என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்தியமங்கலம் வனப்பகுதியில் திடீர் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    சத்தியமங்கலம் வனப்பகுதியில் திடீர் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

    சத்தியமங்கலம் வனப்பகுதியில் திடீரென மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் முழுவதும் தற்போது வெயில் சுட்டெரித்து கொண்டிருக்கிறது. வெளியே தலை காட்ட முடியாத அளவுக்கு வெயில் வாட்டுகிறது. அதே சமயம் மாலை மற்றும் இரவு நேரத்தில் மேகம் திரண்டு வந்து குளிர் காற்று வீசினாலும் மழை பெய்யாமல் ஏமாற்றி விடுகிறது.

    நேற்றும் இதே நிலைதான் நீடித்தது. சத்தியமங்கலம் வனப்பகுதியும் வெயிலின் பிடியில் சிக்கி தவித்து கருக தொடங்கி உள்ளது.

    இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் திடீரென மேகக்கூட்டங்கள் சூழ்ந்து மழை பெய்தது. சிறு..சிறு துளிகளாக பெய்த மழை பிறகு சாரல் மழையாக பெய்தது. இந்த சாரல் மழையால் வனப்பகுதி குளுமையானது திடீர் ஊட்டியாக மாறியதால் பொதுமக்கள் உற்சாகம் அடைந்தனர்.

    திம்பம், தலமலை, ஆசனூர், அரேப்பாளையம், கேர்மாளம், காளிதிம்பம், மாவநத்தம் உள்பட சுற்று வட்டார வனப்பகுதியில் இந்த மழை பெய்தது. இதனால் ரோட்டில் ஒரு சில இடங்களில் தண்ணீர் ஓடியது.

    மழையடிவாரம் உள்ள பண்ணாரி, சிக்கரசம் பாளையம் வரை பெய்த இந்த சாரல் மழை சத்தி நகரில் பெய்யாதது சத்தி நகர மக்களை மிகவும் ஏமாற்றம் அடைய செய்தது.

    சத்தியமங்கலம் மலைப் பகுதியில் விவசாயிகள் குச்சி கிழங்கு, முட்டைகோஸ், நிலக்கடலை போன்ற பயிர்களை சாகுபடி செய்து உள்ளனர். நேற்று மாலை பெய்த திடீர் சாரல் மழையால் நிலப்பகுதி குளிர்ந்து உள்ளது. பயிர்களையும் குளிர வைத்திருப்பதை கண்டு அப்பகுதி விவசாயிகள் மகிழச்சி அடைந்தனர்.

    தொடர்ந்து இதே போல் மழைபெய்யுமா? என்று விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
    Next Story
    ×