என் மலர்
ஈரோடு
ஈரோடு:
தாளவாடி அருகே உள்ள சேசன் நகர் என்ற இடத்தை சேர்ந்தவர் அம்பீஸ்வரன். தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா (வயது 37). இவர்களுக்கு ஒரு மகனும் ஒருமகளும் உள்ளனர்.
மல்லிகா நோய்க்கொடு மையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் பல இடங்களில் வைத்தியம் பார்த்தும் நோய் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த நிலையில் அவர் காணப்பட்டார்.
இந்த நிலையில் தனது வீட்டில் தனியாக இருந்த மல்லிகா மண் எண்ணையை எடுத்த தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதனால் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. வேதனை தாங்க முடியாமல் மல்லிகா காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அலறினார்.
இதை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மல்லிகாவின் மீது பிடித்து எரிந்த தீயை அணைத்தனர்.
இதன் பிறகு கவலைக்கிடமாக இருந்த அவரை சாம்ராஜ் நகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக மைசூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் மல்லிகா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பவானி:
பவானி அருகே உள்ள சித்தோடு நல்லகவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். பால்வண்டி டிரைவராக உள்ளார். இவரது மனைவி மேகலா (வயது 30).
இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. நவின் (6), கிஷோர் (4) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் மேகலாவுக்கும், அவரது மாமியாருக்கு அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த மேகலா வீட்டில் யாரும் இல்லாத போது தனது துப்பட்டாவில் பேன் கொக்கியில் மாட்டி தூக்கு போட்டு கொண்டார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.
நீண்ட நேரமாகியும் மேகலாவின் வீட்டின் கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரது வீட்டின் கதவை தட்டி பார்த்தனர். ஆனால் திறக்க வில்லை. சந்தேகம் அடைந்த அவர்கள் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அங்கு மேகலா தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்னர். உடனடியாக சித்தோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து மேகலா உடலை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஈரோடு:
ஈரோட்டை அடுத்த கவுண்டச்சி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 56) விவசாயி.
தங்கராஜின் உறவினர் ஒருவர் இறந்து விட்டதால் நேற்று பகல் 11 மணிக்கு இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு சென்றார்.
பிறகு மாலையில் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதன்பிறகு வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ கதவையும் உடைத்துஅதன் உள்ளே இருந்த 8 பவுன் நகை, 15 ஆயிரம் ரொக்கம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
தங்கராஜின் வீட்டை சுற்றிலும் கரும்புகாடு உள்ளது. இந்த கரும்பு காட்டுக்குள் பதுங்கி இருந்த கொள்ளையர்கள் அவர் வீட்டின் கதவை பூட்டி விட்டு சென்றதை நோட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்து உள்ளது.
இது பற்றி வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு கொடுமுடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின்சாரம் இருக்காது.
கொடுமுடி, சாலைபுதூர், குப்பம்பாளையம், ராசாம் பாளையம், ஒத்தக்கடை, ஊஞ்சலூர், பிலிக்கல்பாளையம், தாமரைபாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், வடபுதுப் பாளையம்.
இந்த தகவலை ஈரோடு தெற்கு செயற்பொறியாளர் சின்னசாமி தெரிவித்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி ஆசனூர்-மைசூர் ரோட்டில் தற்போது யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக மாலை நேரத்தில் மேகமூட்டமாக இருக்கும் போது இந்த யானைகள் காட்டுக்குள் இருந்து வெளியேறி ரோட்டோரம் மேய்கிறது.
ஆசனூர் பகுதியில் இதேபோல் யானைகள் வெளியே நடமாடும்போது அந்த வழியாக இருசக்கர வாகனங்கள் மற்றும் கார், வேன்களில் வருபவர்களும் வண்டியை நிறுத்தி யானைகளை வேடிக்கை பார்க்கிறார்கள்.
மேலும் பலர் வண்டிகளை விட்டு கீழே இறங்கி தங்களது செல்போனில் யானையை படம் எடுக்கிறார்கள்.
“யானைகள் தற்போது ரோட்டோரம் மேய்வதை பொதுமக்கள் ஆர்வத்துடன் படம் எடுக்க வேண்டாம். அவை கும்கி யானைகள் அல்ல.. காட்டு யாகைள். எந்த நேரத்திலும் கோபத்துடன் ஆக்ரோசமாக நம்மை தாக்க வரும்” என்று வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.
மேலும் மைசூர் ரோட்டில் செல்லும் வாகனங்கள் வேகமாக செல்ல வேண்டாம் வன விலங்குகள் ரோட்டை கடக்க கூடும். இதனால் அதன் மீது விபத்துகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறி உள்ளனர்.
கோபி அருகே உள்ள வேட்டைக்காரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சின்னமணி (வயது 62).
பெண் விவசாயியான இவர் நேற்று மதியம் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது தண்ணீர் இரைக்கும் கம்பரசர் மோட்டரை (எந்திரத்தை) இயக்கினார். இதில் அவரது சேலை எந்திரத்தில் சிக்கி அவரையும் இழுத்து நசுக்கியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இரவு சின்னமணி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கோபி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடுபவர்களை பிடித்து போலீசார் கைது செய்து வருகிறார்கள்.
இதேபோல தாளவாடி பகுதியில் லட்சக்கணக்கில் பணம் வைத்து பெரிய அளவில் சூதாட்டம் நடப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையொட்டி ஆசனூர் போலீசார் தாளவாடி அடுத்த தொட்டபுரம் என்ற இடத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு ஏராளமான பேர் பல பிரிவுகளாக உட்கார்ந்து பணம் வைத்து சூதாடி கொண்டு இருந்தனர். இவர்கள் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடமுயன்றனர்.
அவர்களை போலீசார் சுற்றி வளைத்து தடுத்து கைதுசெய்தனர். மொத்தம் 43 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து சூதாட்ட பணம் ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் சூதாட்டக்காரர்கள் பயன்படுத்திய கார், வேன் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உள்பட 8 வாகனங்களையும் போலீசார் கைப்பற்றினர். வாகனங்கள் யாவும் ஆசனூர் போலீஸ் நிலையம் முன் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த விடுதியில் பல மாதங்களாக பணம் வைத்து சூதாட்டம் நடந்து வருவதாகவும், ஆனால் இதுவரை அந்த பகுதி போலீசாருக்கு தகவல் தெரியாமல் இருந்தது எப்படி என்பது பற்றியும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் விசாரித்து வருகிறார்.
ஆசனூர் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 43 பேர் கைது செய்யப்பட்டதும் ரூ.3லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னிமலை உப்பிலிபாளையம் இங்கு அரசு உதவி பெறும் கஸ்தூரிபாய் துவக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருபவர் சிவகாமி (வயது 45), இவர் சிவியார்பாளையத்தினை சேர்ந்தவர் கணவர் பெயர் தெய்வசிகாமணி, தலைமை ஆசிரியை சிவகாமியும் அவரது மகன் சிவபிராசமும் நேற்று உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மாலை காரில் சென்னிமலை -பெருந்துறை ரோட்டில் 1010 நெசவாளர்காலனி பிரிவு அருகே ஊர் திருப்பி கொண்டு இருந்தனர்.
அப்போது ரோட்டில் நோ பார்க்கிங் ஏரியாவில் சிவப்பு விளக்கு இல்லாமல் சரக்கு ஆட்டோ ஒன்று நின்றுள்ளது. இந்த ஆட்டோ நின்றது தெரியாமல் கார் வந்த வேகத்தில் திடீர் என மோதியதில் அதில் டிரைவர் சீட் அருகே முன் பகுதியில் அமர்ந்திருந்த சிவகாமி படுகாயம் அடைந்தார்.
உடனடியாக அக்கம் பக்கத்தவர் மீட்டு ஈரோடு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் தலைமை ஆசிரியை சிவகாமி பரிதாபமாக இறந்தார். கார் ஓட்டி வந்த சிவபிராகாசமும் படுகாயம் அடைந்தார். அவர் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இன்று காலை சிவாகாமியின் உடல் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், பரமேஸ்வரன் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படும் விதமாக ஆட்டோவினை நிறுத்திய டிரைவர் முருகனைதேடி வருகிறார். பள்ளி தலைமையாசிரியை விபத்தில் பலியான சம்பவம் சென்னிமலை பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் முழுவதும் தற்போது வெயில் சுட்டெரித்து கொண்டிருக்கிறது. வெளியே தலை காட்ட முடியாத அளவுக்கு வெயில் வாட்டுகிறது. அதே சமயம் மாலை மற்றும் இரவு நேரத்தில் மேகம் திரண்டு வந்து குளிர் காற்று வீசினாலும் மழை பெய்யாமல் ஏமாற்றி விடுகிறது.
நேற்றும் இதே நிலைதான் நீடித்தது. சத்தியமங்கலம் வனப்பகுதியும் வெயிலின் பிடியில் சிக்கி தவித்து கருக தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் திடீரென மேகக்கூட்டங்கள் சூழ்ந்து மழை பெய்தது. சிறு..சிறு துளிகளாக பெய்த மழை பிறகு சாரல் மழையாக பெய்தது. இந்த சாரல் மழையால் வனப்பகுதி குளுமையானது திடீர் ஊட்டியாக மாறியதால் பொதுமக்கள் உற்சாகம் அடைந்தனர்.
திம்பம், தலமலை, ஆசனூர், அரேப்பாளையம், கேர்மாளம், காளிதிம்பம், மாவநத்தம் உள்பட சுற்று வட்டார வனப்பகுதியில் இந்த மழை பெய்தது. இதனால் ரோட்டில் ஒரு சில இடங்களில் தண்ணீர் ஓடியது.
மழையடிவாரம் உள்ள பண்ணாரி, சிக்கரசம் பாளையம் வரை பெய்த இந்த சாரல் மழை சத்தி நகரில் பெய்யாதது சத்தி நகர மக்களை மிகவும் ஏமாற்றம் அடைய செய்தது.
சத்தியமங்கலம் மலைப் பகுதியில் விவசாயிகள் குச்சி கிழங்கு, முட்டைகோஸ், நிலக்கடலை போன்ற பயிர்களை சாகுபடி செய்து உள்ளனர். நேற்று மாலை பெய்த திடீர் சாரல் மழையால் நிலப்பகுதி குளிர்ந்து உள்ளது. பயிர்களையும் குளிர வைத்திருப்பதை கண்டு அப்பகுதி விவசாயிகள் மகிழச்சி அடைந்தனர்.
தொடர்ந்து இதே போல் மழைபெய்யுமா? என்று விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை, மடத்துகுளம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாச்சலம். இவரது மகன் கார்த்திகேயன்(வயது25).
கார்த்திகேயன் ஈரோடு மாவட்டம் முத்தம்பாளையத்தில் தங்கி பெருந்துறையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.ஏ.ஆங்கிலம் இலக்கணம் படித்து வந்தார். மேலும் பகுதி நேரமாக ஈரோட்டில் உள்ள ஒரு புத்தக கடையில் வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று இரவு வேலையை முடித்து கொண்டு கார்த்திகேயன் முத்தம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத கார் ஒன்று கார்த்திகேயன் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்காக போராடினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி கார்த்திகேயன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தமிழகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆய்வு நடத்தி சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதன்படி மத்திய நீர்வள ஆதாரங்கள் மற்றும் ஆறுகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் மூலம் மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் ஜி.எஸ்.ஷா தலைமையில் உயர்மட்ட தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் மத்திய நீர்வள ஆணைய உறுப்பினர் மசூத் உசேன், மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குப்தா, கர்நாடக மாநில தலைமைச் செயலாளர் சார்பில் ஜெயபிரகாஷ், கர்நாடக மாநில முதன்மைச் செயலாளர் ராகேஸ்சர்மா, இந்திய அரசின் வேளாண் மைத்துறை கூடுதல் அரசு செயலாளர் ரத், பொதுப் பணித்துறை முதன்மைச் செயலாளர் பிரபாகர், தமிழ்நாடு காவேரி தொழில் நுட்பக் குழு தலைவர் சுப்ரமணியம், கர்நாடக மாநில தலைமைப் பொறியாளர் ராக்கேஷ் சிங், கேரள மாநில தலைமை பொறியாளர் மாதேவ், பாண்டிச்சேரி மாநில தலைமைப் பொறியாளர் சுவாமிநாதன், வருவாய் நிர்வாக ஆணையாளர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் சத்தியகோபால்.
மேலும், வேளாண் உற்பத்தி ஆணையாளர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி, வேளாண்மைத் துறை இயக்குனர் தட்சணா மூர்த்தி, ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
இந்த குழுவினர் பவானி சாகர் அணையினை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக ஈரோடு மாவட்டத்துக்கு வந்தனர்.
இந்த குழுவினர் ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகரை சந்தித் தனர். அப்போது ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்ஆதார விவரம் குறித்த விரிவான அறிக்கையினை குழுவின் தலைவர் ஜி.எஸ்.ஷாவிடம் வழங்கி, ஈரோடு மாவட்டத்தில் நீர் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, உயர்மட்ட தொழில்நுட்ப குழுவினரிடம் கலெக்டர் விளக்கம் அளித்தார்.
இதனை தொடர்ந்து, உயர்மட்ட தொழில்நுட்ப நிபுணர் குழுவினர் பவானி சாகர் அணைக்கு சென்று ஆய்வு செய்தார்கள். மேலும் கோபி, பவானி பகுதிகள் மற்றும் காளிங்கராயன் வாய்க்கால் பகுதிகளையும் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வுக்குப்பின் உயர்மட்ட தொழில்நுட்ப நிபுணர் குழு தலைவர் ஜி.எஸ்.ஷா நிருபர்களிடம் கூறியதாவது:-
உச்சநீதிமன்றத்தின் ஆணைக்கிணங்க இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளோம். இன்றைய தினம் ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையின் நீர்இருப்பு, நீர் வெளியேற்றம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாசன பகுதிகளில் நீர்பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த விவர அறிக்கையினை வழங்கி உள்ளனர். மேலும் இங்குள்ள விவசாயிகள் கருத்து மற்றும் கோரிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இக்குழு தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர் ஆகிய பகுதிகளை குழுவினருடன் ஆய்வு செய்த பின் இதற்கான அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பவானிசாகர் அணைக்கு வந்த உயர்மட்ட தொழில்நுட்ப நிபுணர் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை கலெக்டர் பிரபாகர் மற்றும் பவானி சாகர் எம்.எல்.ஏ. ஈஸ்வரன் ஆகியோர் வரவேற்றனர்.
இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சதீஸ், கோபி சப்-கலெக்டர் கிருஷணன் உன்னி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
ஈரோடு:
பவானி அருகே உள்ள சித்தாரை சேர்ந்தவர் சேஷய்யர் (வயது 62) பீடி சுற்றும் தொழிலாளி.
சம்பவத்தன்று இவர் மேட்டூர் மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு மொபட் சேஷய்யர் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவர் பவானி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பிறகு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் சிகிச்சை பலன் இல்லாமல் சேஷய்யர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கே, சப்- இன்ஸ்பெக்டர் சரஸ்வதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






