தவர்களும் தெடர்ந்து 4-வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் இரு மாநிலத்துக்கும் போக்குவரத்து சீர்குலைந்து உள்ளது.

    இதனை தொடர்ந்து இன்று ஈரோடு மாட்டுச் சந்தைகளை குறைந்து காணப்பட்டது. வழக்கம் போல் 550 பசுமாடுகள் வரும். ஆனால் இன்று நடந்த சந்தையில் 400 மாடுகள் வந்தன. ஒவ்வொரு மாடும் ரூ.16 ஆயிரம் முதல் 33 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

    450 எருமை மாடுகள் வரும் ஆனால் இன்று 350 மாடுகள் மட்டும் வந்திருந்தது. ஒரு எருமைமாடு ரூ.18 ஆயிரம் முதல் ரூ.34 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் கன்று குட்டிகள் 400 வரும் இன்று 300 தான் வந்தன. ரூ.2 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை விற்கப்பட்டன.

    இதனால் இந்த வாரம் 20 சதவிதம் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
    ×