என் மலர்
ஈரோடு
திருப்பூர் ராம்நகர், 2-வது வீதியை சேர்ந்தவர் கணேஷ்குமார்(வயது38). பனியன் வியாபாரம் செய்து வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கணேஷ்குமார் வேதனையுடன் இருந்துள்ளார். சம்பவத்தன்று அவர் ஈரோட்டிற்கு வந்தார். மேட்டூர் ரோட்டில் உள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கினார்.
நீண்ட நேரமாகியும் அவரது அறை கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் கதவை தட்டி உள்ளனர். ஆனால் பதில் வரவில்லை.
இது குறித்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கதவை உடைத்து சென்று பார்த்தனர். அங்கு கணேஷ்குமார் விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆஸ்பத்திரி போலீஸ் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தென்காசி உதவி கலெக்டர் வெங்கடேஷ் தலைமையில், சிவகிரி மண்டல துணை தாசில்தார் அருணாசலம், ராயகிரி கிராம நிர்வாக அலுவலர் காளிதாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் சிவகிரி அருகே உள்ள கருவாட்டு பாறை இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ராஜசிங்கபேரி கண்மாயில் இருந்து, மணல் அள்ளி வந்த டிராக்டரை நிறுத்துமாறு அதிகாரிகள் சைகை காண்பித்தனர்.
ஆனால் டிராக்டரை ஓட்டி வந்த டிரைவர், டிராக்டரை நிறுத்தாமல், அதிகாரிகளின் மீது மோதுவது போன்று ஓட்டி வந்தார். பின்னர் அவர் டிராக்டரை சற்று தொலைவில் நிறுத்தி விட்டு, உதவி கலெக்டருக்கு கொலைமிரட்டல் விடுத்து, இருளில் தப்பி சென்றார். அந்த டிராக்டரில் நம்பர் பிளேட் இல்லை. அந்த டிராக்டரை அதிகாரிகள் பறிமுதல் செய்து, சிவகிரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசாரின் விசாரணையில் அந்த டிராக்டரை ஓட்டி வந்தவர் ராயகிரி வடக்கு காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராமையா மகன் முருகன் என்பதும், டிராக்டரின் உரிமையாளர் ராயகிரி மண்டபம் தெருவைச் சேர்ந்த மாடசாமி மகன் சமுத்திரபாண்டி என்பதும் தெரிய வந்தது. அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான அவர்கள் 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு சித்தோடு ரோட்டில் உள்ள தண்ணீர்பந்தல் பாளையம் பெட்ரோல் பங்க் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் அடிபட்டு கிடந்தார். அருகே அவர் வந்த மோட்டார் சைக்கிளும் கிடந்தது. இதனால் மோட்டார் சைக்கிளில் வந்தவர் விபத்தில் சிக்கி ரோட்டில் படுகாயத்துடன் கிடந்தது தெரிய வந்தது.
அவரை அப்பகுதியினர் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸபத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை.
ஈரோடு வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
பவானி சாகர் அருகே உள்ள கொத்தமங்கலம் தயிர் பள்ளம் என்ற இடத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 44). தொழிலாளி இவரது மனைவி வசந்தா (40). இவர்களது மகள் நித்தியா.
நித்தியா ஒருவரை காதலித்து வந்தார் , இதற்கு தந்தை வேலுச்சாமி கடும் எதிர்ப்பு தொவித்தார். இவரது எதிர்ப்பை பொருட்படுத்தாமல் நித்தியா வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் வேலுச்சாமி மனம் உடைந்தார். அவர் மற்றவாகளிடம் தனது மகள் எனது பேச்சை கேட்காமல் காதல் திருமணம் செய்து கொண்டாளே என்று அழுது புலம்பினார்.
இந்த நிலையில் அவர் விஷம் குடித்த நிலையில் வீட்டில் மயங்கி கிடந்தார் உடனே அவரை ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் வேலுச்சாமி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் கோபி மொடச்சூர் அருகே உள்ள கலராமணி பால்கார வீதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 72). கூலித் தொழிலாளியான இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். மனைவி பெயர் பார்வதி (65).
இவர்களின் 2-வது மகன் ஜெகநாதன் (37). திருமணமாகி விட்டது. இவர் இறைச்சி கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். ஜெகநாதனுக்கு குடிப்பழக்கம் உண்டு. சம்பாதிக்கும் பணத்தில் குடித்து விட்டு வீட்டில் வந்து ரகளை செய்வாராம். மேலும் தந்தை மாரியப்பனிடமும் அடிக்கடி குடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வருவாராம்.
இதேபோல் நேற்று மாலையில் ஜெகநாதன் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கும் அவரது தந்தை மாரியப்பனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இப்படி தினமும் குடித்து விட்டு வருகிறாயே... திருந்தவே மாட்டியா...? என்று மாரியப்பன் திட்டினார்.
இந்த தகராறு முற்றவே மகன் மீது உள்ள ஆத்திரத்தில் தந்தை அவரை அடித்து உதைத்தார். போதையில் கீழே விழுந்த ஜெகநாதன் தலையில் பெரிய கல்லை எடுத்து போட்டார். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. ஜெகநாதன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
மகனை கொன்ற முதியவர் மாரியப்பன் அங்கிருந்து தப்பி ஓடினார். இந்த சம்பவம் குறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை தேடி வந்தனர்.
நேற்று இரவு தலைமறைவாக இருந்த தந்தை மாரியப்பனை கோபி போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் ‘‘என் மகன் ஜெகநாதன் தினமும் குடித்துவிட்டு தகராறு செய்து வந்தான். எவ்வளவோ சொல்லி பார்த்தும் கேட்கவில்லை. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவன் தலையில் கல்லை போட்டு தீர்த்துக் கட்டினேன்’’ என்று கூறி உள்ளார்.
போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழக கைத்தறிதுறை மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஈரோடு வந்தார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொங்கல் பண்டிகைக்கு ஏழைகளுக்கு வழங்கப்பட உள்ள இலவச வேட்டி- சேலை தயாரிப்பு பணி குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். தமிழக கைத்தறி முதன்மை செயலாளர் ஹர்மந்தர்சிங் துணிநூல் இயக்குனர் முனியநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறியதாவது:-
பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு மூலம் ஏழை- எளியவர்கள் பயன்பெறும் வகையில் விலையில்லா வேட்டி-சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு, நாமக்கல், கோவை, திருப்பூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 112 விசைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் வேட்டி-சேலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
தற்போது இப்பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளது. பொங்கலுக்கு பயனாளிகளுக்கு வழங்க ஏதுவாக கொள்முதல் முகமை நிறுவனங்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும். இந்தியாவிலேயே கைத்தறி மற்றும் விசைத்தறி உற்பத்தியிலும் தமிழகம் “நம்பர் ஒன்”னாக திகழ்கிறது.
மறைந்த தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா அவர்களால் ஆண்டு தோறும் விலையில்லா வேட்டி- சேலை வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள செம்புளிச்சம்பாளையத்தை சேர்ந்தவர் மணிராஜ் (வயது 45).
இவர் தனது வீட்டையொட்டி பேக்கிரி கடை நடத்தி வருகிறார். இவர் ரொட்டி, பண் வகைகளை தயாரித்து (குடிசை தொழில்) அருகில் உள்ள ஊர்களில் உள்ள கடைகளில் போட்டு வந்தார்.
இவரும், இவரது பங்காளிகளும் சேர்ந்து புடவை காளியம்மன் கோவிலை கட்டி வருகிறார்கள். இதற்காக பங்காளிகள் கொடுத்த பணம் ரூ.3 லட்சத்து 60 ஆயிரமும், மேலும் பேக்கரி கடை வருமானம் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் என ரூ. 7 லட்சத்தை மணிராஜ் வீட்டு பீரோவில் வைத்திருந்தார்.
இன்று அதிகாலை 2 மணியளவில் 6 பேர் கொண்ட கும்பல் ஒரு காரில் வந்தது. 6 பேரும் முகத்தை துணியால் மறைத்திருந்தனர். பிறகு அவர்கள் மணிராஜ் வீட்டு கதவை தட்டினர்.
வீட்டு வேலையாட்கள் தான் கதவை தட்டுகிறார்கள் என எண்ணி கதவை திறந்தார். உடனே அந்த கும்பல் அவரை வீட்டுக்குள் தள்ளி கதவை பூட்டினர். ஒருவன் அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினாள்.
பிறகு கொள்ளையர்கள் வீட்டின் பீரோவில் இருந்த ரூ.7 லட்சம் மற்றும் அதில் இருந்த 5 பவுன் நகைகளையும் கொள்ளையடித்தனர்.
அதன்பிறகு வியாபாரி மணிராஜை வீட்டுக்குள் வைத்து விட்டு வெளியே கதவை தாழ்ப்பாள் போட்டு கொண்டு கொள்ளையர்கள் தப்பி ஓடி விட்டனர்.
வீட்டுக்குள் வைத்து பூட்டப்பட்ட மணிராஜ் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து அந்தியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் முகமூடி கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு:
தக்காளியின் விலை கடந்த சில நாட்களாகவே கிலோ ரூ. 5 முதல் 7 வரை விற்கப்பட்டது. நேற்று இதன் விலை திடீர் என்று உயாந்து கிலோ ரூ. 16 க்கு விற்கப்பட்டது.
ஆந்திராவில் இருந்து வழக்கமாக வரும் தக்காளி நேற்று வரவில்லை என்பதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று ஆந்திராவில் இருந்தும் ஈரோடு மாவட்டம் தாளவாடியில் இருந்தும் தக்காளி அதிக அளவில் வந்ததால் இதன் விலை குறைந்தது.
இதன் காரணமாக இன்று காலை ஒரு கிலோ தக்காளி ரூ. 7 க்கு விற்கப்பட்டது. விலை குறைவாக இருந்ததால் பொதுமக்கள் அதிக அளவில் தக்காளியை வாங்கி சென்றனர்.
ஈரோடு வீரப்பன்சத்திரம் கொத்துக்காரன் வீதியை சேர்ந்தவர் மணிமொழி (வயது27) பி.எஸ்.சி பட்டதாரியான இவர் ஷேர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார்.
இவரது உறவினர் சண்முகம் (62). இவரது மனைவி சாந்தி (52). இவர்களது மகன் கார்த்திக் (26). இவர்கள் ஈரோடு வீரப்பன் சத்திரம் கலைவாணர் வீதியில் வசித்து வருகிறார்கள்.
இவர்களது வீட்டுக்கு மணிமொழி அடிக்கடி வந்து செல்வார். அப்போது சண்முகமும், சாந்தியும் தங்களது மகன் கார்த்திக்கை மணிமொழிக்கு திருமணம் செய்து வைப்பதாக ஆசை வார்த்தை கூறினர்.
இதன் பிறகு மணிமொழியை ஏமாற்றி பணம்- நகைகளை வாங்கி கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் கார்த்திக்குக்கு மணிமொழி எழுதிய கடிதம் பற்றி வெளியில் சொல்வதாகவும் அவர்கள் மிரட்டினார்கள்.
இதனால் மன உளைச்சலில் இருந்த மணிமொழி கடந்த 23.9.2013 அன்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவர் தனது தற்கொலைக்கான காரணம் பற்றி ஒரு கடிதத்தையும் எழுதி இருந்தார்.
இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகம், இவரது மனைவி சாந்தி, இவர்களது மகன் கார்த்திக் ஆகிய 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை ஈரோடு மகளிர் கோர்ட்டு நீதிபதி திருநாவுக்கரசு இன்று விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட சண்முகம், சாந்தி, கார்த்திக் ஆகிய 3 பேருக்கும் 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், தலா ரூ. 10 ஆயிரமும் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 2 வருடம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் தனது தீர்ப்பில் கூறி உள்ளார்.
இந்த வழக்கில் அரசு வக்கீல் சுமதி ஆஜரானார்.
கவுந்தப்பாடி:
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள வளையக்காரபாளையம் சுண்டமேட்டில் அன்னமார் கோவில் உள்ளது. 65 ஆண்டாக செயல்படும் இந்த கோவிலில் 2 ஆண்டுக்கு ஒருமுறை திருவிழா நடக்கும். தினமும் கோவிலுக்கு அப்பகுதி மக்கள் சென்று வழிபடுவார்கள்.
இந்த கோவிலில் கருப்பசாமி, கன்னிமார், முனியப்பன்சாமி மற்றும் நாகர்சாமிகள் உள்ளது.
நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கோவில் உள்ளே இருந்து சத்தம் கேட்டது. உண்டியலை உடைப்பதுபோல் சத்தம் கேட்டது.
இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் இந்த நேரத்தில் கோவில் உள்ள என்ன சத்தம்? என்று சந்தேகப்பட்டு உள்ளே சென்று பார்த்தனர்.
உள்ளே 2 ஆசாமிகள் கோவில் உண்டியல் பணத்தை கொள்ளையடிக்க உடைத்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் சத்தம் போட்டனர். இதை கேட்டு அங்கு மேலும் பல பொதுமக்கள் ஓடி வந்தனர்.
ஊர்மக்கள் திரண்டு வருதை கண்ட கொள்ளையர்கள் 2 பேரும் உண்டியலை அப்படியே போட்டு விட்டு தப்பி ஓடினர். அவர்களை விடாமல் பொதுமக்களும் விரட்டினர்.
காட்டு வழியாக அவர்கள் ஓடும் போது ஒரு கொள்ளையன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளத்தில் விழுந்துவிட்டான். இதில் பலத்த அடிபட்ட அவனால் எழுந்து தப்பி ஓட முடியவில்லை.
இதற்கிடையே விரட்டி வந்த பொதுமக்கள் அருகே வந்து அவனை பிடித்து கொண்டனர். மற்றொரு கொள்ளையன் இருளில் ஓடி தப்பிவிட்டான்.
பிடிபட்ட கொள்ளையனை பொதுமக்கள் அடித்து உதைத்தனர். சரமாரியாக அடி விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவனை அப்பகுதி மக்கள் சிலர் மீட்டு பவானிஅரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆஸ்பத்திரியில் பரிசோதித்த டாக்டர்கள் அவன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் கவுந்தப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீசார் விசாரணையில் பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட கொள்ளையன் ஈரோடு அருகே உள்ள ஆர்.என்.புதூர் சி.எம்.நகரை சேர்ந்த பழனிச்சாமி (வயது 46) என்றும் திருமணமாகி மனைவியும் 3 மகன்களும் 1 மகளும் உள்ளனர் எனவும் தெரியவந்தது.
கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
மேலும் இதுகுறித்து கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நம்பியூர்:
நம்பியூர் அருகே கெடாரையை சேர்ந்தவர் குமார் (வயது31). தொழிலாளி. இவரது மனைவி பாரதி (22). இவர்களுக்கு தரணிஸ்ரீ (3) என்ற மகளும், ஸ்ரீதரன் (1) என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு காரணமாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்றும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் குமார் வேலைக்கு சென்று விட்டார்.
இதனால் மனம் உடைந்த பாரதி தற்கொலை செய்ய முடிவெடுத்து வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். நீண்ட நேரமாக குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு கொண்டே இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் பாரதி வீட்டு கதவை தட்டி உள்ளனர்.
ஆனால் பதில் வர வில்லை. ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது பாரதி தூக்குபோட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கதவை உடைத்து பாரதியை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
பாரதியை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பாரதியின் தாய் பழனியம்மாள் தனது மகளின் சாவில் மர்ம இருப்பதாக வரப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் கோபி டி.எஸ்.பி.செல்வம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். மேலும் பாரதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் கோபி சப்- கலெக்டர் கிருஷ்ணன்உன்னியும் விசாரித்து வருகிறார்.
ஈரோடு:
ஈரோடு வீரப்பன்சத்திரம் காந்திஜிவீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பிரேமா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். செந்தில்குமாரின் பெற்றோர் சுமார் ரூ.1 லட்சத்தை அவரிடம் கொடுத்து வைத்திருந்தனர்.
இந்த பணத்தை செந்தில்குமார் செலவு செய்துவிட்டார். இதனால் செந்தில்குமாரை அவருடைய பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த செந்தில்குமார் கடந்த 21-ந் தேதி வீட்டில் இருந்தபோது மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
இதில் உடல் முழுவதும் தீக்காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் நேற்று இரவு 8 மணிஅளவில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






