என் மலர்tooltip icon

    செய்திகள்

    பவானிசாகர் அணையில் மத்திய அரசின் உயர்மட்ட குழு அதிகாரிகள் ஆய்வு
    X

    பவானிசாகர் அணையில் மத்திய அரசின் உயர்மட்ட குழு அதிகாரிகள் ஆய்வு

    பவானி சாகர் அணையில் உயர்மட்ட தொழில்நுட்ப நிபுணர் குழுவினர் இன்று ஆய்வு செய்தார்கள். மேலும் கோபி, பவானி பகுதிகள் மற்றும் காளிங்கராயன் வாய்க்கால் பகுதிகளையும் ஆய்வு செய்தனர்.
    சத்தியமங்கலம்:

    தமிழகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆய்வு நடத்தி சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இதன்படி மத்திய நீர்வள ஆதாரங்கள் மற்றும் ஆறுகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் மூலம் மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் ஜி.எஸ்.ஷா தலைமையில் உயர்மட்ட தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவில் மத்திய நீர்வள ஆணைய உறுப்பினர் மசூத் உசேன், மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குப்தா, கர்நாடக மாநில தலைமைச் செயலாளர் சார்பில் ஜெயபிரகாஷ், கர்நாடக மாநில முதன்மைச் செயலாளர் ராகேஸ்சர்மா, இந்திய அரசின் வேளாண் மைத்துறை கூடுதல் அரசு செயலாளர் ரத், பொதுப் பணித்துறை முதன்மைச் செயலாளர் பிரபாகர், தமிழ்நாடு காவேரி தொழில் நுட்பக் குழு தலைவர் சுப்ரமணியம், கர்நாடக மாநில தலைமைப் பொறியாளர் ராக்கேஷ் சிங், கேரள மாநில தலைமை பொறியாளர் மாதேவ், பாண்டிச்சேரி மாநில தலைமைப் பொறியாளர் சுவாமிநாதன், வருவாய் நிர்வாக ஆணையாளர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் சத்தியகோபால்.

    மேலும், வேளாண் உற்பத்தி ஆணையாளர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி, வேளாண்மைத் துறை இயக்குனர் தட்சணா மூர்த்தி, ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

    இந்த குழுவினர் பவானி சாகர் அணையினை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக ஈரோடு மாவட்டத்துக்கு வந்தனர்.

    இந்த குழுவினர் ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகரை சந்தித் தனர். அப்போது ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்ஆதார விவரம் குறித்த விரிவான அறிக்கையினை குழுவின் தலைவர் ஜி.எஸ்.ஷாவிடம் வழங்கி, ஈரோடு மாவட்டத்தில் நீர் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, உயர்மட்ட தொழில்நுட்ப குழுவினரிடம் கலெக்டர் விளக்கம் அளித்தார்.

    இதனை தொடர்ந்து, உயர்மட்ட தொழில்நுட்ப நிபுணர் குழுவினர் பவானி சாகர் அணைக்கு சென்று ஆய்வு செய்தார்கள். மேலும் கோபி, பவானி பகுதிகள் மற்றும் காளிங்கராயன் வாய்க்கால் பகுதிகளையும் ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வுக்குப்பின் உயர்மட்ட தொழில்நுட்ப நிபுணர் குழு தலைவர் ஜி.எஸ்.ஷா நிருபர்களிடம் கூறியதாவது:-

    உச்சநீதிமன்றத்தின் ஆணைக்கிணங்க இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளோம். இன்றைய தினம் ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையின் நீர்இருப்பு, நீர் வெளியேற்றம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பாசன பகுதிகளில் நீர்பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த விவர அறிக்கையினை வழங்கி உள்ளனர். மேலும் இங்குள்ள விவசாயிகள் கருத்து மற்றும் கோரிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இக்குழு தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர் ஆகிய பகுதிகளை குழுவினருடன் ஆய்வு செய்த பின் இதற்கான அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக பவானிசாகர் அணைக்கு வந்த உயர்மட்ட தொழில்நுட்ப நிபுணர் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை கலெக்டர் பிரபாகர் மற்றும் பவானி சாகர் எம்.எல்.ஏ. ஈஸ்வரன் ஆகியோர் வரவேற்றனர்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சதீஸ், கோபி சப்-கலெக்டர் கிரு‌ஷணன் உன்னி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
    Next Story
    ×