என் மலர்
ஈரோடு
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி அடுத்த கணபதிபாளையம், சின்னமாபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன்(27). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் வேலை விசயமாக சென்றார்.
ஈரோடு-கரூர் ரோடு வேப்பமரத்துகளம் ரெயில்வே கேட் அருகே வந்த அடையாளம் தெரியாத வாகனம் பிரபாகரன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட பிரபாகரன் தலையில் பலத்த அடிபட்டு உயிருக்காக போராடினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி பிரபாகரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தமிழக-கர்நாடக எல்லையில் தாளவாடி அருகே பிலிகிரி என்ற மலைப்பகுதி உள்ளது. 2 மலைகளை உள்ளடக்கிய செங்குத்தான இந்த மலைப்பகுதி அடர்ந்த காட்டுப்பகுதியாகும்.
இந்த மலைப்பகுதியில் ஏராளமான புலிகள், சிறுத்தை புலி, யானை, மான், காட்டெருமை போன்ற வனவலங்குகள் உள்ளன.
இந்த பிலிகிரி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக தீப்பற்றி எரிந்து வருகிறது. கடும் வறட்சி காரணமாக அங்குள்ள மரங்கள், செடி-கொடிகள் காய்ந்து உள்ளன. இதன் காரணமாக தீ மளமள என்று பிடித்து எரிகிறது.
அந்த பகுதியில் காற்று பலமாக வீசுவதால் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கும் தீபரவி வருகிறது.
கடந்த 3 நாட்களாக பற்றி எரியும் இந்த தீயினால் 300 ஹெக்டோரில் உள்ள மரங்கள் முழுவதும் எரிந்து சாம்பலாயின. மேலும் அந்த பகுதியில் உள்ள மூலிகை மரங்களும் தீயில் எரிந்து நாசமாயின.
இந்த தீ விபத்தில் அந்த பகுதியில் சுற்றி திரியும் ஏராளமான வனவிலங்குகள் தீயில் கருகி இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் பல வன விலங்குகள் அங்கிருந்து இடம் பெயர்ந்து வருகின்றன.
இந்த தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் அவர்களும் அங்கிருந்து இடம் பெயர்ந்து வருகிறார்கள்.
இரு மாநில எல்லையில் ஏற்பட்ட இந்த தீ சத்தியமங்கலம் அருகே உள்ள ஆசனூர் வனப்பகுதிக்கும் பரவி உள்ளது. இதனால் இங்குள்ள 200 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் தீ எரிகிறது .
இந்த தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் போராடி வருகிறார்கள். எனினும் கொளுந்து விட்டு எரியும் இந்த காட்டு தீயை அணைக்க முடியாமல் அவர்கள் திணறி வருகிறார்கள்.
காட்டு தீ காரணமாக ஆடு, மாடு மேய்ப்பவர்கள் மற்றும் வனப்பொருள் சேகரிக்கும், மலை வாழ் மக்கள் பிலிகிரிமற்றும் ஆசனூர் மலைபகுதிக்கு செல்லவேண்டாம் என்று வனத்துறையினர் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடந்தது. நகர செயலாளர் சுந்தர ராஜன் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் துரைராஜ், மாவட்ட செயலாளர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு, ஈரோடு மாவட்டம் முழுவதும் கடுமையான வறட்சியும், விவசாய பாதிப்படைந்து, குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.
இதனால் வறட்சி மாநிலமாக அறிவித்து பயிர்கள் பாதிப்பை ஆய்வு மேற்கொண்டு நிவாரணம் வழங்க வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் தொழிலாளர்களுக்கு மாதக்கணக்கில் கூலி வழங்கவில்லை.
அவர்களுக்கு உடனடியாக கூலி வழங்க வேண்டும். குத்தியாலத்தூர், திங்களூர், தாளவாடி, பர்கூர் மலைப்பகுதியில் வன விலங்குகள் ஊருக்குள் வராமல் தடுக்கவும், மலைப் பகுதியில் தொட்டி கட்டி லாரியின் மூலம் குடிநீர் வசதி செய்ய வேண்டும்.
ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் வறட்சி காரணமாக நிலத்தடி நீர்பாதிப்படைந்து, தொழிற்சாலை கழிவுநீராக மாறி வரும் நிலை உள்ளது. குடி நீர் தட்டுபாட்டிக்கு உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.
ஈரோடு:
பவானி காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் மீனா (வயது 45). இவரது கணவர் சுப்பிரமணி. இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
அதே பகுதியை சேர்ந்தவர் சரவணன் (45). இவருக்கும் மீனாவுக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சரவணனிடம் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 1½ வருடங்களாக மீனா தன் மகள் வீட்டில் வசித்து வருகிறார். அடிக்கடி சரவணன் மீனா வீட்டிக்கு சென்று தன்னுடன் வாழ வருமாறு வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அவர் வர மறுத்து வந்தார்.
இந்த நிலையில் நேற்றும் சரவணன் மீனா வீட்டுக்கு சென்று அவரை தன்னுடன் வாழ வருமாறு அழைத்தார். ஆனால் மீனா வர மறுத்தார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சரவணன் மீனாவை கல்லால் தக்கியதாக கூறப்படுகிறது. மேலும் என்னுடன் வாழ வரவில்லை என்றால் கொலை செய்து விடுவதாவும் மிரட்டினாராம். இதில் காயம் ஏற்பட்ட அவரை பவானி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இது குறித்து மீனா பவானி போலீசில் புகார் செய்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அங்குராஜ், சார்பு இன்ஸ் பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.
ஈரோடு:
சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் வனப்பகுதியில் சம்பவத்தன்று சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மயங்கி கிடப்பதாக பங்களாபுதூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மயங்கி கிடந்த மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு மூதாட்டியை கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
எனினும் சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக இறந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது போன்ற விவரம் தெரியவில்லை.
இது குறித்து பங்களா புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஈரோடு வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் செயலாளர் சிறுத்தை வள்ளுவன் இல்ல திருமண விழா பவானியில் நடந்தது.
இதில் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
பிறகு ஈரோடு வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது திருமாவளவன் கூறியதாவது-.
தமிழக சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு விவகாரத்தில் நடந்த சம்பவம் வேதனை அளிக்க கூடியது. சட்டசபையில் பிரதம எதிர்க்கட்சியாக தி.மு.க.உள்ளது. அந்த எதிர்க்கட்சியின் கருத்துக்கு சபாநாயகர் மதிப்பளித்திருக்க வேண்டும். ரகசிய வாக்குகெடுப்பு நடத்தி இருக்க வேண்டும்.
அதே சமயம் சட்ட சபையில் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவரது கையை பிடித்து இழுத்து மைக்கை உடைத்த சம்பவமும் ஜனநாயகத்துக்கு எதிரானது.
சசிகலாவும்,ஓ.பின்னீர் செல்வமும் ஒன்றாக இருந்த போது அ.தி.மு.க.பொதுச் செயலாளராக சசிகலா அறிவிக்கப்பட்ட போது அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன்.ஆனால் இப்போது இருவரும் பிரிந்து விட்டனர்.
இதனால் இருவருக்கும் இப்போது எனது ஆதரவு இல்லை.விவசாயிகளுக்கு அறிவிக்கபட்ட வறட்சி நிவாரணம் குறைவாக உள்ளது. எனவே இந்த வறட்சி நிவாரணத்தில் கூடுதல் தொகை ஓதுக்கீடு செய்து அறிவிக்க வேண்டும்.
பவானி ஆற்றில் கேரள அரசு அணை கட்டுவதை கண்டித்து வரும்12-ந் தேதி கொங்கு மண்டல விவசாய சங்கங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் கேரள மாநிலத்துக்கு செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தும் மறியல் போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியையொட்டி உள்ளது கடம்பூர் வனப்பகுதி. இந்த வனத்தில் உள்ள கம்பத்ராயன் மலை பகுதியில் நேற்று முன்தினம் திடீரென தீ பிடித்து எரியத் தொடங்கியது. கோடையையொட்டி வனப்பகுதி காய்ந்து கிடப்பதால் வனப்பகுதியில் உள்ள மூங்கில், புங்கமரங்கள், செடிகொடிகள்யாவும் கொழுந்துவிட்டு எரிகிறது.
இன்று (வியாழக்கிழமை) 3-வது நாளாக காட்டு தீ தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கிறது. இதில் வனப்பகுதியில் உள்ள யானை, காட்டெருமைகள் வேறு இடத்துக்கு சென்றுவிட்டன. மான்கள், செந்நாய்கள், குரங்கு போன்ற வன விலங்குகள் தீயின் ஜுவாலைக்கு தாக்குபிடிக்க முடியாமல் இறந்து வருகிறது.
வனச்சரகர் ஜான்சன் தலைமையில் வனவேட்டை தடுப்பு காவலர்கள் 50 பேர் அங்கு முகாமிட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பச்சை மரக்கிளைகளை வெட்டி எரியும் தீயில் போட்டு அணைத்து வருகிறார்கள். அவர்களின் தொடர் முயற்சியால் கம்பத் ராயன் மலையில் காட்டுதீ இன்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் மீதி எரியும் தீயை அணைக்க கடுமையாக போராடி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று மாலை சத்தியமங்கலம் வனப்பகுதி ஆசனூர் காட்டிலும் காட்டுதீ பிடித்து எரிந்து வருகிறது.
இப்பகுதியில் பிடித்த தீ கர்நாடக மாநிலம் எல்லையான புளிஞ்சூர் வரை காட்டு தீ எரிந்து கொண்டிருக்கிறது. இப்பகுதியில் எரியும் தீயையும் வனத்துறையினர் போராடி கட்டுப்படுத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபி மொடச்சூர் சங்குவார் வீதியை சேர்ந்தவர் குமார் (வயது 34). திருப்பூரில் உள்ள கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி பெயர் மகாதேவி (24). கடந்த 18.11.2010 அன்று காதல் திருமணம் செய்து கொண்டனர். 4 வயதில் ஒரு மகன் உள்ளான்.
கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மனைவியை கணவர் அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மனைவி மகாதேவி கோபித்துக் கொண்டு தற்கொலை செய்ய முயன்றார். தூக்குபோட்டு தற்கொலை செய்ய முயன்ற மனைவியை குமார் காப்பாற்றினார்.
இதேபோல் சம்பவத்தன்றும் ஏற்பட்ட தகராறில் மகாதேவி தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்றார்.
அப்போது கணவர் குமார் ‘‘முன்பும் இப்படி தான் தற்கொலை செய்ய நாடகம் ஆடினாய். நான் காப்பாற்றினேன். இப்போதும் அப்படிதான் செய்கிறாய். நீ இருந்தால் என்ன... செத்தால் என்ன...? என்று கூறினாராம். ஆனால் மகாதேவி சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ஈரோடு மகளிர் கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி திருநாவுக்கரசு குற்றம் சாட்டப்பட்ட குமாருக்கு மனைவியை துன்புறுத்தியதாக 3 ஆண்டு கடுங்காவல் ஜெயில் தண்டனையும், ரூ.1000 அபராதமும் கடட தவறினால் 6 மாத ஜெயிலும் தற்கொலைக்கு தூண்டியதாக 10 ஆண்டு ஜெயிலும் ரூ.2 ஆயிரம் அபராதமும் கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டு ஜெயில் தண்டனையும் இதனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்.
இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் சுமதி வாதாடினார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் வனப்பகுதிகள் கடும் வறட்சி காரணமாக காய்ந்து போய் கிடக்கிறது. காட்டில் உள்ள யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியே நடமாட தொடங்கி உள்ளது.
நேற்று இரவு 10 மணி அளவில் பவானிசாகர் வனப் பகுதியில் இருந்து 2 யானைகள் காட்டை விட்டு வெளியேறி பவானிசாகர் நால்ரோட்டில் நடமாடியது.
இந்த 2 யானைகளும் நடு ரோட்டில் நின்று கொண்டிருந்தது. இதனால் பவானிசாகர்- பு.புளியம்பட்டி ரோட்டில் இரவு 10 மணிக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரு புறமும் வாகனங்கள் அப்படியே முகப்பு விளக்குகளை அணைத்தப்படி நின்றது.
30 நிமிடத்துக்கு பிறகு அந்த 2 யானைகளும் நடு ரோட்டில் இருந்து ரோட்டோரமாக மேயத் தொடங்கியது.
இதையடுத்து போக்குவரத்து மீண்டும் செயல்பட்டது. “இரவு நேரத்தில் யானை உள்பட வன விலங்குகள் ரோட்டில் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும்” என வனத்துறையினர் கேட்டு கொண்டுள்ளனர்.
ஈரோடு:
கோபி அருகே உள்ள காளி செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் குருசாமி (வயது65). விவசாயி.
இவர் காளிசெட்டிபாளையத்தில் இருந்து கோபிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒத்தக்குதிரை சுடுகாடு அருகே சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த ஒரு தனியார் பஸ் குருசாமி மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட குருசாமி படுகாயம் அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அவரை சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ் டிரைவர் பாக்யராஜ் என்பவரை கைது செய் தனர். விபத்தில் பலியான குருசாமிக்கு நல்லம்மாள் (55) என்ற மனைவியும், ஒருமகனும், ஒரு மகளும் உள்ளனர்.
ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் வாழ்வுரிமை நலச்சங்கம், மாநில அமைப்பு சங்கம் உள்பட 3 இயக்கம் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாமை நடத்துகின்றன.
இந்த வேலை வாய்ப்பு முகாம் வரும் 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஈரோடு செங்குந்தர் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது.
இதில் தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்கிறது. முகாமில் ஈரோடு, பவானி, கோபி, சத்தியமங்கலம், அந்தியூர் பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட மாற்றுத் திறனாளிகள் வாழ்வுரிமை நலச்சங்க பொதுச்செயலாளர் ஆர்.ராஜரத்தினம் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுபற்றி தகவல் அறிய 97154-71803, 99423-60982 செல்போன் எண்களுக்கு தொடர்பு கொள்ளுப்படியும் கேட்டுக் கொண்டுள்ளார். ஆண்,பெண் மாற்றுத் திறனாளிகள் அசல் கல்வி சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கோபி அருகே உள்ள கும்பிகரடு என்ற இடத்தில் காட்டுப்பகுதிக்குள் ஒரு குடிசை வீடு உள்ளது. இந்த குடிசை வீட்டுக்குள் ரேசன் அரிசிகளை மூட்டை.. மூட்டையாய் பதுக்கி வைத்து வெளி மாவட்டத்துக்கும், வெளிமாநிலத்துக்கும் கடத்தி விற்கப்படுவதாக சிறுவலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இங்கு பதுக்கி வைக்கப்பட்டு உள்ள ரேசன் அரிசி மூட்டைகளை இரவு நேரத்தில் வேனில் கடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.
இதையொட்டி சிறுவலூர் போலீசார் புகார் கூறப்படும் வீட்டுக்கு திடீரென சென்ற அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு வேனில் 50 மூட்டை ரேசன் அரிசியை ஏற்றி கடத்த தயாராக இருந்தனர். போலீசார் அரிசி மூட்டைகளுடன் அந்த வேனையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் அங்கு ரேசன் அரிசியை கடத்தி செல்ல தயாராக இருந்த நம்பியூர் அருகே உள்ள குருமந்தூரை சேர்ந்த அப்துல் என்பவரையும் கோபி அடுத்த கலிங்கியத்தை சேர்ந்த டேவிட் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் சிறுவலூர் போலீசார் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் பிடிபட்டவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இவர்கள் எங்கெங்கு ரேசன் அரிசியை கடத்த வந்தார்கள்? எங்கு விற்பனை செய்து வந்தனர்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.






