என் மலர்
ஈரோடு
ஈரோடு
ஈரோடு அக்ரஹாரத்தை அடுத்த பவானி ரோடு பாலகாட்டூர் பஸ்நிறுத்தம் அருகில் உள்ள விவசாய விளைநிலத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரிவில்லை. இறந்தவரின் முகம் சிதைந்த நிலையில் காணப்பட்டது. அவரது மூக்கு பகுதியில் ரத்தம் வடிந்த நிலையில் இருந்தது.
முன்விரோதம் காரணமாக அவரை யாராவது வேறு இடத்தில் வைத்து கொலை செய்து விட்டு போலீசாரின் கவனத்தை திசை திருப்புவதற்காக விவசாய விளை நிலத்தில் கொண்டு வந்து பிணத்தை போட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இறந்து கிடந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சித்தோடுபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு:
கஸ்பாபேட்டை துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது.
எனவே நாளை (வியாழக் கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
கஸ்பாபேட்டை, முள்ளாம் பரப்பு, சின்னியம்பாளையம், வேலாங்காட்டு வலசு, வீரப்பம் பாளையம், 46புதூர், ரங்கம்பாளையம், குறிக் காரன்பாளையம், செல்லப்பம் பாளையம், கோவிந்த நாய்க்கன் பாளையம்.
நஞ்சை ஊத்துக்குழி, செங்கரா பாளையம், டி.மேட்டுப்பாளையம், ஆணைக்கல் பாளையம், ஈ.பி.நகர், கே.எஸ்.நகர், இந்தியன் நகர், டெலிபோன் நகர், பாரதி நகர், மூலப்பாளையம், செட்டிபாளையம், சடையம் பாளையம், முத்து கவுண்டன் பாளையம், கருந்தேவன் பாளையம், சாவடி பாளையம், கிளியம்பட்டி, ரகுபதி நாயக்கன்பாளையம், காகத்தான் வலசு.
இந்த தகவலை ஈரோடு தெற்கு கோட்ட மின் வாரிய செயற்பொறியாளர் சின்னுசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சிவகிரியை அடுத்த தாண்டாம் பாளையம், அரிசன காலனியை சேர்ந்தவர் வீரன். இவரது மனைவி சரோஜா(வயது 30). இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளான்.
இந்நிலையில் 2 வருடங்களுக்கு முன்பு வீரன் உடல்நலம் சரியில்லாமல் இறந்துவிட்டார். அதன் பிறகு சரோஜா தனது பாட்டி வீட்டிற்கு மகனுடன் சென்று தங்கி கூலிவேலை பார்த்து வந்தார். கணவர் இறந்ததில் இருந்து சரோஜா மனவேதனையுடன் இருந்துள்ளார். அவரது பாட்டி ஆறுதல் கூறிவந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சரோஜா மண்ணெண்ணெய் தன் உடல் மீது ஊற்றி கொண்டு தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தண்ணணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சரோஜாவை ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கிசிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி சரோஜா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தந்தை, தாய் இறந்தது கூடதெரியாமல் 6 வயது மகன் விளையாடி கொண்டிருந்தது பார்போரை சோகத்தில் ஆழ்த்தியது.
ஈரோடு குமலன்குட்டை செல்வநகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். மருந்துக்கடை தொழிலாளி. இவரது மனைவி பெயர் ரேவதி. மகன் சரண் (வயது 16).
சரண் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.
ரமேஷ் சரியாக வேலைக்கு போகாமல் இருப்பாராம். மேலும் அவருக்கு குடி பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. வேலைக்கு சரியாக போகாததால் அவரை வறுமை வாட்டியது.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ரமேஷ் தற்கொலை செய்ய முடிவு செய்தார். நேற்று இரவு 8.30 மணியளவில் மனைவி வெளியே போன சமயம் தற்கொலைக்கு முயன்றார். அப்போது தான் இறந்த பிறகு மகனும் கஷ்டப்படக்கூடாது என எண்ணிய அவர் மகனுக்கு தூக்க மாத்திரை கொடுத்தார். சிறிது சேரத்தில் மயங்கிய அவனை படுக்க வைத்தார்.
பிறகு தானும் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டார். அதன் பிறகு மகன் பிழைத்து விடக்கூடாது என்பதற்காக பாத்ரூமில் உள்ள தண்ணீர் தொட்டியில் மகன் சரணை படுக்க வைத்து இரக்கமின்றி தண்ணீர் குழாயை திறந்து விட்டார்.
பிறகு தூக்க மாத்திரை சாப்பிட்ட ரமேசும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து விட்டார். இதற்கிடையே தண்ணீர் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததால் பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து பார்த்தனர். அங்கு ரமேஷ் மயங்கி கிடந்ததையும் சரண் தண்ணீர் தொட்டியில் மூழ்கி கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இருவரையும் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் மாணவர் சரண் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ரமேசுக்கு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள வேலம்பாளையம் ஓடமேட்டு தோட்டத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது45). இவருக்கு வளர்மதி என்ற மனைவியும், சசிஆனந்த் என்ற ஒரு மகனும் உள்ளனர்.
விவசாயி பழனிசாமிக்கு 4 ஏக்கர் நிலமும் 2 கிணறும் உள்ளது. கீழ்பவானி வாய்க்கால் பாசன பகுதியில்உள்ள இவரது விவசாய நிலத்தில் 6 மாதத்துக்கு முன் கரும்பும் மஞ்சளும் சாகுபடி செய்திருந்தார். அந்த பயிர்களும் நன்கு வளர்ந்து இருந்தது. வாய்க்காலில் எப்படியும் தண்ணீர் வரும் விவசாயம் செய்யலாம் என்ற நம்பிக்கையோடு இருந்தார். ஆனால் மழை சுத்தமாக இல்லாததால் வாய்க்காலில் தண்ணீர் வரவில்லை.
மேலும் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து போனதால் கிணற்றிலும் தண்ணீர் இல்லை.
இதனால் பழனிச்சாமி மிகவும் வேதனையுடன் இருந்தார். விவசாயி பழனி சாமி ஒருவங்கியிலும் கடன் பெற்று டிராக்டர் வாங்கி இருந்தார். இந்த கடனை அவரால் கட்டமுடியவில்லை. பணம் கட்டியே தீர வேண்டும் என்று கூறியதால் மிகவும் மனவேதனையுடன் காணப்பட்டார்.
மேலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலும் விவசாயக்கடன் பெற்றிருந்தார். மேலும் ஒரு வங்கியில் லோன் மூலம் கறவை மாடுகளும் வாங்கி இருந்தார்.
இந்த கடன்களையெல்லாம் கட்டமுடியாமல் அவதிப்பட்டார். மேலும் கடன்காரர்கள் வீட்டுக்கு வந்து நெருக்கடி கொடுத்ததால் மனஉளைச்சலும் அடைந்தார்.
இந்த நிலையில் நன்கு வளர்ந்திருந்த கரும்பு பயிர்கள் தண்ணீர் இன்றிமுற்றிலும் அழிந்தது. மஞ்சள் பயிர்களும் கருகியது. மற்றவர்களிடம் இதுபற்றி கூறி மிகவும் வருத்தப்பட்டார்.
இந்த நிலையில் விவசாயி பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணிக்கு தன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைகண்ட அவரது மனைவி மகன் மற்றும் உறவினர்கள் கதறிஅழுதனர். இதுபற்றி கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பயிர்கள் கருகியதால் மனம் உடைந்த விவசாயி பழனிச்சாமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கவுந்தப்பாடி மற்றும் ஈரோடு மாவட்ட விவசாயிகள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு:
ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஒப்பந்த ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரி இன்று 3-வது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று போராட்டம் நடத்தும் போக்குவரத்து ஊழியர்களை சந்தித்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.
பிறகு இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இங்கு போராட்டம் நடத்தும் ஊழியர்களின் கோரிக்கை நியாயமானது. இதனை தமிழக அரசு உடனே ஏற்க வேண்டும், வறட்சியின் பிடியில் சிக்கி விவசாயிகள் தற்கொலை செய்து வருகிறார்கள். ஏற்கனவே ஒரு போக்குவரத்து ஊழியர் தற்கொலை செய்ய முயன்றிருக்கிறார். ஆகவே போக்குவரத்து ஊழியர்களுக்கும் அந்த நிலை வந்து விடக்கூடாது. முதல் அமைச்சர் தலையிட்டு சுமூக முடிவு எடுக்க வேண்டும். ஊழியர்களுக்கு பணி எண் உடனடியாக வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுததி வருகிறார்கள். ஆனால் ஒரு அமைச்சர் அது தேவையில்லை என்று கூறி உள்ளார். அவர் பேச்சு எந்த வகையில் நியாயம்? அவர் பேச்சு பொருப்பற்ற பேச்சாக உள்ளது.
காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நான் அ.தி.மு.க.வில் இப்போது இருந்திருந்தால் முதல்வர் ஆகி இருப்பேன் என்கிறார். இது அவரது தனிப்பட்ட கருத்து. அப்படியானால் பாரதீய ஜனதாவுடன் இருந்திருந்தால் திருநாவுக்கரசர் பிரதமர் ஆகி இருப்பாரா?.
இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
பேட்டியின்போது ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி அருகில் இருந்தார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் நடந்த நிகழ்ச்சியில் மனைவி பிரேமலதாவுடன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சி முடிந்ததும் சென்னிமலை வழியாக மதுரைக்கு காரில் புறப்பட்டு சென்றார். மதியம் 2.30 மணி அளவில் சென்னிமலை அடுத்த நொய்யல் ஆற்றின் கரையோரம் வந்த விஜயகாந்த ரோட்டோரம் உள்ள ஒரு வீட்டின் முன் உள்ள தென்னை மர நிழலில் நிறுத்த சொன்னார்.
வீட்டின் முன் தென்னை மர நிழலில் அவரும் மனைவி பிரேமலதா மற்றும் அவர்களுடன் வந்தவர்களும் நின்று கொண்டு மதிய உணவு சாப்பிட தொடங்கினார்.
தலையில் கிராமப்புற வாசியாக விஜயகாந்த் முண்டாசு கட்டி கொண்டு வேட்டியை மடித்து கட்டி கொண்டு பாக்கு மட்டை தட்டில் சாப்பிட்டு கொண்டிருந்தார்.
அந்த வழியாக சென்றவர்களும் மற்றும் வாகன ஓட்டிகளுக்கும் விஜயகாந்தை அடையாளம் தெரியவில்லை.
ரோட்டோரம் நின்று வழிப்போக்கர்கள் சாப்பிடுகிறார்கள் என்று தான் நினைத்து கொண்டு போனார்கள்.
இதற்கிடையே ரோட்டோரம் உள்ள வீட்டுக்கு சொந்தக்காரரான விவசாயி முருகேஷ் மற்றும் அவரது மனைவி செல்வி ஆகியோர் சென்னிமலை டவுனுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்தனர்.
தனது வீட்டு முன் கார்கள் நின்று கொண்டிருப்பதையும் சிலர் சாப்பிட்டு கொண்டிருப்பதையும் கண்ட விவசாயி முருகேஷ் வேட்டியை மடித்து தலையில் முண்டாசு கட்டுடன் இருந்த விஜயகாந்திடம் ‘‘யார் நீங்க...?’’ என்று கேட்டார்.
உடனே விஜயகாந்த் தலையில் கட்டி இருந்த முண்டாசு கட்டை அவிழ்க்க அங்கு நிற்பது விஜயகாந்த் என அறிந்ததும் முருகேஷ் பரபரப்பு அடைந்தார்.
ஏன் வெளியே நிற்கிறீங்க... வீட்டுக்குள் வர வேண்டியது தானே...? என்று அவர் கேட்க அதற்கு விஜயகாந்த் ‘‘மதுரை போகிறோம். இங்கு நிழலாக இருந்ததால் நின்று கொண்டு சாப்பிட்டோம். உங்களுக்கு தொந்தரவு கொடுக்க கூடாது என சாப்பிட்ட பாக்கு தட்டுகளை அருகே உள்ள குழியில் போட்டோம்’’ என்று கூறினார்.
எனினும் விவசாயி முருகேஷ் ‘‘பராவாயில்லை வீட்டுக்குள் வாங்க கொஞ்சம் ஓய்வு எடுத்து கொண்டு போகலாம்’’ என அழைத்தார்.
விவசாயி வேண்டுகோளை ஏற்று விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுடன் வீட்டில் சிறிது நேரம் இருந்து விட்டு அவருக்கு கொஞ்ச பணமும் கொடுத்து விட்டு புறப்பட்டு சென்றார்.
விஜயகாந்து அங்கு வந்து விட்டு போன செய்தி அந்த பகுதி கட்சிகாரர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிய வர அவர்கள் ஆர்வத்துடன் முருகேஷ் வீட்டுக்கு சென்று விஜயகாந்த் வந்து சென்றதை விசாரித்தனர்.
ஈரோடு:
அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் ஒரு பிரிவினர் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.
ஈரோட்டிலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க.வினர். சிலர் தாங்கள் வகித்து வந்த பதவிகளை ராஜினாமா செய்தனர். பிறகு தீபா பேரவை என்ற அமைப்பு தொடங்கினர்.
இந்த நிலையில் இன்று ஈரோட்டில் அ.தி.மு.க.வை சேர்ந்த ஒரு பிரிவினர் தீபாவுக்கு ஆதரவாக புதிய கட்சியை தொடங்கி உள்ளனர். அவர்கள் “எம்.ஜி.ஆர். ஜெயலலிதா அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்” என பெயரில் கட்சி தொடங்கி உள்ளனர்.
மேலும் கட்சி கொடி மற்றும் சின்னம் அறிமுகம் செய்தனர். அதில் அ.தி.மு.க. கட்சி கொடியின் மத்தியில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா படம் பொறிக்கப்பட்டு உள்ளது. இரட்டை ரோஜா சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா கொள்கைகளை காப்பாற்றுவது எனவும், எம்.ஜி.ஆர். ஜெயலலிதா அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சியை தீபா தலைமையேற்று வழி நடத்த அழைப்பது எனவும், ஈரோடு மாவட்டத்தில் 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை கட்சியில் உறுப்பினர்களை சேர்ப்பது எனவும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக்க வேண்டும் எனவும் எம்.ஜி.ஆர். 100-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இதில் மீனவர் அணி முன்னாள் செயலாளர் எஸ்.ஏ.பாரூக், மாநகர் மாவட்ட பேரவை முன்னாள் தலைவர் கவுரி சங்கர், நகர பேரவை முன்னாள் இணை செயலாளர் கமால் பாட்ஷா, முன்னாள் நகர பொருளாளர் கவுரிசங்கர், கொடுமுடி யூனியன் முன்னாள் தலைவர் தமிழ் செல்வி, ஈரோடு மாநகர 57-வது வார்டு பிரதிநிதி சரவணன், பெருமாள் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
பெருந்துறை:
பெருந்துறை வழியாக லாரியில் வெடிமருந்து கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையொட்டி உஷார் அடைந்த இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
பெருந்துறை அருகே உள்ள வாவிக்கடை பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்திய போது அங்கு ரோட்டு ஓரத்தில் ஒரு லாலி நின்று கொண்டு இருந்தது.
போலீசார் அங்கு சென்று பார்த்த போது லாரி டிரைவா லாரியில் படுத்து தூங்கி கொண்டு இருந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவரது பேச்சில் சந்தேகம் வரவே போலீசார் லாரியில் சோதனை நடத்தினர். அப்போது அந்த லாரியில் பெட்டி பெட்டியாக ஜெலட்டின் குச்சிகள் இருப்பது தெரியவந்தது. மற்றும் சாக்கு பைகளிலும் ஜெலட்டின் குச்சிகள் இருந்தன.
இந்த 60 அட்டை பெட்டிகளிலும், 10 சாக்கு மூட்டைகளிலும் 15 ஆயிரத்து 600 ஜெலட்டின் குச்சிகள் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.12 லட்சம் என்று கூறப்படுகிறது.
ஜெலட்டின் குச்சிகளையும், அதை கடத்தி வந்த லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
சேலத்தில் இருந்து கேரளாவுக்கு இந்த ஜெலட்டின் குச்சிகள் லாரியில் கடத்தப்படுவதாக விசாரணையில் தெரியவந்தது.
பிடிபட்ட லாரி மற்றும் ஜெலட்டின் குச்சிகள் கியூ பிராஞ்ச் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து கியூ பிராஞ்ச் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த ஜெலட்டின் குச்சிகளை கடத்தியது யார்? எதற்காக இவைகள் கடத்தப்பட்டன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட பெருந்துறை அடுத்த திங்களூர் அருகே உள்ள தாண்டகவுண்டம்பாளை யம் என்ற இடத்தை சேர்ந்தவர் சென்னியப்பன். இவரது மனைவி இளவரசி. இவர்களது மகள் துளசிமணி (வயது20). பட்டதாரியான இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த மாதம் 16-ந் தேதி வேலைக்கு சென்ற துளசிமணியை காணவில்லை. அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார் என்பது தெரியாமல் இருந்தது.
இந்த நிலையில் வெள்ள கோவில் பகுதியை சேர்ந்த சஞ்சீவி என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை துளசிமணி காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் இவர்கள் தஞ்சம் அடைந்தனர். இவர்களது காதல் திருமணத்தை துளசிமணியின் பெற்றோர் ஏற்கவில்லை.
இதனால் மகளிர் போலீசார் சமாதானம் பேசி காதல் திருமணம் செய்த துளசிமணி-சஞ்சீவியை அனுப்பி வைத்தனர். பிறகு சமாதானம் அடைந்த துளசிமணியின் பெற்றோர் தனது மகளை பார்ப்பதற்காக வெள்ளகோவிலில் உள்ள சஞ்சீவியின் வீட்டுக்கு சென்றனர்.
அங்கு இருந்த சஞ்சீவியின் பெற்றோர் துளசிமணியின் பெற்றோரிடம், ‘‘எங்களது மகனுக்கு இதே வேலை தான். இது வரை அவன் 4 திருமணம் செய்து உள்ளான். இப்போது அவன் எங்கு இருக்கிறான்? என்பது எங்களுக்கு தெரியாது. எனவே உங்கள் மகளை தேடி இங்கு வராதீர்கள் என்று கூறினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த துளசிமணியின் பெற்றோர் ஈரோடு வந்து மாவட்ட போலீஸ் சூப்பி ரெண்டு சிவகுமாரிடம் மனு கொடுத்தனர். அதில் காதல் திருமணம் செய்த எங்களது மகளை மீட்டு கொடுக்கும்படியும், ஏமாற்றி திருமணம் செய்த சஞ்சீவி மீது நடவடிக்கை எடுக்கும்படியும் கூறி உள்ளனர்.
ஈரோடு அருகே உள்ள மொடக்குறிச்சி அடுத்த ஓலப்பாளையம் கருக்கங்காட்டுதோட்டம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 65) விவசாயி. இவர் கரியாகவுண்டன்வலசு பகுதியில் சின்னுசாமி என்பவரது 2½ ஏக்கர் விவசாய நிலத்தை கடந்த 3ஆண்டுகளாக குத்தகைக்கு எடுத்து கரும்பு பயிரிட்டு வந்தார்.
இந்நிலையில் இவருடைய கரும்பு தோட்டத்திற்கு தேவையான உரங்கள், விதைகள் மற்றும் பராமரிப்பு கூலிக்காக பல்வேறு இடங்களில் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த 2மாதங்களாக கடும் வறட்சி ஏற்பட்டு தண்ணீரின்றி கரும்பு பயிர் முற்றிலும் அழிந்து விட்டது
கடந்த நான்கு நாட்களாகவே தங்கவேல் கரும்புபயிர் முற்றிலும் காய்ந்து போனதால் மனமுடைந்து காணப்பட்டார். மற்றவர்களிடம் இதுகுறித்து கூறி வருத்தப்பட்டார்.
இந்நிலையில் நேற்று மாலை கரும்பு தோட்டத்திற்கு செல்வதாக சென்றவர் இரவு வரை வீடு திரும்பாததால், பதறிப்போன அவரது மகன்கள் தோட்டத்திற்கு சென்றபோது அங்கு தங்கவேல் மயங்கிகிடந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆம்புலன்ஸ் வேன் வரவழைக்கப்பட்டது. அவர்கள் வந்து பரிசோதனை மேற்கொண்டபோது, தங்கவேல் மாரடைப்பால் ஏற்கனவே இறந்து போனது தெரியவந்தது. மொடக்குறிச்சி பகுதியில் மாரடைப்பால் விவசாயி இறந்தது விவசாயிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இறந்துபோன தங்கவேலுக்கு லட்சுமி (53) என்ற மனைவியும், கதிரேசன், தேவராஜன் என்ற மகன்களும் உள்ளனர்.
இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோபி அடுத்த பச்சைமலை அடிவாரப் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் மணிகண்டன் (வயது22). வேன் டிரைவர்.
மணிகண்டனுக்கும் உசிலம்பட்டி அருகே உள்ள கோட்டைபட்டியை சேர்ந்த லாவண்யாவுக்கும் இரண்டு வீட்டு பெற்றோர்கள் திருமணம் பற்றி பேசி முடித்தனர்.
இதன்படி கடந்த மாதம் 5-ந் தேதி(திங்கட்கிழமை) நிச்சயதார்த்தம் நடைபெற முடிவு செய்யப்பட்டிருந்தது. நிச்சயதார்த்ததிற்கான ஏற்பாடுகளில் இரு வீட்டு பெற்றோர்களும் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 3-ந் தேதி(சனிக்கிழமை) லாவண்யா காதலனுடன் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தார். இதையெடுத்து நிச்சயதார்த்தம் நிறுத்தப்பட்டது.
தனக்கு பேசிமுடித்த பெண் காதலனுடன் ஓடியதிலிருந்து மணிகண்டன் மனவேதனையுடன் இருந்தார். அவரது பெற்றோர் ஆறுதல் கூறி வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மணிகண்டன் தற்கொலை செய்ய முடிவெடுத்து சேலையால் தூக்கு போட்டார்.
நீண்ட நேரமாக மணிகண்டன் வீடு பூட்டி இருப்பதால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் கதவை தட்டி உள்ளனர். பதில் வரவில்லை. கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அங்கு மணிகண்டன் தூக்கில் தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அவரை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மணிகண்டனை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கோபி சப்- இன்ஸ்பெக்டர் பழனிசாமி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.






