என் மலர்tooltip icon

    ஈரோடு

    கோபி அருகே நிச்சயித்த பெண் காதலனுடன் ஓடியதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    கோபி:

    கோபி அடுத்த பச்சைமலை அடிவாரப் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் மணிகண்டன் (வயது22). வேன் டிரைவர்.

    மணிகண்டனுக்கும் உசிலம்பட்டி அருகே உள்ள கோட்டைபட்டியை சேர்ந்த லாவண்யாவுக்கும் இரண்டு வீட்டு பெற்றோர்கள் திருமணம் பற்றி பேசி முடித்தனர்.

    இதன்படி கடந்த மாதம் 5-ந் தேதி(திங்கட்கிழமை) நிச்சயதார்த்தம் நடைபெற முடிவு செய்யப்பட்டிருந்தது. நிச்சயதார்த்ததிற்கான ஏற்பாடுகளில் இரு வீட்டு பெற்றோர்களும் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் கடந்த மாதம் 3-ந் தேதி(சனிக்கிழமை) லாவண்யா காதலனுடன் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தார். இதையெடுத்து நிச்சயதார்த்தம் நிறுத்தப்பட்டது.

    தனக்கு பேசிமுடித்த பெண் காதலனுடன் ஓடியதிலிருந்து மணிகண்டன் மனவேதனையுடன் இருந்தார். அவரது பெற்றோர் ஆறுதல் கூறி வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மணிகண்டன் தற்கொலை செய்ய முடிவெடுத்து சேலையால் தூக்கு போட்டார்.

    நீண்ட நேரமாக மணிகண்டன் வீடு பூட்டி இருப்பதால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் கதவை தட்டி உள்ளனர். பதில் வரவில்லை. கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அங்கு மணிகண்டன் தூக்கில் தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அவரை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மணிகண்டனை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கோபி சப்- இன்ஸ்பெக்டர் பழனிசாமி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
    புஞ்சைபுளியம்பட்டி அருகே பொங்கல் பண்டிகைக்காக 85 வயதிலும் ஒரு முதியவர் மண்சிலைகளை வடிவமைத்து வருகிறார்.
    புஞ்சைபுளியம்பட்டி:

    தொழில்நுட்ப வளர்ச்சி இன்றைய தலைமுறையினரிடம் பெரிய புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வளர்ச்சி நன்மையை கொடுத்தாலும், மனிதனின் உடல் உழைப்பை குறைத்துக்கொண்டே செல்கிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு செய்த எந்தவொரு வேலையையும் தற்போது கணினிமயமாக்கப்பட்ட இந்த காலத்தில் எளிதாக செய்து முடிக்க முடிகிறது.

    எந்திரத்தை காட்டிலும் கைகளால் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு பொருளிலும் ஒரு கலைநயம் இருப்பதை உணர முடியும். நாம் எத்தனை பரிமான வளர்ச்சிக்கு அடி எடுத்து வைத்தாலும் மண்பானையில் சமைத்த உணவுக்கும், களிமண்ணால் உருவாக்கப்பட்ட சிலைக்கும் தனிச்சிறப்பு இருப்பதை உணர முடியும். ஆனால் களிமண்ணால் சிலைகளை வடிவமைக்கும் தொழில் நலிவடைந்து வருவதை யாராலும் மறுக்க முடியாது.

    இப்படிப்பட்ட கலை உணர்வு உடைய தொழிலை மீட்டெடுக்க அயராது பாடுபட்டு வருகிறார் 85 வயது முதியவர் ஒருவர். ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே அலங்காரிபாளையம் கிராமத்தை சேர்ந்த அவருடைய பெயர் ராமசாமி. இவர் தன்னுடைய வாழ்நாளில் ஆயிரக்கணக்கான களிமண் சிலைகளை வடிவமைத்து உள்ளார்.

    இதுகுறித்து முதியவர் ராமசாமி கூறியதாவது:-

    வானம் பார்த்த பூமியாக இருக்கும் எங்களுடைய கிராமத்தில் மண்பானைகள், அகல் விளக்குகள், சாமி சிலைகள் ஆகியவற்றை பரம்பரையாக செய்து வருகிறோம். இந்த காலக்கட்டத்திலும் மண்பாண்டம் தொடர்பான பொருட்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆனால் தொழில் செய்வதற்கு தான் ஆட்கள் கிடையாது.



    எந்திரங்களின் பயன்பாடு எந்த உயரத்திற்கு சென்றாலும் குறிப்பிட்ட வேலைகளை மனிதனால் மட்டுமே செய்ய முடியும். நான் சிறு வயதில் இருந்தே இந்த தொழிலை செய்து வருகிறேன். ஆனால் தற்போது இளைஞர்கள் யாருமே இந்த தொழிலை செய்வதில்லை என்பதுதான் வருத்தமளிக்கிறது. யாருமே தொழிலுக்கு முன்வராததால் நான் இந்த தொழிலை விடாமல் செய்து வருகிறேன்.

    இவ்வாறு ராமசாமி கூறினார்.

    ஆண்டுதோறும் மாட்டு பொங்கலன்று மாடு, பசுமாடு, வெள்ளாடு, நாய், குதிரை உள்ளிட்ட மண்ணால் ஆன புதிய சிலைகளை வைத்து விவசாயிகள் வழிபாடு நடத்துவார்கள். மேலும் கிராம மக்கள் கருப்பராயன் கோவிலில் நேர்த்திக்கடனாக கருப்பராயன், கன்னிமார், சின்னண்ணன், பெரியண்ணன், நல்லதங்காள், மதுரை வீரன் ஆகிய சாமிகளின் சிலைகளை வைத்து வழிபடுவார்கள்.

    பொங்கல் பண்டிகை வருகிற 14-ந் தேதி கொண்டாடப்பட உள்ளதால் சாமி சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. களிமண்ணால் தயாரிக்கப்படும் சிலைகள் வெயிலில் காய வைத்து நெருப்பில் சுடப்படுகிறது. பின்னர் சிலைகளுக்கு வர்ணம் பூசி அழகுபடுத்தப்படும். இவ்வாறு தயாரிக்கப்படும் சிலைகள் புஞ்சைபுளியம்பட்டி, நம்பியூர், சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
    சென்னிமலை அருகே தனியார் பஸ் மொபட் நேருக்கு நேர் மோதியதில் நெசவாளர் கூட்டுறவு சங்க மேஸ்திரி பரிதாபமாக இறந்தார்.
    சென்னிமலை:

    சென்னிமலை அருகே தனியார் பஸ் மொபட் நேருக்கு நேர் மோதியதில் நெசவாளர் கூட்டுறவு சங்க மேஸ்திரி பரிதாபமாக இறந்தார்.

    சென்னிமலை அடுத்துள்ள முகாசிபிடாரியூர் 1010 நெசவாளர் காலனியை சேர்ந்தவர் சாமியப்பன் (வயது60). இவர் சென்னிமலையில் உள்ள ஒரு நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் தறிகளை பழுது பார்க்கும் மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சீதாலட்சுமி, வயது (52) என்ற மனைவியும், மோகன்ராஜ் வயது 23 என்ற மகனும், கோகிலா வயது (21) என்ற மகளும் உள்ளனர்.

    கோகிலா பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தினமும் காலையில் கோகிலாவை அவரது தந்தை சாமியப்பன் தனது மொபட் மூலம் அழைத்து சென்று சிப்காட்டில் விட்டு விட்டு திரும்புவார்.

    அதுபோல் நேற்றும் காலையில் கோகிலாவை சிப்காட்டில் விட்டு விட்டு தனது மொபட் மூலம் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது ஈங்கூர் பாலப்பாளையம் அருகே சென்று கொண்டிருந்த போது பழனியில் இருந்து ஈரோடு நோக்கி ஒரு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது.

    அந்த பஸ் முன்னாடி சென்று கொண்டிருந்த லாரியை முந்திய போது எதிரில் வந்து கொண்டிருந்த சாமியப்பன் மொபட் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சாமியப்பனுக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்தார்.

    பிறகு உடனடியாக அங்கு இருந்தவர்கள் 108 ஆம்புலன்சை வரவழைத்து அதன்மூலம் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி செய்து விட்டு பிறகு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் போகும் வழியிலேயே சாமியப்பன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சென்னிமலை போலீசார் தனியார் பஸ் டிரைவர் சதீஸ்குமார் (25) என்பவரை கைது செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.
    ஆசனூர் ரோட்டில் பகலிலும் யானைகள் கூட்டம் நடமாடுகிறது. பலர் ரோட்டில் நடமாடும் யானைகளை ஆர்வத்துடன் தங்களது செல்போன்களில் படம் எடுக்கிறார்கள்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தற்போது வறட்சியின் பிடியில் சிக்கி உள்ளது. வனப்பகுதிக்குள் போதிய உணவும் தண்ணீரும் இல்லாததால் வன விலங்குகள் வெளியே நடமாடுவது அதிகரித்து உள்ளது.

    குறிப்பாக கர்நாடக நெடுஞ்சாலையில் உள்ள ஆசனூர் ரோட்டில் பகலிலும் யானைகள் கூட்டம் நடமாடுகிறது. இந்த யானைகள் ரோட்டோரம் நின்றபடி அங்குள்ள பசுமையான மரக்கிளைகளை உடைத்து சாப்பிடுகின்றன.

    இந்த யானைகள் அவ்வப்போது ரோட்டிலும் நிற்பதால் போக்குவரத்து தடையும் ஏற்பட்டு வருகிறது.

    பொதுவாக மாலை 5 மணிக்கு மேல் ஆசனூர் ரோட்டில் யானைகள் குட்டியுடன் நடமாடுவதை தினமும் பார்க்க முடிகிறது.

    அப்போது அந்த வழியாக கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் வண்டிகளை நிறுத்தி யானைகளை வேடிக்கை பார்க்கிறார்கள். மேலும் பலர் ரோட்டில் நடமாடும் யானைகளை ஆர்வத்துடன் தங்களது செல்போன்களில் படம் எடுக்கிறார்கள்.

    இரவு நேரத்திலும் யானைகள் மற்றும் காட்டெருமைகள் ரோட்டில் நடமாடுவதால் வாகனங்களில் செல்பவர்கள் கவனமாக செல்ல வேண்டும் என்றும் மேலும் இரவு நேரத்தில் எக்காரணம் கொண்டும் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    மேலும் வன விலங்குகளை படம் எடுக்கும் ஆர்வத்தில் காட்டுக்குள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்து உள்ளனர்.
    ஈரோடு பெரிய அக்ரகாரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 55 பவுன் நகை - பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
    ஈரோடு:

    ஈரோடு பெரிய அக்ரகாரம் அண்ணா நகரில் உள்ள காந்தி வீதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், இவரது மனைவி ரமணி (வயது 58).

    கோவிந்தராஜ் இறந்து விட்டதால் வீட்டில் ரமணி மட்டும் வசித்து வருகிறார். நேற்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு ஈரோட்டில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் கொள்ளையர்கள் வீட்டின் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று உள்ளனர். பிறகு அங்குள்ள முன்புற கதவின் பூட்டை உடைத்த கொள்ளையர்கள் வீட்டின் உள்ளே சென்றனர்.

    அங்கு இருந்த பீரோவையும் உடைத்த அவர்கள் அதில் இருந்த 55 பவுன் நகைகள், 60 ஆயிரம் ரொக்கம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்தனர்.

    கொள்ளையடித்த நகைகளை மூட்டையாக கட்டிய அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இன்று காலை வீட்டுக்கு வந்த ரமணி தனது வீடு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    இது பற்றி தகவல் கிடைத்தும் கருங்கல்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் சென்று பதிவாகி இருந்த தடயங்களை பதிவு செய்தனர்.

    இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



    மொடச்சூர் அருகே கழிவறையில் மில் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரச்சலூர்:

    கடலூர் மாவட்டம் விளக்கப்பாடி, கிழக்கு தெருவை சேர்ந்தவர் லட்சுமணன்(வயது18).இவர் ஈரோடு மாவட்டம் மொடச்சூர் அடுத்த எழுமாத்தூரில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    இவரது அறையில் திருவண்ணாமலை மாவட்டம் முனுக்கப்பட்டு, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த லட்சுமிபதி என்பவரும் தங்கி அதே மில்லில் வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று லட்சுமிபதி தனது அறைக்கு வந்த போது லட்சுமணன் குடிபோதையில் இருந்துள்ளார். அப்போது லட்சமிபதி “நான் இரவு பணிக்கு சென்று வருகிறேன் நீ வெளியே செல்ல வேண்டாம்” என்று லட்சுமனணிடம் கூறிவிட்டு சென்று விட்டார்.

    லட்சுமிபதி வேலையை முடித்து மறுநாள் காலை தனது அறைக்கு வந்தார். அங்கு லட்சுமணன் இல்லை. இதனால் லட்சுமணனை பல்வேறு இடங்களில் தேடினார்.ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் அதே ஸ்பின்னிங் மில்லில் தங்கி வேலை பார்க்கும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுராஜ் என்பவர் அங்குள்ள கழிப்பறைக்கு சென்ற போது அங்கு லட்சுமணன் தூக்குபோட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து அரச்சலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று லட்சுமணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். லட்சுமணன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று காரணம் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் தீவிரவாதிகள் நடமாட்டத்தை வனத்துறையினருடன் போலீசாரும் இணைந்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டத்தில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இதையொட்டி மலை கிராமங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் தலைமையில் பல்வேறு விழிப்புணர்வு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் சத்தியமங்கலம் வனப்பகுதி தலமலை அருகே உள்ள ராமரணை என்ற மலை கிராமத்தில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் தலைமை தாங்கி பேசினார்.

    அப்போது அவர் கூறும்போது, “மலை கிராமத்தில் சந்தேகப்படும்படி திரியும் நபர்கள் குறித்து அருகில் உள்ள போலீஸ் நிலையம் மற்றும் இதர பிரிவுகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் ஊடுருவாமல் தடுக்க தொடர்ந்து வனத்துறையினருடன் போலீசாரும் இணைந்து கண்காணித்து வருகிறார்கள். இதற்கு உங்களது ஒத்துழைப்பும் அவசியம் என்று கூறினார்.

    முகாமில் 17 குடும்பத்தினருக்கு 2 போர்வைகள் மற்றும் சில்வர் குடங்கள் வழங்கப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி நக்சல் தடுப்பு சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் நக்சல் சிறப்பு பிரிவை சேர்ந்த போலீசார் கலந்து கொண்டனர்.
    ஈரோட்டில் 500 ரூபாய் மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு காரணத்தால் இன்று ஏ.டி.எம்.மில் ரூ.4 ஆயிரம் மட்டும் (இரண்டு 2 ஆயிரம் நோட்டுகள்) கிடைத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஈரோடு:

    ரூ.1000 மற்றும் 500 பழைய நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு புதிய 2 ஆயிரம் மற்றும் 500 நோட்டுகள் புழக்கத்துக்கு வந்துள்ளது.

    பெரும்பாலான மக்கள் தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றி விட்டனர்.

    புதிய நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தபோது ஏ.டி.எம்.மில் ஒரு கார்டுக்கு ரூ.2 ஆயிரம் மட்டுமே எடுக்க முடிந்தது. அதற்கு மேல் எடுக்க முடியாத நிலை நிலவி வந்தது. இதனால் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு பொது மக்கள் மிகவும் திண்டாடி போனார்கள். இதேபோல் வங்கிகளில் ஒரு வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் மட்டுமே எடுக்க முடிந்தது.

    இன்று முதல் ஏ.டி.எம் மையத்தில் ரூ.4ஆயிரத்து 500 எடுத்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று 4500 கிடைத்தது.

    ஆனால் ஈரோட்டில் 500 ரூபாய் மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு காரணத்தால் ஏ.டி.எம்.மில் ரூ.4 ஆயிரம் மட்டும் (இரண்டு 2 ஆயிரம் நோட்டுகள்) கிடைத்தது.

    எப்படியோ கூட ரூ.2 ஆயிரம் கிடைக்கிறதே என்ற மகிழ்ச்சியில் பொதுமக்கள் ரூ.4 ஆயிரத்தை பெற்றுச்சென்றனர்.

    அதேசமயம் வங்கியில் வாரம் ரூ.24 ஆயிரம் பெறமுடியும் என்ற நிலையே தொடர்கிறது.

    ஏ.டி.எம்.களில் தொடர்ந்து 2 ஆயிரம் முழு நோட்டுகள் மட்டும்தான் வருகிறது. 500 ரூபாயை கண்ணிலேயே பார்க்க முடியவில்லை. மேலும் ஏ.டி.எம்.மில் 100 ரூபாய் நோட்டுகள் வராதது பொதுமக்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

    வங்கி அதிகாரி போல் நடித்து விவசாயின் வங்கி கணக்கில் இருந்த ரூ.43 ஆயிரம் மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    அறச்சலூர் அருகே அட்டவணை அனுமன்பள்ளி ஓம்சக்திநகரை சேர்ந்த மாரிமுத்து(வயது35). விவசாயியான இவர் ஈரோடு எஸ்.பி.அலுவலகத்துக்கு வந்து எஸ்.பி.சிவகுமாரிடம் ஒரு புகார் மனு அளித்ததார்.

    நான் அறச்சலூரில் உள்ள கனரா வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளேன். கடந்த 27-ந் தேதி எனது செல்போனுக்கு ஓரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர் தான் கனரா வங்கியில் இருந்து பேசுவதாகவும் உங்கள் ஏ.டி.எம்.அட்டை பின் நம்பரை மாற்ற வேண்டும், சேமிப்பு கணக்கு எண், ஏ.டி.எம்.நம்பரை தெரிவிக்க வேண்டும் என்றார்.

    நானும் அதை உண்மை என நம்பி அந்த நபரிடம் அவர் கேட்ட விவரங்களை கூறினேன்.இந்நிலையில் எண் சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.43 ஆயிரம் எடுத்ததாக என் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ்.வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

    எனவே என்னை நூதன முறையில் ஏமாற்றிய நபரை கண்டறிந்து என் பணத்தை மீட்டுதர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியிருந்தார்.


    பவானி அருகே நள்ளிரவில் பழக்கடை தீப்பிடித்து எரிந்தது. இதில் கடைக்குள் தூங்கியவர் உயிர் தப்பினார்.

    ஈரோடு:

    பவானி அருகே உள்ள ஊராட்சி கோட்டை ஜீவா நகரில் பழக்கடை நடத்தி வருபவர் மாய கிருஷ்ணன். இவர் நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

    அப்போது நள்ளிரவில் கடையில் தீப்பிடித்தது. அப்போது காற்று அதிகமாக இருந்ததால் தீ வேகமாக பிடித்து எரிந்தது.

    இந்த கடையினுள் மாய கிருஷ்ணனின் உறவினர் ஒருவர் படுத்து தூங்கினார். இவர் கடையில் தீப்பிடித்து எரிவதை பார்த்து வேகமாக வெளியே ஓடி வந்ததால் உயிர் தப்பினார்.

    இந்த தீ விபத்தில் கடையில் இருந்த பழங்கள் மற்றும் பிஸ்கட்டுகள் போன்ற பொருட்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன.

    இது பற்றி தககவல் கிடைத்ததும் பவானி தீயணைப்பு போக்குவரத்து பிரிவு அதிகாரி ரமேஷ்குமார் தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.

    இதனால் பக்கத்தில் உள்ள கடைகள் தீ விபத்தில் இருந்து தப்பியது.

    என் கணவர் மீது போலீசார் திருட்டு பழி சுமத்தி சிறையில் அடைத்து உள்ளனர். அவரை மீட்டுத்தரக்கோரி கலெக்டரிடம் கைக்குழந்தையுடன் வந்து இளம்பெண் கண்ணீருடன் மனு அளித்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வேளாண்மை குறைகேட்பு நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சதிஷ் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது ஈரோடு வளையகார வீதியை சேர்ந்த மஞ்சுளா (வயது20) என்ற இளம்பெண் கைக்குழந்தையுடன் வந்து ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகரிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    என் கணவர் பெயர் அருணாச்சலம். நாங்கள் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டோம். தற்போது எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து 15 நாட்கள் தான் ஆகிறது.

    என் கணவர் மெக்கானிக் வேலை பார்க்கிறார். ஈரோடு தாலுகா போலீசார் என் கணவரை செயின் பறிப்பு வழக்கில் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். பிறகு அவரை சப்-ஜெயிலில் அடைத்து வைத்து உள்ளனர்.

    என் கணவர் ஒரு அப்பாவி, அவர் திருடவில்லை. மெக்கானிக் வேலைக்கு தான் போய் வருகிறார். வேண்டும் என்றே அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்து உள்ளனர். என் கணவரை விடுதலை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் உருக்கமாக கூறியுள்ளார்.

    மனுவை வாங்கி படித்த கலெக்டர் பிரபாகர் ‘‘உங்கள் மனு மீது நடவடிக்கை எடுக்கிறேன். தற்போது போலீஸ் டி.எஸ்.பி. வருவார் அவரிடம் சொல்கிறேன்’’ என்று கூறினார்.
    ஈரோடு லாட்ஜில் திருப்பூர் பனியன் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஈரோடு:

    திருப்பூர் ராம்நகர், 2-வது வீதியை சேர்ந்தவர் கணேஷ்குமார்(வயது38). பனியன் வியாபாரம் செய்து வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் கணேஷ்குமார் வேதனையுடன் இருந்துள்ளார். சம்பவத்தன்று அவர் ஈரோட்டிற்கு வந்தார். மேட்டூர் ரோட்டில் உள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கினார்.

    நீண்ட நேரமாகியும் அவரது அறை கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் கதவை தட்டி உள்ளனர். ஆனால் பதில் வரவில்லை.

    இது குறித்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கதவை உடைத்து சென்று பார்த்தனர். அங்கு கணேஷ்குமார் வி‌ஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆஸ்பத்திரி போலீஸ் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    ×