என் மலர்tooltip icon

    ஈரோடு

    மொடக்குறிச்சி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோட்டை அடுத்த 46 புதூர் பொயார் நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 48). தொழிலாளி. கடந்த சில நாட்களாக இவர் வாழ்க்கையில் வெறுப்படைந்த நிலையில் காணப்பட்டார்.

    இதை தொடர்ந்து அவர் பிராந்தியில் வி‌ஷத்தை கலந்து குடித்து விட்டார்.

    இதனால் மயக்க நிலையில் கிடந்த அவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் ராமச்சந்திரன்  இறந்தார்.

    இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மொடக்குறிச்சி பகுதியில் தடையை மீறி சேவல் சண்டை நடைபெற்றது. இதனை 100-க்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்தனர்.
    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி தாலுகாவில் மொடக்குறிச்சி, கணபதி பாளையம், எழுமாத்தூர், அவல்பூந்துறை உள்பட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேரணி, ஆர்ப்பாட்டம், ஊர்வலங்கள் நடைபெற்றது.

    மொடக்குறிச்சியில் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் கலந்து கொண்ட பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும், ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க கோரிக்கை வைத்தனர்.

    காளை மாட்டுடன் மொடக்குறிச்சி நால்ரோட்டில் தொடங்கி, தாலுகா அலுவலகம், மொடக்குறிச்சி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காவல் நிலையம், ஈஸ்வரன்கோவில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வழியாக மீண்டும் மொடக்குறிச்சி நால்ரோட்டை அடைந்து தொடர்ந்து மொடக்குறிச்சி பஸ் நிறுத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதேபோல், எழுமாத்தூர் பஸ் நிறுத்தம் பகுதியில் சமூகநல மறுமலர்ச்சி கழகம் மற்றும் இந்து முன்னணி மற்றும் எழுமாத்தூர் கிராம பொதுமக்கள் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் கணபதி பாளையம் நால் ரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இரு ஜல்லிக்கட்டு காளைகளுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து கணபதி பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தொடங்கி நடைபெற்ற பேரணியில் ஜல்லிக் கட்டுகாளைகளுடன் வந்த பொதுமக்கள் இளைஞர்கள் பீட்டா அமைப்பை தடைசெய்யவேண்டும், ஜல்லிக்கட்டு தமிழர்களின் பராம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டை தடைசெய்யும் உரிமை பீட்டா அமைப்பிற்கு கிடையாது என்பன போன்ற பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.

    தொடர்ந்து கணபதி பாளையம் நால்ரோடு பகுதியில் நடைபெற்ற சேவல்சண்டையை 100-க்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்தனர். இதேபோல் லக்காபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    தமிழ்நாடு அனைத்து மாநகராட்சி, நகராட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ஈரோடு:

    தமிழ்நாடு அனைத்து மாநகராட்சி, நகராட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பு மாநில தலைவர் வெங்கிடுசாமி தலைமை தாங்கினார். ராதாகிருஷ்ணன் பொருளாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு ஜல்லிக் கட்டு ஆதரவாக கோ‌ஷங்களை எழுப்பினர். ஈரோடு மாநகராட்சி தொழில்நுட்ப பணியாளர்கள் சங்க தலைவர் பழனிசாமி, துணைத்தலைவர் சரவணன், செயலாளர் சிவக்குமார் உள்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
    மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் அருகே உள்ள சதுமுகை செம்படாம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகன் சந்தோஷ் (வயது 23). பனியன் நிறுவன தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவரை 2 ஆண்டு களாக காதலித்து வந்தார். கடந்த 5.10.2015 அன்று பள்ளிக்கூடம் செல்வதற்காக அந்த மாணவி நடுப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு வந்த சந்தோஷ் மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார். அதை நம்பிய மாணவி சந்தோசுடன் வேனில் சென்றார். பின்னர் குன்னூர் அருகே உள்ள அரவன்காடு பகுதிக்கு மாணவியை கடத்திச்சென்ற சந்தோஷ் அங்கு உள்ள ஒருவீட்டில் வைத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததார்.

    இது குறித்து சத்தியமங்கலம் மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோசை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து ஈரோடு மகளிர் கோர்ட்டில் சந்தோஷ் மீது வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி திருநாவுக்கரசு தீர்ப்பு கூறினார். அப்போது அவர் மாணவியை கடத்திசென்ற குற்றத்துக்காக சந்தோசுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    மேலும் அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்கவும் அவர் அந்த தீர்ப்பில் கூறி இருந்தார். இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் அவர் உத்தரவிட்டு இருந்தார்.

    மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு அவர் பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுமதி ஆஜரானார்.

    அந்தியூர் அருகே கோவிலூரில் உள்ள எண்ணமங்கலம் ரோட்டில் விவசாயிகள் இன்று காலை திடீர் என்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    அந்தியூர்:

    அந்தியூர் அருகே கோவிலூரில் உள்ள எண்ணமங்கலம் ரோட்டில் விவசாயிகள் இன்று காலை திடீர் என்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

    இவர்கள் நடு ரோட்டில் அமர்ந்து வேண்டும் வேண்டும் ஜல்லிக்கட்டு வேண்டும், தடைசெய் தடை செய் பீட்டாவை தடை செய் போன்ற கோ‌ஷங்களை எழுப்பியபடி சாலைமறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக 2 அரசு பஸ்கள் ஒரு தனியார் பஸ்,மற்றும் தனியார் மில்லுக்கு பணியாளர்களை ஏற்றி செல்லும் 4 பஸ்கள் சென்றன.

    இந்த பஸ்களை அங்கிருந்து செல்ல அனுமதிக்காமல் மறியலில் ஈடுபட்டவர்கள் சிறைபிடிததனர்.

    இது பற்றி தகவல் கிடைத்தவுடன் அந்தியூர், வெள்ளி திருப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சு நடத்தினர்.

    இதன்பிறகு சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    இந்த போராட்டம் காரணமாக அந்த வழியாக செல்லும் போக்குவரத்து இன்று காலை 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது.
    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஈரோடு மாவட்டத்தில் மாணவர்கள் விடிய-விடிய போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் மாணவர்கள் ஜல்லிக்கட்டை ஆதரித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். பீட்டா அமைப்பை விரட்டியடிப்போம் என முழங்கினர்.
    ஈரோடு:

    தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் வெடித்து வருகிறது. மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கல்லூரி மாணவ- மாணவிகள் கை கோர்த்து தங்களது உரிமை போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டத்திலும் ஈரோடு, கோபி, பவானி, பெருந்துறை, சத்தியமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவ- மாணவிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு மாணவ- மாணவிகளும் கோபக்கனலாய் தெறித்தனர். ‘‘எங்கள் வீர விளையாட்டை தடை செய்ய எவனுக்கும் உரிமை இல்லை. அது என்னங்க பீட்டா...?. இந்த பீட்டா அமைப்பை சேர்ந்தவர்கள் எத்தனையோ விலங்குகளை கொன்று குவித்து உள்ளனர்.

    ஜல்லிக்கட்டுன்னா... என்னவென்று இவர்களுக்கு தெரியுமா? ஜல்லிக்கட்டுக்கு அர்த்தம் தெரியாதவர்கள் எல்லாம் எங்கள் தமிழர்களின் வீர விளையாட்டுக்கு தடை போடுவதா...? விரட்டியடிப்போம் பீட்டாவை. அடுத்த ஆண்டு கண்டிப்பாக தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடக்கும். நாங்களே (மாணவர்கள்) இறங்கி நடத்தி காட்டுவோம். மாணவர்கள் பவர் என்றால் என்ன? என்பதை காட்டுகிறோம்’’ என்று ஆவேசமாக ஒவ்வொரு வரும் கூறினர்.

    ஈரோட்டில் இன்று 3-வது நாளாக மாணவர்களின் போராட்டம் நீடிக்கிறது. வ.உ.சி திடலில் குவிந்த மாணவிகளை மாணவர்கள் இரவில் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டனர். ஆனால் மாணவர்கள் வ.உ.சி. திடலிலேயே கொட்டும் பனியில் விடிய-விடிய அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

    தொடர்ந்து 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு பொதுமக்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இரவில் வ.உ.சி திடலிலேயே சமைத்து சாப்பிட்டு அங்கேயே படுத்துக் கொண்டனர்.

    ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கும் வரை போராட்டம் ஓயாது போராட்டத்தை தொடர்வோம் என்று உறுதியுடன் கூறினர். இரவில் வீடுகளுக்கு சென்ற கல்லூரி மாணவிகள் இன்று காலை மீண்டும் ஈரோடு வ.உ.சி. திடலுக்கு வந்து மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    கோபியில் கல்லூரி மாணவ- மாணவிகள் பலர் பங்கேற்ற பேரணி நடந்தது. பேரணியில் கலந்து கொண்டவர்கள் ‘‘தடை செய்... தடை செய்... பீட்டா அமைப்பை தடை செய்’’, ‘‘விரட்டுவோம்.. விரட்டுவோம் பீட்டாவை விரட்டியடிப்போம்’’ என்று கோ‌ஷங்கள் இட்டப்படி சென்றனர்.

    கோபி பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேரணி பெரியார் திடலை அடைந்தது. பிறகு மாணவர்கள் அங்கு அமர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் கோபியில் வியாபாரிகளும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கடைகளை அடைத்தனர். கோபி நகராட்சி வணிக வளாகத்தில் சில கடைகளும் அடைக்கப்பட்டன.

    சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் கல்லூரி மாணவர்கள் 2 ஆயிரம் பேர் கல்லூரியில் இருந்து ஊர்வலமாக சத்தி பஸ் நிலையத்துக்கு வந்தனர்.

    அங்கு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரி கோ‌ஷமிட்டனர். மாணவர்கள் கூறும் போது, ‘‘குடியரசு தினத்துக்குள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும். இல்லாவிட்டால் குடியரசு தின நாளை கருப்பு தினமாக கடைபிடிப்போம். தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்க விடுவோம்’’ என்று ஆவேசமாக கூறினர்.

    இதே போல் பெருந்துறை அடுத்த துடுப்பதியில் உள்ள ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கல்லூரியில் இருந்து ஊர்வலமாக பெருந்துறை பஸ் நிலையத்துக்கு வந்தனர்.

    அங்கு ஜல்லிக்கட்டை ஆதரித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். பீட்டா அமைப்பை விரட்டியடிப்போம் என முழங்கினர்.

    கோபி அருகே உள்ள டி.என்.பாளையத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்யகோரியும் கைது செய்த ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை விடுதலை செய்யக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    டி.என்.பாளையம் அண்ணா சிலை முன்பு இளைஞர்கள் திரண்டு இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
    ஈரோடு அருகே அரசு பஸ் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன் சத்திரம் மல்லிநகர் என்ற இடத்தை சேர்ந்தவர் மோகன சுந்தரம் (வயது 27).

    நேற்று இவர் ஈரோடு அருகே உள்ள அப்பாச்சி அய்யர் நகர் டாஸ்மாக் குடோன் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மோகன சுந்தரம் படுகாயம் அடைந்தார்.

    உடனே அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே மோகன சுந்தரம் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு அருகே வீட்டில் தனியா இருந்த இளம்பெண் திடீரென மாயமானார்.இது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார்.

    ஈரோடு:

    ஈரோடு சூளை மல்லிகை நகரை சேர்ந்தவர் சிவா, இவரது மனைவி ஜிஷா (வயது 32).

    சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த ஜிஷா யாரிடமும் சொல்லாமல் வெளியில் சென்றார். இதன் பிறகு அவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது தெரியவில்லை. காணாமல் போன அவரை பல இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. எனவே இதுபற்றி வீரப்பன் சத்திரம் போலீசில் சிவா புகார் செய்து உள்ளார். அதில் காணாமல் போன தனது மனைவி ஜிஷாவை கண்டு பிடித்து கொடுக்கும்படி கூறி உள்ளார்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும், அவசர சட்டம் மூலம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என ஈரோட்டில் கல்லூரி மாணவிகள் 5 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஈரோடு:

    ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும், அவசர சட்டம் மூலம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    ஜல்லிக்கட்டுக்கு பெயர் போன அலங்காநல்லூரில் பீட்டா அமைப்பை கண்டித்தும் ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தியும் நடந்த போராட்டம் ஊர்வலத்தில் ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர். இவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இந்த கைதுக்கு தமிழகம் முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பி போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இதேபோல் ஈரோட்டிலும் நேற்று மதியத்துக்கு மேல் ஈரோடு காளைமாட்டு சிலை அருகே இளைஞர்கள் இளம் பெண்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பட்ட பொதுமக்களும் திரண்டனர்.

    ஆயிரக்கணக்கான பேர் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர்.

    காளைமாட்டு சிலையிலிருந்து ஊர்வலமாக சென்ற அவர்கள் மீண்டும் காளைமாட்டு சிலை அருகே வந்து கீழே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அலங்காநல்லூரில் கைதான தமிழர்களை இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டும் என கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    “தமிழர்களை சீண்டாதே... ஜல்லிக்கட்டை முடக்காதே..” என இளம்பெண்களும் ஆவேசமாக கோ‌ஷங்களை எழுப்பினர்.

    அப்போது அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் வண்டிகளை ரோட்டோரமாக நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் அந்த வழியாக நடந்து சென்ற மக்களும் அவர்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போரட்டம் 5 மணி நேரத்துக்கு மேல் நீடித்தது.

    போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கோரசாக குரல் எழுப்பியதால் பதட்ட நிலை ஏற்பட்டது. டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு சம்பத் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் இளைஞர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

    எனினும் எங்கள் போராட்டம் ஓயாது தொடரும் என்று போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர்.
    பவானிசாகர் வனப்பகுதியில் சுருக்கு கம்பிகள் வைத்து மான் வேட்டையாடிய 2 பேரை கைது செய்தனர்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தை சேர்ந்த பவானிசாகர் வனப்பகுதியான கேடே பாளையத்தில் வனத் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை மடக்கி சோதனை நடத்தினர். அதில் 2 பேர் இருந்தனர். ஒருவரிடம் ஒரு சாக்குப்பை இருந்தது. அதை திறந்து பார்த்த போது மான் இறைச்சி இருந்தது. மான் தலை, கால் மற்றும் அதன் இறைச்சி இருந்ததை கண்டு அதை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    பிடிபட்டவர்கள் பெயர் சாமிநாதன் (வயது42), மாறன் (35) என்றும் ஒத்தபனங்காட்டை சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்தது.

    அப்போது மேலும் 5 பேர் இந்த வாகன சோதனையை கண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

    பிடிப்பட 2 பேரையும் கைது செய்த வனத்துறையினர் அவர்களிடம் இருந்து 30 கிலோ மான் இறைச்சியையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவர்களிடம் விசாரணை நடத்திய போது, அவர்கள் வனப்பகுதியில் சுருக்கு கம்பி வைத்து அதில் சிக்கிய 2 புள்ளி மான்களை கொன்று அதன் இறைச்சியை 7 பேர் கடத்தி கொண்டு வந்ததாகவும் கூறினர்.

    தப்பியோடி மேலும் 5 பேரை வனத்துறையினர் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
    ஜல்லிகட்டு நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால் பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைதுறை துணை தலைவர் பாட்சா வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

    கதர் ராட்டை சுற்றும் காந்தி படத்தை அகற்றி விட்டு பிரதமர் மோடி படத்தை வெளியிட்டு உள்ளது அவமதிக்கும் செயலாகும்.

    தமிழகத்தில் இந்த ஆண்டு கண்டிப்பாக ஜல்லிகட்டு நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் அறிவித்து இருந்தார்.

    ஆனால் அவர் கூறியபடி ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. எனவே தார்மீக பொறுப்பேற்று மத்திய மந்திரி பொன்ராதாகிருஷ்ணனும், தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தர ராஜனும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    பெருந்துறை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி கார் மோதி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள ஆதியூர் தட்டங்கரை என்ற இடத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 32).

    இவர் குன்னத்தூரில் உள்ள ஒரு பேக்காரி கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இவர் வாய்ப்பாடியில் இருந்து விஜயமங்கலத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டு இருந்தார்.

    அப்போது கோவையில் இருந்து சேலத்துக்கு சென்ற ஒரு கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சந்திர சேகர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×