என் மலர்
ஈரோடு
பெருந்துறை:
பெருந்துறை அருகே விஜயமங்கலத்தை அடுத்த மூங்கில்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது35). இவருக்கு திருமணமாகி மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 6-ந் தேதி இரவு சுப்பிரமணியம் வேலையை முடித்து கொண்டு வீட்டுக்கு வந்தார். வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டு இருந்தனர். தலை வலி இருந்ததால் டீ குடிக்க முடிவு செய்தார். சமையல் அறைக்கு சென்று டீ போட ஸ்டவ்வை பற்ற வைத்து பாத்திரத்தை வைக்க முயன்றார். அப்போது எதிர்பாராத வகையில் சுப்பிரமணியம் சட்டையில் தீ பிடித்தது. சிறது நேரத்தில் தீ உடல் முழுவதும் பரவியது.
வேதனை தாங்காமல் சுப்பிரமணியம் அலறினார். அவரது சத்தம் கேட்டு வீட்டில் தூங்கி கொண்டு இருந்தவர்கள் திடுக்கிட்டு எழுந்தனர். மேலும் அருகில் இருந்தவர்களும் ஓடி வந்து தீயை அணைத்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி கொண்டிருந்த சுப்பிரமணியத்தை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியம் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இறந்த சுப்பிரமணியம் உடலை பார்த்து அவரது மனைவியும் இரண்டு மகள்களும் அழுதது பார்ப்போரை சோகத்தில் ஆழ்த்தியது.
ஈரோடு:
ரேசன் கடையில் மலிவு விலையில் வழங்கப்படும் அரிசி, துவரம் பருப்பு, சர்க்கரை, உளுந்து, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வெளி மாநிலத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்யபடுவதை கண்காணிக்க உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் உள்ளனர்.
சமீப காலமாக ரேசன் அரிசி, பருப்பு வகைகள், சர்க்கரை ஆகியவை அதிகளவில் கர்நாடகா மாநிலத்துக்கு கடத்தப்பட்டு வருவாக புகார் எழுதது. இதை தடுக்க உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.இது குறித்து உணவு பொருட்கள் தடுப்பு பிரிவு போலீசார் கூறியதாவது.-
கடந்த ஆண்டு அத்தியாவசிய பொருட்களை கடத்தியதாக 109 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 109 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் பெரும்பாலும் ஈரோடு மாவட்டத்தில் இருந்து கர்நாடகா மாநிலத்துக்கு தான் ரேசன் அரிசி, பருப்பு வகைகள் கடத்தபட்டுள்ளன.
இருச்சக்கர வாகனங்களில் அதிகளவில் ரேசன் அரிசிகள் கடத்தப்பட்டுள்ளன. பஸ்,லாரிகள் மூலமாகவும் அவ்வபோது கடத்தி உள்ளனர்.
இருச்சக்கர வாகனங்களில் செல்வோர் வாகன சோதனையின் போது போலீசாரிடம் சிக்கி உள்ளனர். இதில் 12 பேர் ரேசன் அரிசியை திரும்ப திரும்ப கடத்தியதால் அவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டு உள்ளனர். மொத்தம் 110 குவிண்டால் அளவுக்கு அத்தியாவசிய பொருட்கள் கடந்த ஆண்டு மட்டும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்
பெருந்துறை:
பெருந்துறை அருகே உள்ள சுள்ளியம்புதூரை சேர்ந்தவர் வேலுசாமி கல் தொழிலாளி. இவரது மனைவி பிரேமா (28). இவர்களுக்கு தர்ஷன் (4), நவீன் (6) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
வாணிகவுண்டன் பாளையத்தில் உள்ள பிரேமாவின் அப்பா உடல் நிலை சரியில் லாததால் அப்பாவை பார்க்கவும், பொங்கலுக்கும் பிரேமா அப்பா வீட்டுக்கு வந்திருந்தார்.
இன்று காலை வீட்டில் காபி குடித்தார். பிறகு திடீரென பிரேமாவை காணவில்லை. அவர் எங்கு சென்றார்? என்று தெரிய வில்லை.
இதற்கிடையே வீட்டின் அருகே உள்ள தோட்டத்து கிணற்றில் பிரேமா பிணமாக கிடந்தது தெரிய வந்தது.
100 அடி ஆழம் கொண்ட இந்த கிணற்றில் தண்ணீர் கிடையாது. வீட்டில் காபி குடித்த பிரேமா திடீரென ஓடி வந்து இந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவர் எதற்காக தற்கொலை செய்து கொண் டார்? குடும்ப தகராறு காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என்று பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ஈஸ்வரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி பிரேமா உடலை மீட்டனர்.
சென்னிமலை;
ஜல்லிக்கட்டு ஆதரவு இயக்கம் சார்பில் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டின் மீதான தடையினை தளர்த்த கோரியும், பீட்டா அமைப்பினை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலம் நடத்தினர்.
காலை 11 மணிக்கு 2 காங்கேயம் காளை மாடுகளுடன் பஸ் நிலையம் பகுதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்னிமலை நகரின் நான்கு ராஜவீதிகளிலும் ஊர்வலமாக வந்து பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் பீட்டா அமைப்பினை கண்டித்து கோஷம் போட்டனர். ஊர்வலத்தை ஈரோடு தொகுதி முன்னாள் எம்.பி., கணேசமூர்த்தி தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் தி.மு.க., சார்பாக முன்னாள் மாணவர் அணி அமைப்பாளர் சேகர், பாரதிநகர் ஈஸ்வரமூர்த்தி உள்பட நிர்வாகிளும், கம்யூனிட்ஸ் கட்சி ஒன்றிய செயலாளர் பொன்னுசாமி, ம.தி.மு.க., சார்பில் நகர செயலாளர் மனோகரன், தற்சார்பு விவசாயிகள் சங்க அமைப்பாளர் பொன்னையன்.
கீழ்பவானி விவசாயிகள் சங்க நிர்வாகி முருங்கத்தொழுவு ரவி, தமிழின பாதுகாப்பு அமைப்பு நிர்வாகி குருசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் வட்டார தலைவர் குரு நாதன், காங்கிரஸ் கட்சி ஜிசேந்திரன் உள்பட கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டை என்ற ஊரை சேர்ந்தவர் தேவசகாயம்(வயது63).இவரது வீட்டுக்கு குன்னூரை சேர்ந்த உறவினர் ஜோசப் பவுல்ராஜ்(29) மற்றும் இவரது மனைவி ஆசாத் ஜெனிபர் ஆகியோர் வந்தனர். இவர்கள் புதுமண தம்பதியினர்.
இதே போல் பொங்கல் விடுமுறையை கழிக்க உறவினர்களான திருச்சி கல்லூரி மாணவர்கள் பிரான்சிஸ்(22) மற்றும் அர்வின்(22), எட்வின் ஆகியோரும் வந்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை நெரிஞ்சிப்பேட்டையில் ஓடும் பவானி ஆற்றுக்கு அவர்கள் வந்தனர்.பிறகு பரிசலில் ஆற்றில் பயணம் செல்ல விரும்பினர்.
அதன்படி ஒரு பரிசலில் ஜோசப்பவுல்ராஜ், இவரது மனைவி ஆசாத் ஜெனிபர் மற்றும் பிரான்சிஸ், அர்வின், எட்வின் ஆகியோர் ஏறினர். பரிசலை அதே பகுதியை சேர்ந்த டேவிட்பிரான்சிஸ்(45) என்பவர் ஓட்டி சென்றார்.
ஜாலியாக அவர்கள் செய்த பரிசல் பயணம் இன்னும் சிறிது நேரத்தில் பெரும் சோகத்தில் முடியும் என்பதை அவர்கள் உணரவில்லை. குடிநீருக்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடபட்டதால் பவானி ஆற்றில் சிறிது தண்ணீர் ஒடி கொண்டிருந்தது.
ஆற்றின் நடுப்பகுதியில் சென்ற போது திடீரென பரிசலில் ஓட்டை விழுந்ததாக தெரிகிறது.இதனால் பரிசலில் தண்ணீர் குபு...குபு...வென ஏறி அடுத்த வினாடி பரிசல் ஆற்றில் கவிழ்ந்தது.
தண்ணீரில் விழுந்த 6 பேரும் தத்தளித்தனர். பரிசல் ஓட்டி டேவிட் பிரான்சிஸ்,எட்வின் ஆகியோர் நீந்தி ஒரு வழியாக கரைக்கு வந்து உயிர் தப்பினர்.
ஜோசப் பவுல்ராஜ், ஆசாத் ஜெனிபர், பிரான்சிஸ், அர்வின் ஆகியோருக்கு நீச்சல் தெரியாததால் இவர்கள் 4 பேரும் பவானி ஆற்றில் மூழ்கி பலியானார்கள்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் பவானிசாகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
சத்தியமங்கலம்:
பவானிசாகர் போலீஸ் நிலையம் பின்புறம் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் பிணம் கிடந்தது. இது பற்றி தகவல் கிடைத்ததும் பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அந்த பெண்ணின் கழுத்து நெரிக்கப்பட்டு இருந்தது. மேலும் கால்களை முறித்து உள்ளனர். இதனால் அந்த பெண்ணை 2-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து அடித்து கொலை செய்து பிணத்தை அங்கேயே போட்டு சென்றிருப்பது தெரிய வருகிறது.
அந்த பெண்ணை கொலையாளிகள் அழைத்து வந்து ஆட்கள் நடமாட்டம் இல்லாத போலீஸ் நிலையத்தின் பின்பகுதி அணைகரையையொட்டி உல்லாசம் அனுபவித்து அதன் பிறகு அவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் அந்த பெண்ணை அந்த ஆசாமிகள் கொலை செய்திருக்க கூடும் என்று கருதப்படுகிறது.
இறந்த கிடந்த பெண் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பெண்ணாக இருக்க கூடும் என்று போலீசார் கருதுகிறார்கள். இந்த சம்பவம் பவானிசாகர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணின் உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த மர்ம கொலையில் பவானிசாகர் போலீசார் ஒருவனை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகறார்கள்.
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அளித்த போட்டியில் கூறியதாவ:-
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தமிழர்களும் விரும்புகிறார்கள். தமிழக அரசும் விரும்புகிறது. ஆனால் பீட்டா அமைப்பு உள்நோக்கத்தோடு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை செய்துள்ளது. இதை ஏற்று கொள்ள முடியாது.
ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பாரம்பரியம். தற்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதியில் கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஊச்சநீதிமன்றம் தமிழர்களின் உணர்வை புரிந்து கொள்ள வேண்டும். மத்திய அரசு நினைத்திருந்தால் பாராளுமன்றத்தில் ஜல்லிக்கட்டு சம்பந்தமாக சட்டத்தை கொண்டு அதை நிறைவேற்றி இருக்கலாம். அதை யாராலும் தடுத்திருக்க முடியாது.
ஆனால் மத்திய அரசு அதை செய்யவில்லை. இந்த ஜல்லிக்கட்டு நடக்காமல் இருப்பதற்கு மத்திய அரசு தான் முழுபொறுப்பு. பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும். மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் வரும் பாராளுமன்ற கூட்ட தொடரில் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்.
உச்சநீதிமன்றம் தீர்ப்பை மீறி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடந்தால் குடியரசு ஆட்சி ஏற்படும் என்று சுப்பிரமணிசாமி கூறியிருப்பது கண்டனத்திற்குரியது.
அப்படி என்றால் உச்சநீதிமன்ற தீர்ப்புபடி தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடவில்லை. கர்நாடக அரசை கலைக்க சொல்ல வேண்டியது தானே. அவருக்கு(சுப்பிரமணிய சாமி) வாய் இருக்கிறது என்பதற்காக எது வேண்டுமானாலும் பேசலாமா? சுப்பிரமணியசாமியை தமிழ்நாட்டிற்குள் நுழைய விட கூடாது.
வறட்சி காரணமாக விவசாயிகள் இறப்பது வேதனை அளிக்கிறது.பயிர் வாடி இறப்பதை விட வாங்கிய கடனை எப்படி அடைப்பது? என்ற காரணத்தினால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது.
எனவே இதனை தடுக்க விவசாயிகள் வாங்கிய கடனை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் உயிர் இழந்த ஒவ்வொரு விவசாயி குடும்பத்துக்கும் ரூ.30 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு:
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த மத்திய மாநில அரசுகள் அனுமதி வழங்க கோரி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி மாவட்டத்தில் ஈரோடு மற்றும் கோபியில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈரோடு காந்தி ஜி ரோட்டில் உள்ள ஜவான் பவன் அலுவலகம் அருகே ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் முத்துசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் மத்திய மந்திரி சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
இதில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்த உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்காத மத்திய- மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பட்டது. இந்த ஆர்பாட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கொடுமுடி:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள கரட்டாம் பாளையத்தை சேர்ந்தவர் சேர்ந்தவர் ராமலட்சுமி (வயது 75). இவரது கணவர் அய்யாசாமி. 6 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.
ராமலட்சுமி அம்மாளுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பெயர் ராதா கிருஷ்ணன். இவர் லாரி புரோக்கராக உள்ளார். இளைய மகன் லட்சுமணன். சிவகிரியில் வங்கி மேலாளராக பணி புரிகிறார்.
மகன்கள் இருவரும் தனிதனியாக வசித்து வருகிறார்கள். ராமலட்சுமி கரட்டாம்பாளையத்தில் தனியாக வசித்து வந்தார். அவரை 2 மகன்களும் அடிக்கடி வந்து பார்த்து விட்டு செல்வார்கள்.
நேற்று மாலையும் மகன் ராதாகிருஷ்ணன் தனது தாயாரை பார்த்து விட்டு சென்றார். இன்று (வெள்ளிக்கிழமை) காலையும் தாயார் வீட்டுக்கு வந்தார். அப்போது கதவு நீக்கப்படவில்லை. வழக்கம் போல் ராமலட்சுமி அம்மாள் காலையிலேயே எழுந்து வீட்டை பொறுக்கி சுத்தம் செய்வார்.
பின்னால் சென்று பார்த்த போது கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்ற ராதாகிருஷ்ணன் அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே ராமலட்சுமி பிணமாக கிடந்தார். இடது காதில் ரத்தம் வடிந்த நிலையில் இருந்தது. அவரது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் செயின் பறிக்கப்பட் டிருந்தது. மேலும் அவர் காதில் அணிந்திருந்த ஒரு கம்மல் தெறித்து கீழே கிடந்தது.
ராமலட்சுமி அம்மாள் வீட்டில் தனியாக இருந்ததை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் பின் பக்க சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
விட்டில் இருந்த ராமலட்சுமியை அடித்து அவரது தலையை சுவற்றில் மோத விட்டு படுகொலை செய்து உள்ளனர். அதன் பிறகு அவரது கழுத்தில் இருந்த 4 பவுன் செயினை கொள்யைடித்து சென்று உள்ளனர்.
தடயம் தெரியாமல் இருக்க கீழே மிளகாய் பொடியை தூவி உள்ளனர். இந்த துணிகர கொலை- கொள்ளை சம்பவம் குறித்து கொடுமுடி போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதே போல ராமலட்சுமி வீட்டின் எதிர் வீட்டில் தனியாக குடியிருந்த பாவாத்தாள் என்ற பெண் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்டார். அப்போது கொலையாளிகள் வீட்டில் உள்ள கண்ணாடியில் ‘‘வேட்டை தொடரும்’’ என்று எழுதி இருந்தனர். இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு ஜெயிலில் உள்ளனர்.
இந்த நிலையில் எதிர் வீட்டில் அதே பாணியில் நேற்று ராமலட்சுமி அம்மாள் கொலை செய்யப்பட்டிருந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு:
பவானி அருகே உள்ள ஜம்பை அடுத்த நத்தக்காடு நல்லிபாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் கருப்புசாமி (வயது 16).
இவர் தளவாய்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். மாணவன் கருப்புசாமி கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளிக்கு செல்வதாக சொல்லி விட்டு சென்றார். ஆனால் அவர் வீடு திருப்ப வில்லை. அவர் எங்கு சென்றார்? என தெரியவில்லை. மாயமாகிவிட்டார்.
இது குறித்து மாணவனின் தந்தை மகாலிங்கம் பவானி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவனை தேடி வருகிறார்கள்.
சத்தியமங்கலம் அடுத்த ராஜன்நகர் ஊராட்சிக்குட்பட்ட போக்கனாங்கரை கிராமத்தில் கடந்த டிசம்பர் 20-ம் தேதி புகுந்த சிறுத்தை அங்குள்ள சிங்காரி, நந்தா தோட்டம் ஆறுமுகம், அமராவதி ஆகியோரின் தோட்டத்தில் இருந்த ஆடுகளை கடித்துக் கொன்றது.
தொடர்ந்து ஆடுகளை தாக்கியதால், சிறுத்தை நடமாடும் வழித்தடத்தில் 10 இடங்களில் தானியங்கி கேமார வைத்து வனத்துறையினர் காத்திருந்தனர். மேலும், ஆடுகள் தாக்கப்பட்ட இடத்தில் கூண்டு வைத்து சிறுத்தை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் வனத்துறையினர் வைத்த பொறியில் சிக்காமல் பல்வேறு கிராமங்களில் சிறுத்தை உலாவியது. தெடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தியது. கடந்த 23 நாள்களாக சிறுத்தை அச்சுறுத்தலால் கிராமமக்கள் விவசாயப் பணிகளை கவனிக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள்.
இந்நிலையில் நேற்று மாலை உப்புப்பள்ளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 15 பேர் அங்குள்ள பள்ளிவேலை முடிந்து பாரதி நகரில் உள்ள வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது டேவிட் என்ற மாணவர், மாரியம்மன் கோவில் பள்ளத்தில் கீழே கிடந்த பொருளை எடுக்க முயன்றபோது மூங்கில் புதரில் இருந்த சிறுத்தை உறுமியது. அவர்களை தாக்க முயன்றபோது மாணவர்கள் அபாயக் குரல் எழுப்பினர்.
அதனைக் கேட்ட பக்கத்துத்தோட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கோடாலி, தடி, அரிவாள் ஆகியவற்றுடன் சம்பவயிடத்துக்கு சென்று சிறுத்தையை விரட்டினர்.
இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த வனத்துறையினர் விலங்கின் கால்தடயத்தை வைத்து சிறுத்தை என்பதை உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் துப்பாக்கி ஏந்திய ஊழியர்களுடன் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு மூர்த்தி என்பவரின் தோட்டத்தில் இருந்த காவல்நாயை சிறுத்தை கடித்து கொன்றுள்ளது. அதே இடத்தில் மீண்டும் சிறுத்தை வரும் என்ற எதிர்ப்பார்பில் அங்கு சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது.
சிறுத்தை நடமாட்டத்தில் கிராமமக்கள் ஊரின் முகப்பு பகுதியில் தீமூட்டியும் பட்டாசு வெடித்தும் தடி, அரிவாளுடன் காவல் காத்து வருகின்றனர். கிராமமக்கள் உதவியுடன் வனத்துறையினர் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாக ஈரோட்டில் ஏற்கனவே தீபா பெயரில் பேரவை தொடங்கப்பட்டு உள்ளது.
மேலும் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா அ.தி.மு.க. என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கப்பட்டு புதிய கொடி-புதிய சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் ஈரோடு வீரப்பம் பாளையத்தில் நேற்று இரவு எங்கள் அம்மா ஜெயலலிதா-தீபா பேரவையின் ஆலோசனை கூட்டம் ஈரோடு மாவட்ட பொறுப்பாளர் ஸ்ரீதர் தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் ஜெயலலிதா தீபா பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார்.
சேலத்தில் தொடங்கப்பட்ட எங்கள் அம்மா ஜெயலலிதா தீபா பேரவையின் கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. இதில் ஏராளமான உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்.
இப்போது இந்த பேரவையின் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடத்தப்பட்டு புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். தமிழகம் முழுவதும் இதன் கிளைகள் தொடங்கப்பட்டு உறுப்பினர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
ஜெயலலிதாவின் ரத்த சம்பந்தமான தீபாவுக்கு பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டர்களிடையே ஆதரவு பெருகி வருகிறது. இதனால் எங்களுக்கு மிரட்டல், அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. இதை கண்டு நாங்கள் பயப்படமாட்டோம்.
ஜெயலலிதாவை போல சவால்களை சமாளிப்பது தீபாவுக்கு சர்க்கரை பொங்கல் சாப்பிடுவது போல தான்.
எனவே தீபா விரைவில் அரசியலுக்கு வரவேண்டும் என்று வலியுறுத்துவதோடு அவர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் மற்றும் முதல் அமைச்சராகவும பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.






