search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஈரோடு மாவட்டத்தில் மாணவர்கள் விடிய-விடிய போராட்டம்
    X

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஈரோடு மாவட்டத்தில் மாணவர்கள் விடிய-விடிய போராட்டம்

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஈரோடு மாவட்டத்தில் மாணவர்கள் விடிய-விடிய போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் மாணவர்கள் ஜல்லிக்கட்டை ஆதரித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். பீட்டா அமைப்பை விரட்டியடிப்போம் என முழங்கினர்.
    ஈரோடு:

    தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் வெடித்து வருகிறது. மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கல்லூரி மாணவ- மாணவிகள் கை கோர்த்து தங்களது உரிமை போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டத்திலும் ஈரோடு, கோபி, பவானி, பெருந்துறை, சத்தியமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவ- மாணவிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு மாணவ- மாணவிகளும் கோபக்கனலாய் தெறித்தனர். ‘‘எங்கள் வீர விளையாட்டை தடை செய்ய எவனுக்கும் உரிமை இல்லை. அது என்னங்க பீட்டா...?. இந்த பீட்டா அமைப்பை சேர்ந்தவர்கள் எத்தனையோ விலங்குகளை கொன்று குவித்து உள்ளனர்.

    ஜல்லிக்கட்டுன்னா... என்னவென்று இவர்களுக்கு தெரியுமா? ஜல்லிக்கட்டுக்கு அர்த்தம் தெரியாதவர்கள் எல்லாம் எங்கள் தமிழர்களின் வீர விளையாட்டுக்கு தடை போடுவதா...? விரட்டியடிப்போம் பீட்டாவை. அடுத்த ஆண்டு கண்டிப்பாக தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடக்கும். நாங்களே (மாணவர்கள்) இறங்கி நடத்தி காட்டுவோம். மாணவர்கள் பவர் என்றால் என்ன? என்பதை காட்டுகிறோம்’’ என்று ஆவேசமாக ஒவ்வொரு வரும் கூறினர்.

    ஈரோட்டில் இன்று 3-வது நாளாக மாணவர்களின் போராட்டம் நீடிக்கிறது. வ.உ.சி திடலில் குவிந்த மாணவிகளை மாணவர்கள் இரவில் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டனர். ஆனால் மாணவர்கள் வ.உ.சி. திடலிலேயே கொட்டும் பனியில் விடிய-விடிய அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

    தொடர்ந்து 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு பொதுமக்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இரவில் வ.உ.சி திடலிலேயே சமைத்து சாப்பிட்டு அங்கேயே படுத்துக் கொண்டனர்.

    ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கும் வரை போராட்டம் ஓயாது போராட்டத்தை தொடர்வோம் என்று உறுதியுடன் கூறினர். இரவில் வீடுகளுக்கு சென்ற கல்லூரி மாணவிகள் இன்று காலை மீண்டும் ஈரோடு வ.உ.சி. திடலுக்கு வந்து மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    கோபியில் கல்லூரி மாணவ- மாணவிகள் பலர் பங்கேற்ற பேரணி நடந்தது. பேரணியில் கலந்து கொண்டவர்கள் ‘‘தடை செய்... தடை செய்... பீட்டா அமைப்பை தடை செய்’’, ‘‘விரட்டுவோம்.. விரட்டுவோம் பீட்டாவை விரட்டியடிப்போம்’’ என்று கோ‌ஷங்கள் இட்டப்படி சென்றனர்.

    கோபி பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேரணி பெரியார் திடலை அடைந்தது. பிறகு மாணவர்கள் அங்கு அமர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் கோபியில் வியாபாரிகளும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கடைகளை அடைத்தனர். கோபி நகராட்சி வணிக வளாகத்தில் சில கடைகளும் அடைக்கப்பட்டன.

    சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் கல்லூரி மாணவர்கள் 2 ஆயிரம் பேர் கல்லூரியில் இருந்து ஊர்வலமாக சத்தி பஸ் நிலையத்துக்கு வந்தனர்.

    அங்கு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரி கோ‌ஷமிட்டனர். மாணவர்கள் கூறும் போது, ‘‘குடியரசு தினத்துக்குள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும். இல்லாவிட்டால் குடியரசு தின நாளை கருப்பு தினமாக கடைபிடிப்போம். தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்க விடுவோம்’’ என்று ஆவேசமாக கூறினர்.

    இதே போல் பெருந்துறை அடுத்த துடுப்பதியில் உள்ள ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கல்லூரியில் இருந்து ஊர்வலமாக பெருந்துறை பஸ் நிலையத்துக்கு வந்தனர்.

    அங்கு ஜல்லிக்கட்டை ஆதரித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். பீட்டா அமைப்பை விரட்டியடிப்போம் என முழங்கினர்.

    கோபி அருகே உள்ள டி.என்.பாளையத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்யகோரியும் கைது செய்த ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை விடுதலை செய்யக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    டி.என்.பாளையம் அண்ணா சிலை முன்பு இளைஞர்கள் திரண்டு இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×