என் மலர்
ஈரோடு
கோபி:
கோபி அருகே உள்ள வடுகபாளையம் புதூர் என்ற இடத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 40)
இவரது வீட்டில் பிராந்தி பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையொட்டி போலீசார் அவரது வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு அட்டைபெட்டிகளில் இருந்த 100 பிராந்தி பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குடியரசு தின விழாவையொட்டி டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளதால் அதிக விலைக்கு விற்பதற்கு பிராந்தி பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக முருகன் கூறினார். இதையொட்டி முருகனை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு வ.உ.சி. பூங்காவில் மாணவிகள் விளையாட்டு விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழக பள்ளி கல்வித்துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் விளையாட்டு விடுதியில் உள்ள குறைபாடுகள் குறித்து மாணவிகளிடம் கேட்டறிந்தார். மேலும் தேசிய விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட மாணவிகளை பாராட்டினார்.
அதைத்தொடர்ந்து அமைச்சர் கே.பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் தேதி இன்று அறிவிக்கப்படும். வருகிற ஏப்ரல் மாதம் இறுதிக்குள் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தி முடிக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஈரோட்டில் நவீன இறகு பந்து தளம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முடிவடைந்து விடும்.
இந்த ஆய்வின் போது கல்வித்துறை அமைச்சருடன், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர், கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ., மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன், மாவட்ட விளையாட்டு அதிகாரி ராமகிருஷ்ணன் உள்பட பலர் இருந்தனர்.
பவானி:
பவானி அடுத்த சீனிவாச புரம் பகுதியை சேர்ந்தவர் அய்யாவு. இவரது மகன் துரைராஜ் (வயது 17). இவரது சித்தப்பா மகள் மணிமேகலை. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சரவணன் என்ற வாலிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதையொட்டி காதலர்கள் இருவரும் அடிக்கடி துரைராஜ் வீட்டுக்கு வந்து விட்டு போவார்கள். இது அதே பகுதியை சேர்ந்த வெள்ளையன் என்ற வடி வேலுவுக்கு (31) பிடிக்க வில்லை.
மேலும் வடிவேலுவுக்கும் துரைராஜிக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று வடிவேல்- துரைராஜ் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வடிவேல் சூரி கத்தியால் துரைராஜை சரமாரியாக குத்தினாராம்.
இதில் படுகாயம் அடைந்த துரைராஜ் பவானி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து பவானி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் ரகுமான் விசாரணை நடத்தி வருகிறார்.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள வெள்ளாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 37). இவர் தற்போது துடுப்பதி பள்ளபாளையம் பகுதியில் குடியிருந்து வருகிறார்.
அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சரக்கு ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வரும் இவர் நேற்று காலை தனது வீட்டில் மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளார்.
வாந்தி எடுத்த நிலையில் மயக்கமடைந்த இவரை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு பெருந்துறை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்து வமனையில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த இவர் மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இது தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பருவமழை பொய்த்ததால் தமிழ்நாடு முழுவதும் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களும் வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளன.
எனவே தமிழ்நாட்டுக்கு வறட்சி வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்.
இதைத்தொடர்ந்து வறட்சி பற்றி ஆய்வு செய்வதற்காக மத்திய ஆய்வு குழுவினர் தமிழ்நாடு வந்துள்ளனர்.
இதில் ஒரு பிரிவினா நேற்று ஈரோடு மாவட்டம் வந்தனர். அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.
அப்போது ஒருசில இடங்களில் செடிகளின் மேல் பாகம் பச்ச பசேல் என்று இருந்தது. இதை பார்த்த ஆய்வு குழுவினா இங்கு செடிகள் நன்றாக வளாந்து உள்ளதே என்று கூறினர்.
அந்த ஆய்வு குழுவினரிடம் விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் வெளியில் பார்ப்பதற்கு செடிகள் பசுமையாக உள்ளது. ஆனால் உள்ளே வேர்கள் காய்ந்து விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது என்று கூறினர்.
மேலும் அந்த செடிகளை வேரோடு பறித்து ஆய்வு குழுவினரிடம் காண்பித்தனர் . அப்போது வறட்சியின் உண்மையான தன்மை குறித்து ஆய்வு குழுவினர் தொந்து கொண்டனர்.
இதன்பிறகு ஈரோடு காளிங்கராயன் இல்லத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், பாதிக்கப்பட்ட பயிர்கள் பற்றியும் ஆய்வு குழுவினரிடம் வீடியோ பட காட்சி மூலம் போட்டு காண்பிக்கப்பட்டது.
இதை பார்த்த ஆய்வு குழுவினர் ஈரோடு மாவட்டம் முழுவதும் ஏற்பட்டுள்ள வறட்சியால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.
பிறகு ஆய்வு குழுவினர் இன்று திருப்பூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக இன்று புறப்பட்டு சென்றனர்.
ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகரிடம் இன்று காலை மாலைமலர் நிருபர் இது பற்றி கேட்ட போது அவர் கூறியதாவது-
ஈரோடு மாவட்டத்தில் ஏற்பட்டு உள்ள கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை மத்திய ஆய்வு குழுவினர் பார்வையிட்டு சென்றுள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ஈரோடு மாவட்டத்தில் 40 ஆயிரம் ஹெக்டேர் வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அரசுக்கு அறிக்கை கொடுத்து உள்ளோம்.
இதன் மதிப்பு குறித்து அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். அதன் அறிக்கையும் விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் அருகே உள்ள கணக்கம்பாளையம் சின்னகாளியூரை சேர்ந்தவர் ஆண்டவர் (வயது 60). விவசாயி. இவரது மனைவி கண்ணாயாள் (55).
இவர்கள் அங்குள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர். சம்பவத்தன்று இவர்கள் வீட்டுக்கு சரவணன் (24), செல்வன் (30), கணேசன் (24), விஜயன் (33) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
அப்போது சூரி கத்தியால் கணவன்-மனைவி 2 பேரையும் குத்தி கொலை செய்து விட்டு மோதிரம் மற்றும் பொருட்களை திருடி சென்றனர்.
பங்களாபுதூர் போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். ஈரோடு மகளிர் கோர்ட்டில் வழக்கு நடந்தது. இதில் நீதிபதி திருநாவுக்கரசு இன்று தீர்ப்பு கூறினார். ஒவ்வொருவருக்கும் பவ்வேறு பிரிவின் கீழ் தலா 4 ஆயுட்கால தண்டனையும் மற்றும் 10 ஆண்டு, 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு வக்கீல் சுமதி ஆஜர் ஆனார்.
சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் அருகே உள்ளகுன்றி வனப்பகுதியில் கடமான் வேட்டையாடிய நான்கு பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
டி.என்.பாளையம் வனச்சரகர் சிவசுப்ரமணியம் தலைமையில் வனத்துறையினர் மலைப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தொட்டிமடுவு என்ற இடத்தில் 2பேர் சந்தேகிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தனர்.அந்த இரண்டு பேரையும் பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளனர். துருவிதுருவி விசாரித்ததில் கடமானை சுருக்கு கம்பிவைத்து வேட்டையாடியது தெரிய வந்தது.
விசாரணையில் அவர்கள் குன்றியை சேர்ந்த பெருமாள்(25) சின்ராஜ்(24) எனத் தெரியவந்தது. தீவிர விசாரணைக்கு பின்னர் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2பேர் தலைமறைவாகி விட்டதாகவும் தெரிந்தது. பிறகு வனத்துறையின் அதிரடி வேட்டையில் அந்த 2 பேரும் பிடிபட்டனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கிட்டான் (27), பூமாதன் (31) என தெரிய வந்தது.
அவர்களிடமிருந்து சுருக்கு கம்பியை பறிமுதல் செய்து, இறந்து போன கடமானை சத்தியமங்கலம் புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் அசோகன் வரவழைக்கப்பட்டு பிரேதப்பரிசோதனை செய்து அங்கேயே புதைக்கப்பட்டது. வேட்டையாடிய நான்கு பேருக்கு தலா ரூ.50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள செம்புளிச்சாம் பாளையத்தில் ரோட்டோரத்தில் ஒரு டிரான்ஸ்பார்மர் உள்ளது. அந்த வழியாக நடந்து சென்ற 35 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் திடீரென அந்த டிரான்ஸ்பார்மரில் ஏறினார்.
அடுத்த கனம் மின்சாரம் அவர் மீது பாய்ந்தது. இதில் அவர் உடல் கருகி பலியானார். பலியான அவரது உடல் டிரான்ஸ்பார்மரில் தொங்கி கொண்டிருந்தது. இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு அந்தியூர் போலீசார் விரைந்தனர். மேலும் பவானி போலீஸ் துணை சூப்பிரண்டு ஜானகிராமனும் சென்றார்.
இதற்கிடையே டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதால் பருவாச்சி, குன்னம் தளவாய் பேட்டை உள்பட பல்வேறு கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது.
இதனால் டிரான்ஸ்பார்மரில் தொங்கிய வாலிபர் உடலை உடனடியாக மீட்க போலீசார் முனைந்தனர். இதையொட்டி போலீஸ் டி.எஸ்.பி ஜானகிராமன் அந்தியூர் தீயணைப்பு நிலையம் மற்றும் மின்வாரிய அலுவலகத்துக்கும் தகவல் கொடுத்தார்.
ஆனால் அவர்கள் யாரும் உடனடியாக வராததால் போலீசார் பொது மக்கள் துணையுடன் டிரான்ஸ்பார்மரில் தொங்கிய வாலிபர் உடலை மீட்டனர். பிறகு அந்த வாலிபரது உடல் பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
டிரான்ஸ்பார்மரில் ஏறி தற்கொலை செய்து கொண்ட வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பவானியில் இருந்து அந்தியூர் வந்து பிறகு அங்கிருந்து மலை கருப்பசாமி கோவிலுக்கு நேற்று இரவு அரசு டவுன் பஸ் வந்தது.
இந்த பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ்சை டிரைவர் சரவணக்குமார் ஓட்டி சென்றார். ஜெகதீஸ்வரன் கண்டக்டராக இருந்தார்.
நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த பஸ் செம்புளிச்சாம் பாளையம் அருகே முருகன் கிணறு பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 மர்ம ஆசாமிகள் வந்தனர்.
பிறகு திடீரென அவர்கள் பஸ்சின் பின்புறம் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பஸ்சின் பின்புற கண்ணாடி உடைந்தது. பின்புற சீட்டில் அமர்ந்திருந்த ஒரு ஆண் பயணியின் மண்டையில் கற்கள் தாக்கியதில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
இந்த தாக்குதலால் பஸ்சில் இருந்த பயணிகள் நிலை குலைந்து போனார்கள். டிரைவர் பஸ்சை நிறுத்தினார். கல் தாக்கியதில் படுகாயம் அடைந்த பயணி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கல் வீசி தாக்கிய மர்ம ஆசாமிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
பிறகு பஸ்சில் இருந்த பயணிகள் பஸ்சை விட்டு இறங்கி வேறு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த சம்பவம் குறித்து அந்தியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்திய மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.
குடியரசு தினம் வரும் 26-ந் தேதி (வியாழக் கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு அசபாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.
இன்று ஈரோடு ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். ரெயில்வே இன்ஸ்பெக்டர் சின்னதங்கம் தலைமையில் ரெயில்வே போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் ரெயிலில் வந்த பயணிகளிடமும் சோதனை நடத்தப்பட்டது. இதேபோல் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், நகரின் முக்கிய பகுதிகளிலும் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.
கோபி:
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கோபியில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றம் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கடந்த 5 நாட்களாக கோபி பெரியார் திடலில் கூடி தங்களது ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், கோபியில் விவசாயிகள், மற்றும் விவசாய கூலி தொழிலாளர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கோபி வாய்க்கால் ரோட்டிலிருந்து 5 இரட்டை மாட்டு வணடிகளில் ஊர்வலமாக வந்து கோபி பெரியார் திடலில் அடைந்தனர். தொடர்ந்து இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
கோபியில் இன்று மாணவ-மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். நிரந்தர தீர்வு காணாமல் போராட்டம் ஓயாது என்று கூறினர்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரியும் பீட்டாவை நிரந்தரமாக வெளியேற வேண்டும் எனவும் தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
மாணவர்களுக்கு ஆதரவாக இளைஞர்கள் பொதுமக்களும் கலந்து கொண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்த மத்திய-மாநில அரசுகள் அறிவித்தாலும், “இது ஏமாற்று வேலை ஏதோ ஒப்புக்கு சப்பாணி போல் அவசர சட்டம் மூலம் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டியது இல்லை, எங்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு தங்கு தடையின்றி நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மாணவ- மாணவிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதே போராட்டத்தை முன் வைத்து ஈரோடு வ.உ.சி. திடலில் போராட்டம் நடத்தி வரும் மாணவ-மாணவிகள் இன்று 6-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை என்பதால் காலையில் இருந்தே பெருங்கூட்டம் தொடர்ந்தது.
இன்றும் புதிய உற்சாகத்துடன் மாணவ- மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவ- மாணவிகள் கூறும்போது, “இந்த அவசர சட்டம் ஏமாற்று வேலைங்க ஒரு வாரமாக போராடி வருகிறோம். எங்கள் போராட்டத்துக்கு இதுதான் தீர்வா? இதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எங்களுக்கு தேவை நிரந்தர சட்டம் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் அன்று எங்களது பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு அலங்காநல்லூரில் தடையின்றி நடக்க வேண்டும்” என்று கூறினர்.






